சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கான காலம் முடிந்துவிட்டதால், அரசாங்கம் இனி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைச் சார்ந்திருக்க முடியாது. என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடியானது எரிசக்தி நெருக்கடியாக அதிகரித்துள்ளது. அதன் மூலம் நாட்டின் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதி நெருக்கடியானது உரிய நேரத்தில் தீர்க்கப்படாமையால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட சில குழுக்கள் கூறுவது போன்று உள்நாட்டு செயற்பாட்டின் மூலமோ அல்லது வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்து ஹோட்டல் தங்குவதற்கு பணம் செலவழிப்பதன் மூலமோ இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது.
தற்போதைய நிலைமை தொடருமானால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு பொதுமக்கள் உடன்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாக அரசாங்கம் கூறுவது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது,
உதவி வழங்கும் போது சர்வதேச நாணய நிதியம் எந்தவொரு நாட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் எப்போதாவது அத்தகைய சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளை விதித்துள்ளதா என்பதை நிரூபிக்குமாறு தற்போதைய நிர்வாகத்திற்கு அவர் சவால் விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் ஒட்டுமொத்த சீர்திருத்தத் திட்டம் உள்ளிட்ட தொடர்புடைய நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் அந்தந்த அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளுடன் மாத்திரமே சர்வதேச நாணய நிதியம் உடன்படுகிறது.
சாத்தியமான வாடிக்கையாளர்களால் சமர்ப்பிக்கப்படும் திட்ட முன்மொழிவுகளை வங்கிகள் எவ்வாறு ஒப்புக்கொள்கின்றன என்பதைப் போலவே இதுவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்ற போது, அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரை விட்டுவிட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட திட்டமிடப்பட்ட நாளில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசதியாக நாட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.