20

20

நீந்துவதால் ஏற்படும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைக்கு நாங்கள் பொறுப்பல்ல – அனர்த்த முகாமைத்துவ நிலையம்

அபாயங்கள் இருந்தபோதிலும் கவனக்குறைவாக நீந்துவதால் ஏற்படும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைக்கு தாம் பொறுப்பல்ல என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான மரணங்களை அனர்த்தமாகக் கருத முடியாது எனவும் அதனால் அந்த மரணங்களுக்கு தமது நிறுவனத்தால் இழப்பீடு வழங்க முடியாது எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட குளிக்கும் இடங்களில் மட்டுமே உயிர் காப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குளிப்பதற்கு பொருத்தமற்ற இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் குடி போதையினாலும் அலட்சியத்தினாலும் மரணிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“என்னை நம்புங்கள். பெருந்தோட்ட மக்களான உங்களை எதிர்க்காலத்தில்  சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்.” – திகாம்பரம் சபதம் !

“என்னை நம்புங்கள். பெருந்தோட்ட மக்களான உங்களை எதிர்க்காலத்தில்  சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்.” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது ஹட்டன் புரூட்ஹில் தோட்டத்தில் ஏழு பேச்சஸ் காணியில் புதியதாக நிர்மானிக்கப்பட்ட 50 வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தலைமையில் நேற்று (19) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,

 

மனிதனுக்கு வீடுகள் கட்டிகொடுத்து தண்ணி இல்லை என்றால் அதில் குடியேற முடியாது. ஆகவே இந்த வேலைத்திட்டம் மிகப்பெரிய வேலைத்திட்டம். இதனை செய்து கொடுத்த போதகர் பெருமாள் நாயகத்திற்கு நன்றி கூற வேண்டும். நான் அரசியலுக்கு வந்ததே மலையக மக்களுக்கு எதாவது செய்து கொடுக்க வேண்டும் என்பதை தவிர நாம் எதுவும்  தேடிக்கொள்வதற்கல்ல. காலம் காலமாக மலையக மக்களை லயத்திலேயே வைத்திருந்த தலைவர்கள் கடந்த 20 வருடத்தில் எனக்கு 2015 ஆண்டு தான் அரசியல் பலம் கிடைத்தது.

கடந்த தேர்தலின் போது தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு எங்கள் மூன்று பேரையும் மக்கள் கொண்டு வந்தார்கள். அவர்களை எங்கள் உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டோம். இன்று நாட்டில் பாரிய பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது மின்சார துண்டிப்பு,மா இல்லை அரிசியில்லை,நாளுக்கு நாள் விலை அதிகரிப்பு.மக்கள் வாழ முடியாத நிலை உலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் கூட அந்தந்த நாடுகள் அந்த மக்களை நன்றாக தான் வைத்துள்ளார்கள்.

ஆனால் நமது நாட்டில் இந்த அரசாங்கம் மக்களை வாட்டி வதைக்கின்றது.அதற்கு காரணம் கொரோன அல்ல என இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே தெரிவிக்கிறார்கள் பொய்யா ஆசை வார்த்தைகளை காட்டி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினை அவர்களுக்கு வாக்களித்த மக்களே இன்று இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கு அதிகமாக பேசுவதற்கு அவசியமில்லை எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தின் கீழ் வரும் அரசாங்கத்தில நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு மலையக தக்களுக்கும் கட்டாயம் நல்லது நடக்கும் .அதில் ; மீண்டும் அமைச்சுப்பதவியினை பெற்று விட்டுச்சென்ற வேலைகளை தொடர்வோம். வடக்கில் இன்று மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள்.

நாம் ஆயிரம் ரூபாவுக்காக போராடுகிறோம். ஆயிரம் ரூபா ஒரு பிரச்சினையல்ல இங்குள்ள தொழிற்சங்கங்கள் தாத்தா பேரன் கொள்ளுபேரன் வந்து இந்த கூட்டு ஒப்பந்தத்தை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னை பொறுத்த வரையில் மலையக மக்களை கடந்த அரசாங்கத்தில் சிறு தோட்ட உரிமையாளர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன் அரசாங்கம் தோல்வி கண்டதனால் செய்ய முடியாது போய்விட்டது.

