2009

2009

வடக்கிற்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை தடுக்க ஐ.தே.க சதி – மைத்திரிபால சிறிசேன

sirisena.jpgவடக்கிற்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை தடுக்க ஐ. தே. க சதி செய்து வருகிறது. ஆனால், வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக வட பகுதியை முழுமையாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊவா மற்றும் யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வடக்கு அபிவிருத்திக்கு அரசாங்கம் தெரிவிப்பதுபோல பெருமளவு நிதி தேவையில்லை எனவும் அரசாங்கம் சகல தரப்பினரையும் ஏமாற்ற முயல்வதாகவும் ஐ. தே. க. குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் போதும் ஐ. தே. க. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு சதிகளை முன்னெடுத்தது.

அதேபோன்றே தற்பொழுது அரசாங்கம் வட பகுதியை அபிவிருத்தி செய்வ தற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கவும் வெளி நாட்டு உதவிகள் கிடைப்பதை நிறுத்தவும் ஐ. தே. க. சதி செய்து வருகிறது. ஆனால் அரசாங்கம் வடபகுதியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை கைவிடாது. வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக அபிவிருத்திப் பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் ஊவா, மற்றும் யாழ். வவுனியா உள்ளூராட்சி சபைத தேர்தல்களில் ஐ. ம. சு. முன்னணியை வெற்றி பெற வைக்க மக்கள் தீர்மானித்துவிட்டனர். பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை விடுதலை செய்யவும் ஊவாமாகாணத்தில் விவசாயத்துறையை முன்னேற்றவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். இதனால், ஊவா மாகாண மக்கள் அரசாங்கத்துடனே உள்ளனர். ஐ. தே. க. மீண்டும் படுதோல்வி அடைவது உறுதியாகவிட்டது என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் கூறியதாவது:-

நான் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தேன். அங்கு மக்கள் சுதந்திரமாக அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 30 வருடங்களாக இழ ந்த அபிவிருத்திப் பணிகள் அங்கு மீண்டும் முன்னெடுக் கப்படுகின்றன. தேர்தல் பணிகள் எதுவித வன்முறைகளும் இன்றி முன்னெடுக்கப்படுகிறது. ஊவா மாகாணத்திலே ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ் தேசிய கூட்ட மைப்புத் தலைவர்களுக்கு யாழ்ப்பாணம் சென்று பிரசாரப் பணிகளில் ஈடுபடும் சூழல் காணப்படுகிறது.

மோதல் காரணமாக அதிகமான மக்கள் வேறு இடங் களுக்குச் சென்றுள்ளனர். ஒரு இலட்சம் வாக்காளர்களில் 50 வீதமானவர்களே அங்குள்ளனர்.

யாழ். மக்களின் விவசாய உற்பத்திகளை கொழும்புக்கு அனுப்பும் சூழல் காணப்படுகிறது. மீன்பிடித்தடை நீக்கப் பட்டுள்ளதால் மீனவர் ஒருவர் ஒரு நாளில் 17 ஆயிரம் ரூபாவரை உழைக்கக் கூடியதாக உள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர் ஜயசிங்க கைது

அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர் ஜயசிங்க நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பகுதியிலுள்ள இவரது வீட்டிற்கு திங்கட்கிழமை இரவு சென்ற மிரிஹான விஷேட பொலிஸ் குழுவொன்றே இவரைக் கைதுசெய்துள்ளது.

கொலைகள் மற்றும் கொள்ளைகள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே மேலதிக விசாரணைகளுக்காக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நேற்றுக் காலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது வீட்டிற்கு முன்னால் வாகனங்களில் வந்திறங்கியவர்கள் வீட்டுக்குள் நுழைந்து இவரை பலவந்தமாக இழுத்துச் சென்றதால் இவர் கடத்தப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவர் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு7 ஆம் திகதி விடுமுறை

school-children.jpgநாட்டி லுள்ள அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான விடுமுறைகள் நாளை மறுதினம் 7 ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

2009-08-07 ஆம் திகதி முதல் 2009-09-06 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறை தினமாகும் என கல்வி அமைச்சு அறிவிக்கிறது. மூன்றாந் தவணைக்காக 2009-09-07 ஆம் திகதி சகல தமிழ், சிங்கள பாடசாலைகளும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

பாடசாலை விடுமுறை தினங்களுக்குள் ஆகஸ்ட் 11 ஆம் திகதி க.பொ.த. உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகின்றன. ஆகஸ்ட் 23 ஆம் திகதி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையும் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

திருமலை மேல் நீதிமன்றால் இரு தினங்களில் மூவருக்கு மரண தண்டனை தீர்ப்பு

gallow.jpgதிரு கோணமலை மேல் நீதிமன்றம் நேற்றும், நேற்று முன்தினமும் மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பரபரப்புமிக்க இத் தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கினார்.

