அதிபர் பதவியுயர்வுக்கான நேர்முகம்; புல்மோட்டை முகாமிலும் நடாத்துவதற்கு ஏற்பாடு

அதிபர்களுக்கான தரம் 1, தரம் 11, தரம் 111க்கான பதவி உயர்வுகளை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகளை புல்மோட்டை நிவாரண முகாமிலும் நடத்த வவுனியா மாவட்ட வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் புல்மோட்டையிலும் தங்கியுள்ளதாலேயே நேர்முகப் பரீட்சைகளை புல்மோட்டையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

நேற்று முன்தினமும், நேற்றும் வவுனியா மாவட்டத்திலுள்ள அதிபர்களுக்கும் நிவாரணக் கிராமங்களில் உள்ள அதிபர்களுக்கும் தரம் உயர்வுக்கான நேர்முக பரீட்சைகள் நடத்தப்பட்டன.நிவாரணக் கிராமங்களிலிருந்து நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய அதிபர்களுள் 85 பேர் பதவி உயர்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அதிபர்களுக்கென நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுள் 180 அதிபர்கள் பதவி உயர்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

வடபகுதியில் நீண்டகாலமாக வழங்கப்படாமலிருந்த பதவி உயர்வுகள் தற்போது வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதையிட்டு அதிபர்கள் தமது திருப்தியை வெளியிட்டனர் எனத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜினி ஓஸ்வர்ல்ட் வவுனியாவில் நேர்முகப் பரீட்சையை நடத்திய அதே குழுவினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் புல்மோட்டை சென்று நேர்முகப் பரீட்சைகளை நடத்தும் என்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *