2009

2009

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று அம்னெஸ்டி கோரிக்கை

இலங்கையின் வடபகுதியில் அரசாங்கம் நடத்தும் இடைத் தங்கல் முகாம்களில், வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அகற்றப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இந்த முகாம்களை திறந்து விடுங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள பிரச்சார இயக்கம் ஒன்றை தொடங்கி வைத்து, இந்த அமைப்பின் அதிகாரிகள் பேசும்போது, இந்த முகாம்களிலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவை உண்மையில் தடுப்பு முகாம்கள்தான் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் இடம் பெற்ற கடைசி கட்ட போரின் போது, சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் தமது இருப்பிடங்களை இழந்தார்கள்.

இலங்கை அரசு இது பற்றி குறிப்பிடும் போது, இவர்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் முன்னர், விடுதலைப் புலிகளின் போராளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

“எப்படியும் வெற்றிபெறுவதை’ அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது – மாவை சேனாதிராஜா

election000.jpgயாழ்ப் பாணத்தில் 80 சதவீதமான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதும் ஆனால், “எப்படியும் வெற்றி பெறும்’ என்ற அறிவிப்பை அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ள நிலையில், வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.

யாழ்ப்பாணத்தில் 18.26 வீத வாக்குகளே பதியப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து நாலாயிரம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களிடம் தேசிய அடையாள அட்டை இல்லை. இராணுவத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளே இருந்துள்ளன. இதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. 81.74 வீத மக்கள் இத்தேர்தலில் பங்குபற்றவில்லை என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.

கரையோரப் பகுதி மக்கள் இராணுவத்தினால் அன்றைய தினம் காலை கடலுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டு வாக்களிக்க அனுப்பப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. தேர்தலில் 18.26 வீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதியப்பட்டமைக்கு மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம், பீதி மட்டுமல்ல மனவிரக்தியும் அதனால் ஏற்பட்ட தேர்தலில் ஈடுபாடற்ற தன்மையும் ஒரு காரணமாகும்.

அரசின் அதிகார பலம், இராணுவத்தின் தொடர்ச்சியான பிரசன்னமும் நடமாட்டமும், அமைச்சர்கள் தொடர்ச்சியாகத் தேர்தல் காலங்களில் யாழ்ப்பாணம் வந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பல்கலைக்கழகம் முதலான பல துறைசார் அரச ஊழியர், மாணவர்களை நிர்ப்பந்தமாக அழைத்து நடத்திய கூட்டங்களில் சலுகைகளை அறிவித்து வந்தமை, தேர்தலில் அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுமென அறிவுறுத்தப்பட்ட அச்சம் மற்றும் அரசாங்கத்தில் முழு வளங்களும் இத்தேர்தலில் பாவிக்கப்பட்டுள்ளமை, அதற்கும் மேலாகப் புத்தளம் போன்ற இடங்களில் இடம்பெயர்ந்த மக்களில் 47 வீதமான வாக்குகள் பதியப்பட்டமையும், அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10,600 வாக்குகளைப் பெறுவதற்கு காரணிகளாகும். அத்துடன் தேர்தலில் அரசு வெற்றி பெறாவிட்டால் தமக்கு ஆபத்து ஏற்படுமென மக்கள் அச்சமுற வைக்கப்பட்டிருந்தனர்.

அரசாங்கம் திட்டமிட்டவாறு, எதிர்பார்த்தவாறு தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை என்பது வெளிப்படை. எப்படியும் அரசு வெற்றிபெறும் என்ற அறிவிப்பை அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால், உண்மையில் அரசு எதிர்பார்த்த அளவுக்குத் தமிழ் மக்களிடம் வெற்றி பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் 18.26 வீத வாக்களிப்பையும் வவுனியாவில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்று ஆளுங்கட்சிக் கூட்டமைப்பு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டமையும் தமிழ் மக்களிடம் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதை நிரூபிப்பதாயுள்ளது.

எவ்வாறெனினும் வவுனியா நகர சபைத் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு மக்களும் அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்தமைக்காக அங்குள்ள மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதியப்பட்டுள்ளன. பல இடங்களில் எமது மக்கள் தேர்தலில் அக்கறை காட்டாது வாக்களிக்காமல் இருந்தமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இத்தனை மனிதப் பேரவலம், அடக்கு முறைச் சூழல், அச்சம் நிலவிய போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கிழக்காசியாவில் பாரிய சூறாவளி 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு – 13 பேர் பலி

கிழக்காசியாவில் திங்களன்று வீசிய பாரிய சூறாவளியால் தாய்வான், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கரையோரங் களிலிருந்து 10 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.

