நேற்றைய இரவுப்பொழுதை Liverpool ல் கழித்துவிட்டு இன்று இரண்டாவது நாளாக காலை 7:30 க்கு தமது நடை பாத போராட்டத்தை சேரனும் விஷ்ணாவும் தொடர்ந்தார்கள். Liverpool புகையிரத நிலையத்தில் காலை 9:30 மணி வரை துண்டுப்பிரசுரங்களை அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு விநியோகம் செய்தார்கள்.
அத்துண்டுப்பிரசுரங்களில் இலங்கை அரசாங்கத்தால் 300 ஆயிரம் மக்கள் அங்கு வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும் போதிய உணவு மருத்துவம் இன்றி அல்லற்படுவதும் தினம் தினம் இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் எமது உறவுகளை உடனடியாக இந்த சித்திரவதைகளிலிருந்து விடுவிக்க அனைத்துலக சமூகத்தின் உதவியையும் அத்துண்டுப்பிரசுரங்களின் மூலம் கோரிக்கையாக விடப்பட்டுள்ளது.
அத்துண்டுப்பிரசுரங்களில் அடங்கியுள்ள விடயங்களும் இவ்விளைஞர்களின் இப்போராட்டமும் அவுஸ்திரேலியா வாழ் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
புகையிரத நிலையத்தில் துண்டுப்பிரசுரங்களை வழங்கிய பின் அங்கிருந்து நடக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக 21 கிலோமீற்றர் தூரம் நடந்து Campbelltown ஐ வந்தடைந்தனர்.
சிட்னி இளைஞர்களின் நடை பாத போராட்டம் ஊடகங்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. SBS தொலைக்காட்சி நிறுவனம் மாலை 4:30 மணிக்கு Hurley Park Community Centre ல் வந்து இப்போராட்டத்தை ஒளிப்பதிவு செய்தது. அப்பகுதி மக்கள் அங்கு கூடி தமது பெரும் ஆதரவை வழங்கினர்.
சேரன் மற்றும் விஷ்ணா இன்று சற்று களைப்படைந்தாலும் அவர்கள் மனதலவில் மிகவும் திடமாக உள்ளனர். தமது இலக்கை எட்டும்வரை அவர்கள் சோர்ந்து விடமாட்டார்கள். 300 ஆயிரம் மக்களின் விடிவை மனதில் நிறுத்தி மிகவும் உறுதியுடன் தமது போராட்டத்தை தொடர்கிறார்கள்.
நாளை காலை 7 மணிக்கு Campbelltown ஐ விட்டு புறப்பட்டு Bargo எனும் இடத்தை நோக்கி 43 கிலோமீற்றா தமது நடைபாத போராட்டத்தை தொடர்வார்கள். நாளை மாலை 6 மணியளவில் Bargo ஐ சென்றடைவர்.
இவ்விளைஞர்கள் செல்லும் இடங்கள் மற்றும் இப்போராட்டம் பற்றிய முழு விபரங்களையும் www.free300k.com எனும் இனையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும். உங்கள் மேலதிக விபரத் தேவைகளுக்கு free300kgmail.comஎனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.