இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கிமூன் வவுனியாவிற்கு இன்று (23.05.2009) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது இடம்பெயாந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்டுள்ளார். இந்த மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்த மக்களுக்கான நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற பிரதிநிதிகளுடன் அவர் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
2009
2009
நேற்று நடந்த ஐபிஎல் முதல் அரை இறுதிப் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி அபாரமாக ஆடி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் 2ஆவது அரை இறுதியில், சென்னை அணியும், பெங்களூரும் சந்திக்கின்றன. தென் ஆபிரிக்காவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டன.
நேற்று முதலாவது அரை இறுதிப் போட்டி செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நடந்தது. ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று இரவு 8.00 மணிக்கு சென்னை-பெங்களூர் அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ,
மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இவற்றை மறுத்த பிரதமர் மன்மோகன்சிங், அமைச்சரவையில் இடம்பெற முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி, ‘’அமைச்சரவை அமைக்கும் காலத்தில் டெல்லியில் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். இவற்றுக்கெல்லாம் விளக்கமளித்து மறுத்த பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நன்றி. மத்திய அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்த பிரதமருக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘’அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து விவாதித்து முடிவு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மன்மோகன்சிங் மீண்டும் பதவி ஏற்றார். அவருடன் 19 `கேபினட்’ மந்திரிகளும் பதவி ஏற்றனர். இவர்களில் பிரணாப் முகர்ஜிக்கு நிதித்துறையும், ப.சிதம்பரத்துக்கு உள்துறையும், ஏ.கே.அந்தோணிக்கு பாதுகாப்பு துறையும், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வெளியுறவு துறையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு ரெயில்வேயும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வேளாண்மை, உணவு மற்றும் சிவில் சப்ளை துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ யுன் (62) இன்று தற்கொலை செய்துகொண்டார். நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அருகேயுள்ள மலை ஒன்றில் ஏறி அங்கிருந்து கீழே குதித்ததாகவும், பாறை ஒன்றின் மீது அவர் உடல் பலமாக மோதியதில் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தகவல் கிடைத்ததும் அவர் பூசான் நகர மருத்துவமனைக்கு உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காலை 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்த தகவல் குறிப்பில், வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது என்றும், ஏராளமான மக்களை அவதிக்குள்ளாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் தற்கொலை செய்திருப்பது தென் கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை பொருளாதார ரீதியில் மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெறுவதற்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் கடன் வழங்கும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை யுத்தத்தில் வெற்றிபெற்றிருப்பதாக அறிவித்திருப்பதை அடுத்து நாட்டில் முன்னேற்றத்தை எதிர்பார்த்திருப்பதாக நாணய நிதியம் கூறியுள்ளது.
நாங்கள் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றகரமான கட்டத்தில் இருக்கின்றோம். நிறைவேற்று சபை நிகழ்ச்சி நிரல் தொடர்பாக எம்மிடம் திட்டவட்டமான கால அட்டவணை இல்லை. ஆயினும், எதிர்வரும் வாரங்களில் சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கரோலின் அட்ரின்சன் வாஷிங்டனில் நிருபர்களுக்கு தெரிவித்தார்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அரசியல் நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கொண்டிருப்பதாக இலங்கை அறிவித்திருப்பதை தொடர்ந்து ஹிலாரி இந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.
அதேவேளை, இலங்கையின் வடபகுதியின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாகவும் ஹிலாரி கிளின்டன் தனது கவலையை வெளிப்படுத்தியிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியை மேற்கோள்காட்டி பி.டி.ஐ. செய்திச்சேவை நேற்று தெரிவித்தது. அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சர்வதேச மனிதாபிமான நிறுவனங்கள் செல்வதற்கு அனுமதியளிக்குமாறும் ஹிலாரி ஜனாதிபதி ராஜபக்ஷவை கேட்டுள்ளார்.
இடம்பெயர்ந்திருக்கும் சுமார் 3 இலட்சம் மக்களை துரிதமாக மீளக் குடியேற்றுமாறு அமெரிக்க அதிகாரிகள் கொழும்பை வலியுறுத்தியுள்ளன. யுத்தத்திற்கு பின்னர் விடயங்களை உடனடியாக கொழும்பு எவ்வாறு கையாளுகின்றது என்பதிலேயே நாட்டின் எதிர்கால சமாதானம் தங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம் இன்று முற்பகல் காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.
காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவென பொரளை ஜயரட்ன மலர்ச்சாலைக்கு சிவில் உடையினர் வாகனமொன்றில் இவரை அழைத்து வந்திருந்தனர் எனவும் அஞ்சலி செலுத்திய பின்னர் சுமார் 15 நிமிடங்கள் வரை அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நாட்டில் அர்ப்பணிப்புடன் பாடுபட்ட படைவீரர்களுக்கான தேசிய வைபவம் இன்று கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது. மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரோக்களின் ஆலேசனைக்கு ஏற்ப கண்டி தலதா மாளிகை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் சபையின் தலைவர் எயார் சீப் மார்ஷல் டொனல்ட் பெரேரா,இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரண்ணாகொட, விமானப்படைத் தளபதி எயார் சீப் மாhர்ஷல் ரொஷான் குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன, மக்கள் பாதுகாப்பு படைப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத் வீரசேகர மற்றும்; தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல ஆகியோரும் இதில் கலந்துகொள்கின்றனர். இந்த வைபவத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ராஜாங்க பெரஹரா ஒன்றையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.