க.பொ.த உயர்தரப் பரீட்சை வவுனியாவில் சுமுகமாக நடைபெற்று வருகிறதாக பரீட்சை இணைப்பாளரும் வலயக்கல்விப் பணிப்பாளருமான திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வோல்ட் தெரிவித்தார். நலன்புரி நிலையங்களில் வசிக்கும் 1187 மாணவர்களும் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 1625 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களில் சரணடைந்த 139 ஆண்களும் 27 பெண்களும் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பம்பைமடு வளாக விடுதியிலும் ஆண்களுக்குரிய காமினி வித்தியாலயத்திலும் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நலன்புரிநிலைய ஏனைய மாணவர்களுக்கு கதிர்காமர், ஆனந்தகுமாரசாமி, இராமநாதன் ,அருணாச்சலம், வலயம்4 ,கல்வியியல் கல்லூரி,வீரபுரம் ஆகிய இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நலன்புரி நிலையத்தில் வசிக்கும் பார்வையற்ற ஒரு மாணவனும் பரீட்சை எழுதுகின்றார். அவருக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு வவுனியாவில் உள்ள 17 நிலையங்களில் பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் இணைப்பாளர் தெரிவித்தார்.