2009

2009

இடம்பெயர்ந்திருப்பவர்களுக்கும் ஏனையவர்களைப் போன்று வசதிகளும் உரிமைகளும் வழங்கப்படும் -ஐ.நா. பேரவையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க உரை

mahinda-samarasinha.jpgநாட்டில் வாழும் ஏனையவர்களைப் போல் உள்ளூரில் இடம்பெயர்ந்திருப்பவர்களுக்கும் சகல வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் என ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் 12 ஆவது கூட்டத் தொடரில் நேற்று உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள்,  இடம்பெயர்ந்த மக்களுக்கான அரசாங்கத்தின் உதவிகள் ஆகியன பற்றி அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள், சரணடைந்த புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகள்,  செனல் – 4 அலை வரிசை வீடியோ ஆகியன குறித்தும் அமைச்சர் தனது உரையின் போது தெளிவுபடுத்தினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து நிவாரணம், மீள்கட்டுமானம், மீள்குடியமர்த்தல்,  மீள் ஒருங்கிணைத்தல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய 05 கட்டங்களின் கீழ் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புலிப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்தும் மோதல்களிலிருந்தும் சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் புலிகளினால் இயக்கத்துக்கு வேலை செய்யுமாறு பலவந்தப்படுத்தப்பட்டவர்கள். புலி பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதையடுத்து இவர்கள் தற்காலிகமாக பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் தங்க வைக்கப்பட்டு பின்னர் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்குத் தேவையான அவசர உணவுகள்,  கூடாரங்கள், மருத்துவ வசதிகள், குடிநீர்,  மலசல கூட வசதிகள் ஆகியன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் பெய்யக்கூடிய பருவப் பெயர்ச்சி மழையினால் நிவாரணக் கிராமத்தில் வெள்ளம் ஏற்படாத வகையில் அனர்த்த நிவாரண முகாமைத்துவ அமைச்சு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மீள்கட்டுமானப் பணிகள்

மோதல்களின் போது சேதமடைந்த உட்கட்டமைப்புகளின் மீள்கட்டுமானப் பணிகளுக்காக அரசாங்கம் இதுவரையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது.கடந்த செப்டெம்பர் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 75.009 குடும்பங்களைச் சேர்ந்த 167.908 பேர் இடம்பெயர்ந்தவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக 110.000 தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மே மாதமளவில் 14.500 இற்கும் அதிகமானோர் தமது உறவினர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பிரிந்த தமது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.

மீள்குடியேற்றம்

ஓகஸ்ட் மாதமளவில் 695 குடும்பங்களைச் சேர்ந்த 5.331 பேர் வவுனியா,  அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்,  திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மீள குடியமர்த்தப்பட்டனர். இன்னும் 9.994 பேர் எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியினுள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 60 மாணவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரச நிறுவனங்களுடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற அமைப்புக்கள் இணைந்து நிவாரணக் கிராமங்களில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

சுகாதாரம்:

நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருப்போரின் சுகாதாரத்துக்கு அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. வவுனியாவில் நிவாரணக் கிராமங்களில் 81 வைத்தியர்கள் சேவையாற்றி வருகின்றார்கள். சுகாதார அமைச்சு இதனை 100 வைத்தியர்களாக அதிகரிப்பதற்கும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் 28 வைத்தியர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கு நடமாடும் மருத்துவ முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.

கல்வி:

வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் மாணவர்களின் கல்வி முக்கியத்துவம் கருதி தேசியக் கல்வித் திணைக்களம் க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 1236 மாணவர்களுக்காக 10 விசேட பரீட்சை நிலையங்களை வவுனியாவில் அமைத்திருந்தது. கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில் 166 முன்னாள் புலி உறுப்பினர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

கண்ணிவெடி அகற்றல்:

மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்த முடியும். இதற்காக ஐ. நா. அமைப்புகள் உட்பட பல நிறுவனங்கள் எமக்கு உதவி வருகின்றன. நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக புதிதாக பெறப்பட்டுள்ள 10 இயந்திரங்களின் உதவியுடன் எதிர்வரும் வாரங்களில் அதற்கான வேலைகளை துரிதப்படுத்தவுள்ளோம்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம்:

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்போது கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கை ஊடகவியலாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகம் இலங்கை சட்ட திட்டங்களுக்கு அமையவே தண்டனை பெற்றுள்ளார்.

