16

16

புதன் கிழமை ரஷ்யப் படையெடுப்பு ஒரு அமெரிக்க – பிரித்தானிய Sexed Up Intelligence செக்ஸ்டப் இன்ரலிஜன்ஸ்

எங்களுடைய சாத்திரிகளையும் மிஞ்சிய அமெரிக்க – பிரித்தானிய உளவுப் பிரவுகள் இன்று புதன் கிழமை பெப்ரவரி 16 சுக்கிரன் உக்ரைனில் நிற்கும் என்றும் சனி பகவான் ஏழு அரையின் உச்சத்திற்கு வரும் என்றும் அதனால் ரஷ்யா படையெடுக்கும் என்றும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்திருந்தனர். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தங்களது படையணிகளை ரஷ்யாவை நோக்கி நகர்த்தி இருந்தனர். லண்டனிலும் நியூயோர்க்கிலும் இராஜதத்திரிகள் மத்தியில் ஒரே அல்லோல கல்லோலம். ஆமெரிக்க மற்றும் மேற்கு நாட்டு தூதரகங்கள் தங்களுடைய மக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறும் யுத்தம் ஆரம்பித்தால் விசேட விமானங்களை அனுப்பியெல்லாம் காப்பாற்ற முடியாது என்று சர்வதேச பதட்டத்தையே ஏற்படுத்தி இருந்தன. மேற்கு நாட்டு ஊடகங்களில் யுத்தம் வெடிக்கப் போகின்றது, இதோ ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழையப் போகின்றன என்ற பாணியில் செய்திகளுக்கு தயாராக இருந்தனர்.

தாங்களும் ஒரு சமநிலையில் நின்று செய்திகளை வழங்குகின்றோம் என்பதைக் காட்ட மேற்கு ஊடகங்கள் ரஷ்ய உத்தியோகபூர்வ பிரதிநிதி ஒருவரையும் அழைத்து “நீங்கள் புதன் கிழமை உக்ரைனுக்கு படையெடுக்கப் போகின்றீர்களா? நேட்டோ படையணிகள் ஆயத தளபாடங்களை குவிப்பதால் பின் வாங்குவீர்களா?” என்று கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஷ்ய பிரதிநிதிகள், “நாங்கள் ஒரு போதும் படையெடுப்பது பற்றி பேசவே இல்லையே. இது அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் பிரச்சாரமே அல்லாமல் வேறொன்றுமில்லை” என்று பதிலளித்தனர். ரஷ்ய பிரதிநிதியின் கூற்றைப் பிரதிபலிப்பது போல் மேற்கு நாட்டு ஊடகங்களே உக்ரைனில் மக்கள் எந்தவொரு யுத்தப் பதட்டமும் இல்லாமல் வழமைபோல் தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடுபட்டு இருந்தனர் என்று செய்திகளை வெளியிடுகின்றன.

படையெடுப்பிற்கு தயாராகி விட்டதாக சொல்லப்பட்ட ரஷ்யாவிலும் பதட்டமில்லை. யுத்தம் நடந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்த்த உக்ரைனிலும் பதட்டமில்லை. ஆனால் நியூயோர்க்கிலும் லண்டனிலும் மட்டும் பெரும் பதட்டம். அதிஸ்ரவசமாக பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் ஜனாதிபதி ஜோ பைடனதும் கதையைக் கேட்டு லண்டனில் மக்கள் ரோய்லற் ரோலை வாங்கிக் குவிக்கவோ அல்லது பெற்றோல் ராங்குகளை நிரப்பவோ முற்படவில்லை.

“சதாம் ஹூசைனிடம் பேரழிவு ஆயதங்கள் இருக்கின்றது. சதாம் ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் டமார் என்று லண்டனிலும் நியோர்க்கிலும் பேரிழவுக் குண்டுகள் வெடிக்கும் என்று 2003 இல் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ஒரு மெகா ரீல் விட்டார். அதன் விளைவால் ஈராக் யுத்தம் தொடங்கி 500,000 பேர் வரை கொல்லப்பட்டு இன்றும் யுத்தம் வேறு வடிவில் தொடர்கிறது. ஜோர்ஜ் புஸ்ஸிற்கு தன்னுடைய இருப்பை தக்க வைக்க ஒரு யுத்தம் தேவைப்பட்டது. அதற்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போட பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ரெடியானார்.

