நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் உடனுக்குடன் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ். எஸ். அமீர் அலி நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
எதிரணியினர் குறிப்பிடுவது போல் இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருக்கும் எண்ணம் அரசாங்கத்திற்குக் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கி இருக்கும் நலன்புரி நிலையங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாதிருப்பதற்காக மல்வத்து ஓயாவிலிருந்து 50 லட்சம் லீட்டர் நீரைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் காலத்திற்குக் காலம் வெவ்வேறுவிதமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். இது வழக்கமானது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் எமது ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். இது தெளிவானது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் இனியாவது இனவாதம் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர் எவருமே அங்கம் வகிக்கவில்லை என்பது அபத்தமானது. அச்செயலணியில் இரண்டு தமிழ் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர். இதனைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இல்லையெனக் கூறுவது எமக்கு கவலை அளிக்கிறது.