05

05

“சீன இந்திய பிரச்சினையில் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆதரவாக செயல்படுவோம்.” – அமெரிக்கா அறிவிப்பு !

“இந்திய-சீன எல்லை பிரச்சினையை பொறுத்தவரை, நாங்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதையும், அமைதி தீர்வு காண்பதையும் தொடர்ந்து ஆதரிப்போம்.” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் ஊடகங்களுக்கு தெரிவித்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்இ. மேலும் பேசிய அவர்,

சீனா தனது அண்டை நாடுகளை ஆக்கிரமித்து வருவது குறித்து முன்பு எங்கள் கவலைகளை தெரிவித்தோம். எப்போதும்போல் எங்கள் நண்பர்களுக்கு ஆதரவாக இருப்போம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் வளமை, பாதுகாப்பு கருதி, எங்கள் நட்பு நாடான இந்தியாவுக்கு துணை நிற்போம்.

சீனா, பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது. அதற்கு ஒலிம்பிக் தீபம் ஏந்திச்செல்ல குய் பபோவா என்ற ராணுவ அதிகாரியை தேர்ந்தெடுத்துள்ளது. அவர், கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்திய சீன ராணுவ படைப்பிரிவின் அதிகாரியாக இருந்தவர். அதனால் அவரை தேர்வு செய்ததற்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 2 பேர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மார்கோ ருபியோ என்ற செனட் உறுப்பினர் கூறியதாவது:-

பீஜிங் ஒலிம்பிக் போட்டியை சீனா அரசியல் ஆக்குவதை நிரூபிக்க மற்றொரு உதாரணம் கிடைத்துள்ளது. இந்திய படைகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரியை தேர்வு செய்திருப்பது வேதனை அளிக்கிறது. திட்டமிட்டே ஆத்திரத்தை தூண்டுவதாக உள்ளது. இதில் இந்தியாவுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ஜிம் ரிஸ்ச் என்ற செனட் உறுப்பினர் கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டவரை ஒலிம்பிக் தீபம் ஏந்த சீனா தேர்வு செய்திருப்பது வெட்கக்கேடானது. உய்குர் இனத்தினருக்கு எதிராக சீனா இனப்படுகொலை செய்து வருகிறது. அவர்களின் விடுதலைக்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும் ஆதரவாக அமெரிக்கா செயல்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.

“போலியான செயற்பாடுகளால் சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை அரசு.”- கஜேந்திரன் சாடல் !

“அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் வருகின்ற நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.”என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ் அரசியல் கைதிகள் 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடுகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கத் தரப்பு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் வருகின்ற நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச நியமங்களுக்கு முரணாக மோசமான சட்டம் என்பதை ஐநா மனித உரிமை பேரவை உட்பட பல்வேறுபட்ட சர்வதேச சமூக அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான பல்வேறுபட்ட விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளன.

நாங்கள் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம்.இத்தகைய நிலையில் அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தாங்கள் இதனை மாற்றி அமைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்கள்.

ஆனால் இன்று வரை அந்த சட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. எங்களுடைய நிலைப்பாடு இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். இந்த சட்டம் முழுமையாக நீக்கப்படும் போது அதன் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை மாற்றி அமைக்கிறோமெனக் கூறிக்கொண்டு பலவித ஏமாற்று வித்தைகளை செய்துவருகின்றது.

குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் 16 அரசியல் கைதிகளை விடுவித்துள்ளார்கள். விடுவிக்கப்பட்டவர்கள் ஆறு மற்றும் எட்டு மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட வேண்டியவர்களைத் தான் இந்த அரசாங்கம் விடுவித்தது. மாறாக நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர்கள் நெருங்கி வருகின்ற வேளையில் புலிகளை மீளுருவாக்க முயற்சித்தார்கள், சமூக வலைத்தளங்களில் பிரபாகரனின் படத்தை காண்பித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சுமார் 100 பேர் வரை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து விட்டு அரசியல் கைதிகளை விடுவித்தது போன்று போலியான முகத்தை காண்பிப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சர்வதேச சமூகம் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையான கண்காணிப்பை செய்ய வேண்டும். சிறைச்சாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அங்கங்கவீனர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்கள் உள்ள நிலையில் இவர்கள் உள ரீதியாக தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்களை விடுவிப்பதற்கும் அனைத்து அரசியல்கைதிகளையும் விடுவிப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி தொடர்பில் இலங்கை அரசின் அதிரடி அறிவிப்பு !

