17

17

கொரோனாவுக்கு அழிவில்லை. அது புது அவதாரம் எடுக்கும். !

புதிய வகைகளாக உருமாறுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் உலகில் ஒருபோதும் ஒழியாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழக நிபுணா்கள் இதுகுறித்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

வைரஸ்கள் சில மாதங்களுக்கு ஒருமுறை புதிய தன்மைகளுடன் கூடிய அவதாரமெடுத்து தமது பரவலைத் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும்.

பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிவிட்டு, அதனை ஏராளமானவா்களுக்கு செலுத்திவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, புதிய வகை கொரோனாக்கள் உருவாவதை நாம் மறந்துவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரோன் வகை கொரோனா ஏராளமானவா்களுக்குப் பரவி, அதிக உடல்நல பாதிப்பை ஏற்படுத்தாமல் மறைந்து விடுவதால், சமூக நோய்த் தடுப்பாற்றல் கிடைத்துவிடும் என நினைப்பது தவறான கணிப்பு என ஹூஸ்டன் மருத்துவக் கல்லூரி நிபுணா்கள் கூறியுள்ளனர்.

“கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் கொடுக்கப்படும்.” – மயிலிட்டியில் அமைச்சர் டக்ளஸ் !

“கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தரப்படும்.” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகவும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் பொருளாதாமிக்கதாவும் விளங்கிய மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து புனரமைப்பு பணிகளை அங்குரார்ப்பனம் செய்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் முதன்மையான துறைமுகமான இந்த துறைமுகம் இலங்கையின் மின்பிடி உற்பத்தியில்  மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்துவந்தது. ஆனாலும் கடந்தகாலத்தில் நாட்டில் நடைபெற்ற வன்முறை, அழிவு யுத்தம் காரணமாக துரதிஸ்டவசமாக அதில் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

ஆனாலும் அந்த பாதிப்பிலிருந்து இந்த துறைமுகத்தை தூக்கி நிறுத்தும் முகமாகவே அதன் அபிவிருத்திக்கான இரண்டாம் கட்டட பணிகளை ஆரம்பித்துள்ளோம். இதற்காக மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கும் எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் விசேடமாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் இந்த மயிலிட்டி துறைமுதுகத்தை மட்டுமல்லாது வடக்கில்  பருத்தித்துறை துறைமுகம், மன்னார் பேசலை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் துறைமுகம் ஆகிய மூன்று துறைமுகங்களையும் அமைப்பது தொடர்பிலும் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த காலத்தில் பருத்தித்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டும் இருந்தன. ஆனாலும் அம்முயற்சி சரியாக கையாளப்படாமையால் தவறவிடப்பட்டிருந்தது.

ஆனால் நாம் ஆட்சி பொறுப்பை ஏற்றதபின் அந்த துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பான முயற்சியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றோம். அது விரைவில் கைகூடும் எனவும் நம்புகிறேன்.

துறைமுகத்தை கட்டும்போது அப்பிரதேசத்தின் கடற்றொழில் அமைப்புக்களுடன் கலந்துரையாடித்தான் அமைப்பது வழமை. அதேபோன்றே இங்குள்ள கடற்றொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடி முதலாவது கட்டம் மேற்கொள்ளப்பட்டது.ஆனாலும் அதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

ஆனால் தற்போது எமது அரசாங்கத்தால் அதன் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கடந்த காலத்தில் விடப்பட்ட அனைத்து குறைபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு நவீனத்தவத்துடன் கூடியதாக நிர்மானிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.

இதேவேளை எமது கடற்றொழிலாளர்கள் பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கடந்த காலத்தில் நாட்டில் நடைபெற்ற  வன்முறை காரணமாக பலமான பொருளாதார கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாது கடந்தகால தமிழ். தலைவர்கள் என கூறப்பட்டவர்களால் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தாது தவறவிட்டப்பட்டதால் அதிக துன்பங்களையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்.

அந்தவகையில் அவற்றை தீர்க்க முகமாகவே எமது நிகழ்கால எதிர்கால செயற்பாடுகள் அமையும்” என்றும் தெரிவித்தார்.

மேலும் மயிலிட்டி பிரதேசத்தில் தற்போது 60 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சுமார் 100 முதல் 125 ஏக்கர் காணிகளை  கட்டம் கட்டமாக விடுவிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததுடன்,  கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சுமார் 304 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த அபிவிருத்திப் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு, கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம தலைமையில் நடைபெற்றதுடன் நாடாளுமன்ற உறப்பினர் அங்கயன் இராமநாதன், இந்திய தூதரக பிரதி தூதர் ராஜேஸ் நடராஜ், கடற்படையின் வடக்கு பிரதானி, மாவட்ட செயலாளர் மகேசன் மற்றும் துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்யுங்கள் – குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கோரிக்கை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு என்பது தெளிவாகத் தெரிந்தால் தேவைப்படின் அவரைக் கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு மறைமாவட்ட சமூக உறவுப் பிரிவின் தலைவர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் தான் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் சாட்சியமளிக்கும் போதே குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் இக்கோரிக்கையை முன்வைத்ததாக அருட்தந்தை கிரிஷாந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தி ருந்ததை அடுத்து அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவே பொறுப்பு என அமைச் சர் பிரசன்ன ரணதுங்க முன்னர் தெரிவித்திருந்த கருத்தைத் தொடர்ந்து கத்தோலிக்க மதகுரு இதைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக அமைச்சர் ரணதுங்க முன்வைத்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் ரணதுங்கவை சிஐடிக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பின்னர் சிறிசேனவிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் நான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்திருந்தேன் என அருட்தந்தை கிரிஷாந்த தெரிவித்தார்.

கைவிடப்பட்டது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் !

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

அந்தவகையில் நாளைய தினம் பிரதான மாணவர் ஒன்றியமும், கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வவுனியாச்சிறுமி – ஆறு வருடங்களாகியும் கண்டுபிடிக்கப்படாத குற்றவாளி – நீதித்துறை அசமந்தம் !

வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் கடந்த ஆறு வருடங்களாக இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு கடந்து செல்கின்றதே தவிர குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை.

இவ்விடயம் குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில்,

பண்டாரிக்குளம் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த செயலைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இப்படுகொலைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ள குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கு ஆறு வருடங்கள் நிறைவடைந்திருந்த நிலையிலும் நீதி நிலை நாட்டப்படவிலை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளோம் . ஹரிஸ்ணவியின் குடும்பத்தினர் இதனால் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமடைந்துள்ளனர் . ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையிலும் நாங்கள் போராடி வருகின்றோம்.

இனியும் காலங்களை கடத்தி குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு இடமளியாமல் நீதித்துறை இப்படுகொலைக்கு உரிய தீர்வு பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர் .

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்துள்ள டெங்கு தொற்று !

நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 985 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் 147 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், 102 தொற்றாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பேரும், வவுனியாவில் 10 பேரும், மன்னாரில் 9 பேரும், முல்லைத்தீவில் 6 பேரும் டெங்குத் தொற்றால் பாதிககப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டெங்குப் பரவலில் கொழும்பு மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. அங்கு 245 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டனர். புத்தளத்தில் 242 பேரும், மட்டக்களப்பில் 125 பேரும், திருகோண மலையில் 108 பேரும் டெங்கால் பாதிக்கப் பட்டனர்.

எனினும், கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், பொலநறுவை, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களில் எவரும் டெங்குத் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாரிடம் ஜனாதிபதி பணிப்புரை !

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை கைவிடுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரிடம் கூறியதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

 

வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற உள்ளூர் சிவில் சமூகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் (NGO) பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பீரிஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

 

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக பொறுப்பற்ற பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அது நடக்கிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

இதன்போது, சிவில் சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் பொலிஸார் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து வலுவான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

அத்தோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வெளிவிவகார அமைச்சர் வலுவாக ஆதரித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்கள் ஒன்றும் புதிதல்ல என்று சிலர் எடுத்துள்ள நிலைப்பாட்டை அவர் நிராகரித்தார்.

சட்டமா அதிபர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத போதிலும், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை பயங்கரவாதத் தடைச் சட்டம் தடுத்ததாக ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவதற்கு சட்டத்தரணிகள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

யூதர்கள் ஒழிப்புத் திட்டம் – ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் ரஷ்யாவில் காட்சிக்கு !

ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார்.

Gandhi's Letters to Hitler. The time Gandhi tried to stop Hitler's… | by  Andrei Tapalaga ✒️ | History of Yesterday

அதே காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் கோரி அகிம்சை வழியில் போராடி வந்த இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தி, ஜெர்மனியில் யூதர்கள் ரத்தம் சிந்துவதை நிறுத்த வலியுறுத்தி 1939-ம் ஆண்டு ஹிட்லருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

காந்தி, ஹிட்லருக்கு எழுதிய அந்த கடிதம் தற்போது ரஷியாவில் உள்ள டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் வருகிற மே மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும். இந்திய கலைக்கண்காட்சியில் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை காட்சிக்கு வைக்க இருப்பதாக அருங்காட்சியக நிர்வாகம் அறிவித்துள்ளது.

17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு – 16 மில்லியன் டொலர் வழங்க சம்மதித்துள்ள இங்கிலாந்து இளவரசர் !

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இளவரசர் -  Tamonews

ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோர்ட்டில் முறையிட்டார். ஆனால் அவர் தன்மீதான பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணையை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என கடந்த மாதம் நியூயார்க் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது.

இதனிடையே ராணி 2-ம் எலிசபெத் அரியணை ஏறியதன் 70-வது ஆண்டை அரச குடும்பம் கொண்டாடி வரும் இந்த நேரத்தில், அரச குடும்பத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கை சுமுகமாக தீர்க்க இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ராணி 2-ம் எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாகவும், அதன் ஒரு பகுதியாக வர்ஜீனியா கியூப்ரே நடத்தி வரும் தொண்டு நிறுவனத்துக்கு 16 மில்லியன் டொலர் வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை தொடர்ந்து, சட்டநடைமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் வழக்கை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து மரணங்களுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கையின் போது பிசிஆர் கட்டாயமில்லை !

மருத்துவமனை அல்லது மருத்துவமனை அல்லாத அனைத்து மரணங்களுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கையின் போது பிசிஆர் கட்டாயமில்லை என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக நீதித்துறை மருத்துவ அதிகாரி ஆலோசகரான வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்து மரணங்களுக்கும் பிரேத பரிசோதனை பிசிஆர் செய்வதன் விளைவாக இறந்தவர்களின் உறவினர்கள் எதிர்கொண்ட சிரமங்களை கருத்திற்க் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை கடந்த 15ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி நேற்று முதல் அனைத்து மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போது பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நீதித்துறை மருத்துவ அதிகாரியின் விருப்பத்தின் பேரில் பிரேத பரிசோதனையின் போது பிசிஆர் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.