2009

2009

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிப்பு!

அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் மத்திய குடிவரவுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது

முதல் அரையாண்டு காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியவர்களில் இலங்கையர்கள் இரண்டாம் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது இரண்டாவது அதிகபடியான புகலிடம் கோரல் விண்ணப்பங்கள் இலங்கையர்களிடம் கிடைக்கப் பெற்றுள்ளதாக மத்திய குடிவரவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

2009ம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் 8400 பேர் புகலிடம் கோரியுள்ளனர் கடந்த வருடத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 40வீத உயர்வைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது எரித்திரியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான புகலிடம் கோரியோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை. நைஜீரியா. ஈராக். மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் முறையாக இரண்டாம் மூன்றாம் நான்காம். மற்றும் ஜந்தாம். இடங்களை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது

நைஜீரியர்களினால் விண்ணப்பிக்கப்பட்ட புகலிடம் கோரல் மனுக்களில் 73 வீதமானவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது

கத்தி(ஏகபிரதிநிதி) போய் மேளம்(21பேர்) வந்தது டும் டும்……!!- வடக்கான் ஆதாம்

வன்னி தடுப்பு முகாம்களில் வசித்து வரும் தமிழ் மக்களின் வாழ்வியலை முன்னேற்றும் நடவடிக்கையாக ஸ்ருட்காட்டில் ஒரு மகாநாடு என்றபோது பொதுவாகவே இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு இருக்கும் எனவே இந்த மகாநாடு சம்பந்தமாக எனக்கும் பல கேள்விகள் எழுந்து மறைந்தது. ஆனால் இந்த மகாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எல்லாம் புலிப் பாஸிஸ எதிர்ப்பாளர்கள் ஆவர். எனவே பத்தரை மாற்று தங்கத்தை உரசிப் பார்ப்பது தகுமா? அனாவசியமாக புலி முத்திரை குத்தவும் வாய்ப்புள்ளது.

யார் இந்த 21 நபர்கள். நானும் விசாரித்த வண்ணமே இருக்கிறேன். பதில் இன்றுவரை கிடைக்கவில்லை. சரி! இவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர்? இவர்களாக போனார்களா? அல்லது தெரிந்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்டார்களா? போய் வந்தவர்கள் கண்டு பிடித்தவை என்ன? ஒரு கூட்டு அறிக்கை (21நபர்) விடப்பட்டதா?

இவர்களாகப் போனால் 70 நபர்களிடம் (அதுவும் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது என தெரியவில்லை) அதற்கான அங்கீகாரத்தை கோருவது நியாயமல்ல என லாஜிக்காக பேசும் இவர்களுக்கு புரியாததல்ல. சரி அரசு தேர்ந்தெடுத்து அழைத்தால் என்ன அடிப்படையில் அரசு அழைக்கின்றது என விசாரித்தார்களா? அல்லது இவ்வாறு அரசின் விருந்தாளிகளாக செல்வது தம்மேல் நம்பிக்கையீனத்தை உருவாக்கும் என்பதை அறியாதவர்களா? தமது கண்டு பிடிப்புக்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது புரியாதவர்களா?

மனிதநேயம் என்ற குறிக்கோளுடன் மக்கள் சேவையாற்ற களம் இறங்கிய இவர்கள் இலங்கை அரசின் மேலும் அதன் படையின் மேலும் தமிழ் மக்கள் கேட்கும் கேள்விகள் பற்றி விசாரித்தார்களா?

1)முகாம்களில் இருப்போரின் எண்ணிக்கையும் அவர்களின் விபரமும் தேவை ஏற்படின் இதை இணையங்களில் வெளியிடுவது – இதன் மூலம் காணாமல் போவது மற்றும் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள உறவினர்கள் தமது சொந்தங்களின் நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

2)போரின் போது மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை – இலங்கை அரசின் கருத்துப்படி சர்வதேசம் இலங்கை அரசிற்கு எதிராக தொழிற்படுவதாகவும் ஏனெனில் மேற்கத்தைய நாடுகள் இலங்கை முற்போக்கு அரசிற்கு எதிராக கங்கணம் கட்டி வேலை செய்வதாக கூறுகின்றது. ஏற்றுக் கொள்கிறோம். அப்படியாயின் இளைப்பாறிய நீதிபதி வி.ஆர். கிருஸ்ண அய்யர் போன்ற சமூக நன்மதிப்பு பெற்றவர்களைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளலாம்.

