2009

2009

எயிட்ஸ் குறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கை

aids-ribbon.jpgஇன்று டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினமாகும். உலகில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1981இல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அதனையடுத்து இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை 33 மில்லியன் பேர் HIV/AIDS தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் அபிவிருத்தி அடையும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இலங்கையில் முதலாவது எயிட்ஸ் நோயாளி 1987 இல் இனங்காணப்பட்டார். 2009 செப்டெம்பர் மாதமளவில் எமது நாட்டில் 1161 HIV+ நோயாளர்கள் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இதில் AIDS நிலைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 302 ஆகும். இந்த வைரஸினால் உயிரிழந்தவர்கள் 197 பேர். இதில் 41 பேர் சிறுவர்கள். எங்கள் நாட்டில் தற்போது 3800 – 4000 HIV + நோயாளர் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. முறையற்ற பாலியல் நடவடிக்கைகள் மூலமே எங்கள் நாட்டில் HIV தொற்று ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அதேவேளை HIV தொற்றுக்கு உள்ளாகிய 184 நோயாளிகள் ARV எனும் எதிர்ப்பு மருந்து வகைகளை பாவிக்கின்றனர்.

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு, தேசிய நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

இலங்கை எயிட்ஸ் நோயாளிகள் குறைந்தவொரு நாடாக கருதப்படுவதாகவும் அதற்கு எங்கள் நாட்டு மக்களின் கல்வியறிவும், கலாசாரம் சக்தி மிக்கதாகவும் அமைந்துள்ளதே காரணம் என்றும் அமைச்சர் கூறினார். அத்துடன் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்திய அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் இதற்கு பிரதான காரணமென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ரகசியம் பேணப்படும் வகையில் பாலியல் நோய் சோதனை, இலவச சிக்சிசை மற்றும் ஆலோசனை, இரத்தப் பரிசோதனை மற்றும் வைரஸ் பாதிப்பு, மருந்து வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்துதல் இலக்காகக் கொள்ளப்படும் குழுக்களுக்கு நடத்தை முறை பற்றி விளக்கம் ஆகியவை தேசிய நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தினால் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சுகாதார பாதுகாப்பு மற்றும் போஷாக்குத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் வேண்டுகோளின் பேரில் AIDS, காச நோய் மற்றும் மலேரியாவுக்கான உலகளாவிய நிதியம் (G F A T M) மற்றும் உலக வங்கி ஆகியவை இலங்கை யில் எயிட்ஸ் கட்டுப்பாட்டுக்கான நிதி உதவியை வழங்குகின்றன.

ஒசாமாவை தப்ப விட்டது புஷ் நிர்வாகமே; அமெரிக்க செனட் உறுப்பினர் புகார்

ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமாவை இராணுவ அதிகாரி உத்தரவால் பிடிக்க முடியாமல் போனது, என அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க செனட்டின் வெளி விவகாரக் குழு தலைவர் ஜோன் கெர்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது :-அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலை பகுதிகளில் ஒளிந்திருந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமாவை அமெரிக்க படைகள் சுற்றி வளைத்தன. அப்போதே ஒசாமாவை உயிரோடு அல்லது சுட்டு வீழ்த்தி பிடித்திருக்கலாம்.

ஆனால், இராணுவ தலைமை அதிகாரியின் உத்தரவின் காரணமாக, அப்போது அமெரிக்க படைகளில் அங்கிருந்து வெளியேறி விட்டன.

அப்போதே சுட்டு வீழ்த்தியிருந்தால், தொடரும் பயங்கரவாத சம்பவங்களை தடுத்திருக்கலாம். அப்போது செய்த தவறால் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இன்று பயங்கரவாதம் தாண்டவமாடுகிறது.

எதிரியை ஒழிப்பதற்காக படையோடு ஆப்கானுக்கு சென்றாகி விட்டது. அங்கு சென்றபின் எதிரியை கொல்வதற்கு என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது? பாகிஸ்தானுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை பகுதிகளை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு, பாகிஸ்தான் வழியை அடைத்திருந்தால், ஒசாமாவின் கதை முடிந்திருக்கும்.

