இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகின்ற போதிலும் எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச தராதரத்திலான முழுமையான நல்லிணக்கம் ஏற்படவில்லை உறுதியான அதிகாரப்பொறிமுறை ஏற்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
கொரிய தலைநகரில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான்கிமூனின் அழைப்பின் பேரில் மைத்திரிபால சிறிசேன இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். அங்கு மேலும் பேசிய அவர்,
இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பான்கி மூன் தன்னாலான அனைத்தையும் செய்தார். நான் சமாதானத்திலும் யுத்தத்தை தவிர்ப்பதிலும் நம்பிக்கை கொண்டவன். எந்த பிறழ்வுகளிற்கும் மோதல் பதிலாக அமையக்கூடாது.
சம்பந்தப்பட்ட தரப்புகள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதும் பொருளாதாரத்தை மீளகட்டியெழுப்புவதுமே அவ்வாறான தருணங்களில் அவசியமான நடவடிக்கை. இதன்காரணமாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லிணக்கத்தின் நான்கு தூண்களை அடிப்படையாக வைத்து இலங்கை நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டது.
சர்வதேச சமூகம் மிகவும் தீவிரமான உடனடி தீர்வாக அமையக்கூடிய நடவடிக்கைகளை எதிர்பார்த்தது – வேண்டுகோள் விடுத்தது. அவைஉயர்ந்த எதிர்பார்ப்புகள் ஆனால் துரதிஸ்டவசமாக எதிர்பார்க்கப்பட்ட வேகம் நல்லிணக்கப்பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் பிரதிபலிக்கவில்லை.
கொரிய தீபகற்பத்தின் மோதல் 70 வருடங்களாக நீடிப்பது. மோதலில் ஈடுபட்ட தரப்பினரின் நலன்கள் குறித்தும் கடந்த காலங்கள் குறித்தும் சமரசம் செய்வது விரைவாக முன்னெடுக்ககூடிய நடவடிக்கையில்லை. காயங்கள் ஆழமானவையாக காணப்படுவதே இதற்கு காரணம்.
எங்கள் மோதல் 2009 இல் முடிவிற்கு வந்தது. 12வருடங்களின் பின்னர் நாங்கள் இன்னமும் உறுதியான அதிகாரப்பொறிமுறையை உருவாக்கவில்லை – எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச தராதரத்திலான நல்லிணக்கம் நிறைவேறவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.