3)முகாங்களின் வசதி பற்றி- 21 நபர் கொமிற்றி எல்லா முகாம்களுக்கும் சென்றதா? அதிகாரிகள் அற்ற நிலையில் யாரிடமாவது விசாரித்தீர்களா? அப்படி இருப்பினும் முகாம்களில் இருப்போர் உண்மையான கஸ்டங்களை பயமின்றி கூறுவார்கள் என நினைக்கின்றீர்களா?

4)இடம்பெயர்ந்த வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வது – இதற்கான தடைகள் என்ன? எவ்வளவு காலம் தேவை? எவ்வாறு விரைவாக குடியேற்றலாம்? முக்கியமாக கூறப்படுவது மிதி வெடிகளைப் பற்றியே. மிகத்திட்டமிட்டு பகுதி பகுதியாக செய்தால் கடந்த இரண்டு மாதமாக நிறைய மக்கள் குடியிருப்புள்ள இடங்களை துப்பரவு செய்திருக்க முடியும். நாம் உறுதியாக நம்புகின்றோம் அரசிடம் வேறு மறைமுகத்திட்டம் இருக்கின்றது என. இந்த சந்தேகம் உங்களுக்கு வரவில்லையா?

5)இந்த முகாம்களுக்கு மேஜர் சந்திரசிறி நியமிக்கப்பட்டதும் மேலும் வடகிழக்கு மாகாணங்கள் இராணுவ மயப்படுவதும் உங்களுக்குப் புரியாததா? மிகச்சிறந்த சிங்கள சிவில் சேவையாளர் விமல் அமரசேகர (முன்னாள் யாழ். அரச அதிபர்) போன்றவர்களைக் கொண்ட சிவில் நிர்வாகத்தை உருவாக்குவது பற்றி நீங்கள் பேசவில்லையா?

6)சிங்கள, தமிழ், முஸ்லிம் நல் சக்திகளைக் கொண்ட சில கண்காணிப்பு குழுக்களை அரசின் ஏற்பாட்டுடன் செய்து முகாம்களின் நிலைபற்றி கவனம் எடுப்பது என்றெல்லாம் நிறைய விடயங்கள் உள்ளது.

சிவில் சேவையுடன் சம்பந்தப்படாத எனக்கே இவ்வளவு கேள்விகளும் யோசனைகளும் இருக்கும் போது அறிஞர் குழுவில் உள்ள உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் எழுந்திருக்கும்? இவைகள் பற்றி நீங்கள் கேட்டிருந்தீர்களா? பதில் கிடைத்ததா?

மூன்று லட்சம் மக்களை முகாம்களில் வைத்துப் பார்ப்பது இலகுவான விடயமல்ல என்பது எமக்கு தெரியும். அதற்காக அவர்களை துன்பத்திற்குள்ளாக்குவது முறையாகுமா? அதை விடுத்து மக்கள் நன்றாக இருக்கிறார்கள் எனக் கூறுவது…….?சிங்கள முற்போக்கு சக்திகளே (வாசுதேவ நாணயக்கார) அங்கு பிரச்சினை உள்ளது எனக் கூறும்போது நீங்கள் இங்கிருந்து சென்று நற்சான்றிதழ் கொடுப்பது நல்லதல்ல. மேலும் முப்பது வருடங்களுக்கு மேலாக இங்கிருக்கும் உங்களுக்கு, இலங்கையில் இருந்து வரும் புலி எதிர்ப்பாளர்களை மாத்திரம் சந்திக்கும் உங்களுக்கு, அங்கு சாதாரண மக்கள் படும்பாடு புரியுமா? அல்லது உங்களது நெருங்கிய உறவினர்கள் (இங்கும் அங்கும்) உங்களது இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்களா?