என்னை நம்புங்கள் காலி மாத்தறை பகுதியில் தோட்டங்களை பிரித்து கொடுத்து எவ்வாறு சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றினார்களோ அதே போன்று எதிர்க்காலத்தில் உங்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன். கடந்த காலங்களில் உங்களுக்கு தெரியும் இரண்டு இலட்சம், நாலு லட்சம் மக்கள் தொகைக்கு இரண்டு பிரதேசசபைகள் தான் இருந்தன அதனை நான் அதிகரித்து கொடுத்தேன். வீடு கட்டிக்கொடுத்து அதற்கு அசல் ஒப்பனையினையும் பெற்றுக்கொடுத்தேன். இதனை வைத்து நீங்கள் வங்கி கடனை கூட பெற்றுக்கொள்ளலாம் ஆகவே எதிர்காலத்தில் வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் சரி நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று மக்களுக்கு சிறந்த சேவையினை ஆற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், ராம், உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம் !

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் வேகமாக பரவியது. அங்கு உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் பரவியதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது.

சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்க பிரதமர் போரிஸ் ஜோன்சன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தனிமைப்படுத்துதல் விதிகள் போன்ற மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா திடீரென மறைந்துவிடாது. இந்த வைரசுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் தொடர்ந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கிய ஒரே பரிசு கொரோனா தான் – ஐக்கிய மக்கள் சக்தி தாக்கு !

அரசாங்கத்தினால் அனைத்து நபர்களுக்கும் இலவசமாக வழங்கும் பரிசாக கொரோனா தொற்று மாற்றமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாளாந்தம் எடுக்கப்படும் தேவையற்ற தீர்மானங்களினால், பல உயிர்கள் காவுக்கொள்ளப்படுகிறது. அரசாங்கத்தின் இயலாமை காரணமாகவே, இன்று ஆயிரக்கணக்கான உயிர்கள் இல்லாது போயுள்ளன.

நாட்டில் முதலாவது அலை ஏற்படும் போது விமான நிலையத்தை உரிய நேரத்தில் மூடவில்லை. உரிய தடுப்பூசிகளை செலுத்தாது, தம்மிக்க பாணிக்கு பின்னால் அரசாங்கம் சென்றுள்ளது. அத்துடன், மினுவங்கொட பகுதியில் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படும் போது, கம்பஹா மாவட்டத்தை மாத்திரம் மூடாதிருந்தமையினால், நாடு முழுவதும் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேறு நபருடன் இருந்த மனைவி மீது தீ வைத்த கணவன் – ஒருவர் பலி !

வேறு நபருடன் மனைவி உறங்கிக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் பெற்றோல் ஊற்றிய தீ வைத்த சம்பவம் ஒன்று பாணமுரே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த கள்ள கணவர் என கூறப்படும் நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது மனைவி தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எம்பிலிப்பிட்டிய, பாணமுரே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதான நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர், பின்னவல பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று (19) காலை வீட்டுக்கு வந்த கணவரே இவ்வாறு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிவலிங்கம் தென்பட்ட குருந்தூர்மலையில் புத்த சமயத்தை திணிக்கும் முகமாக 75 வீதமான விகாரை கட்டுமான பணி நிறைவு !

“எங்களுடைய மத அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. எங்களுடைய மொழி உரிமை பறிக்கப்படுகின்றது. எங்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இப்படியாக, தமிழர்களுடைய வாழ்வாதாரம்  சகலதும் பறிக்கப்படுகின்றது.” என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – குமுழமுனை குருந்தூர்மலை விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை சம்மந்தமாக எங்களுடைய சைவ அடையாளங்கள், யாவும் அழிக்கப்பட்டிருப்பதை ஏற்கனவே 27.01.2021 ஆம் ஆண்டு அங்கு நானும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் மற்றும் சிறீதரன் ஆகியோர் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்ட போது எங்களால் காணக்கூடியதாக இருந்தது. உடனடியாக அன்றே நான் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துவிட்டு காவற்துறையினர் கேட்டு கொண்டதற்கிணங்க 29.01.2021 அன்று அந்த இடத்துக்கு காவற்துறையினரை அழைத்து சென்று எங்களுடைய சைவ அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதனை காண்பித்திருந்தேன்.