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் என்ற அறிவிப்பினை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது.

தடுப்பூசி செலுத்தாதவர்களை பொது இடங்களுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் முழுமையான தடுப்பூசி குறித்த வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ ´ஹபாயா´ சர்ச்சை – சுயலாப அரசியலுக்காக பிரச்சினையாக்காதீர்கள்.” – இரா.சாணக்கியன்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இரா.சாணக்கியனின் பெயரை பயன்படுத்தி குறித்த விடயம் தொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இன்று (05) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ´ஹபாயா´ சர்ச்சை பற்றிய உண்மைத்தன்மை குறித்து சரிவர தெரியாமையினாலேயே நான் அதுகுறித்து இதுவரை பேசாமல் இருந்தேன்.

எனினும் எனது பெயரினை பயன்படுத்தி சில விசமிகள் இனங்களுக்கிடையில் பிரிவினையினை வெளியிடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன்காரணமாகவே நான் தற்போது இதுகுறித்து சில கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன்.

இது குறித்து சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், பெரும் சர்ச்சையாகியுள்ள ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரத்தினை சுயலாப அரசியலுக்காக பயன்படுத்துவதனை கைவிட வேண்டும்.

இவ்வாறான பிரச்சனைகள் இரு சமூக இணைப்பாட்டுடன் தீர விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.’ எனத்தெரித்துள்ளார்.

மோசமடைந்து வரும் மனித மனநிலை – இரும்பினால் தந்தையை தாக்கி கொலை செய்த மகன் !

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த தந்தையின் சடலத்தினை இராகலை பொலிஸார் இன்று (05) காலை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 62 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான சுப்பிரமணியம் செல்வநாயகம் எனவும் இராகலை டெல்மார் மேல் பிரிவைச் சேர்ந்தவர் என கண்டரியப்பட்டுள்ளது. நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் மகன் தந்தையினை இரும்பு ஒன்றினால் தாக்கியுள்ளார் தாக்குதலுக்கு இலக்கான தந்தையின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து அதிக இரத்த போக்கு காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதவானின் விசாரணைக்கு பின் சடலத்தை சட்டவைத்தியர் ஊடாக பிரேத பரிசோதணைக்கு உட்படுத்த நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனை கைது செய்துள்ள இராகலை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராகலை பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“அரசியல் கைதிகளைவிடுவிக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நாம் முயற்சி எடுத்துள்ளோம்.” – கே. கே. மஸ்தான்

பல அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நாம் முயற்சி எடுத்துள்ளோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு அபிவிருத்தி குழு தலைவருமான கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.

இன்று (05) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் கொரோனா தொற்று இருந்தாலும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக கிராம சேவகர் ரீதியில் 30 இலட்சம் மற்றும் வட்டார ரீதியில் 40 இலட்சம் எனவும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு 100 கோடி என நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 100 வீதம் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காக செலவு செய்யக்கூடியதாக உள்ளது. ஏனைய வேலைத்திட்டங்களுக்கு 40 வீதமளவில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு பெரும் விமர்சனம் வந்த போதிலும் நாம் குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

வவுனியாவில் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அது தொய்வு நிலையில் காணப்பட்டது. எனினும் பின்நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கதைத்து விரைவாக எமது மாவட்ட மக்களுக்கான கல்வி வளத்தினை நான் உருவாக்கியுள்ளேன் என்பதனையிட்டு நான் பெருமையடைகின்றேன். இதேபோல் ஓமந்தையில் உள்ள அரச வீட்டுத்திட்டத்திற்கான காணி ஆவணங்கள் அவர்களுக்கு கிடைக்காத நிலை காணப்பட்டது. அவர்கள் வீடுகளை அமைத்து வசிக்கின்ற போதிலும் காணி ஆவணம் இல்லாத நிலையில் அமைச்சருடன் கதைத்து தற்போது அமைச்சரவை பத்திரம் போட்டு மிக விரைவில் ஆவணங்கள் வழங்கப்பட்டவுள்ளது.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இரண்டு வருடங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை என அரசாங்கம் கொள்கையாக கொண்டுள்ளது. எனினும் நாம் இங்குள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுடன் கதைத்து எமது பகுதியில் பாடசாலைகளில் வகுப்பறை கட்டிடம் குறைவு என்பதனால் அதனை அமைப்பற்காக மூன்று பாடசாலைகளில் 50 மில்லியன் பெறுமதியான கட்டிட வேலைகள் இடம்பெறுகின்றது. அத்துடன் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக கல்வி வளர்ச்சிக்காக பாடசாலைகளில் பல கட்டிட பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

நல்லாட்சி காலத்தில் எத்தனை அரசியல் கைதிகளை விடுவித்தார்கள். எனினும் தற்போதைய ஜனாதிபதி பொறுப்பேற்றவுடன் அரசியல் கைதிகளின் விடுதலை இடம்பெற்றுள்ளது. அது மாத்திரமின்றி அரசியல் நோக்கத்திற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விரைவாக விடுதலை செய்வதற்கான முனைப்பினை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் ஜனாதிபதியுடன் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் பேசி தொடர் முயற்சிகளை எடுத்துள்ளோம்.