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னியில் இருந்து வந்த இந்த அகதி மக்களை அரசு சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது ஓரளவிற்கு ஏற்கப்படக் கூடியது என்ற காரணத்தை நீங்களும் நாங்களும் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், பிரபாகரனுக்கு விசுவாசத்தை காட்டுவதற்காக ஏராளம் கொலைகள் புரிந்த, கொலைகள் மாத்திரம் புரிந்த கருணா போன்றோரும் அரசிலும் அதற்கு நெருக்கமாயும் இருப்பது பற்றி விரல் நுனியில் எல்லா விபரங்களையும் வைத்திருக்கும் பசில் ராஜபக்சேவிடம் வினவினீர்களா?

உங்களது (21 பேர்) இலங்கை விஜயம் வன்னி மக்களின் நலன்சார்ந்தது மாத்திரமா? உங்களில் எத்தனை பேர் வன்னிப் பிரதேசத்துடன் தொடர்புடையவர்கள்? இனப் பிரச்சனையின் ஒரு பகுதிதான் இந்த வன்னி அவலம் என்பது உங்களுக்கு புரியாததா? காயங்களின் ஒரு பகுதியை குணமாக்குவது சரிப்படும் என நினைக்கிறீர்களா?

நிபந்தனை அற்ற ஆதரவு எங்கு கொண்டு போய் விடும் என்பதை நமது கண்களின் முன்னாலேயே புலிகள் செய்து காட்டினார்கள். (எந்தக் கேள்வியும் இன்றி மக்கள் புலிகளை ஆதரித்து விட்டு இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள்) எனவே மக்கள் நலன் சார்ந்து ஆதரவு கொடுப்பது தவறல்ல. ஆனால் மனதில் சந்தேகக் கண்ணுடன் ஆதரவு தருவது சரியாகுமா? புலிகள் இருந்த போது புலிக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதின் அளவுகோல் வேறு. இப்போது இதற்கான அளவுகோல் வேறு என்பது உங்களுக்குப் புரியாததல்ல! யதார்த்ததத்தின் அடிப்படையில் புலிக்கெதிரான போரில் உயர் பாதுகாப்பு வலயம் மீன்பிடித்தடை போன்ற மனித உரிமை மீறல்கள் கண்டும் காணாமலும் விடப்பட்டன. ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்ட பின்னும் மனித உரிமை மீறல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில் இலங்கை அரசுகளின் கடந்த காலங்கள் அப்படியானவை என்பது உங்களுக்கு புரியாதவை அல்ல.

இனப்பிரச்சினைக்குரிய தீர்வை கண்டு பிடிப்பதில் தொடர்ச்சியாக வந்த அரசுகள் விட்ட பிழைகளை பாஸிஸ புலிகளின் தவறுகளைக் கொண்டு மூடி மறைக்கக் கூடியதாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். மேலும் எவ்வளவு காலம் தீர்வை கண்டுபிடிக்கத் தேவை என்பதை உங்களால் (21பேர்) அறிய முடிந்ததா? அறிஞர் குழுவில் பெரும்பான்மை அறிக்கை என ஒன்று சில வருடங்களுக்கு முன்பு வெளியாக நாங்களும் நீங்களும் வாயைப் பிளந்து நின்றது உங்களுக்கு மறந்து போய்விட்டதா? அடிக்கடி திஸ்ஸ விதாரண இதோ முடித்து விடுவோம், இன்னும் கொஞ்சம் இருக்கிறது என அறிக்கை விடுவது உங்கள் நினைவுக்கு வரவில்லையா?