அதற்குப் பின் டேவிட் கமரூன் லிபியாவுக்குள் மூக்கை நுழைத்தார், சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தார். அந்நாடுகளை சின்னா பின்னமாக்கி இப்போது உக்ரைனில் வந்து நிற்கின்றனர்.

தன்னுடைய வீட்டு சுவருக்கு பெயின்ற் அடித்த கணக்கில் இருந்து தப்பவும் கோவிட் காலத்தில் சனங்கள் சாக இங்கால் குடித்து கும்மாளம் அடித்த கதையை மறைக்கவும் உக்ரைனில் இரத்த ஆறு ஓட வேண்டும் என்று நினைக்கின்றார் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன். அவர் மட்டுமல்ல ஜோ பைடனுக்கும் ரேற்றிங் ரொம்ப படான்.

கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மேற்கு நாடுகளில் விலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 7.5 வீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் இன்றைய கணிப்பின்படி 5.5 வீதம் விலைவாசி உயர்ந்துள்ளது. வரும் ஏப்ரலில் இது 7.5 வீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை ஈடுகட்டும் அளவுக்கு சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை. அது மட்டுமல்லாமல் சம்பளங்களை கூட்டிக் கேட்க வேண்டாம் என பாங்க் ஒப் இங்லன்ட் கவர்னர் அன்ரூ பெய்லி தொழிலாளர்களைக் கேட்டுள்ளார். அதிகரிக்கும் விவாசியோடு ஒப்பிட்டால் குடும்ப வருமானம் இரண்டு வீதத்தால் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்படுகின்றது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு குறிப்பாக எரிபொருட்கள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. மறுபக்கம் குடும்ப வருமானம் வீழ்ச்சியடைகின்றது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு வட்டிவீதத்தை அதிகரிக்கின்றது. வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுக்கு செலுத்தும் மோட்கேஜ் அதிகரிக்கும். வாடகைக்கு இருப்பவர்களின் வாடகை அதிகரிக்கும். மக்களின் கையிருப்பில் உள்ள பணம் வறண்டு போய்விடும். மக்கள் நெருக்கடிக்கு உள்ளானால் அது அரசுக்கு எதிராகத் திரும்பும். இந்த அபாயநிலை மேற்கில் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு யுத்தம் வந்தால் மக்களின் கவனத்தை திசை திருப்ப முடியும். அதற்கு மேற்குலகிற்கு ஒரு யுத்தம் அவசியமாகின்றது.

அமேரிக்காவும் அதன் நேச நாடுகளும் இன்றும் தாங்கள் உலகைக் கோலோச்ச முடியும் என்ற பழைய நினைப்பிலேயே செயற்பட்டு வருகின்றன. கோவிட் அவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தியதை கண்டுகொள்ளவேயில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் கூட சீனாவில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் தான் வந்தன. மேற்குநாடுகளின் விலைவாசி உயர்வுக்கு மாறாக சீனாவின் விலைவாசி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. அவர்களது விலைவாசி உயர்வு தசம எண்ணிலேயே இருக்கின்றது. அது ஒன்றைக்கூட எட்டவில்லை. அதனால் சீனா மேற்கு நாடுகளுக்கு மாறாக வட்டி வீதத்தை குறைக்க உள்ளது. அந்நாடு கோவிட்டை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி இருப்பதுடன் கோவிட் மரணங்களை முற்றாக இல்லாமல் அல்லது ஒற்றை இலக்கத்துக்குள்ளேயே வைத்துள்ளது. பிரித்தானியாவில் இவ்வளவு வக்சீன் ஏற்றப்பட்டும் மரணங்கள் தினமும் 300 வரை செல்கின்றது. அமெரிகாவில் இதனிலும் அதிகம்.