அதை புஷ் நிர்வாகத்தில் இருந்த ரம்ஸ்பீல்டு போன்றவர்கள் செய்ய தவறி விட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த தவறினால் இன்று பல நாடுகளிலும் அல்-கொய்தா ஆதரவுடன் பயங்கரவாதிகள் கொடி கட்டி பறக்கின்றனர். இவ்வாறு ஜான் கெர்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

செரீனா வில்லியம்ஸுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தடை

serena-williams.jpgஉலக மகளிர் டென்னிஸ் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸுக்கு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்குபெற மூன்று ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தின் போது பெல்ஜியம் நாட்டின் கிம் கிளைஸ்டருக்கு ஆதரவான ஒரு முடிவை போட்டியின் ஒரு நடுவர் தெரிவித்ததற்காக, அவரை ஆடுகளத்திலேயே ஏசிய குற்றத்துக்காக இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் இதே போன்று ஒரு பெரிய தவறை மீண்டும் செய்வாராக இருந்தால் இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வரும்.

புலி நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்ததால் பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து – அமைச்சர் டலஸ் கூறுகிறார்

இராணுவச் சீருடையை தற்கொலை அங்கியாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அவரது உயிருக்கு கூடியிருக்கும் கூட்டாளிகளிடமிருந்தே ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.  நேற்று கொழும்பில் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத்தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் தனது பாதுகாப்பு மக்களிடமே இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். இது உண்மைதான் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. அது வெளியே இருந்து வரப்போவதில்லை. இன்று ஜெனரல் பொன்சேகா விடுதலைப்புலிகளின் நண்பர்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ளார். அவர்களிடமிருந்து தான் எந்த நேரத்திலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.  எதிரணியினர் அமைத்துள்ள கூட்டமைப்பு புலிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்டதாகும். புலிகளுக்காக குரல் கொடுத்தவர்களும், பிரபாகரன் கொல்லப்பட்ட போது கண்ணீர் வடித்தவர்களும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்புக்குள் சரத் பொன்சேகா சிக்கியுள்ளார். அங்குதான் அவரது உயிருக்கு ஆபத்து காணப்படுகிறது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டம் நிறைவுபெற்றது. : புன்னியாமீன்

images.jpgவன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட கல்வி நிவாரண செயற்றிட்டத்தின் கீழ் கணிதம்,  வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் 06 மாதிரி வினாத்தாள்களை வழங்கியுள்ளதுடன்,  தனது இவ்வருடத்துக்கான நிவாரண செயற்றிட்டத்தை நிறைவு செய்து கொண்டது. 

வன்னி மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக் கூடாது என்ற நீண்டகால அடிப்படையைக் கருத்திற்கொண்டு சிந்தனைவட்டமும்,  தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்ட செயற்பாடுகளை முன்னேடுக்கத் திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முதற் கட்டமாக தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட கல்வி நிவாரண செயற்றிட்டம் எமக்குப் பூரண வெற்றியைத் தந்தது. குறிப்பாக எமது முதற் திட்டத்தின் கீழ் 4872 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய எமது கல்வி நிவாரண செயற்றிட்ட உதவிகளைப் பெற்ற 507 மாணவர்கள் சித்தியடைந்திருந்தமை எமக்கு மன நிறைவினையளித்தது. அதேநேரம்,  தரம் 5 மாணவர்களின் செயற்றிட்டத்தை ஆரம்பித்த வேளையில் 300 மாணவர்களை சித்தியடையச் செய்ய வைக்கும் இலக்கோடு தான் நாம் செயற்பட்டோம்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு பல சுயேட்சை நிறுவனங்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால்,  மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாகவும்,  அனைத்து முகாம்களிலுமுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு பரந்துபட்ட திட்டங்களை சுயேட்சை நிறுவனங்கள் முறையாக மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் பௌதீக வசதிகளைவிட மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு நாம் கல்வித் தரத்தை பாதுகாக்கும் நோக்கில் எமது கல்வி நிவாரண செயற்றிட்டங்களை முன்னெடுத்தோம்.