அத்துடன் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் அவ்வப்போது விளக்கம் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்யலாம் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றோம். இந்தியாவில் இருந்து வரும் மீனவர்கள் எமது மீனவர்கள் பாதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர். எனவே இரண்டு நாடுகளுக்கிடையில் முரண்பாடு வராத வகையில் ஒரே மொழி பேசும் சமூகம் என்பதனை உணர்ந்து இந்தியாவில் இருந்து வரும் மீன்வர்கள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்காத வகையில் அவர்களது எல்லையில் இருந்து மீன்களை பிடிக்க வேண்டும் என்பதனை ஒரு கோரிக்கையாக வைக்கின்றேன் என தெரிவித்தார்.

கறுப்புச்சந்தை டொலரால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் !

கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறித்து இலங்கையில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களும் சர்வதேச அமைப்புகளும் கரிசனை வெளியிட்டுள்ளன.

இலங்கை அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது சர்வதேசமோதல்கள் குறித்த வழக்காறுகளை மீறும் செயல் அதனுடன் தொடர்புடைய ஏனைய மனித உரிமை பிரகடனங்களை மீறும் நடவடிக்கை என வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளன. நிதியமைச்சர் பேட்டியொன்றின் போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த விமர்சனங்கள் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளன-இந்த அமைப்புகள் நிதியமைச்சர் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து உள்ளக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கறுப்புச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ள தகவலின் தீவிரதன்மை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை நிதியமைச்சரின் கூற்று குறித்து ஆராயப்படலாம் என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சரின் கூற்று சர்வதேச நிதியமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் என தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளாதார விரிவுரையாளர் பிரியங்க டுனுசிங்க நெருக்கடியான தருணத்தில் சர்வதேச நிதியமைப்புகளின் ஆதரவை பெறும் இலங்கையின் முயற்சிகளிற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

“சிங்களவர்களுடன் இணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான ஆவணமொன்றைத் தொகுக்கிறோம்.” – மனோகணேசன்

வடக்கு, கிழக்கு, தெற்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய 12 பேர் இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடி, சிங்களவர்களுடன் இணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஆவணமொன்றைத் தொகுக்க முற்படுபவதாக தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போரின் பின்னரும் சிறுபான்மையினர் மொழிப்பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

காவல் நிலையம், நீதிமன்றம், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது அங்கு பெரும்பாலும் தமிழ்மொழி மூலமான சேவைகளை எம்மால் பெற்றுக்கொள்ளமுடிவதில்லை.

சிறுபான்மையினத் தமிழ்மக்களின் பிரதிநிதி என்றவகையில் பொலிஸ் நிலையத்திற்குச்சென்று, ஓர் அறிக்கையைத் தமிழ்மொழியில் பெற்றுக்கொள்ளவேண்டுமானால், அதற்காகப் பல மணிநேரம் காத்திருக்கவேண்டியுள்ளது.

அதேபோன்று சிறுபான்மையின மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி காணி தொடர்பான பிரச்சினையாகும்.

அத்தோடு வேலைவாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்வதற்காகச் செல்லும்போது, அங்கு சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுவதும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருப்பதும் முக்கிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது இலங்கை ஸ்திரதன்மையற்ற நாடாக மாறிவருகின்றது. இதனைக் கூறுவது வெட்கத்திற்குரிய விடயம் என்றாலும்கூட, இதுவே இன்றைய யதார்த்தமாக இருக்கின்றது.

எதுஎவ்வாறிருப்பினும் நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமையே இத்தகைய ஸ்திரமற்றநிலை உருவாவதற்கான அடிப்படைக்காரணமாகும்.

பொறுப்புள்ள இலங்கையர் என்ற வகையிலும் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியிலும் ஒரு விடயத்தை வலியுறுத்த விரும்புகின்றேன்.

