கனடா நாட்டில் நடைபெற்ற வான்கூவர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை ஸ்டெஃபானி டுபாய்ஸிடம் சானியா மிர்சா 6- 1, 4- 6, 4- 6 என்ற செட் கணக்கில் இறுதிவரை கடுமையாக போராடி தோல்வி தழுவினார். இதனால் டுபாய்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
முதல் செட்டில் 6- 1 என்று ஸ்டெஃபானியை ஊதித் தள்ளினார் சானியா. ஆனால் உள் நாட்டு ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் விளையாடிய ஸ்டெஃபானி தன் ஆட்டத்தை பல்வேறு விதங்களில் மேம்படுத்த சானியா மிர்சா நிறைய தவறுகளிழைக்கத் தொடங்கினார்.
குறிப்பாக தனது சர்வை வெற்றி பெறுவதில் சானியா தடுமாறினார். கடந்த வாரம் லெக்சின்டனில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா, இந்த முறை வென்று தொடர்ச்சியாக இரண்டு சர்வதேச டென்னிஸ் பட்டங்களை வெல்லலாம் என்ற கனவில் இருந்தார். ஆனால் அந்த கனவு தகர்ந்தது. ரன்னராக வந்த சானியாவிற்கு 6,080 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்தது.
சானியா பற்றி குறிப்பிட்ட ஸ்டெஃபானி, மற்ற ஆட்டங்களில் மற்ற கனடா வீராங்கனைகள் சானியாவை சற்றே களைப்பாக்கிவிட்டனர் இதனால் அவர் இந்த இறுதியில் சற்றே களைப்படைந்து விட்டார் என்றார்.