2009

2009

காணாமல் போன மாணவி 7 மாதங்களின் பின் கண்டுபிடிப்பு

images000.jpgதிக்கு வலை பல்லிய கொறட்டுவ பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுடைய மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி காணாமல் போன இம் மாணவி தொடர்பாக மாணவியின் பெற்றோர் திக்குவலை பொலிஸ் நிலையத்தில் அப்போது புகார் செய்திருந்தனர்.

இதனையடுத்து, அண்மையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அம் மாணவி மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டினைச் சுற்றி வளைத்த பொலிஸார் மாணவியை மீட்டுள்ளனர்.

அம்மாணவி தன்னைக் கடத்திச் சென்று வைத்திருந்ததாகக் கூறியவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடத்திச் செல்லப்பட்ட மாணவி மாத்தறை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முகாம்களிலுள்ளோரை 6 மாதங்களுக்குள் மீளக்குடியமர்த்த இலங்கை அரசு இணக்கம்- பாராளுமன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

முகாம்களில் இருக்கும் தமிழர்கள் 6 மாதங்களுக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு குறித்து இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: “இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு 500 கோடி ரூபா வழங்குவதாக இந்தியா ஏற்கனவே கூறியுள்ளது. இன்னும் என்னென்ன உதவி தேவைப்பட்டாலும் அளிப்பதாக சமீபத்தில் எகிப்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்

இலங்கை பாகிஸ்தான் இன்று 2 வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம்.

cricket1.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 36 ரன் வித்தியாசத்தில் வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது.

இலங்கைப் பத்திரிகைகளுக்கு தற்போது புதிய சவால்

இலங்கை யுத்தம் முடிவிற்கு வந்து 2 மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில் யுத்த சம்பந்தமான செய்திகளை அதிகளவில் பிரசுரித்து வந்த இலங்கைப் பத்திரிகைகள் எதனைத் தற்போது செய்தியாக வெளியிடுவதென்ற புதிய சவாலை எதிர்நோக்கியுள்ளன.

யுத்தச் செய்திகள் மறைந்துள்ள நிலையில் வாசகர்களை எவ்வாறு கவர்வது என்பது தொடர்பாகவும் புதிய செய்திகளை எவ்வாறு பிரசுரிப்பது என்பது குறித்தும் பத்திரிகைகள் தற்போது போராடிக் கொண்டிருக்கின்றன. 25 வருடங்களாக மோதல் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வந்த இப்பத்திரிகைகள் இப்போது புதிய செய்திகளைக் கொடுப்பது தொடர்பாக திண்டாடுவதாக யூ.ஏ.ஈ.செய்திச்சேவையின் வெளிநாட்டு நிருபர் பைசல் சமத் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆங்கிலமொழி பத்திரிகைகளிலும் பார்க்க சிங்கள தமிழ் பத்திரிகைகளே இந்த விடயத்தில் அதிகளவிற்கு திண்டாடுகின்றன. பத்திரிகையாளர்கள் பாரிய சவாலை இது தொடர்பாக எதிர்நோக்குவதாக சிங்களப் பத்திரிகையான ராவயவின் ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்திருக்கிறார். விவாதம் மற்றும் கலந்துரையாடல் என்பன இப்போது யுத்தத்தில் இருந்து இதர விடயங்களுக்கு மாறியிருப்பதாகவும் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு, கல்வி, அகதிகள், இன அரசியல், போக்குவரத்து, பாராளுமன்றம், தேர்தல் முறைமைகள், நீதித்துறை போன்ற விடயங்களுக்கு செய்திகள் இப்போது கவனம் செலுத்துவதில் மாற்றம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு? எச்சரிக்கிறார் தலைமை நீதிபதி இப்திகார்

musharap.jpg‘பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப், நாடாளுமன்றில் ராஜதுரோகக் குற்றம் சாட்டப்படுவார்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 99ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து ஜனாதிபதியானவர் முஷாரப். தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி உள்ளிட்ட 60க்கும் அதிகமான நீதிபதிகளை பணிநீக்கம் செய்து 2007ம் ஆண்டு அவசர நிலை பிறப்பித்தார்.

முன்னாள் பிரதமர்கள் பெனசிர் புட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் இணைந்து பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்ததன் விளைவாக, முஷாரப் ஆதரவு கட்சிகள் தோல்வியைத் தழுவின. பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக முஷாரப் பதவி விலகினார். முஷாரப் ஆட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு பழி வாங்கப்பட்ட இப்திகார் அலிசவுத்ரி மீண்டும் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலையை கொண்டு வந்ததை எதிர்த்தும் நீதிபதிகளை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்தும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹமீத் கான் சார் பில் மேல் நீதிமன்றில் கடந்த வாரம் மனுசெய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் அலிசவுத்ரி தலைமையிலான 14 பேர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. நீதிமன்றில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, முஷாரப்பிற்கு இந்த நீதிபதிகள் ஆயம் உத்தரவிட்டிருந்தது. முஷாரப் தற்போது லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள சூழ்நிலை சாதகமாக இல்லாததால் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் யாரும் நீதிமன்றில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