அந்த நேரம் புத்த விகாரை அந்த இடத்திற்கு அருகாமையில் இல்லை. தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வு நடவடிக்கைக்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆய்வு செய்ய போவதாகத்தான் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் என்று கூறப்படும் நாள் அன்று  04.02.2022 ஆம் ஆண்டு அங்கே சென்ற போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் என்று சொல்லப்படும் நாளன்று சுதந்திரம் இல்லை என்ற நிலையில் எங்களுடைய மத அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. எங்களுடைய மொழி உரிமை பறிக்கப்படுகின்றது. எங்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இப்படியாக, தமிழர்களுடைய வாழ்வாதாரம்  சகலதும் பறிக்கப்படுகின்றது. இவற்றை வெளிக்கொண்டு வரும் முகமாக நாங்கள் சென்றோம்.  இது சம்பந்தமாக ஒரு ஊடக அறிக்கையை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான, எம்.ஏ சுமந்திரன் 3ஆம் திகதி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

 

அதன்படி நாங்கள் 4ஆம் திகதி நூறு பேரளவில் அங்கு சென்று பார்வையிட்ட போது அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தோம். தாது கோபுரம் அதாவது விகாரை என்று சொல்லப்படும் அந்த தாது கோபுரம் முக்கால்வாசி அளவில் 75 வீதமான அளவு அது கட்டி முடிக்கப்பட்டிருந்தது.ஏற்கனவே நாங்கள் பார்க்கப்போகும் போது அந்த இடத்தில் ஒன்றுமே இல்லை. ஆனால் அதன் பின்னர் அந்த அடையாளங்கள் தோண்டி பார்க்கப்பட்ட போது எட்டுமுக சிவலிங்கம் அங்கே வெளிப்பட்டதாக, ஊடகங்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.

அப்படியாக சைவ அடையாளங்கள், வெளிப்பட்ட இடத்தில் இன்று தாது கோபுரம்  என்று கூறி புத்த சமயத்தை திணிக்கும் முகமாக 75 வீதமான கட்டுமான பணியை செய்திருக்கின்றார்கள். அதுவும் பழைய செங்கற்களாலான கட்டிடங்களாக தாது கோபுரம் அமைக்கப்பட்டு வருகின்றன.  சிலவேளை பழைய கற்களால் அப்போதே கட்டப்பட்டு இருந்தது என காட்டுவதற்காகவோ தெரியாது. புத்த சமயத்தை திணிக்கும் நோக்கத்தோடு தொல்லியல் திணைக்களம் ஈடுபடுகின்றதா? தொல்லியல் திணைக்களம் என்பது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பே ஒழிய அதற்கு நாங்களும் மறுப்பில்லை.ஆனால் ஆய்வு என்ற போர்வையில் தொல்லியல் திணைக்களத்தினர் அங்கே கட்டுமான பணி மேற்கொள்வதை நாங்கள்  காணக்கூடியதாக இருந்தது.

இருந்தாலும் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் சட்டத்தரணியாக இருப்பதால் அவர் ஊடாக இதற்கான வழக்கு கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.கடந்த எட்டாம் திகதி அந்த வழக்கு நடைபெற்றது. கொவிட்- 19 நடவடிக்கை காரணமாக நாங்கள் செல்லவில்லை. அடுத்த தவணைக்கு நாங்களும் செல்வோம்.  அந்த வழக்கில் ஏற்கனவே எங்களுடைய மத நடவடிக்கைகளுக்கு தாங்கள் இடையூறு விளைவிக்கவில்லை என்றும், அதே நேரம் அவர்கள்  காட்டிய படங்களில் இவ்வளவு பெரிய ஒரு கட்டுமான பணி புத்த விகாரைக்காக நடைபெறுவதும் இல்லை என்பதையும் சுமந்திரன்   தெளிவுபடுத்தினார்.