செனல் 4

வடக்கிலிருந்த தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் கொலைசெய்வது போன்று வெளியான வீடியோ போலியானதென்பது விசாரணைகள் உறுதி செய்துள்ளன. இது போன்ற போலியான வீடியோ அலைவரிசைகள் இனிமேலும் ஒளிபரப்பப்படாமலிருப்பதற்கான முன்னேற்பாடுகளை நாம் மேற்கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார். 

நடுவரை மிரட்டிய விவகாரம்: செரீனாவுக்கு ரூ. 5.25 லட்சம் அபராதம்

serena-williams.jpgஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கிலிஸ்டர்ஸிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார். இந்தப் போட்டியின்போது செரீனா நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செரீனா சர்விஸ் போடும் போது புட்டால்ட் (எல்லை கோட்டை தாண்டுதல்) செய்ததாக லைன்ஸ் உமன் (நடுவர்) அறிவித்தார். இதனால் அந்த புள்ளி கிலிஸ்டர்சுக்கு கிடைத்து அவர் வெற்றிபெற்றார்.

இதில் ஆத்திரம் அடைந்த செரீனா பெண்நடுவரை நோக்கி உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தான் நடுவரை மிரட்டவில்லை என்று செரீனா பின்னர் மறுத்து இருந்தார்.

செரீனா தன்னை மிரட்டியதாக லைன்ஸ் உமன் புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுத்து உள்ளனர். செரீனாவுக்கு ரூ. 5.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாலித கோஹண – பான் கீ மூன் சந்திப்பு

1409kohona-banki.jpgஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர பிரதிநிதி பாலித கோஹணவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடைலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

தமது புதிய பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர், பான் கீ மூனை முதன் முறையாக பாலித கோஹண சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

தொழிற்சங்க நடவடிக்கையால் பெருந்தோட்டத்துறைக்கு ரூ.800 மில். இழப்பு : அமைச்சர் ஜயரத்ன

150909dimujayarathna2.jpgமலையக தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 14 நாட்களாக மேற்கொண்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு 800 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நலனை முன்நிறுத்துவதாகக் கூறும் சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைப் பலிகொடுத்து, தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம், இரகசியமாக செயற்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது

mono.jpgதோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம், தொடர்ந்து இழுபறிபடுவதால் அரசின் பகிரங்க தலையீட்டை நாம் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் கோரினோம். நானும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் ஜே.வி.பி.யின் அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் இது தொடர்பில் வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால், பகிரங்கமாக தலையிட்டு நியாயமான சம்பளத்தை பெற்றுத்தர வேண்டிய அரசாங்கம், இரகசியமாக செயற்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனோ எம்.பி. மேலும் கூறுகையில்,

“கடந்த சனிக்கிழமை நள்ளிரவில், தொழிலாளர்களுக்கு 405 ரூபா சம்பள உயர்வு என்பதாக ஊடகங்களுக்கு இ.தொ.கா. அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்திற்கும், தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்குப் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளத்தை தோட்டக் கம்பனிகளால் வழங்க முடியாவிட்டால் மானியம் அல்லது வரிச்சலுகைகள் வழங்கி இந்த 500 ரூபா தொகையை நாட் சம்பளமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் வழி ஏற்படுத்த வேண்டும். இத்தகைய ஒரு தலையீட்டையே நாம் அரசாங்கத்திடம் கோரினோம்” என்றார்

அலரி மாளிகையில் நேற்று இப்தார் வைபவம்

150909ramazan_president_house.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஏற்பாட்டில் நோன்பு துறப்பதற்கான இப்தார் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் கலந்துகொண்ட பெரும் திரளான முஸ்லிம் பிரமுகர்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடினார்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா இங்கு உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அயராத முயற்சியின் காரமான இன்று நாட்டில் அமைதி நிலவுவதாகவும் அதனால் இது போன்ற வைபவங்களை பெரும் சிரமங்களின்றி நடத்தக்கூடியாக இருப்பதாகவும் கூறிய அவர் இந்த இப்தார் ஏற்பாட்டுக்காக முஸ்லிம்கள் சார்பில் அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
 

புஷ் மீது பாதணியை வீசிய ஊடகவியலாளர் இன்று விடுதலை!

