யாழ். மாநகர சபை, வவுனியா நகர சபை உட்பட ஊவா மாகாண சபை என்பவற்றுக்கான தேர்தல்கள் அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பத்து வருடங்களுக்கு பின்னர் நடந்தன. இத்தேர்தல்களும் ஊவா மாகாண சபைக்கான தேர்தலும் மிகவும் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற்றன.
இத்தேர்தல்களை அமைதியாகவும், சுமூகமாகவும் நடாத்தி முடிப்பதற்கு உதவி ஒத்துழைப்பு நல்கிய பொலிஸாருக்கும் முப்படையினருக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.