இந்த அடிப்படையில் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டத்தினை வகுத்தோம். இத்திட்டம் வகுக்கப்படும் போது கல்வி செயற்பாட்டுடன் ஈடுபாடுடைய புத்திஜீவிகள்,  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியதிகாரிகள்,  ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கென விசேட திட்டமொன்றினைத் வகுத்தோம்.

எமது திட்டத்தை வகுக்கும்போது நாம் குறிப்பாக பின்வரும் விடயங்களை விசேடமாக கவனத்திற் கொண்டோம்.

01.  நிவாரண கிராமங்களிலுள்ள மாணவர்கள் வடக்கின் யுத்தம் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலங்களில் பாடசாலை கல்வியை பெற முடியாது இருந்தமை

02.  யுத்த பாதிப்புக்களினால் மாணவர்களின் மானசீகமான பாதிப்புக்களை கருத்திற் கொண்டமை

03.  சாதாரண தர பரீட்சை தரம் 10,  11 பாடப்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும். எனவே,  பாடசாலைகளில் கற்க முடியாதுபோன பாட அலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தமை.

04.  நிவாரணக் கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் தவிர, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டிகளோ, வசதிகளோ இல்லாதிருந்தமை.
 
05.  புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இப்பரீட்சை நடைபெறுகின்ற போதிலும்கூட,

யுத்த சுழ்நிலை காரணமாகவும் முகாம்களின் சில அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்படக்கூடிய பயிற்சிக் கருத்தரங்குகளில் முறையாக நலன்புரி கிராம ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை.

இத்தகைய நிலைகளைக் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி எம்மால் நடத்தப்படக்கூடிய கல்வி நிவாரண செயற்றிட்டத்தின் மாணவர்களுக்கு கற்க முடியாது போன தரம் 10,  11 பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும்,  மாணவர்கள் அரசாங்கப் பரீட்சையை இலகுவான முறையில் எதிர்கொள்வதை கருத்திற் கொண்டும் பரீட்சைப் பற்றிய விளக்கத்தை வழங்கக்கூடிய வகையில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கத் தீர்மானித்தோம்.

எமது திட்டப்படி மேற்குறிப்பிட்ட 5 பாடங்களுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க வினாத்தாள் 5 ஐயும் (இம்மாணவர்களிடம் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதலாவதாக நடைபெற்ற 2008 டிசம்பர் அரசாங்க வினாத்தாள்கள் இருக்கவில்லை.) இவற்றுக்கு மேலதிகமாக புதிய பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள புதிய விடயங்களை உள்ளடக்கிய 42 குறிப்பேடுகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம். எமது நிவாரண உதவிகள் ஒரு சில நிவாரணக் கிராம மாணவர்களுக்கு மாத்திரம் போய்ச் சேராமல் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள 6290 மாணவர்களுக்கும் சென்றடையக் கூடிய வகையிலே திட்டங்களை தீட்டினோம்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மீள்குடியமர்த்தப்படுமிடத்து அந்த மாணவர்களுக்கு எமது மாதிரி வினாத்தாள்களையும்,  பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும் வழங்கும் போது மீள்குடியமர்த்தப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், விசேட ஒழுங்குகளை செய்தோம்.

அதேநேரம்,  மாதிரிவினாத்தாள்கள்,  அரசாங்க வினாத்தாள்கள், கையேடுகள் என 77 அலகுகளாக வகுத்து இவற்றின் அச்சீட்டுக்கான தனித்தனி அச்சீட்டு செலவு விபரங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினோம்.

