வவுனியா தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் படுகின்ற அவலநிலைகளை எடுத்துக்கூறி உணர்ச்சி வசப்பட்டு உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். மக்கள் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள்,பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் போதே கண்ணீர் விட்டு அழுது தனது உரையை விட்டு விட்டு உரையாற்றினார்.
சர்வதேசத் திடமிருந்து நற்பெயரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையே இன்று மேலோங்கியுள்ளது. எனது பாராளுமன்ற அனுபவத்தின் படி அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களின் வாயை மூடுவதற்கே பயன்பட்டுள்ளது. மூன்று இலட்சம் தமிழ் மக்கள் விருப்பமின்றி அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மக்களின் பெறுமதியான சொத்துக்கள் அழிந்துவிட்டன.
இத்தனை அழிவுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ நாடு யுத்தத்துக்கு முன்னுரிமையளித்து வந்தது. எனினும் இனியாவது பிரச்சினைக்குத் தீர்வுகாணப் பட வேண்டும். முகாம்களில் வாழும் மூன்று இலட்சம் மக்கள் படும் அவஸ்தைகளினால் முழு தமிழ் சமூகத்தின் மனங்களும் உளைச்சலுக்குள்ளாகியுள்ளன. இம்மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாழ வழிவகை செய்ய வேண்டும்.
முகாம்களிலுள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்க முன்வந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும். அப்போது அங்குள்ள அடர்த்தி குறைந்து நோய்களும் இறப்புக்களும் குறைவடையும். பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பத்மினி சிதம்பரநாதன் மேற்கண்டவாறு கூறினார்.