ஜப்பானில் வீசிய கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக 13 பேர் பலியாகினர். இன்னும் பெருந்தொகையானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை உடனடியாக மீட்கும் பொருட்டு ஆயிரம் படை வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இரண்டாயிரம் பேர் வெள்ளத்தி லிருந்து மிட்கப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஜப்பான், சீனா, தாய்வான் ஆகிய நாடுகளில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டது.

வேகமாக வீசிய காற்றில் மரங்கள், வீட்டுக் கூரைகள், மின்கம்பிகள் என்பன நிலத்தில் விழுந்தன. பின்னர் பெய்த கடும் மழையால் கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வீதியால் சென்ற வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தலை நகர் டொக்கியோவின் சில பகுதிகளும் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. சரிவு ஏற்பட்டதில் சுமார் 450 வீடுகள் சேதமடைந்தன. 180 கி. மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இடிபாடுகளுக்குள் சில பேர் சிக்கியுள்ளதால் தேடும் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனோரைத் தேடவென விசேட படகுச் சேவைகளும் நடத்தப்படுகின்றன. கிழக்காசியாவில் வீசிய இந்தப் பாரிய சூறாவளி வெள்ளம் என்பன தாய்வான், சீனா ஆகிய நாடுகளையும் தாக்கியது.

இடம்பெயர்ந்தோருக்கான உணவுகள், குடிபானங்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை தொண்டர் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. வெள்ள நீர் வடியும் வரை இயல்பு நிலை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்ததையடுத்து தாய்வான், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் பத்து இலட்சம் பேர் வெளியேறியதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு – யாழ் சொகுசு பஸ் சேவை – கட்டணம் 1000 ரூபாவென அமைச்சு அறிவிப்பு

bus_luxury.jpgகொழும் புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான சொகுசு பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்டும் என்றும் அதற்கான ஒரு வழிக் கட்டணமாக 1000 ரூபா அரவிடப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது, அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய நகரங்களுக்கும் சொகுசு பஸ் சேவையினை ஆரம்பிக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு யாழ் சொகுசு பஸ் சேவை கொழும்பு – மதவச்சி, மதவச்சி – யாழ்ப்பாணம் என இரு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் முதல் கட்டமாக ஐந்து சொகுசு பஸ் வண்டிகள் சேவையிலீடுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ9 வீதியூடான சேவை பதிவை மேற்கொள்ள கோரிக்கை

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் லொறிப் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான பதிவுகளை யாழ்.வணிகர்கழகம் மேற்கொள்ளவுள்ளது.
இதுவரை லொறி உரிமையாளர்கள் தமது பதிவினை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தில் செய்யாதிருந்தால் இன்று திங்கட்கிழமை அதற்கான பதிவை மேற்கொள்ளுமாறு யாழ்.வணிகர் கழகம் வேண்டியுள்ளது.

கனடா வீராங்கனையிடம் சானியா இறுதிப் போட்டியில் தோல்வி

sania-mirza.jpgகனடா நாட்டில் நடைபெற்ற வான்கூவர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை ஸ்டெஃபானி டுபாய்ஸிடம் சானியா மிர்சா 6- 1, 4- 6, 4- 6 என்ற செட் கணக்கில் இறுதிவரை கடுமையாக போராடி தோல்வி தழுவினார். இதனால் டுபாய்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

முதல் செட்டில் 6- 1 என்று ஸ்டெஃபானியை ஊதித் தள்ளினார் சானியா. ஆனால் உள் நாட்டு ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் விளையாடிய ஸ்டெஃபானி தன் ஆட்டத்தை பல்வேறு விதங்களில் மேம்படுத்த சானியா மிர்சா நிறைய தவறுகளிழைக்கத் தொடங்கினார்.

குறிப்பாக தனது சர்வை வெற்றி பெறுவதில் சானியா தடுமாறினார். கடந்த வாரம் லெக்சின்டனில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா, இந்த முறை வென்று தொடர்ச்சியாக இரண்டு சர்வதேச டென்னிஸ் பட்டங்களை வெல்லலாம் என்ற கனவில் இருந்தார். ஆனால் அந்த கனவு தகர்ந்தது. ரன்னராக வந்த சானியாவிற்கு 6,080 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்தது.

சானியா பற்றி குறிப்பிட்ட ஸ்டெஃபானி, மற்ற ஆட்டங்களில் மற்ற கனடா வீராங்கனைகள் சானியாவை சற்றே களைப்பாக்கிவிட்டனர் இதனால் அவர் இந்த இறுதியில் சற்றே களைப்படைந்து விட்டார் என்றார்.

யாழ் மாநகரசபைக்கு ஐந்து முஸ்லிம்கள்

election000.jpgயாழ் மாநகரசபைக்கு ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.  சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இதன்படி முஸ்லிம்கள் ஐவர் யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.

யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபையில் ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. யாழ். மாநகர சபைக்கு அ. இ. மு.கா. சார்பாக போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளதுடன், வவுனியா நகர சபைக்கும் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

இதன்படி,  வவுனியா நகர சபைக்கு எம். எஸ். எம். பாரி என்பவர் தெரிவாகியுள்ளார். இவர் பெற்ற விருப்பு வாக்கு 2270 ஆகும்.

யாழ். மாநகர சபைக்கு தெரிவாகியுள்ள முஹம்மது மீரா சாஹிப் முஹம்மது ரமீஸ் 1338 விருப்பு வாக்குகளையும்,  முஹம்மது மீராசாஹிப் முஸ்தபா 1029 விருப்பு வாக்குகளையும், பதூர்தீன் அஸ்கர் ரூமி 979 விருப்பு வாக்குகளையும்,  அஜ்மயின் அஸ்பர் 960 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை வவுனியா நகர சபைக்கு மு. கா. உறுப்பினர் ஒருவரும் தெரிவாகியுள்ளார். 587 வாக்குகளை மாத்திரமே பெற்ற மு. கா வுக்கு இந்த ஒரு  ஆசனம் கிடைத்துள்ளது.

யாழ். மாநகர சபைக்கு சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். யாழ். மாநகர சபைக்கு வாக்களிக்க தகுதி பெற்றிருந்த சுமார் 6000 இடம்பெயர்ந்த முஸ்லிம் வாக்காளர்களில் 70 வீதமானோர் தேர்தலில் வாக்களித்துள்ளனர

முஸ்லிம் பெயரில் புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி கொழும்பில்!

lady00000.jpgபுலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியொருவர்  பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கொழும்பு நகருக்குள் பிரவேசித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான  ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் 09 ஆம் திகதி பிறந்த அப்துல் சலாம் பாத்திமா யெஸ்மின் என்னும் பெயரில் நடமாடும்  தற்கொலைப் படையைச் சேர்ந்த இந்தப் பெண் உறுப்பினர் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தேடப்பட்டு வருகின்றார்.

இவர் கொழும்பு 12,  பழைய சோனகத்தெருவை வசிப்பிடமாகக் கொண்டிருப்பதாக அவருடைய தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பெண்ணினது தேசிய அடையாள அட்டை இலக்கம் 857835641எ யாகும். இவர் பற்றிய தகவல் தெரிவோர் பொலிஸ் தலைமையகத்துடன் 011-2421111 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது பயங்கரவாத தடுப்புப் பிரிவுடன் 011-2321839,  011-2451636,  011-2384401 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும் அல்லது குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்துடன் 011-2320141 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது கொழும்புப் பொலிஸின் அவசர நடவடிக்கைப் பிரிவின் 011-2243333 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு தகவல்களை அறியத்தருமாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

5-வது ஒரு நாள்: பாகிஸ்தான் வெற்றி

kumar.jpgஇலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய இலங்கை 147 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை தொடரை 3- 2 என்று கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் யூனிஸ்கான் 74 ரன்களும், மிஸ்பா உல்-ஹக் 73 ரன்களும் முகமது யூசுப் 43 ரன்களும், நவீத் உல்-ஹசன் 33 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் சரிவு ஆரம்பமானது. அதன் பிறகு மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்குள் 8 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆமீரும், நவேது உல் ஹஸனும் முறையே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு கண்டம்பி (42 ரன்), பண்டாரா (31 ரன்) ஆகியோர் தாக்குப்பிடித்து ஆடியதால் இலங்கை அணியால் மூன்று இலக்க ஸ்கோரை தாண்ட முடிந்தது. முடிவில் 34.2 ஓவர்களில் இலங்கை அணி 147 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி தழுவியது.

132 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர், நவீத் உல்-ஹசன் தலா 4 விக்கெட்டுகளும், அப்ரிடி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும்.

பாகிஸ்தான் வீரர் நவீத் உல்-ஹசன் ஆட்டநாயகன் விருதினையும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷாரா (தொடரில் 9 விக்கெட் எடுத்துள்ளார்) தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர். அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

அமைதியான தேர்தல் – தேர்தல்கள் ஆணையாளர்

election000.jpgயாழ். மாநகர சபை, வவுனியா நகர சபை உட்பட ஊவா மாகாண சபை என்பவற்றுக்கான தேர்தல்கள் அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பத்து வருடங்களுக்கு பின்னர் நடந்தன. இத்தேர்தல்களும் ஊவா மாகாண சபைக்கான தேர்தலும் மிகவும் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற்றன.

இத்தேர்தல்களை அமைதியாகவும், சுமூகமாகவும் நடாத்தி முடிப்பதற்கு உதவி ஒத்துழைப்பு நல்கிய பொலிஸாருக்கும் முப்படையினருக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.