1099images.jpgஅமெரிக் காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது தமது பாதணியை வீசியெறிந்த ஊடகவியலாளர் முண்டாசர் அல் சய்தி இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக அவரது அவரது சகோதரர் டர்காம் தெரிவித்தார்.
 
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் ஓய்வு பெறுவதற்கு முன் ஈராக் சென்றிருந்தபோது ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

மாநாட்டில் கலந்து கொண்ட டி.வி செனல் நிருபர் முண்டாசர் அல் சேய்திää தன் கால்களில் அணிந்திருந்த 2 ஷ_க்களையும் கழற்றி புஷ் மீது வீசி எறிந்தார். அவருக்கு ஈராக் நீதிமன்றம் 3 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனுசெய்ததில் இந்த தண்டனை ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டது. இவரது நன்நடத்தை காரணமாக அந்தத் தண்டனை மேலும் குறைக்கப்பட்டது. இவர் நேற்று விடுதலை செய்யப்படுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

எனினும் சட்ட நெறிமுறைகள் முழுமை அடையாததால் அவர் நேற்று விடுதலை செய்யப்படவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் விடுதலை செய்யப்படுகிறார். இந்தத் தகவலை அவரது சகோதரர் டர்காம் தெரிவித்தார

ஐக்கிய நாடுகளின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி இலங்கை விஜயம்!

ஐக்கிய நாடுகளின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி லீன் பெஸ்கோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வது அவரின் விஜயத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசனைக்கு ஏற்ப அவர் இங்கு விஜயம் செய்ய உள்ளதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது உட்பட அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவர் கூடுதல் கவனம் செலுத்த உள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.நா. வின் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தையின் பின்னரே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக லீன் பெஸ்கோ மேலும் தெரிவித்துள்ளார். 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 12இல் ஆரம்பம்

150909students1.jpgஇவ் வருடத் துக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
 
இந்தப் பரீட்சை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் மட்டும் நடைபெறாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை சுமார் 5 இலட்சத்து 45 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளதுடன் இதற்காக சுமார் 4 ஆயிரம் பரீட்சை நிலையங்களை நிருவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து சுமார் 25 ஆயிரம் பரீடசார்த்திகள் தோற்றவுள்ளனர். இவர்களுக்கு பரீட்சை எழுதவென வவுனியா நலன்புரி மத்திய நிலையங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு முன்னர் குறிப்பிட்ட பரீட்சார்த்திகள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேறினால் அங்கும் பரீட்சை நிலையங்கள் அமைக்க கவனம் செலுத்தப்படும் என்றும் வடக்கின் பரீட்சார்த்திகளுக்கு சிக்கல் இல்லாமல் பரீட்சைக்குத் தோற்ற வகைசெய்யப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

முகாம்களில் உள்ள மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பான அரசாங்கம் இந்த விவகாரத்தை ஒரு விளையாட்டாக கையாள முடியாது

101009displacedidps.gifவவுனி யாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற முகாமைத்துவம் குறித்து உறுதியான திட்டம் உண்டு என்றும், அத்திட்டம் நேர்த்தியாகவும் திறமையாகவும் கட்டுக்கோப்பான முறையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வப்போது இடம்பெறும் தனது சம்பவங்கள் குறித்து ஊடகங்களில் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவது குறித்து அரசாங்கம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார்.

வவுனியா முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து மட்டக்களப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, முகாம்களில் உள்ள 3 இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பான அரசாங்கம் இந்த விவகாரத்தை ஒரு விளையாட்டாக கையாள முடியாது என்று கூறினார்