இன, மத ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கு புலி செய்த பாவங்கள் போதும். தயவு செய்து நீங்களும் அவர்களுக்கு மேலதிக துன்பத்தைக் கொடுக்காதீர்கள்! வடக்கு, கிழக்கு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை இன்னும் உங்களுக்கு விளங்க முடியவில்லை எனில், நீங்கள் கூறியது மாதிரி மக்கள் உங்களை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

95இல் இருந்து இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ் குடாநாட்டு மக்கள் போர் முடிந்து இரண்டு மாதங்களாகியும் நாட்டின் வேறு பகுதிக்கு போவதற்கு இராணுவத்தின் அனுமதி கோரி நிற்பது வெட்கப்பட வேண்டிய விடயம். அத்தோடு தமது அவசர தேவைகளுக்கு தலைநகர் கொழும்பிற்கு வருவதற்கு விமானப் பயணத்தையே இன்னமும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து செல்ல இருப்பவர்களும் இதே நிலையிலேயே உள்ளதோடு உள்ளுர், வெளிநாட்டு மக்கள் அந்தப் பயணங்களுக்குரிய கட்டணங்களை கேட்டு தலையில் கைவைத்தபடி உள்ளார்கள். எவ்வாறு புலி கடந்த காலங்களில் பொது மக்களின் பணத்தை பகற் கொள்ளையடித்ததோ அதே பாணியில் இன்றும் அவை நடைபெறுவதாக குமுறுகின்றனர் என்பதையெல்லாம் புரிந்து கொண்டு கடந்த காலங்களில் புலி எதிர்ப்பு போராட்டத்தில் உங்களுக்கு தோள் கொடுத்த எங்களுக்கு தமிழ் மக்களுக்கு எதிரான நிலையை நீங்கள் எடுப்பதன் மூலம் எங்கள் உறவுகளின் முன்னால் எம்மை அவமானப்படுத்தி விடாதீர்கள் என கோருகின்றோம்.

இலண்டன் ரைம்ஸ் செய்தியை சுகாதார ஸ்தாபனம் நிராகரிப்பு – நிவாரணக் கிராமங்களில் உயிரிழப்புகள் அதிகமென பொய்ப்பிரசாரம்

வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் அதிக உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறி இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த சில வெளிநாட்டு ஊடகங்கள் முயற்சி செய்வதாகச் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்தலியனகே நேற்றுத் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் வாரமொன்றுக்கு 1400 பேர் உயிரிழந்ததாக லண்டன் ரைம்ஸ் மற்றும் ரெலிகிராப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளில் எவ்வித உண்மையுமே இல்லை என்று இச்செய்தியாளர் மாநாட்டில் பங்கு பற்றிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி டாக்டர் பிர்தெளஸி மேத்தா கூறினார்.

சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் டாக்டர் அத்துல கஹந்த லியனகே இது தொடர்பாக மேலும் கூறுகையில், வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் அதிக உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு லண்டன் ரைம்ஸ் மற்றும் ரெலிகிராப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுவும் ஜூலை மாதம் 10ம் திகதி முதலான ஒருவார காலத்தில் 1400 பேர் இவ்வாறு உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்த நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் இடம்பெறுகின்ற சகல உயிரிழப்புக்களையும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு குறிப்பிட்டிருக்கின்றோம். இம்மரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென பிரதம சட்ட வைத்திய அதிகாரியை இணைப்பாளராக நியமித்துள்ளோம்.

இந்த அடிப்படையில் ஜூன் மாதம் 15ம் திகதி முதல் ஜுலை மாதம் 14ம் திகதி வரையும் இக்கிராமங்களில் 163 பேர் தான் உயிரிழந்துள்ளனர். இதுவே பொலிஸ் பதிவாகும். இதன்படி இக்கிராமங்களில் தினமும் 5.62 சதவீதமான மரணங்கள் தான் இடம்பெறுகின்றன.