இது சம்பந்தமாக சத்தியக்கடதாசி மூலம் இணைப்பு செய்து நிச்சயமாக அடுத்த தவணைக்கு எங்களுடைய  மத வழிபாடுகள் சம்பந்தமாகவும் அங்கே தொல்லியல் திணைக்களத்தின், ஆலோசனையோ அல்லது அனுசரணையோடு பௌத்த மதம் அங்கே வியாபித்திருப்பதையும் நிச்சயமாக உச்சநீதிமன்றத்திலே சமர்ப்பிக்க உள்ளார்.
நாங்கள் 4 ஆம் திகதி சென்றுவிட்டு வந்த பின், 5 ஆம் திகதி இரவு சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தபிக்குகளும், இரண்டு அமைச்சர்களும் அவ் இடத்துக்கு சென்று புத்த விகாரைக்கு முன்னால் பிரித்தோதல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அதன் பின்னர் இரவு இரவாக வந்து வட்டுவாகலில் உள்ள கோத்தபாய கடற்படை முகாமில் இருந்துவிட்டு சென்றதாகவும், ஊடகங்களின் ஊடாக அறிய கூடியதாக இருந்தது.

நாங்கள் போய் ஒரு தடவை பார்வையிட அவர்கள் வந்து திரும்ப பார்வையிடும் நடவடிக்கையாக இது காணக்கூடியதாக இருக்கின்றது. ஏற்கனவே எங்களுடைய சமய அடையாளங்கள், இருந்த இடங்களை மறைத்து அதாவது, நாங்கள் கற்பூரம் கொளுத்தி சூலம் இருந்த இடம் அழிக்கப்படவில்லை. ஆனால் சூலம் யாவும் சிவனுடைய அடையாளங்கள் யாவும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தன. அப்படியான இடங்களுக்கு அப்பால் கிட்டத்தட்ட ஒரு முப்பது மீற்றர் தூரத்துக்கு அப்பால் இப்படியான ஒரு விகாரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை நாங்கள் உச்ச நீதிமன்றத்திலே நிச்சயமாக எங்கள் சார்பாக அது தெரிவிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

“பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது.” – முன்னாள் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் !

பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னித் தொகுதி தலைவருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

 

வவுனியாவில்  நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருந்த கஸ்டமான ஒரு நிலையில் பயங்கரவாத சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் பயங்கரவாதத்திற்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாயின் அந்த சட்டத்தை நாங்கள் முற்றாக நீக்க வேண்டும். எனினும், 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கியது. உதிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. ஆகவே பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் சட்டங்கள் இருப்பது பிரச்சனையல்ல.

ஆனால் அந்த சட்டங்கள் சாதாரண மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஆகையினால் அந்த சட்டத்தை சீர்திருத்தி நாட்டின் இறைமையை சரியான விதத்தில் பாதுகாத்துக் கொண்டு, இலங்கையில் மத ரீதியான, இன ரீதியான பயங்கரவாதம் இருக்குமாயின் அதற்கு எதிராக அதனை பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு சமாந்தரமாக இருக்கின்ற சர்வதேச சட்டங்களை பரிசீலித்து இலங்கையின் பாதுகாப்புக்கும், மக்களின் பாதுகப்புக்கும் ஏற்ற வகையில் பயங்கரவாத சட்டத்தை அமைக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தாகவுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஐந்தாவது ரி20 போட்டி – இலங்கைக்கு ஆறுதல் வெற்றி !

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் மெத்திவ் வேட் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை விக்கெட்களை வீழ்த்தினர்.

இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். அணித்தலைவர் தசுன் சானக 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் கேன் ரிச்சட்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, அவுஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் ​​தொட​ரை ​கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை !

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு எதிர்வரும் மாநகர சபை அமர்வில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும் தமிழீழ விடுதலை  உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

இலங்கை   தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப்  போராட்டத்தின் ஓரங்கமாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)   நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

“பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக இன்று  அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு உள்ளிட்ட  பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

இதில் குறித்த தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஒவ்வொருவரும் தத்தமது  கையொப்பங்களை இட்டு  இப்போராட்டத்தில் இணைந்து கொண்டு உங்களினதும்  உங்கள் சந்ததியின் பாதுகாப்புக்காகவும் பாடுபட முன்வர வேண்டும். இந்த நாட்டில் கொடூரமான தடைச்சட்டமாக பயங்கரவாத தடைச்சட்டம் இருப்பதை நாம் அறிவோம்.அந்த வகையில் தற்போது இலங்கை   தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டமானது மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே  இந்த சட்டத்தை முற்றாக எமது நாட்டில் இருந்து அகற்றுவதற்கு தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் அனைவரும் முன்வர வேண்டும்.அத்துடன் நாம் அங்கம் வகிக்கின்ற கல்முனை மாநகர  சபையில் கூட எதிர்வரும் மாதாந்த அமர்வில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு   பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளோம்.

எமது மாநகர சபைக்கு தமிழர்கள் தரப்பில் தார்மீக ஆதரவினை வழங்கி வருகின்றோம்.அந்த வகையில் முழு மாநகர உறுப்பினர்களும் இப்பிரேரணைக்கு தத்தமது ஆதரவினை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

“யுத்தத்தின் போது நாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுக்கவில்லை.” – அமைச்சர் சரத் வீரசேகர

“அனைவரும் நாங்கள் எந்த யுத்த குற்றங்களையும் இழைக்கவில்லை என உறுதியாக தெரிவித்தும் கூட  அப்படியான சூழ்நிலையில் ஏன் சில நாடுகள் எங்கள் யுத்த வெற்றி வீரர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையிலிருந்தே ஆரம்பமாகின. இந்த அறிக்கை எங்களிற்கு எதிராக யுத்த குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் ,சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியமை தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நான் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு தனியாக சென்று அந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தேன்.

உதாரணத்திற்கு யுத்தத்தின் போது நாங்கள் திட்டமிட்டு வடபகுதிக்கான உதவிப்பொருட்களை தடுத்தோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது தவறானது. நான் அவ்வேளை கடற்படையிலிருந்தேன். வடபகுதிக்கு உதவிப்பொருட்களுடன் நூற்றுக்கணக்கான கப்பல்கள் சென்றன.
ஐ.நா உட்பட சர்வதேச சமூகம் இலங்கையை இதற்காக பாராட்டின.

முல்லைத்தீவு அரசாங்கஅதிபராகயிருந்த இமெல்டா சுகுமார் ஒருமுறை மூன்று மாதங்களிற்கு அவசியமான உணவுப்பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார். இப்படியிருந்த போதிலும் மங்களசமரவீர யுத்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். புரணகம ஆணைக்குழுவுடன் ஆறு சர்வதேச அளவில் பெயர் பெற்ற யுத்த குற்ற நிபுணர்கள் இணைந்து செயற்பட்டனர். அவர்கள் அனைவரும் நாங்கள் எந்த யுத்த குற்றங்களையும் இழைக்கவில்லை என உறுதியாக தெரிவித்தனர். அப்படியான சூழ்நிலையில் ஏன் சில நாடுகள் எங்கள் யுத்த வெற்றி வீரர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

அமைச்சர் ஜிஎல்பீரிஸ் சிறப்பாக செயற்படுகின்றார். பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுபவர்களை காப்பாற்ற சட்டங்களை தேவைப்பட்டால் திருத்துவேன் என தெரோசா மே தெரிவித்தார். அவர் அவ்வளவு தூரம் சென்றார் ஆனால் ஏன் எங்களிற்கு இதனை செய்கின்றனர். இவை அனைத்தும் போலியான பிழையான திட்டங்கள் நாங்கள் இவற்றை சவாலிற்கு உட்படுத்தவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.