ஆபிரிக்கா வுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவரது கணவரும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான பில் கிளின்டன் தொடர்பான கேள்வியொன்றுக்கு கோபமாகப் பதிலளித்துள்ளார். கொங்கோ தலைநகர் கின்ஷாசாவில் பொதுவான கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டிருந்த ஹிலாரியிடம் பல்கலைக்கழக மாணவரொருவர் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட பல பில்லியன் டொலர்கள் மதிப்பு வாய்ந்த வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் கிளின்டன் என்ன கருதுகிறார் எனக் கேள்வியெழுப்பினார். இக் கேள்வியை எதிர்பார்க்காத ஹிலாரி அந்த மாணவனை நோக்கி;
எனது கணவர் என்ன நினைக்கிறார் என்பதை நான் உமக்குக் கூற வேண்டுமென விரும்புகிறீர். நான் தான் வெளிவிவகார அமைச்சரே தவிர கிளின்டன் அல்ல எனக் கடும் கோபமாகப் பதிலளித்துள்ளார்.
இந்தப் பதிலால் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சில நிமிட நேர அமைதி நிலவியது. தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹிலாரி நீங்கள் எனது கருத்தைக் கேட்டால் அதனை நான் கூறுவேன். எனது கணவரின் தூதுவராக நான் செயற்படப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிய ஹிலாரி வேறு விவகாரங்களை நோக்கிப் பேச்சைத் திசை திருப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் இக் கேள்வியை எழுப்பிய மாணவன் ஹிலாரியை அணுகித் தனது கேள்வி தவறாக மொழிமாற்றம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீனாவின் உடன்படிக்கை குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமா என்ன நினைக்கிறார் என்பதற்குப் பதிலாக கிளின்டன் என்ன நினைக்கிறார் எனத் தவறாகக் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் கவலையடைய வேண்டாமென அம் மாணவனிடம் ஹிலாரி கூறியதாக அவரது நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.
2001 இல் பதவி விலகியதைத் தொடர்ந்து சர்வதேச மனிதாபிமான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் கிளின்டன் கடந்த வாரம் வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு அமெரிக்க ஊடகவியலாளர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்திலும் முக்கிய பங்காற்றியிருந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது