26

26

உக்ரைனில் வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதும் இராணுவ தாங்கி – வைரலாகும் வீடியோ !

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது இராணுவ தாங்கி ஒன்று ஏறிய வீடியோ தற்போது சமுகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த இராணுவ தாங்கி உக்ரைனை சேர்ந்ததா? அல்லது ரஷ்யாவை சேர்ந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் உக்ரைன் நாடாளுமன்றிலிருந்து வடக்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்றுகொண்டிருந்த கார் மீது எதிரே வந்த இராணுவ தாங்கி வேகமாக மோதியது. இதில், இராணுவ தாங்கிக்கு அடியில் கார் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி வந்த முதியவரும் அதில் சிக்கிக்கொண்டார்.

அதன்பின்னர், சில வினாடிகள் கழித்து இராணுவ தாங்கி காரில் இருந்து கிழே இறங்கி முன்னேறி சென்றது. இதையடுத்து, அங்கு நின்றுகொண்டிருந்த மக்களில் சிலர் சிதைந்த காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இராணுவ தாங்கி ஏறியதில் கார் உருக்குலைந்தபோதும் காரில் இருந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இராணுவ தாங்கி கார் மீது ஏறுவதும், காரில் சிக்கிய முதியவரை மீட்கும் வீடியோவும் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் பொலிஸாரால் கைது !

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி சுமார் இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிவனொளி பாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பலங்கொடை பொகவந்தலா,நோர்வூட் மஸ்கெலியா,தியகல நோர்ட்டன் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கேரள கஞ்சா, போதை மாத்திரைகள், தடைசெய்யப்பட்ட சிகரட்டுக்கள், மதன மோதகம், ஹெரோயின்,உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்க்ப்பட்டுள்ளன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது ஸ்டூட் என்ற பொலிஸ் மோப்பநாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாயின் உதவியுடன் சுமார் 87 போதை பொருட்கள் வைத்திருந்த நபர்களை ஹட்டன் பொலிஸார் மாத்திரம் கைது செய்துள்ளதாகவும் கடந்த காலங்களில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலிருந்து கோரா என்ற நாயின் குறைப்பாட்டினை தற்போது உள்ள ஸ்டூட் மோப்ப நாய் நிவர்த்தி செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் (25) ஹட்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிவனொளிபாதமலை யாத்திரை செய்வதற்காக கேரள கஞசாவுடன் சென்ற 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களை ஹட்டன் நீதவான் முன்னலையில் இன்று ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு – அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி வந்த கட்டளை !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை தற்போது இல்லை.
இந்நிலையில், உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷிய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டிய  நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இனி உக்ரைன் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும். தலைநகரை கைப்பற்றுவதற்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுடனான ரி20 போட்டி – ஜடேஜா , ஐயர் அதிரடியால் தொடரை இழந்தது இலங்கை !

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது

போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்திருந்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஷங்க 75 ஓட்டங்களையும் தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் மற்றும் தனுஷ்க குணதிலக 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் இந்தியா அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றிபெற்று வெற்றியை உறுதி செய்ததது. இந்திய அணி சார்ப்பில் ஸ்ரேயாஷ் ஐய்யர் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும் ரவீச்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் மற்றும் சஞ்சு சம்சுன் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் 2 – 0 என்ற ரீதியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டன தீர்மானம் – வீட்டோ மூலம் தோற்கடித்தது ரஷ்யா !

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும், ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ரஷ்யா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும் அனைத்துஇ ராணுவப் படைகளையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா, போலந்து, இத்தாலி, ஜேர்மனி, நியூஸிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

எனினும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

ரஷ்ய தூதரகத்துக்கு போப் ஆண்டவர் திடீர் விஜயம் – போரை உடனே நிறுத்துமாறு வேண்டுகோள் !

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை கைவிடுமாறு உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. ஆனால் அதை ரஷ்யா ஏற்கவில்லை.
இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் ரோமில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு திடீரென்று நேரில் சென்றார்.
அப்போது அங்கிருந்த தூதரக அதிகாரிகளை சந்தித்து உக்ரைன் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் குறித்த தனது கவலையை தெரிவித்தார். போரை உடனே நிறுத்துமாறு அவர் தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ரஷிய தூதரகத்துக்கு போப் ஆண்டவர் நேரில் சென்றதை வாத்திகான் அதிகாரிகள் உறுதி செய்தனர். போப் ஆண்டவர் சிறிய வெள்ளை காரில் ரஷ்ய தூதரகத்துக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் ஆண்டவரின் இந்த போர் நிறுத்த முயற்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

யாழில் போதுமான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என கோரிக்கை !

பொதுமக்கள் முண்டியடித்து எரிபொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் முண்டியடித்து  செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பொதுமக்களின் வழமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதோடு ஏனைய பதுக்கல், சேமித்து வைக்கும் முகமான கொள்வனவிற்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் இணையவழிக்குற்றங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

இணையம் ஊடாக இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15 முதல் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனவே, இணையவழி மோசடிகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

படங்களை காண்பித்து பெண்களை அச்சுறுத்தும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

சகல சந்தர்ப்பங்களிலும் மோசடிகள் மற்றும் குற்றங்கள் என்பன தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள்.

அவர்களுக்கு சுமார் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

ரஷ்யா செல்லும் சரக்குக் கப்பலை இடைமறித்த பிரான்ஸ் கடற்படை !

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்லும் சரக்குக் கப்பலை, ஆங்கில கால்வாய் வழித்தடத்தில் பிரான்ஸ் கடற்படை இடைமறித்துள்ளது.

பிரான்ஸ் அதிகாரிகள், புதிய ஐரோப்பிய ஒன்றியத் தடைகளுக்கு இணங்க கப்பல் இடைமறிக்கப்பட்டது என்றும், அது வடக்கு துறைமுகமான பவுலோன்-சுர்-மெர்க்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 4000 உக்ரேனியர்கள் – விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை !

சுமார் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் 30 நாட்களாக நாட்டில் இருந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா விசா இன்னும் 30 நாட்களில் காலாவதியாகி விடும்.

எனினும், உக்ரேனில் நிலவும் மோதல் காரணமாக இலங்கையில் தங்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் விசாவை நீடிக்குமாறு சுற்றுலா அமைச்சு சம்பந்தப்பட்ட பயண முகவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் விசா காலாவதியான பின்னர் உக்ரைனுக்கு நேரடி விமான சேவைகள் இருக்காது என்பதால் அவர்கள் வேறு நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு முகவர் நிலையங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.