இவ்விடத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக குறிப்பிட வேண்டிய ஒரு கட்டாயப்பாடுண்டு. இத்திட்டத்தை மூலமாக முன்னெடுத்த சிந்தனைவட்டம் அமைப்போ தேசம்நெற் அமைப்போ பாரியளவில் நிதியினைக் கொண்டுள்ள நிறுவனங்களல்ல. இதனால் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த சில பரோபகாரிகளின் உதவியைப் பெற வேண்டிய நிலையிலேயே எமது முழுமையான திட்டத்தை அவர்களிடம் வழங்கி உதவிகள் கோரினோம். கிட்டத்தட்ட எமது முழுமையான செயற்றிட்டத்தை நிறைவேற்ற எமக்கு சுமார் 30 ஆயிரம் பவுண்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மாணவனுக்கு 5 பவுண்களுக்குட்பட்ட ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்படி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தோம். ஒரு மாணவனுக்கு நாம் ஒதுக்கிய 5 பவுண்களிலிருந்தே 30 மாதிவினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாத்தாள்களையும் 42 வழிகாட்டி குறிப்பேடுகளையும் வழங்க தீர்மானித்திருந்தோம். எனவே, அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவருக்கும் இது இலாப நோக்கத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமன்று என்பதையும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்ட செயற்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் பல தனவந்தவர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினோம். இலங்கையில் ஒருவரிடமும் நாம் பணமாகக்  கேட்கவில்லை. மாறாக எமது திட்டத்தை வழங்கி குறிப்பிட்ட மாதிரிவினாத்தாள்களை அல்லது வழிகாட்டிப் புத்தகங்களில் ஓரிரண்டை அச்சிட்டு தரும்படி மாத்திரமே கோரினோம். எமது திட்டத்தை நன்றாக ஆராய்ந்து எம்முடன் பல தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் தொடர்புகொண்டு அவரும் உச்ச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால்,  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிந்துள்ளதுடன், இலங்கையிலிருந்து எதுவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

எமது இத்திட்டத்துக்கு உதவிகள் வழங்கியவர்கள்

அகிலன் பவுண்டேஷன் (லண்டன்) 500 பவுண்கள்
கரன் சேவிர்ஸ் ஸ்ரேசன்ஸ்  (லண்டன்) 500 பவுண்கள்
திரு பொன் சிவசுப்ரமணியம் (லண்டன்) 500 பவுண்கள்
தேசம்நெற் (லண்டன்) 500 பவுண்கள்

லண்டனிலிருந்து மொத்தம் 2000 பவுண்கள் கிடைத்தன.

கனடாவிலிருந்து (கனடாவில் திரு. Ahilan Navaratnam   அவர்கள் எமது திட்டத்திற்கு தானாக முன்வந்து பூரண ஒத்துழைப்பினை வழங்கினார்.)                
Ahilan Navaratnam                   500.00.  CDN
Vijayakaran Thuraisingam       200.00. CDN
Jeyanandan Sinniah                  100.00   CDN
Seenivasagam Navaratnam     100.00. CDN
N.Visuvalingam                            50.00. CDN
Sriskandarajah Anandarajah      50.00.  CDN    
Velupillai Pramsothy                   50.00.  CDN
Aiyadurai Shanmuganathan       50.00.  CDN
P.Arunasalam                               50.00.  CDN
R.Chandrarajan                            20.00.  CDN
V.Joganathan                                20.00.  CDN
                               Total –          1190.00. CDN
அனுப்புதல் செலவு               10.00   CDN
இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்தத் தொகை 1180.00 CDN
இலங்கை நாணயப்படி 129, 210.00 ரூபாய்களாகும்.
பிரித்தானிய நாணய அலகுப்படி 680 பவுண்களாகும்.

இத்திட்டத்திற்கு லண்டனிலிருந்தும் கனடாவிலிருந்தும் கிடைத்த மொத்தத் தொகை 2680 பவுண்களாகும்.

இப்பணத்தொகையைக் கொண்டே நாம் 6290 மாணவர்களுக்குமான அச்சீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

எம்மால் அனுப்பப்பட்ட 6 மாதிரி வினாத்தாள்களுக்கும் மொத்த அச்சீட்டுச் செலவு 2847 பவுண்கள்.