நேற்று முன்தினம் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 25 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை ஐந்து குற்றச் சாட்டுகளுக்கு தலா ஐந்து வருட வீதம் வழங்கப்பட்டதாகும். முதலாவது குற்றச்சாட்டுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது படுகொலை குற்றச் சாட்டாகும். நேற்று இருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் கந்தளாய் யூ. ஜி. சி. சந்திரசேன என்பவராகும். ஆறு குற்றச் சாட்டுக்களின் பேரில் குற்றவாளியாக காணப்பட்டதால் இம்மரண தண்டனையும் 25 வருட கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி கந்தளாயில் வைத்து மயூரி சமரஜீவா என்பவருக்கு குண்டெறிந்து மரணம் விளைவித்ததாகவும் மேலும் நால்வருக்கு காயம் விளைவித்ததாகவும் மற்றும் வீடொன்றுக்கு தீமூட்டி ரூபா 99,290 சேதம் விளைவித்ததாகவும் இவர் மீது சட்டமா அதிபரால் 6 குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டிருந்தன.

கந்தளாய் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது சமுகமளித்த எதிரி மேல் நீதிமன்ற விசாரணையின் போது சமுகமளிக்காததால் எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதவான் எம். இளஞ்செழியன் எதிரிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு மரண தண்டனையும், ஏனைய ஐந்து குற்றச் சாட்டுகளுக்கும் தலா ஐந்து வருட வீதம் 25 வருட கடூழிய சிறை தண்டனையும் இந்த ஐந்து குற்றச் சாட்டுகளுக்கும் தலா 5,000 ரூபா வீதம் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அரச சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி செல்வி சுகந்தி கந்தசாமி ஆஜராகியிருந்தார். மற்றும் எதிரிக்கும் பிணையாளிக்கும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதேவேளை நேற்று கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். ஏ. கருணாரட்ன சுபசிங்க, யூ. கே. நிமால் ஆகிய இருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனையும் ஒரு வருட கடூழிய சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

2000 ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆந் திகதி கந்தளாய் அக்கோபுர எனும் இடத்தில் விஜயகோன் முதியன்சலாகே ஜயத்திலக பண்டார என்பவரை கொலை செய்ததாகவும், அதே இடத்தைச் சேர்ந்த விஜயகோன் முதியன்சலாகே பிரசன்ன குமார என்பவரைத் தாக்கி கடும் காயம் விளைவித்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டி சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இரு எதிரிகளுக்கும் முதலாவது கொலை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டான கடும்காயம் விளைவித்ததற்காக ஒரு வருடக் கடூழிய சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. எதிரிகள் சார்பில் சட்டத்தரணி ஏ. டபிள்யூ. சத்தாரும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி செல்வி சுகந்தி கந்தசாமியும் ஆஜராகியிருந்தனர்.

உடப்பு திரெளபதை அம்மன் வருடாந்த ‘தீ’ மிதிப்பு இன்று

உடப்பூர், அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு உற்சவம் இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. கடந்த ஜுலை 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் 18 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புத்தளம் மாவட்டத்திலமைந்துள்ள உடப்பு தமிழ்க் கிராமத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் அருள்மிகு திரெளபதிஅம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

தீ மிதிப்பு வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஆலயத்தின் பஸ் வண்டிகள் உட்பட போக்குவரத்து சபை, தனியார் விசேட பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன. நாளை தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டுதல் நிகழ்வும், துவஜாவரோஹனமும் நடைபெறும். நாளை மறுதினம் காலை பால்குட பவனியுடன் மஹோற்சவம் நிறைவுபெறும்.

தாண்டிக்குளம் சாவடி அகற்றப்பட்டது

police-traffic-stop00.jpgவவுனியா வடக்கு ஓமந்தை வரையிலான பகுதிகளிலுள்ள சுமார் 35 கிராமங்களிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கில் தாண்டிக்குளம் சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 20 கிராம சேவகப் பிரிவுகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ள பகுதிகளிலுள்ள தமது வீடுவாசல்களை சென்று பார்வையிடவும், அதிகாரிகள், இலகுவாக இப்பகுதிக்கு சென்றுவரவும் ஏதுவாக இச்சோதனைச் சாவடி நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். யாழ். நோக்கி செல்பவர்கள் இனிமேல் ஓமந்தை சாவடியை மட்டுமே கடந்து செல்ல வேண்டும். இதுவரை காலமும் தாண்டிக்குளம் சோதனை சாவடியை கடந்தும் செல்ல வேண்டியிலிருந்தது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதற்கு தாண்டிக்குளம் சோதனைச் சாவடி நீக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் பசில் ராஜபக்ஷ எம்.பி தலைமையில் வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது தீர்மானிக்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.

