சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயற்சிக்க வேண்டாமென பொது மக்களிடம் அரசும் பொலிஸ் தலைமையகமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த காலகட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற நபர்கள் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் தற்காலிக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந் நபர்களின் ஒரு பகுதியினர் அவுஸ்திரேலியா அதிகாரியினால் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந் நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் மக்களுக்கு பொய் உத்தரவாதங்களை வழங்கி அவர்களை ஏமாற்றி இவ்வாறாக சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஊக்கமளிக்கின்றனர். இவ்வாறான வஞ்சக நபர்களிடம் அவர்களின் வார்த்தைகளினால் ஏமாறுபவர்கள் பெரும் பணத்தொகையினை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதுடன், தமது வாழ்க்கையை பலிகொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன.
எனவே இதன் பின்னராவது சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என அரசாங்கமும் பாதுகாப்பு பிரிவினரும் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.