வடக்கு, கிழக்கு, தெற்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய 12 பேர் இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடவுள்ளனர்.

அதனூடாக சிங்கள சகோதர, சகோதரிகளுடன் இணைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஆவணமொன்றைத் தொகுக்க முற்படுகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளை சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாகத் தேசிய பாதுகாப்பைப் பயன்படுத்துவது முக்கியமானதொரு பிரச்சினையாகும். உள்நாட்டுப்போரின்போது அந்தக் கருவி தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்குப் பின்னர் அது முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது.

அதன் விளைவாக சிறுபான்மையின மக்கள் நாளாந்தம் அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர் என்று சட்டத்தரணியும் சமூகசெயற்பாட்டளருமான ஸ்வஸ்திகா அருலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக்குழுவில் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்த கருத்துக்களுக்கு வெளிவிவகார அமைச்சு மறுப்பு !

மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக்குழுவில், நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்த கருத்துக்களுக்கு வெளிவிவகார அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில், இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது, அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல தவறான அறிக்கைகள் குறித்து, வெளிவிவகார அமைச்சு கவலையுடன் குறிப்பிட விரும்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம், பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை, அம்பிகா சற்குணநாதனின் சாட்சியம், முற்றாகப் புறக்கணிக்கிறது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் தமது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என அவர் வழங்கிய பரிந்துரைகளில், அமைச்சு ஏமாற்றம் அடைந்துள்ளது.

இலங்கை போன்ற பல்லின மற்றும் பல மதங்கள் கொண்ட மக்கள் வாழும் நாட்டில், சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு, சர்வதேச சமூகத்தில் இலங்கை குறித்த ஆபத்தான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படல் வேண்டும்.

‘சிங்கள பௌத்த தேசியவாதம்’ மற்றும் ‘இராணுவமயமாக்கல்’ போன்றவற்றை, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உந்துதலாக அம்பிகா சற்குணநாதன் குறிப்பிடுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்த உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், இனம் குறித்த தெளிவற்ற கூற்றுக்களை அவர் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் ‘மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் கோரும் அரசுகளின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக’ சீனாவுடனான தனது நட்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாக அம்பிகா சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்து – பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் மூலோபாயப் போட்டியைக் கவனத்தில் கொண்டு, சுதந்திரத்திற்குப் பின்னர் நாங்கள் ஏற்றுக்கொண்ட அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப, நடுநிலைமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எமது முக்கிய வெளியுறவுக் கொள்கை சார்ந்த நோக்காகும்.

தேசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக, சீனாவைத் தவிர, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகளுடன், இலங்கை கூட்டுறவை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பில், இத்தகைய கூட்டாண்மைகள், எந்தவித தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும், வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன ரீதியாக சமூகங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தை நினைவூட்டுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்தோடு சிங்கள பௌத்த தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சு, நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அடுத்தடுத்து பதவி விலகிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் மூத்த உதவியாளர்கள் !

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள், டவுனிங் ஸ்ட்ரீட்டில் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

கொள்கை திட்ட தலைவர் முனிரா மிர்சா தனது பதவியை இராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே தகவல் தொடர்பு இயக்குனர் ஜெக் டோய்ல் தனது இராஜினாமாவை உறுதிப்படுத்தினார்.

வியாழக்கிழமை, தலைமைப் பணியாளர் டான் ரோசன்ஃபீல்ட் மற்றும் மூத்த சிவில் ஊழியர் மார்ட்டின் ரெனால்ட்ஸ் ஆகியோரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் ஜோன்சன் தனது கட்சிக்குள்ளேயே அவரது தலைமை குறித்து கேள்விகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த உயர்மட்ட உதவியாளர்களின் இந்த இராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

தகவல் தொடர்பு இயக்குனர் ஜெக் டோய்ல், ‘சமீபத்திய வாரங்கள் எனது குடும்ப வாழ்க்கையில் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறினார்.

10ஆம் எண் அலுவலக செய்தித் தொடர்பாளரின் அறிக்கையில், ‘ரோசன்ஃபீல்ட் தனது இராஜினாமாவை வியாழக்கிழமை பிரதமரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவரது இடத்திற்கு இன்னொருவரை நியமிக்கும் வரை அவர் தொடர்ந்து பணியில் இருப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் முதன்மை தனிப்பட்ட செயலாளரான ரெனால்ட்ஸ், பின்னர் வெளியுறவு அலுவலகத்தில் ஒரு பணியை தொடருவார்.