இதனால், கோபமடைந்த தலைமை நீதிபதி இப்திகார் அலிசவுத்ரி கூறியதாவது:

அவசர காலத்துக்கு பிறகு முஷாரப்பால் உருவாக்கப்பட்ட சட்டத்திருத்தங்கள் அனைத்தையும் பார்லிமென்ட் ரத்துச் செய்யும் நிலை ஏற்படும். சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ள முஷாரப், நாடாளுமன்றில் ‘தேசத்துரோகி’ என குற்றம் சாட்டப்படும் நிலை ஏற்படும். இந்த வழக்கில் நீதிமன்றம் யாருக்கும் தண்டனை கொடுக்க முடியாது. அவசர நிலையை பிறப்பித்து முஷாரப் எடுத்த 41 நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானது. முஷாரப்பால் அமுல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளை ரத்து செய்ய ஒன்றரை ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு இப்திகார் அலிசவுத்ரி கூறினார்.

ஆனால், அதே சமயம் ராஜதுரோகக் குற்றச் சாட்டை அமுல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஏற்கனவே கூட்டணி அரசில் சிக்கல், தலிபான் தொந்தரவு ஆகியவைகளால் சிரமப்படும் சூழ்நிலையில் இது தேவையற்றது என்று கூறினார். அதே சமயம், லண்டனில் இருந்து கொண்டு சம்மன் அனுப்பியும் வராமல் இருக்கும் முஷாரப் மீது ஏன் இலண்டனிலே வழக்கு தொடரக்கூடாது என்ற கருத்தும் பேசப்படுகிறது. மேல் நீதிமன்றில் ஆஜராகாமல் தவிர்க்கும் முஷாரப் மீது மேல்நீதிமன்றம் ராஜதுரோகக் குற்றம் சாட்டுமோ என முஷாரப்பின் ஆதரவாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். தீர்ப்பின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும் என்பதால், அவர் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சூறாவளி பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ஓய்வு பெறுகிறார்

murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரும், உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளவருமான முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளார்.

இதுகுறித்து முரளீதரன் கூறுகையில், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் எனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும். அப்போது எனக்கு 38 வயதாகி விடும். எனவே இதுதான் ஓய்வு பெற சரியான சமயம் என நான் கருதுகிறேன். இருப்பினும் ஒரு நாள் போட்டிகள், டுவென்டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.

அடுத்த உலகக் கோப்பைப் போட்டி வரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு டுவென்டி 20 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்றார் முரளீதரன். 1992ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் முரளீதரன். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பெரும் சாதனையாளர் முரளீதரன். முரளிக்கும், ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னுக்கும் இடையில் உலக சாதனை படைப்பதில் கடும் போட்டா போட்டி நிலவியது.

இதில் முதலில் சாதனை படைத்தவர் ஷான் வார்ன். இருப்பினும் 2007ம் ஆண்டு வார்னின் சாதனையை (708 விக்கெட்கள்) முறியடித்து புதிய சாதனை படைத்தார் முரளீதரன். தற்போது 127 போட்டிகளில் ஆடி 770 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி அசைக்க முடியாத இடத்தில் இருக்கிரார் முரளீதரன். இவரது பந்து வீச்சு சரசாரசி 22 ஆகும். 800 விக்கெட்களை வீழ்த்தக் கூடிய திறமை இன்னும் முரளியிடம் உள்ளது.

ஒரு நாள் போட்டிகளிலும் முரளீதரன்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளஆர். ஒரு நாள் போட்டிகளில் முரளிதரன் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 507 ஆகும். இலங்கை அணியின் அசைக்க முடியாத சொத்தாக இருப்பவர் முரளீதரன். அவரது ஓய்வு நிச்சயம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழர் முரளீதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடல், கருத்துப்பரிமாறல் மூலம் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் – அமைச்சர் ஜீ.எல்.

நமது சமூகத்தில் இன்று காணப்படும் பாரிய பல பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலமாகவும், கருத்துப் பரிமாறல்கள் மூலமாகவும் தான் நிரந்தரத் தீர்வுகளைக் காண முடியும் என்பதற்கான அழகிய போதனைகளை அல்குர்ஆனும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வு முறையும் நமக்கு பாடமாகப் புகட்டி இருக்கின்றன என்று கூறினார் தபால் தொலைத்தொடர்பு பதில் அமைச்சரும் ஏற்றுமதி வர்த்தக ஊக்குவிப்பு அமைச்சருமான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்.

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி தேசியப் பாடசாலையின் 125வது வருட நிறைவுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று விசேட நினைவு முத்திரை வெளியிடும் வைபவம் பாடசாலையின் பிரதான மண்டபமான ஏ. எச். எம். பெளஸி அரங்கில் இடம்பெற்றது. அந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசும் போது இந்தப் பாடசாலையில் சமய விழுமியங்கள் மிகவும் உறுதியாகப் பேணப்படுவதை என்னால் அவதானிக்க முடிகின்றது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். சமய ரீதியாக மாணவர்களை நெறிப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு நல்லதோர் வாழ்க்கையை முன்னெடுக்கக் கூடிய ஒரு பயிற்சியை எம்மால் வழங்க முடியும். சமயப் பண்புகள் குறைவடையும் போதுதான் சமூகத்தில் பல பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.