மீதமான 167 பவுண்களை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இச்செலவீனங்களுக்கு மேலாக போக்குவரத்து, பொதியிடல் போன்ற செலவுகளையும் சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இது குறித்த பூரணமான கணக்கறிக்கை எமது செயற்றிட்டத்துக்கு பங்களிப்பு செய்தோருக்கு புத்தக வடிவில் அனுப்பப்படும். அக்கணக்கறிக்கையைப் பெற விரும்புவோர்கள் பின்வரும் ஈமெயில் முகவரிக்கு தங்களது முகவரிகளை அனுப்புமிடத்து தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எம்மால் அனுப்பப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கை 40
எம்மால் அனுப்பப்பட்ட பெட்டிகளின் நிறை 761 கிலோகிராம்கள். 

அதேநேரம்,  இவ்விடத்தில் மற்றும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வன்னி அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகள் தயாரித்துத் தரக்கூடிய உதவியைக் கோரி (பண உதவியல்ல) மொத்தம் 1782 பாடசாலைகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பினோம்;.

அக்கடிதங்களை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும், இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும்,  கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால், வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை. இதனால் பேராதனைப் பல்கலைக்கழக மற்றும்  கண்டி பிரதேச புகழ்பெற்ற ஆசிரியர்களிடமிருந்து மாதிரிவினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் பெற்றுக் கொண்டோம். குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை சிந்தனைவட்டமே பொறுப்பேற்றுக் கொண்டது.

இச்சம்பவத்தை வைத்து நோக்கும்போது வன்னி முகாம்களிலுள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த எம்மவர்கள் கதைப்பதன் அர்த்தத்தை எம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. விசேடமாக பணமாகவன்றி தாம் ஏற்கனவே தயாரித்த மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகளையும்கூட தருவதற்கு இவர்கள் முன்வராமை இவ்விடத்தில் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமே.

நாம் வழங்கிய மாதிரிவினாத்தாள்களை பின்வரும் பெருந்தகைகள் எமக்குத் தயாரித்துத் தந்தனர்.

ஜனாப் யூ.எல்.எம். பஷீர் – வரலாறு ஆசிரிய ஆலோசகர்
திருமதி மஸீதா புன்னியாமீன் – பயிற்றப்பட்ட கணித, விஞ்ஞான ஆசிரியர்
ஜனாப் ஏ.எம். பாயிஸ் – பயிற்றப்பட்ட கணித ஆசிரியர்
செல்வி தஸ்மின் ரியால் – தமிழ் பட்டதாரி ஆசிரியர்
வத்தேகம கல்வி வலய பரீட்சைப் பிரிவு

மேலும், எம்மால் வழங்காமல் கைவசமுள்ள மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் தயாரித்துத் தந்த பெருந்தகைகள்.

ஜனாப் யூ.எல்.எம். பஷீர்;
திருமதி மஸீதா புன்னியாமீன்;
செல்வி தஸ்மின் ரியால
ஜனாப் ஏ.எம். பாயிஸ்
திரு. சிவநாதன் (கல்விப் பணிப்பாளர்)
திருமதி. எம்.ஐ. நளீமா
திருமதி. எம்.ஐ.எஸ்.மும்தாஜ்
திருமதி. சாபிரா நஸார்
வத்தேகம கல்வி வலய பரீட்சைப் பிரிவு

இவர்களுக்கு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் வன்னி முகாம் அகதிகள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

எமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள்:

1. ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாத இறுதியில் எம்மால் ஆரம்பிக்க முடியாமல் போனமை (இதற்கு மூல காரணம் ஆரம்பத்தில் எமக்கு நிதியுதவிகள் கிடைக்காமையே)

2. ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் முகாம்களில் இருந்த மாணவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டமை (இம்மாணவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டாலும்கூட எம்மால் அனுப்பப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் மீள்குடியேறிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.)