ரஷ்யா ஒன்றும் பாலும் தேனும் ஓடும் நாடு கிடையாது. ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் ஒன்றும் புனிதரும் அல்ல. ரஷ்யாவுக்கு உக்ரைனில் கண் இருப்பதும் மீண்டும் பரந்த சோவியத் குடியரசை கட்டமைக்கும் கனவு விளாடிமீர் பூட்டினுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இதில் மேற்கு நாடுகள் குளிர்காய முற்படுகின்றனர் என்பது தான் உண்மை.

“பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான கையெழுத்து வேட்டை கட்சி சார்ந்தது அல்ல. அது மக்களுக்கானது.” – சுமந்திரன் !

இன்று நாம் முன்னெடுத்துள்ள, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கையெழுத்து வேட்டை கட்சி சார்ந்து பார்க்காமல், தமிழ் மக்களின் கோரிக்கையாக பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பேருந்து நிலையத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து வேட்டையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி, அனுராதபுரம், காலி உள்ளிட்ட பல இடங்களில் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது தமிழ் மக்களை நசுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டமூலத்தை இல்லாமல் செய்ய வேண்டும். சட்டத்தில் திருத்தம் என்று கூறிக்கொண்டு அவர்கள் சரத்வதேசத்தை திருப்திப்படுத்த பார்க்கின்றனர்.

இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவது நாமே. நாட்டில் பயங்கரவாதம் இல்லை என்று சொல்லி விட்டு ஆட்சிக்கு வந்தவர்கள். ஆனால் இந்த சட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. இதை மக்களோடு மக்களாக வெளிப்படுத்துவோம். – என்றார்.

மத்திய கிழக்கு நாடுகளில் வன்கொடுமைகளை அனுபவிக்கும் பணிப்பெண்களாக சென்ற தமிழ் பெண்கள் !

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை செய்வதற்குச் சென்று கைவிடப்படும் தமிழர்கள் விசேடமாகப் பெண்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் கலாநிதி. இ. ஸ்ரீஞானேஸ்வரன் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்புக்களுக்காகச் செல்லும் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் சார்பாகத் தமக்குப் பல காணொளி முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அவ்வாறு கைவிடப்பட்டுள்ள தமிழர்கள் சார்பாக தாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காகச் செல்லும் தமிழர்களிற் பெரும்பாலானவர்கள் ஆசைவார்த்தைகள் ஊட்டப்பட்டு தமது பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்காகவும் பிள்ளைகளின் எதிர்கால நலன்களுக்காவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் பயண அனுமதி (விசிட்டர் விசா) மூலம் முகவர்களால் கடத்தப்படுவதாகவும் பின்னர் அங்கு வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும் அவ்வாறானவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் கொடுமையானவை.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகப் பயணிக்கும் போது தொழில் ஒப்பந்தம், காப்புறுதி, பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்படும். தவறான வழிகளில் செல்பவர்களுக்கு இவை எதுவும் கிடைக்காது என்பதுடன் கொத்தடிமைகளாக அங்கு நடத்தப்படும் நிலையை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

அவர்களில் பலர் காணாமற் போயுள்ளதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் மிகக் கவலையானவை என மேலும் தெரிவித்த அவர் வன்கொடுமைகளை அனுபவிக்கும் பணிப்பெண்கள் சில நாடுகளின் இலங்கைத் தூதரங்களுக்கு முறையிட்ட போதும் அப் பெண்கள் மீளவும் முகவர்களிடமே கையளிக்கப்பட்டு வேறு இடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு நிர்கதியானவர்கள் மற்றும் காணாமல் போயுள்ளவர்களைத் தேடும் முயற்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படும் என்றும் அவ்வாறானவர்களின் குடும்பங்கள் தம்மைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் நடப்பது என்ன..? – 12 மாதங்களில் 73 குழந்தைகள் மரணம் – தரமிழந்து போகிறதா இலவச வைத்தியம் ?

வவுனியா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 46 குழந்தைகள் உட்பட 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளதுடன், 6 வருடங்களில் வைத்தியசாலையில் மோசமான நிலையை இது வெளிப்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட வினாவிற்கு தற்போது மேற்படிப்புக்காக செல்லும் வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கே.ராகுலனின் பதவி முத்திரையுடன் பெறப்பட்ட தகவலிலேயே இவ் அதிர்ச்சி விபரம் வெளியாகியுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான விபரம் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் கோரப்பட்டிருந்தது.

அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு 45 குழந்தைகளும், 2016 ஆம் ஆண்டு 47 குழந்தைகளும், 2017 ஆம் ஆண்டு 45 குழந்தைகளும், 2018 ஆம் ஆண்டு 58 குழந்தைகளும், 2019 ஆம் ஆண்டு 52 குழந்தைகளும், 2020 ஆம் ஆண்டு 48 குழந்தைகளும், 2021 ஆம் ஆண்டு 73 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு குழந்தை பிறக்கும் முன் அல்லது பிறக்கும் போது விடுதி 5 இல் 8 குழந்தைகளும், விடுதி 7 இல் 16 குழந்தைகளும், குழந்தை பிறந்த பின் விடுதி 7 இல் 3 குழந்தைகளும், குழந்தைகளுக்கான விசேட அவசர சிகிச்சைப் பிரிவில் 46 குழந்தைகளுமாக 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 6 வருடங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் அதிகரித்த சிசு மரணமாக இது பதிவாகியுள்ளதுடன், மொத்த சிசு மரணங்களிலும் 2021 ஆம் ஆண்டே அதிக இறப்புக்கள் நிகழ்ந்துள்ளது.

சுகாதார, மருத்துவ துறையானது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையிலும், வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் 73 குழந்தைகள் 12 மாதங்களில் இறந்துள்ளமையானது இலகுவாக கடந்து போக முடியாத ஒரு விடயமாகும்.

அத்துடன் குழந்தை மரணமடைந்தமை தொடர்பில் சிலர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இன்னமும்  சில விடயங்களுள் மக்கள் நம்பிக்கையுடன் பெறுகின்ற ஒரு சேவையாக மருத்துவ சேவை உள்ள நிலையில் இலங்கை சுகாதார அமைச்சு விரைந்து இந்த வைத்தியசாலை தொடர்பிலான விடயங்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. அண்மைக்காலங்களில் வைத்திய மாபியாக்கள் இலங்கையிலும் பெருக்கமடைய ஆரம்பித்திருப்பதை பல இடங்களில் காண முடிகின்றது. இவ்வாறான காலங்களில் இலவச வைத்தியம் தரமிழந்து போவது ஆரோக்கியமானது அல்ல என்பதை வவுனியா வைத்திய சமூகம் கவனத்தில் கொண்டு குறித்த பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வை எட்டுவதுடன் இதற்கான காரணம் தொடர்பிலும் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

“தமிழர்கள் பொருளாதார அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றனர் என ராஜபக்ச அரசாங்கம் தெரிவித்தது பிழையான விடயம்.” – ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்

“சிறிசேனவும்- ரணிலும் பொருத்தமான நிலைமாற்றுக்கால நிகழ்ச்சி நிரலை உருவாக்க முன்வரவில்லை. பாதிக்கப்பட்வர்கள் பொறுப்புக்கூறல் குறித்து ஆர்வத்தை கொண்டிருக்கவில்லை. பொருளாதார அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றனர்.”  என உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீளநிகழாமை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீவ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தென்னாபிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகளிற்கான அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்துடனான எனது அனுபவங்கள் குறித்தும் நான் விசேட அறிக்கையாளராக இருந்தவேளை அரசாங்கங்களுடனான எனது அனுபவம் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசாங்கங்கள் எப்போதும் ஒற்றை கல்லால் உருவானவையில்லை, சிறந்த எண்ணப்பாங்குகளும் ஆழமான எதிர்ப்புணர்வுகளும் கொண்டவை. முன்னைய அரசாங்கத்துடனான ஈடுபாட்டின் போது நான் அதிகம் எதிர்கொண்ட தடை என்னவென்றால் அவர்கள் ஜனாதிபதியும் பிரதமரும் பொருத்தமான நிலைமாற்றுக்கால நிகழ்சிநிரலைஉருவாக்க தயக்கம் கொண்டிருந்தனர்.

