2009

2009

இரண்டாம் நாளாக தொடரும் சிட்னி இளைஞர்களின் நடை பாத போராட்டம்

sidni00000.jpgநேற்றைய இரவுப்பொழுதை Liverpool ல் கழித்துவிட்டு இன்று இரண்டாவது நாளாக காலை 7:30 க்கு தமது நடை பாத போராட்டத்தை சேரனும் விஷ்ணாவும் தொடர்ந்தார்கள். Liverpool புகையிரத நிலையத்தில் காலை 9:30 மணி வரை துண்டுப்பிரசுரங்களை அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு விநியோகம் செய்தார்கள்.
 
அத்துண்டுப்பிரசுரங்களில் இலங்கை அரசாங்கத்தால் 300 ஆயிரம் மக்கள் அங்கு வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும் போதிய உணவு மருத்துவம் இன்றி அல்லற்படுவதும் தினம் தினம் இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் எமது உறவுகளை உடனடியாக இந்த சித்திரவதைகளிலிருந்து விடுவிக்க அனைத்துலக சமூகத்தின் உதவியையும் அத்துண்டுப்பிரசுரங்களின் மூலம் கோரிக்கையாக விடப்பட்டுள்ளது.

அத்துண்டுப்பிரசுரங்களில் அடங்கியுள்ள விடயங்களும் இவ்விளைஞர்களின் இப்போராட்டமும் அவுஸ்திரேலியா வாழ் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

புகையிரத நிலையத்தில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய பின் அங்கிருந்து நடக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக 21 கிலோமீற்றர் தூரம் நடந்து Campbelltown ஐ வந்தடைந்தனர்.

சிட்னி இளைஞர்களின் நடை பாத போராட்டம் ஊடகங்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. SBS  தொலைக்காட்சி நிறுவனம் மாலை 4:30 மணிக்கு Hurley Park Community Centre ல் வந்து இப்போராட்டத்தை ஒளிப்பதிவு செய்தது. அப்பகுதி மக்கள் அங்கு கூடி தமது பெரும் ஆதரவை வழங்கினர்.

சேரன் மற்றும் விஷ்ணா இன்று சற்று களைப்படைந்தாலும் அவர்கள் மனதலவில் மிகவும் திடமாக உள்ளனர். தமது இலக்கை எட்டும்வரை அவர்கள் சோர்ந்து விடமாட்டார்கள். 300 ஆயிரம் மக்களின் விடிவை மனதில் நிறுத்தி மிகவும் உறுதியுடன் தமது போராட்டத்தை தொடர்கிறார்கள்.

நாளை காலை 7 மணிக்கு Campbelltown ஐ விட்டு புறப்பட்டு Bargo எனும் இடத்தை நோக்கி 43 கிலோமீற்றா தமது நடைபாத போராட்டத்தை தொடர்வார்கள். நாளை மாலை 6 மணியளவில் Bargo ஐ சென்றடைவர்.

இவ்விளைஞர்கள் செல்லும் இடங்கள் மற்றும் இப்போராட்டம் பற்றிய முழு விபரங்களையும்  www.free300k.com எனும் இனையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும். உங்கள் மேலதிக விபரத் தேவைகளுக்கு free300kgmail.comஎனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கி கணக்குகளை முடக்குமாறு இலங்கை பத்து நாடுகளிடம் கோரிக்கை

pathmanathan.jpgகுமரன் பத்மநாதன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான வங்கி கணக்குகளை முடக்கி அந்தப் பணத்தை ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கம் பத்து நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
   
குமரன் பத்மநாதனுக்கும், ஐயன்னா குருப் என்ற புலி ஆதரவு நிறுவனத்திற்கும் சொந்தமான கணக்குகளில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கணக்குகளில் அதிகமானவை சுவிட்சர்லாந்து மற்றும் சென் மோரிஸஸ் ஆகிய நாடுகளில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

சில கப்பல் நிறுவனங்களினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்ச்சியாக நிதி வழங்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனிடம் நடாத்திய விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது 

இந்தியாவில் ஸ்வைன் பலி 17 ஆனது- மகாராஷ்டிரத்தில் இன்று 3 பேர் சாவு

10092009.jpgஇந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை முதல் பிற்பகல் வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். புனேவில் மட்டும் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. மும்பையில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர், மேகலாயா மாநிலங்களுக்கும் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. ஹைதராபாத்தில் உலக பேட்மிண்டன் போட்டித் தொடரையும் பன்றிக் காய்ச்சல் பீதிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய அளவில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டியுள்ளது. இதனால் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை மத்திய அரசு  தீவிரப்படுத்தியுள்ளது. மும்பையில் அரசு மருத்துவமனைகளுக்கு உதவியாக தனியார் மருத்துவமனைகளும் பன்றிக் காய்ச்சல் சிகிச்சை நடவடிக்கைகளில் குதித்துள்ளன.