3. பிரதான காரணம் மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர வேறு எவ்விதமான நிதியுதவிகளும் எமக்குக் கிடைக்காமை.

எவ்வாறாயினும் ஓரளவுக்காகவது ஒரு சிறிய உதவியாவது வன்னி மாணவர்களுக்கு  செய்யக் கிடைத்தமையை ஒரு பேறாகவே கருதுகின்றோம். இத்திட்டத்திற்கு எம்மால் ஒரு மாணவனுக்கு வழங்க முடியுமாக இருந்த தொகை 45 பென்ஸ்கள் மாத்திரமே.

எதிர்கால ஆலோசனைகள்:

தற்போது அரசாங்கம் செயற்பட்டுவரும் முறையில் அரசாங்கம் 2010 ஜனவரி 31க்கு முன்பு முகாம்களிலுள்ள அனைத்து அகதிகளையும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. (டிசம்பர் விடுமுறைக்கு முன்பாக கிளிநொச்சி முல்லைத் தீவு பிரதேசங்களில் மேலும் பல பாடசாலைகள் திறக்கப்படலாம்)

பாடசாலைகளைத் திறப்பதால் மாத்திரம் அல்லது திறந்த பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மாத்திரம் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துவிட மாட்டாது. விசேடமாக புலம்பெயர் தமிழர்களும்,  இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழக்கூடிய தமிழ் மக்களும் வன்னி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவற்றையும் தமது செயற்றிட்டங்களில் சேர்த்துக்  கொள்ளல் வேண்டும்.

குறிப்பாக மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களிலுள்ள பாடசாலைகள் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளதாகவுள்ளன. போதிய ஆசிரியர்கள் இல்லை. போதிய வளங்கள் இல்லை. உள்ள வளங்களைக் கொண்டே தற்போதைய கல்வி நிலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிச்சயமாக இத்தகைய மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்த திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியம். எமது அனுபவங்களை வைத்து நோக்குமிடத்து அகதிமுகாம்களில் வாழ்ந்த மாணவர்களுக்கு தரம் 05 பாடப்பரப்பை மையப்படுத்தி எம்மால் ஒரு நிறைவான வழிகாட்டலைக் காட்ட முடிந்தது. இதன் விளைவாக 507 மாணவர்கள் சித்தியடைந்தனர். 2010ஆம் ஆண்டில் நிவாரணக் கிராம மாணவர்கள் என்பதை விட மீள்குடியமர்த்தப்பட்ட மாணவர்கள் என்றடிப்படையில் தரம் 05 புலமைப்பரிசில்,  க.பொ.த.சாதாரண தரம்,  க.பொ.த. உயர்தரம் போன்ற மூன்று அரசாங்கப் பரீட்சைகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துதல் வேண்டும். இது உங்கள் பொறுப்பு.

விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால்,  ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு. இது யதார்த்தம். எனவே பேசிப்பேசிக் காலத்தைக் கழிக்காமல் நிலையான திட்டமொன்றின் கீழ் இணையுமிடத்து வன்னி மாணவர்களின் கல்வித்தரத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படியில்லாவிடில் அம்மாணவர்களின் கல்விநிலை இன்னும் சில ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளப்படுவது தவிர்க்க முடியாததே.

அவ்வாறு ஏற்பட்டால் என்றோ ஒரு நாள் நாம் கைசேதப்பட வேண்டிய நிலை உருவாகும்.

ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் போட்டி?

Sambanthan_Rஎதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிடக் கூடுமென பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனநயாக மக்கள் முன்னணியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

இலங்கைப் பொருட்களைப் புறக்கணிக்கும் புலம் பெயர் தமிழர்கள்

000000.jpgபுலம் பெயர் தமிழர்களிடம் ஈழ விடுதலைப் போராட்டத்தை கையளித்திருப்பதாக சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தது. புலம் பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என இணையத்தள செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக இணையச் செய்திகள் குறிப்பிடுகின்றன. .

இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria’s Secret)  மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்அவையின் (United States Tamil Political Action Committee – USTPAC) ‘இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு’ (Sri Lankan Products Boycott Committee)  இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது.

“நண்பர்களே… உங்களை இந்தக் கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என நாங்கள் தடுக்கவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். ஆனால் எந்தத் தயாரிப்பிலாது ‘Made in Srilanka’  என்று இருந்தால் அதை அங்கேயே போட்டுவிடுங்கள். அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழரது ரத்தம் தோய்ந்திருக்கிறது!” டாக்டர் எலீன் ஷாண்டர், டாக்டர் சோம இளங்கோவன், சிவநாதன் போன்றோர் இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்து சட்டரீதியாக வழிநடத்தி வருகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக நான்கு சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு!

dayananda_disanayake.jpgதேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் ஆசிய கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் 12 வீதமானோர் தேசிய அடையாள அட்டை இன்றி காணப்படுவதாகவும் அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களை சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் 

தமிழ், முஸ்லிம்களை புறக்கணிக்கவில்லை என்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கலாம் ஜெனரல் பொன்சேகா

sarath-pon.jpgஇந்த நாட்டில் வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை தான் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பெரும்பான்மை சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களை அரவணைத்துச் செயற்பட வேண்டுமென்றே கூறியதாகவும் ஒருஊடகமே தனது கருத்தை திரிபுபடுத்தி வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல் யாப்பின்படி சிங்களவருக்கு உள்ளது போன்றே தமிழ்,முஸ்லிம் மக்களுக்கும் சம உரிமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஜெய்க்ஹில்டன் ஹோட்டலில் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தளபதியாக பதவிவகித்த காலத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில்;இலங்கையில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லிம்களும் உரிமை கோர முடியாதெனவும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு கீழ்ப்படிந்தே நடக்க வேண்டுமென்றும் நீங்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களிடம் உங்கள் மீதான தப்பெண்ணமும், அதிருப்தியும் நிலவி வருகின்றது. இதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் கூறியதாவது; நான் ஒருபோதும் அவ்வாறு தெரிவிக்கவில்லை. அந்த ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இந்த நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினர்களாக உள்ளனர். அதேபோன்று சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்களும் இங்கு வாழ்கின்றார்கள். அவர்களைப் புறந்தள்ளிவிட முடியாது. சிங்கள மக்கள் இந்த இரு சமூகங்களையும் அரவணைத்தே செயற்பட வேண்டுமென்றுதான் தெரிவித்தேன்.

ஆனால், எனது பேட்டியை அந்த ஊடகம் திரிபுபடுத்தியே வெளியிட்டது.எமது நாடு ஒரு ஜனநாயக நாடு. இங்கு நாம் எந்தச் சமூகத்தையும் தள்ளி வைத்துப் பார்க்க முடியாது. பெரும்பான்மைச் சிங்கள சமூகத்துக்கு இருக்கும் அதே உரிமை சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கு இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். அவர்களும் இந்த நாட்டு மக்களே.அரசியல் யாப்பின் படி சகல சமூகத்தவர்களும் சமமானவர்களாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மைச் சமூகங்களை அரவணைத்தே செயற்பட வேண்டும். இந்தக் கடப்பாட்டிலிருந்து எவரும் விடுபட முடியாது. தமிழ்,முஸ்லிம் மக்களை நான் ஒருபோதும் வேறுபடுத்திப் பார்க்க முற்பட்டதில்லை. எதிர்காலத்திலும் அவர்களைப் பிரித்துப்பார்க்க மாட்டேன்.

இந்த நாட்டின் பிரஜையான நான் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டவன். அதன் பிரகாரம் அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள விதப்புரைகளை மதித்து நடப்பவனாக இருப்பேன்.தமிழ்,முஸ்லிம் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்கலாம். நான் சகல இன மக்களையும் சமமாகவே மதிக்கின்றேன். நான் ஒரு பௌத்தன். ஆனால், சகல மதங்களையும் மதிப்பவன். எந்தவொரு மதத்தினரும் இனத்தினரும் என்னை நம்பலாம். அந்த நம்பிக்கைக்கு நான் ஒருபோதும் துரோகமிழைக்கமாட்டேனென்றும் தெரிவித்தார்.