அவர்கள் அதனை முழுமையாக ஆதரிக்கவும் இல்லை. அதற்கு எதிராகவும் செயற்படவில்லை. அதனை அப்படியே நடுவானில் விட்டனர் – ஏனையவர்கள் அதனை தாக்ககூடிய இலக்காக மாற்றினார்கள்.

அவர்கள் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் எதனை செய்ததோ அதனையே முன்னைய அரசாங்கத்தின் பிரதமரும் ஜனாதிபதியும் செய்தனர். சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானவை என கருதினார்கள்.

நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான தங்கள் கடப்பாடுகளை நிறைவேற்ற முன்வரவில்லை. இலங்கையில் இன்று நாங்கள் காண்கின்ற விடயங்கள் இதனை விட மோசமானவை என்பதை தெரிவிப்பதில் கவலையடைகின்றேன்.

மார்சில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இலங்கையின் இராஜதந்திரிகள் உலகின் பல பகுதிகளிற்கு சென்று தனது நாடு சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான அனைத்தையும் செய்வதாக நம்பவைக்க –சமாதானப்படுத்த முயல்கின்றனர்.  என்ற செய்திகளை பார்க்கின்றோம். சர்வதேச தலையீடு இல்லாவிட்டால் தங்களிடம் உள்ள குறைந்த வளங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திருக்க முடியும் என தெரிவித்திருப்பதை அறிகின்றோம்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இதனை காணமுடியவில்லை என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். காணாமல்போனவர்களிற்கான அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு சிலர் தயாராகயிருந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் முழுமையான நிகழ்ச்சிதிட்டமொன்றை கொண்டிருக்கவில்லை,தற்போது அதன் நிகழ்ச்சி நிரலிற்கும் பொறுப்புக்கூறலிற்கும் இடையில் சிறிய தொடர்புமில்லை என தெரிவிக்க விரும்புகின்றேன்.

இலங்கையை சரியான திசையில் நகர்த்தும் விடயத்தில் நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகம் மேலும் சிறந்த விதத்தில் செயற்படலாம். இலங்கை நெருக்கடியின் பல்வேறு தருணங்களில் ஐ.நா தலைமையகத்தின் மௌனம் விளங்கப்படுத்த முடியாததாக காணப்பட்டதுடன் எந்த விதத்திலும் பயனுடையதாக காணப்படவில்லை.

அமைப்பு முறை என்பது ஒரு சமூகத்தை மையமாக கொண்டதாக காணப்படும்போது நீதி மற்றும் பாதுகாப்பினை பெறுவது சாத்தியமில்லை என்பதை பெரும்பான்மை சமூகம் விளங்கிக்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புக்கூறல் குறித்து ஆர்வத்தை கொண்டிருக்கவில்லை. பொருளாதார அபிவிருத்தியையே எதிர்பார்க்கின்றனர் என முன்னைய ராஜபக்ச அரசாங்கம் தெரிவித்தது பிழையான விடயம் என்பது நிருபிக்கப்பட்டது. தற்போதும் அந்த கருத்து பிழை. பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான கோரிக்கையை தீவிரமாக கருதவேண்டும்.

எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு !

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. இலங்கை அரசிடம் தீர்வு கோரி கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நாங்கள் போராடி வருகின்றோம்.

இந்த நிலையில் குறித்த நாளன்று மாபெரும் பேரணி ஒன்றினை மேற்கொள்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அன்றைய தினம் கடந்த காலங்களில் நாங்கள் போராட்டங்களை மேற்கொள்கின்றபோது இருந்த ஒத்துழைப்புக்களை போன்று கிராம மட்ட அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், தமிழ் தேசியத்தை நேசிக்கனிறவர்கள், அரசியல்வாதிகள், அரசியலிற்கு அப்பால் நின்று செயற்படுகின்றவர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் இருக்கின்ற அனைத்து தரப்பினரும் இந்த அழைப்பினை ஏற்று குறித்த தினத்தில் இடம்பெறும் மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு ஆதரவினை வழங்க வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.