இதன்படி லண்டன் ரைம்ஸ் மற்றும் ரெலிகிராப் பத்திரிகைகள் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அளித்துவரும் சிறந்த சுகாதார சேவைக்குச் சேறுபூசவுமே முயற்சி செய்கின்றன. அப்பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியை நாம் முழுமையாக மறுக்கின்றோம். சர்வதேச பிரமாணங்களுக்கு அமைய வவுனியாவுக்கு இடம்பெயர்ந்திருக்கும் 2 இலட்சத்து 65 ஆயிரம் மக்கள் மத்தியில் 6.6 சதவீதத்திற்கும் 13.2 சதவீதத்திற்குமிடைப்பட்ட வீதத்தில் தான் உயிரிழப்புக்கள் நிகழ வேண்டும். ஆனால் அங்கு 5.6 சதவீத உயிரிழப்புக்களே நிகழுகின்றன. ஆகவே எமது சுகாதார சேவைகள் சிறப்பாக இருப்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டு என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் பிரதம சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஆனந்த சமரசேகர குறிப்பிடுகையில், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் புலிகளின் பிடியில் பல வருடங்கள் இருந்தவர்கள், அதனால் அவர்கள் அனேகர் தீவிர போஷாக்கின்மைக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் தொற்று நோய்களின் தாக்கம் ஏற்படுவது மிகவும் இலகுவாகும். அதனால் தான் இந்நிவாரணக் கிராமங்களில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பாக உடனுக்குடன் அமைச்சுக்கு அறிய கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என்றார்.

சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடரும் – வானிலை அவதான நிலையம் அறிவிப்பு

170709rain.jpgநாட்டின்  மேற்கு, மத்திய, சபரகமுக பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று  அடிக்கடி மழை பெய்யக்கூடிய சீரற்ற கால நிலை காணப்படும் என வானிலை அவதான நிலைய பிரதி இயக்குநர் எஸ். ஆர். ஜயசேகர தெரிவித்தார்.

இப்பிரதேசங்களில் இன்னும் சில தினங்களுக்கு இதே கால நிலை தொடரும் எனவும் இடைக்கிடை பலத்த காற்று வீசும் எனவும் அவர் மேலும் கூறினார்

ஊவா பகுதியில் 6500 குடும்பங்களுக்கு ரூ.171மில். செலவில் வீடமைப்பு வசதிகள்

relief-work.jpgதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்திய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தினூடாக 6500 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதி செய்துகொடுக்க முடிந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கத்தால் செலவு செய்த மொத்த தொகை 171 மில்லியன் ரூபாவாகுமென வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 4244 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக வீடமைப்புக் கடனாக 51 மில்லியன் ரூபாவும் வீடமைப்பு உதவியாக 05 மில்லியன் ரூபாவும் பெருந்தோட்ட வீடமைப்புக்காக 35 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாண வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக மொனராகலை மாவட்டத்தில் 2200 குடும்பங்களுக்கு மூன்று வருட காலத்தில் வீட்டு வசதிகளைச் செய்துகொடுக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழி செய்துள்ளதுடன், அக்குடும்பங்களுக்காக வீடமைப்புக் கடனாக மொத்தம் 50.4 மி. ரூபா வழங்கப்படுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் வறிய குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்திய வீடமைப்பு உதவியாக 5.5 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளதுடன், பெருந்தோட்ட வீடமைப்புக்காக வெளியார் பங்களிப்பாக 25 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

இவ்வரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் மஹிந்த சிந்தனை தேசிய கொள்கையின் கீழ் நடைமுறைப்படுத்திய ஜனசெவன தேசிய வீடமைப்பு திட்டத்திற்கேற்ப தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்திய மிக முக்கியமான வேலைத்திட்டம் கமநெகும வேலைத்திட்டமாகும். இவ்வேலைத் திட்டத்தின் கீழ் 03 வருடங்களுக்குள் கமநெகும வேலைத் திட்டத்தினூடாக ஊவா மாகாணத்தில் 1800 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டள்ளதுடன், அவற்றுள் 890 பதுளை மாவட்டத்திலாகும். மேலும் 810 குடும்பங்கள் மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்காகும்.

ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்திய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது நிலையானதொரு வீட்டை நிர்மாணித்துக் கொள்ள எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு நிரந்தரமான கூரையைப் பெற்றுக்கொடுக்க பங்களிப்புச் செய்யும் நடவடிக்கையாகும். இவ்வேலைத்திட்டமானது பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், 3800 குடும்பங்களுக்கு கூரைக்கான தகரங்கள் வழங்கப்பட்டன.

இதன்படி பதுளை மாவட்டத்தில் 38000க்குமதிகமான கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டதுடன், மொனராகலை மாவட்டத்தில் 5200 கூரைத் தகரங்கள் வழங்கப்பட்ட தோடு, இதற்காகச் செலவிடப்பட்ட மொத்த தொகை 43 மில்லியன் ரூபாவாகும்.