பல்வேறு நகரங்களில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் ஆங்காங்கு மூடப்பட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை மத்திய குழுக்களை அனுப்பி பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உதவ அனுப்பியுள்ளது.

பன்றிக் காய்ச்சலுக்கு மோசமாக பாதிக்கப்பட்ட நகரம் புனேதான். இங்கு மட்டும் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பம்பைமடு விடுதி காமினி வித்தியாலயத்தில் பரீட்சை எழுதும் சரணடைந்த 166 பேர்

examination_departmentsss.jpgக.பொ.த உயர்தரப் பரீட்சை வவுனியாவில் சுமுகமாக நடைபெற்று வருகிறதாக பரீட்சை இணைப்பாளரும் வலயக்கல்விப் பணிப்பாளருமான திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வோல்ட் தெரிவித்தார்.  நலன்புரி நிலையங்களில் வசிக்கும் 1187 மாணவர்களும் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 1625 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களில் சரணடைந்த 139 ஆண்களும் 27 பெண்களும் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பம்பைமடு வளாக விடுதியிலும் ஆண்களுக்குரிய காமினி வித்தியாலயத்திலும் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நலன்புரிநிலைய ஏனைய மாணவர்களுக்கு கதிர்காமர், ஆனந்தகுமாரசாமி, இராமநாதன் ,அருணாச்சலம், வலயம்4 ,கல்வியியல் கல்லூரி,வீரபுரம் ஆகிய இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நலன்புரி நிலையத்தில் வசிக்கும் பார்வையற்ற ஒரு மாணவனும் பரீட்சை எழுதுகின்றார். அவருக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு வவுனியாவில் உள்ள 17 நிலையங்களில் பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் இணைப்பாளர் தெரிவித்தார்.

ஆங் சான் சூசீக்கு மேலும் 18 மாதம் வீட்டுக் காவல் தண்டனை!

miyanmar_s.pngபர்மாவில் ஜனநாயக ஆதரவு இயக்கத் தலைவி ஆங் சான் சூசீ நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை மீறினார் என்று தீர்பளித்துள்ள ரங்கூன் நீதிமன்றம் அவருக்கும் மேலும் 18 மாத வீட்டுக்காவல் தண்டனையை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் விளைவாக அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பலகட்சித் தேர்தலில் அவர் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும். ஏரிக்கரையிலுள்ள அவரது இல்லத்துக்கு அழைப்பு இல்லாமல்,  கடந்த மே மாதத்தில் நீந்திக் கடந்து வந்த அமெரிக்கர் ஒருவரை, தங்க அனுமதித்த்து மூலம் சூசீ வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறியிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம் விதித்த மூன்றாண்டு கால கடுங்காவல் சிறை தண்டனையை, இராணுவ ஆட்சியாளர்கள் பாதியாக குறைத்ததோடு அந்த தண்டனையை வீட்டிலேயே கழிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள் கடந்த 20 வருட காலத்தில் 14 ஆண்டுகளாக ஆங் சான் சூசீ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வட மாகாண சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

computer.jpgவட மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது புதிய தொழில்நுட்பத்தின் அடிப் படையில் மீள் வடிவமைக்கப்பட்டு வட மாகாண ஆளுநர் மேயர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியால் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் விணையத்தளத்தில் வட மாகாண சபையின் நிகழ்வுகள், ஆவணங்கள், சுற்று நிருபங்கள்வட மாகாண பிரதேச கோள வரைபடங்கள், பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் வட மாகாணத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றிய விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வட மாகாணத்தில் அமுல்படுத்தப்படுகின்ற “வடக்கின் வசந்தம்’ தொடர்பாகத் தகவல்களும் வட மாகாணச் செய்திகளும் விரைவில் இதில் வெளியிடப்படவிருக்கிறது.

திங்கள் காலை 9.30 மணிக்கு ஆளுநரின் செயலகத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மாகாண சபையின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் தகவல் செயற்பாட்டுக் குழு அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

ஆசியாவில் ஐம்பது மில்லியன் பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றும் அபாயம்

ஆசிய கண்டத்து நாடுகளில், கணவன்மார் அல்லது காதலர்கள் பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையில் ஈடுபடுவதால் ஐம்பது மில்லியன் ஆசியப் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றும் பேரபாயம் இருப்பதாக எய்ட்ஸ் பரவல் பற்றிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
இந்தோனீசிய நாட்டின் பாலி நகரில் நடந்த எச் ஐ வி- எய்ட்ஸ் மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி ஆசிய கண்டத்து நாடுகளில்,  எச் ஐ வி கிருமிகளினால் பீடிக்கப்பட்ட 17 லட்சம் பெண்களில் 90 சதவீதமானவர்கள் அந்த நோயை தமது நீண்ட கால துணைவர்களிடமிருந்து தான் பெற்றார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பெண்களின் பலவீனத்துக்கு காரணமான சமுதாய நடத்தை, கொள்கை ஆகியன மாற வேண்டும் என்று ஐ நா மன்றத்தின் பெண்கள் எய்ட்ஸ் பிரிவின் பிராந்திய இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினை பற்றி இனிமேலும் அலட்சியம் காட்ட முடியாது என்றும் ஐ நா வின் எய்ட்ஸ் திட்ட அதிகாரி டாக்டர் பிரசாத் ராவ் கருத்து வெளியிட்டுள்ளார்.

நானே வெளிவிவகார அமைச்சர் கிளின்டன் அல்ல; ஹிலாரி சீற்றம்

hillary-clinton.jpgஆபிரிக்கா வுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவரது கணவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான பில் கிளின்டன் தொடர்பான கேள்வியொன்றுக்கு கோபமாகப் பதிலளித்துள்ளார். கொங்கோ தலைநகர் கின்ஷாசாவில் பொதுவான கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டிருந்த ஹிலாரியிடம் பல்கலைக்கழக மாணவரொருவர் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட பல பில்லியன் டொலர்கள் மதிப்பு வாய்ந்த வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் கிளின்டன் என்ன கருதுகிறார் எனக் கேள்வியெழுப்பினார். இக் கேள்வியை எதிர்பார்க்காத ஹிலாரி அந்த மாணவனை நோக்கி;

எனது கணவர் என்ன நினைக்கிறார் என்பதை நான் உமக்குக் கூற வேண்டுமென விரும்புகிறீர். நான் தான் வெளிவிவகார அமைச்சரே தவிர கிளின்டன் அல்ல எனக் கடும் கோபமாகப் பதிலளித்துள்ளார்.

இந்தப் பதிலால் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சில நிமிட நேர அமைதி நிலவியது. தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹிலாரி நீங்கள் எனது கருத்தைக் கேட்டால் அதனை நான் கூறுவேன். எனது கணவரின் தூதுவராக நான் செயற்படப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிய ஹிலாரி வேறு விவகாரங்களை நோக்கிப் பேச்சைத் திசை திருப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் இக் கேள்வியை எழுப்பிய மாணவன் ஹிலாரியை அணுகித் தனது கேள்வி தவறாக மொழிமாற்றம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீனாவின் உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமா என்ன நினைக்கிறார் என்பதற்குப் பதிலாக கிளின்டன் என்ன நினைக்கிறார் எனத் தவறாகக் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் கவலையடைய வேண்டாமென அம் மாணவனிடம் ஹிலாரி கூறியதாக அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.

2001 இல் பதவி விலகியதைத் தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் கிளின்டன் கடந்த வாரம் வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு அமெரிக்க ஊடகவியலாளர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்திலும் முக்கிய பங்காற்றியிருந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது

சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) – புன்னியாமீன்

youth.pngஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கொண்டாப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.

1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120) இலக்க பிரேரனைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் திகதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ஆம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறாக ஆகஸ்ட் 12ஆம் திகதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் திகதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி, தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி  இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.

விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 – 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.

முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.

சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சூழலின் தேவையாகிறது.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ்  மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சோக்ரடீஸ்,  “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை. இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.

இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். ‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது’. அது போல, ‘கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.‘அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது” என்று எதுவுமேயில்லை.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். “Never, neer, neer give up’  என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி” என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

2001ஆம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ஆம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ஆம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும், உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ஆம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ஆம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ஆம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ஆம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும், 2008ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ஆம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும், எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன. குறிப்பாக சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.

2009 – SUSTAINABILITY: OUR CHALLENGE. OUR FUTURE.
2008 – Youth and Climate Change: Time for Action
2007 – Be seen, Be heard: Youth participation for development
2006 – Tackling Poverty Together
2005 – WPAY+10: Making Commitments Matter
2004 – Youth in an Intergenerational Society
2003 – Finding decent and productive work for young people everywhere
2002 – Now and for the Future: Youth Action for Sustainable Development
2001 – Addressing Health and Unemployment

யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னாலிருந்த கல்வி நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும – யாழ்நகரில் கல்வி அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் நிலவிய மிகச்சிறந்த கல்வி நிலை மீண்டும் உருவாக்கப்படவேண்டும். அதற்கு இங்குள்ள பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் கல்வியியலாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென கல்வியமைச்சர் சுசில்ப்பிறேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கல்வியியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; கடந்த காலங்களில் குழுப்பமான, கஷ்டமான சூழ்நிலையில் இருந்தபோதும் யாழ்.குடாநாட்டில் கல்வி மேம்பாடு அழிந்து விட்டாமல் பாதுகாத்து நின்ற ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம். யாழ்ப்பாணத்தில் 4 வலயங்களில் சுமார் 101 பாடசாலைகள் மிகக் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புனரமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. கல்வி வலய அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளன. பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடங்களிற்கு உபகரணங்களை வழங்கவேண்டும். தளபாடங்கள், ஆசிரியர்கள், சிற்?ழியர்கள் பற்றாக்குறையாகவுள்ள அநேகமான பாடசாலைகள் உள்ளன. அவற்றிற்கு உடனடியாக இவற்றைப் பெற்றுத்தர வேண்டியுள்ளது.

மாகாணக்கல்வியமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கான வளங்களைப் பெற்றுத்தர ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண விசேட செயலணிக் குழுத்தலைவருமான பசில் ராஜபக்ஷவினால் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாடசாலைகளுக்கான வளங்களைப் பெற்றுக் கொடுக்க உலகவங்கியுடன் கல்வியமைச்சு பேசி 10 மில்லியன் ரூபாவைப் பெற்றுள்ளது. முன்பு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றுக்குச் சென்றபோது கட்டி முடிக்கப்படாத கட்டிடங்கள் காணப்பட்டிருந்தன. அவை விரைவில் பூரணப்படுத்தப்படும். “இசுறு’ பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 30 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு 1,050 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வட மாகாணத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் இன்மையினாலேயே இந்த நிதி விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பாடசாலை அதிபர்களுக்குப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இசுறு பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் குடாநாட்டின் 5 வலயங்களைச் சேர்ந்த 75 பாடசாலைகளுக்கு கணினிக்கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த போது தங்கள் பாடசாலைகளில் உள்ள பழைய கணினிகளை புதுப்பித்து தரும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக 3 வாரங்களில் நவீன கணினிகளை யாழ்.நகரில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். இத்தோடு கல்வியமைச்சின் கணினிப்பிரிவு உலக வங்கியுடன் பேசி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலை கணினிக் கூடங்களில் உள்ள பழைய கணினிகளைப் புதுப்பித்து வழங்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளைக் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு கணினிகளை வழங்க பல கணினி விற்பனை நிலையங்களிடம் இருந்து கேள்வி அறிவித்தல் பெறப்பட்டுள்ளது. இம் மாத முடிவிற்குள் கணினிகள் வழங்கி முடிக்கப்படும். இதுவரை நியமனங்கள் வழங்கப்படாத 400 வரையான தொண்டர் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கான நியமணங்களை வழங்கும் படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது அமைச்சிடம் கேட்டுள்ளார். இதற்கமைய 296 தொண்ட ஆசிரியர்களுக்கான நியமனங்களை யாழ்.மாநகரசபைத் தேர்தலுக்குப் பின்னர் வழங்கவுள்ளோம். இந்த நியமனங்களோடு 82 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும்.

தேசிய பாடசாலைகளில் நிலவும் சிற்ழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பாக சமூக சேவைகள் அமைச்சருடன் பேசி தீர்வு காணப்படும். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி அனைத்து ஆசிரியர்களுக்குமான பதவியுயர்வு பற்றிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சுற்றறிக்கையும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 8 வருடங்களாகத் தீர்க்கப்படாமலிருந்த கல்வி நிர்வாக சேவை தரம் ஐ ற்கான பிரச்சினையும் தீர்க்கப்பட்டு அதிபர் சேவை ஐ இல் இருந்து நிர்வாக சேவை iii ற்கு வரவுள்ள 286 பேரின் பிரச்சினை டிசம்பர் மாதத்திற்குள் தீர்த்து வைக்கப்படும். அத்தோடு, அதிபர் சேவை 2:1 உள்ளவர்களுக்கான பதவி உயர்வுப் பிரச்சினையும் இவ்வாண்டுக்குள் தீர்க்கப்படும். அதிபர் சேவை 2:2, 2:3 உள்ளவர்களின் தேவைகள் செப்டெம்பர் மாதத்திற்குள் தீர்க்கப்படும். வடக்கின் வசந்தம் ஏற்பட இத்தனை வருடம் ஆனது போல் கல்விச் சேவையில் உள்ள சிக்கல்கள் தீர இத்தனை வருடங்கள் ஆகியுள்ளது. ஜனாதிபதியின் உதவியுடன் கல்விச் சேவை இப்பிரதேசத்தில் துரித வளர்ச்சி காணும். ஏ9 வீதி தொடர்பிலான சிக்கல் ஒரு சில நாட்களில் முடியும். முடிந்தவுடன் கொழும்பிலிருந்து கட்டிடப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் புனரமைக்கப்படும் என்றார்.