தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்திய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தினூடாக 6500 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதி செய்துகொடுக்க முடிந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கத்தால் செலவு செய்த மொத்த தொகை 171 மில்லியன் ரூபாவாகுமென வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 4244 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக வீடமைப்புக் கடனாக 51 மில்லியன் ரூபாவும் வீடமைப்பு உதவியாக 05 மில்லியன் ரூபாவும் பெருந்தோட்ட வீடமைப்புக்காக 35 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாண வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக மொனராகலை மாவட்டத்தில் 2200 குடும்பங்களுக்கு மூன்று வருட காலத்தில் வீட்டு வசதிகளைச் செய்துகொடுக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழி செய்துள்ளதுடன், அக்குடும்பங்களுக்காக வீடமைப்புக் கடனாக மொத்தம் 50.4 மி. ரூபா வழங்கப்படுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் வறிய குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்திய வீடமைப்பு உதவியாக 5.5 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளதுடன், பெருந்தோட்ட வீடமைப்புக்காக வெளியார் பங்களிப்பாக 25 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
இவ்வரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் மஹிந்த சிந்தனை தேசிய கொள்கையின் கீழ் நடைமுறைப்படுத்திய ஜனசெவன தேசிய வீடமைப்பு திட்டத்திற்கேற்ப தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்திய மிக முக்கியமான வேலைத்திட்டம் கமநெகும வேலைத்திட்டமாகும். இவ்வேலைத் திட்டத்தின் கீழ் 03 வருடங்களுக்குள் கமநெகும வேலைத் திட்டத்தினூடாக ஊவா மாகாணத்தில் 1800 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டள்ளதுடன், அவற்றுள் 890 பதுளை மாவட்டத்திலாகும். மேலும் 810 குடும்பங்கள் மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்காகும்.
ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்திய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது நிலையானதொரு வீட்டை நிர்மாணித்துக் கொள்ள எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு நிரந்தரமான கூரையைப் பெற்றுக்கொடுக்க பங்களிப்புச் செய்யும் நடவடிக்கையாகும். இவ்வேலைத்திட்டமானது பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், 3800 குடும்பங்களுக்கு கூரைக்கான தகரங்கள் வழங்கப்பட்டன.
இதன்படி பதுளை மாவட்டத்தில் 38000க்குமதிகமான கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டதுடன், மொனராகலை மாவட்டத்தில் 5200 கூரைத் தகரங்கள் வழங்கப்பட்ட தோடு, இதற்காகச் செலவிடப்பட்ட மொத்த தொகை 43 மில்லியன் ரூபாவாகும்.