கண்டி உதவி இந்திய தூதரகத்தினால் நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு

school-books.jpgகண்டி உதவி இந்திய தூதுவராலயத்தில் மத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும்.

சிறுவர்களுக்கு பயன்தரும் நூல்கள் அடங்கிய தொகுதி இந்நிகழ்வில் வழங்கப்படவுள்ளது. காலை 10.30 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் நூல்களைப் பெறும் பாடசாலைகளுக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் அல்லது பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆசிரியர் வருகை தந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கொட்டதெனிய ரூ.10 கோடி கொள்ளைச் சம்பவம்; சிங்கப்பூர் தப்ப இருந்த வேளை சூத்திரதாரி மடக்கிபிடிப்பு

கொட்டதெனிய 10 கோடி ரூபா கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரியான நகை மாளிகை உரிமையாளரொருவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் செல்ல முயன்ற வேளை, அம்பலாங்கொடையில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 92 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தினகரனுக்குத் தெரிவித்தார்.

பொலிஸாரிடம் சிக்காமல் தப்பியோடிய இருவருள் ஒருவரே இவரென்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அம்பலாங்கொடையில் வைத்து ரொயொட்டா வீஓஎல் காரில் கொள்ளையிட்ட பணத்துடன் சென்று கொண்டிருக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். கபில டி சில்வா என்ற இந்த நபர் சிங்கப்பூருக்குச் செல்வதற்கான விமானப் பயணச் சீட்டைத் தயார்படுத்தியிருந்ததாகவும், அவரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

விமானப் படையில் இருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தப்பியோடிய அவர், அம்பலாங்கொடையில் நகைமாளிகை நடத்தி சுகபோகமாக வாழ்ந்து வருபவரென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பீ. தெரிவித்தார்.

குருநாகலில் இரண்டு தனியார் வங்கிக் கிளைகளில் சேகரிக்கப்பட்ட 10 கோடி ரூபா பணத்துடன் நிறுவனத்தின் காவலர்கள் கிரியுல்லை வழியாகக் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கொட்டதெனியவில், பொலிஸ் சீருடையை ஒத்த ஆடை அணிந்திருந்த ஆயுததாரிகள் அறுவர் அந்த வாகனத்தை சோதனையிடுவதற்காக நிறுத்தியுள்ளனர். உடனே வாகனத்தில் வந்தவர்கள் இறங்கி தம்மை அடையாளப்படுத்த முற்பட்ட வேளை, அவர்களைப் பிடித்துக் கட்டிப் போட்ட ஆயுததாரிகள் பண மூடைகளை ஏற்கனவே தயாராக வைத்திருந்த வாகனங்களில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

விடயம் உடனடியாக குருநாகல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கொள்ளையர்களைத் துரத்திச் சென்றுள்ளனர். அதன் போது எட்டரை கோடி ரூபா பணத்துடன் நால்வரை பொலிஸார் மடக்கிப் பிடித்து விட்டனர். எனினும் இருவர் ஒன்றரை கோடி ரூபாவுடன் தப்பிச் சென்றுவிட்டனர். அதில் ஒருவரே அம்பலாங்கொடையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வேண்டாம் பொலிஸ் தலைமையகம் மக்களுக்கு அறிவுறுத்தல்

housemaids.jpgசட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயற்சிக்க வேண்டாமென பொது மக்களிடம் அரசும் பொலிஸ் தலைமையகமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  கடந்த காலகட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற நபர்கள் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் தற்காலிக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந் நபர்களின் ஒரு பகுதியினர் அவுஸ்திரேலியா அதிகாரியினால் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந் நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் மக்களுக்கு பொய் உத்தரவாதங்களை வழங்கி அவர்களை ஏமாற்றி இவ்வாறாக சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஊக்கமளிக்கின்றனர். இவ்வாறான வஞ்சக நபர்களிடம் அவர்களின் வார்த்தைகளினால் ஏமாறுபவர்கள் பெரும் பணத்தொகையினை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதுடன், தமது வாழ்க்கையை பலிகொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன.

எனவே இதன் பின்னராவது சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என அரசாங்கமும் பாதுகாப்பு பிரிவினரும் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் மழை – களுகங்கை நீர் மட்டம் உயர்வு

rain2.jpgமேல் மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் நேற்று கடும் மழை பெய்ததாக காலநிலை அவதான நிலையம் அறிவித்தது. அதன்படி, கொழும்பில் ஓரளவு மழை பெய்துள்ளது. களுத்துறை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கூடிய மழை வீழ்ச்சி ஹங்வெல்லயில் பதிவாகியுள்ளது. (63.3 மி. மீ.) அதேவேளை லபுகலவில் 60.6 மி. மீ., கலட்டுவாவயில் 49 மி. மீ., மத்துகமவில் 31.6 மி. மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் மீண்டும் இடையிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக இம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தோட்டங்களில் பால் சேகரிக்கும் பணி, சீவல் தொழில் என்பன முற்றாகவே ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். களுகங்கையின் நீர் மட்டமும் கூடியுள்ளன.

டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறவேண்டும் – டாக்டர் ஷாலினி

dengu_1.gif“எமது நாட்டில் தற்போது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ள டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகி அதற்கான ஆலோசனையைப் பெறவேண்டும். காய்ச்சல், தொண்டை நோ, தலைவலி, வயிற்றுவலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் டெங்கு நோய்க்கானவையாகவும் இருக்கலாம்’ என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் டாக்டர் ஷாலினி அறிவுரை வழங்கினார்.

கொழும்பு சேர் ராசிக் பரீட் வித்தியாலயத்தில் நடைபெற்ற இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மேல் கொழும்பு தரம்2 பாடசாலைகளுக்கான விஞ்ஞான தின விழாவில் உரையாற்றும் போதே அவர் இந்த ஆலோசனையைத் தெரிவித்தார். விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பாரியார் திருமதி காமினி விதாரணவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டாக்டர் ஷாலினி தொடர்ந்து உரையாற்றுகையில்;

“தற்போது எமது நாட்டில் டெங்கு நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதும் எம்மை கதிகலங்க வைக்கிறது. ஏடிஸ் எஹிப்டிக் என்னும் பெண் நுளம்பினால் பரவும் இந்த நோய் ஒரு வைரஸ் நோயாகையால் இதனை மருந்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. சிகிச்சை பயனளிக்காத நிலைமையையே காண முடிகிறது.

இந்த நோயில் சாதாரண டெங்கு  வகை தலைவலி, பசியின்மை, உடல் வலி, காய்ச்சல் என்பவற்றை விளைவித்தாலும் பெரும்பாலும் மூன்று நாட்களில் குணமாகிவிடும் சாத்தியம் உண்டு. ஆனால், குருதிக் காய்ச்சல் டெங்கு பேராபத்தை விளைவிக்கும் நோயாகும். அநேகமாக 15 வயதுக்குட்பட்ட சிறார்களையே அது பாதிக்கின்றது.

நோய் முற்றிய பின்பு வைத்தியரை நாடுவதில் எவ்வித பயனுமில்லை. உடல் சோர்வு அதிகரித்து, இரத்த அழுத்தம் குறைந்து போகும் அறிகுறி தென்பட்டால் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே, நோய் வருமுன் காப்பதே சிறந்தது. இந்த நோயைப் பரப்பும் நுளம்பை முதலில் ஒழித்துக் கட்டவேண்டும்.

குறைந்தது 5 மில்லி லீற்றர் நீர் எங்காவது தேங்கி இருந்தால் கூட இந்த நுளம்பு இனவிருத்தி செய்துவிடும் ஆற்றல் பெற்றது. எனவே உங்கள் வீட்டுச் சுற்றுப்புறச் சூழலில் நீர்தேங்கியிருந்தால் அதை உடனடியாகச் சுத்தப்படுத்துங்கள். சகலரதும் ஒத்துழைப்பு இருந்தாலே இந்த நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்’ என்றார்.