இஸ்லாம் மனித உரிமைகளையும், ஒழுக்க விழுமியங்களையும் மிகவும் மதிக்கின்ற ஒரு மார்க்கம். அல்குர்ஆனில் இது தொடர்பான பல வசனங்கள் உள்ளன. நபிகளாரின் வாழ்வில் இது பற்றிய பல பாடங்கள் சம்பவங்களாக உள்ளன.

இன்று நமது சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சமய விழுமியங்கள் சரியாகப் பேணப்படாமையே. இதனால் ஒரு பிரிவினர் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர். மரண தண்டனையை நிறைவேற்றுவதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. மனிதனின் மனதில் நல்ல சிந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்குப் பாடசாலைகளில் தேவையான அத்திவாரம் இடப்பட வேண்டும்.

இதனை கருத்திற் கொண்டுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசு கல்வித்துறை அபிவிருத்தியில் பிரதான கவனம் செலுத்தி வருகின்றது. மனிதாபிமான யுத்தம் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்திலும் கூட கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை. இது இந்த அரசு கல்வித் துறை மீது செலுத்திவரும் அக்கறைக்கு நல்லதோர் உதாரணமாகும்.

மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன், பிரதி அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள், கல்வித் துறை அதிகாரிகள், பழைய மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பெருந்திரளாக இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் வழிகாட்டலில் பாடசாலை அதிபர் தலைமையில் பழைய மாணவர்களின் 80 ஆம் ஆண்டு குழுவினர் இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதிபர் பதவியுயர்வுக்கான நேர்முகம்; புல்மோட்டை முகாமிலும் நடாத்துவதற்கு ஏற்பாடு

அதிபர்களுக்கான தரம் 1, தரம் 11, தரம் 111க்கான பதவி உயர்வுகளை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகளை புல்மோட்டை நிவாரண முகாமிலும் நடத்த வவுனியா மாவட்ட வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் புல்மோட்டையிலும் தங்கியுள்ளதாலேயே நேர்முகப் பரீட்சைகளை புல்மோட்டையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

நேற்று முன்தினமும், நேற்றும் வவுனியா மாவட்டத்திலுள்ள அதிபர்களுக்கும் நிவாரணக் கிராமங்களில் உள்ள அதிபர்களுக்கும் தரம் உயர்வுக்கான நேர்முக பரீட்சைகள் நடத்தப்பட்டன.நிவாரணக் கிராமங்களிலிருந்து நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய அதிபர்களுள் 85 பேர் பதவி உயர்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அதிபர்களுக்கென நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுள் 180 அதிபர்கள் பதவி உயர்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

வடபகுதியில் நீண்டகாலமாக வழங்கப்படாமலிருந்த பதவி உயர்வுகள் தற்போது வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதையிட்டு அதிபர்கள் தமது திருப்தியை வெளியிட்டனர் எனத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜினி ஓஸ்வர்ல்ட் வவுனியாவில் நேர்முகப் பரீட்சையை நடத்திய அதே குழுவினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் புல்மோட்டை சென்று நேர்முகப் பரீட்சைகளை நடத்தும் என்றும் தெரிவித்தார்.

மீரிஹானை பொலிஸ் பிரிவில் இரு சடலங்கள் மீட்பு

ranjith-gunasekara.jpgமீரிஹானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கந்தை பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

அதிகாலை 1.30 மணியளவிலேயே இந்த இரு ஆண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களின் தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மீரிஹான பொலிஸார் இக்கொலைகள் தொடர்பாக தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்க ளாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ள போதும், அது பற் றிய தகவல்கள் ஊர்ஜிதம் செய் யப்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.

இலத்திரனியல் ஊடான காசுக் கட்டளை – தபால் திணைக்களத்தின் புதிய நடவடிக்கை

post_logo.jpgஇலத் திரனியல் ஊடாக காசுக்கட்டளைகளை அனுப்பும் புதிய நடவடிக்கையை தபால் திணைக்களம் நேற்று  முதல் ஆரம்பித்துள்ளதாக தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க தெரிவித்தார். தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இணையதளம் ஊடாக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் மூலம் காசுக்கட்டளைகளை துரிதமாகவும் கிரமமமாகவும் அனுப்பி வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய நடவடிக்கையின் மூலம் பணம் அனுப்பும் நபரின் தேவை 5முதல் 10 விநாடிகளில் நிறைவேறுகிறது. முதல் கட்டமாக ஒரே நேரத்தில் ஒருவருக்கு கூடியபட்சம்  25,000 ரூபாவை அனுப்பிவைக்க முடியும்.ஆரம்ப நடவடிக்கையாக 643 தபால் நிலையங்கள் ஊடாக இப்புதிய திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் இத்திட்டத்தை விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.