480 கிலோ கிளேமோர்கள், ஆயுதங்கள் பெருமளவு மீட்பு

07-srilanka-army.jpg480 கிலோ எடையுள்ள அதி சக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொன்றும் 10 கிலோ எடையுள்ள அதி சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-10, 5 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-76, சிறிய ரக கிளேமோர் குண்டுகள்- 20, ரி-56 துப்பாக்கி ரவைகள்-300, படகுகளுக்கு பொருத்தப்படும் வெளி இணைப்பு இயந்திரம்- 01 மற்றும் பல்வேறு ஆயுதங்களையும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

election000.jpgஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களுக்கான அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருக்கும் நிலையில், அனைத்துப் பிரதான கட்சிகளும் இத் தேர்தலுக்கான தத்தமது இறுதி பிரசாரக் கூட்டங்களை இன்று நடத்தவதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

ஊவா மாகாண சபைத் தேர்தலும் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றன. இதற்கான பிரசார நடவடிக்கைகளுக்கான காலம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதாகத் தேர்தல்கள் திணைக்களம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கமையவே அனைத்துக் கட்சிகளும் தத்தமது இறுதி பிரதான பிரசார கூட்டங்களை இன்று நடத்தத் தீர்மானித்துள்ளன.

இதன் பிரகாரம் ஊவா மாகாண சபைக்கான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பதுளையில் நடைபெறவுள்ளது.  இதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி பிரதான பிரசாரக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பசறையில் நடைபெறவுள்ளது.

அத்துடன், ஜே.வி.பி.யின் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டம்  வெளிமடவில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலுக்கான இறுதி பிரசாரக் கூட்டங்களைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாசையூரிலும் சுண்டுக்குளியிலும் நடத்தவுள்ளது. அத்துடன், வவுனியா நகர சபைத் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதிப் பிரசாரக் கூட்டம் இன்று கற்குளியில் நடைபெறவுள்ளது.

அதுமட்டுமல்லாது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐ.தே.க. உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்களை இன்று நடத்தவுள்ளன.

இதேநேரம், இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதால் அதன் பின்னர் தேர்தல் பிரசாரங்களைச் செய்யும் வகையிலான ஊடகங்களுடனான விவாதங்களைக் கூட அரசியல் கட்சிகள் நடத்துவதில்லையென்ற இணக்கப்பாடு இம்முறை எட்டப்பட்டிருப்பதாக மேலதிகத் தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமனசிறி தெரிவித்தார்.

கிழக்கைச் சேர்ந்த 1445 பேரை சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் பணி இன்று ஆரம்பம் – வட மாகாண ஆளுநர் தகவல்

north-governor.jpgவவுனியா நலன்புரிக் கிராமங்களில் உள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1445 பேரை சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் நாளை (இன்று) ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். அம்பாறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 190 பேரும் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 329 பேரும் திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 292 பேரும் மற்றும் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 634 பேருமே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாதப் பிடியில் சிக்குண்டு,  பின்னர் மனிதநேய நடவடிக்கைகளால் மீட்கப்பட்ட பொது மக்களை அவரவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்..

இதனையடுத்து வடக்கின் மீள் குடியேற்றம்,  அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்குப் பொறுப்பான செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின்படியே இந்த மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதேவேளை,  யாழ் நலன்புரி நிலையங்களிலுள்ள 650 குடும்பங்களைச் சேர்ந்த 3020 போரும் வவுனியா நலன்புரிக் கிராமங்களிலுள்ள குடாநாட்டைச் சேர்ந்த 52 குடும்பங்களும்  இன்று யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர் மீள் குடியேற்றம் நடைபெறவுள்ள பிரதேசங்களின் அரச அதிபர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த சகல உத்தியோகஸ்தர்களும் இந்த மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர் என்றும் வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார். 

இதுவரை 225 டெங்கு நோயாளர்கள் மரணம் – சுகாதார அமைச்சு தகவல்

mosquitfora.jpgநாட்டில் இதுவரை 225 டெங்கு நோயாளிகள் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டிவிட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு நோயை பரப்பும் நுளம்புகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்படாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு நோயால் பாதிப்புள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.