முள்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, சிறுபான்மையினங்களுக்கு எதிரானவர் -அசாத்சாலி

sali.jpgஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆசாத் சாலியை நீக்கியமைக்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்சி மேற்கொண்ட தீர்மானம் தவறானதென்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆசாத்சாலியை ஐ. தே. க. நீக்கியது தொடர்பாக நேற்று (29) அவரது தலைமையில் கூடி ஆராயப்பட்டது. இதன் போது தமது ஆதரவாளர்கள் இந்த முடிவுக்கு வந்தாக அசாத்சாலி தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியில் அசாத் தொடர்ந்து இருந்து செயற்படுவதற்கான சூழல் இல்லாதபட்சத்தில், அவர் அரசியலைவிட்டு விலகி விடாமல், அரசியலில் தொடர்ந்து நீடிப்பதற்காக மேற்கொள்ளும் எந்தத் தீர்மானத்தையும் ஆதரிக்கத் தயாரென நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முள்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, சிறுபான்மையினங்களுக்கு எதிரானவர் என்பதால், அவரைவிடுத்து ஐ. தே. க.வின் சார்பில் வேறொருவரை தேர்தலில் நிறுத்தும்படி ஆசாத் சாலி ஐ. தே. க.வைக் கோரியிருந்தார். ஆனால், இந்த கருத்து ஏற்கப்படாமல் கட்சியிலிருந்து அசாத் சாலியை நீக்கியமை தவறானதென்பது அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த காலங்களில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் தொடர்பில் நடந்து கொண்ட விதமும் அந்த மக்கள் குறித்து உள்ளூரிலும் சர்வதேச ரீதியாகவும், தெரிவித்து வந்த கருத்துகளும் ரகசியமானவை அல்ல.இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நியமிப்பதென அறிவித்திருப்பது வேடிக்கையானதொரு விடயமே என்று தெரிவித்த சாலி,

சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் விரோதப் போக்கையே காட்டுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவது ஆராயந்தபோது ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதென கட்சியின் உயர்பீடம் தெரிவித்தது. ஆனால் நானும் மேலும் இருவரும் இந்த முடிவை வன்மையாக எதிர்த்தோம். தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி மீது சிறுபான்மையின மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்களென்றும் அந்த மக்கள் நிச்சயமாக ஜெனரலை ஆதரிக்க மாட்டார்களென்றும் தெரிவித்தேன்.

இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. பயங்கரவாதப் பிரச்சினையே நிலவுகிறது. அதனை இல்லாமல் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். அதன் பின்னர் எந்தப் பிரச்சினைக்குமே தீர்வு காண வேண்டிய அவசியமில்லை. தமிழர்கள் இலங்கைக்குச் சொந்தமானவர்களல்லர் என்றெல்லாம் தமிழ் மக்கள் விரோதக் கருத்துக்களைப் பரப்புரை செய்து வந்த ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி பொது வேட்பாளராக தெரிவு செய்வதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதென வலியுறுத்தினேன்.

ஆனால் நடந்தது என்ன? தமிழ் பேசும் மக்கள் சார்பில் என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் புறந்தள்ளப்பட்டதுடன் என்னையும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கினர். தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுத்த எனக்கு ஐக்கிய தேசியக் கட்சி தந்த பரிசுதான் இது.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெறவே மாட்டார். அவருக்குத் தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் வாக்களிக்கப் போவதுமில்லை. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அந்தக் கட்சி சிறுபான்மை மக்ககளின் நம்பிக்கையை இழந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு எதிரான அறிக்கையில், நான் (அசாத் சாலி) மங்கள சமரவீர, திஸ்ஸ அத்தநாயக்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரும் கைச்சாத்திட்டோம். ஆனால், இன்று அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்றார்.