23

23

“சீனா, இலங்கையின் உண்மையான நண்பன்.” – அமைச்சர் விமல் வீரவன்ச

சீனா, இலங்கையின் உண்மையான நண்பனென்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு சீனா எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லையென கூறினார்.

சீனா மற்றும் இலங்கைக்கு வரலாற்று ரீதியாக கலாசார தொடர்புகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யுத்த காலத்தில் அவர்களின் உதவி இல்லையெனில் சர்வதேசத் தடைகளை இலங்கை எதிர்கொண்டிருக்குமென்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

24 மாதங்களில் அரசாங்கம் அச்சடித்த பணத்தின் அளவை பகிரங்கப்படுத்தியது எதிர்க்கட்சி !

இலங்கை அரசாங்கம் கடந்த 24 மாதங்களில் அரசாங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சடித்துள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணம் அச்சடிக்கப்பட்டமையால் நாட்டின் பணவீக்கம்16 வீதமாக அதிகரித்துள்ளதுடன் 25 வீத உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாட்டின் வங்கிக் கட்டமைப்பும் வெகு விரைவில் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை தொடர்ந்து வழங்க தயார்.” – அமெரிக்கா அறிவிப்பு !

உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை தொடர்ந்து வழங்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் சுமார் ஒன்றரை இலட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.

இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது முதல்கட்ட பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

சர்வதேச அளவில் அவசர நிதி பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்விஃப்ட் முறையையும் அமெரிக்கா துண்டித்துள்ளது. இந்தநிலையில், உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை தொடர்ந்து வழங்க தயார்  எனவும், உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல்களில் ஈடுபட்டால் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளில் அரசியல் தலையீடு எதுவுமில்லை.” – நீதி அமைச்சர் அலி சப்ரி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள், எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களை கவனத்தில் எடுத்திருந்தால், இந்தத் தாக்குதலை தடுத்திருக்கலாம். தற்போது இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதேநேரம் தாக்குதல் தொடர்பாக ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்வது விடுதலை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாணவிக்கும் பாடசாலை ஆசிரியருக்கும் காதல் – கடத்தப்பட்ட மாணவி !

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயதுடைய பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

நேற்று (22) பிற்பகல் 2.45 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த குழுவினர் பெண்ணை கடத்திச் சென்றுள்ளதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள 21 வயதுடைய பெண் ஒருவருக்கும், மகழடித்தீவு பாடசாலை ஒன்றில் கற்பித்து வந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் பெண்ணின் வீட்டிற்கு ஆசிரியர் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் ஆசிரியரை திருமணம் முடிப்பதற்கு எதிர்த்து வந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ தினமான நேற்று குறித்த பெண் அரசடித்தீவு பாடசாலையில் உயர் தரப் பரீட்சைக்கு சென்று பரீட்சை எழுதிவிட்டு பாடசாலையில் இருந்து வெளியேறி வீதியில் நடந்து சென்ற போது, முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த ஆசிரியரின் குழுவினர் பெண்ணை இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றி கடத்தி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

“வடக்கு மீனவர் விவகாரம் – ஜனாதிபதியின் இல்லத்தினை முற்றுகையிடுவோம்.” – இரா.சாணக்கியன் எச்சரிக்கை !

வடபகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை பெற்றுத் தரத் தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீனவர்களின் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவாக செயற்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வினைத்திறனாக செயற்பட முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என நான் பலமுறை கூறி வருகின்றேன்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினைத்திறனாக செயற்படாமையினாலேயே இன்று இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான போராட்டம் பூதாகரமாக மாறியுள்ளது. தமிழக மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு உள்ள அனுதாப உணர்வை மாற்றும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. அவர் அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படுவதனை விட்டு விட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு தீர்வைப் பெற்றுத்தர அரசாங்கம் தவறினால் போராட்ட வடிவம் மாற்றம் பெறும். குறிப்பாக ஜனாதிபதி அலுவலகத்தையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் நீதிமன்றத்தை நாடுங்கள் .” – பொதுமக்களுக்கு ரணில் அறிவுறுத்தல் !

அறிவிக்கப்பட்ட கால அட்டவணையை மீறி மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், பொதுமக்களால் இது தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

தற்போது அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

ஆகவே பரீட்சை முடியும் வரை மார்ச் 5 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.

யுத்த காலத்தில் நாங்கள் அனுபவித்த வேதனையை விட யுத்தம் முடிவடைந்த பின் அனுபவிக்கின்ற வேதனை அதிகமாக உள்ளது. !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்துவக்கப்பட்டுள்ள எனது கணவர் குற்றம் செய்திருந்தால் தண்டனை வழங்குங்கள். சந்தேக நபராக சிறையில் காலத்தை வீணடிக்காதீர்கள் என அவரது மனைவி உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் செயலக முன்றலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும் எனது கணவரை 2020ஆம் ஆண்டு விசாரணை என்ற அடிப்படையில் வரவழைத்து கைது செய்தார்கள். பின்னர் விடுதலைப் புலிகள் உருவாக்கம் என காரணம் கூறி எனது கணவரை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர்.

எனது கணவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் தங்கம் பாதுகாப்பு அமைச்சின் உள்ளடக்கப்படுகின்ற சிவில் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றுகின்ற நிலையில் எனது கணவர் தொடர்பான அனைத்து விவரங்கள் தொலைபேசி இலக்கங்கள் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பிடம் இருக்கிறது.

இந் நிலையில் விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் என்ற போர்வையில் சந்தேக நபராக எனது கணவரை தடுத்து வைத்துள்ளனர். விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கப்படுகின்றனர் என்றால் அதை காண்பியுங்கள் பார்ப்போம். 30 வருட வாழ்க்கையில் பத்து வருட வாழ்க்கையில் நான் முன்னாள் போராளியாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியே வந்தேன்.

எங்களுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் யுத்த காலத்தில் நாங்கள் அனுபவித்த வேதனையை விட யுத்தம் முடிவடைந்த பின் அனுபவிக்கின்ற வேதனை அதிகமாக உள்ளது. எனது கணவர் அவ்விதமான குற்றங்களும் செய்யவில்லை என எனக்கு தெரியும் குற்றம் செய்திருந்தால் அவர் செய்த குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்குங்கள்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் எனது கணவர் அழைத்து வருவார் என நம்பிக்கையுடன் பல தடவைகளில் காலையிலிருந்து மாலை வரை காத்திருந்து ஏமாற்றம் அடைந்தேன்.

எனது கணவரை விடுதலை செய்வதற்காக பல இடங்களுக்கு இறங்கினேன் பயனளிக்கவில்லை. எல்லோரும் உணவுப் பொதிகளை தருகிறோம் என்கிறார்கள். எனக்கு எனது கணவர்தான் வேண்டும்.

20 மாதங்களுக்கு மேலாக எனது கணவரை காரணமின்றி தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருக்கின்றது. அவரை விடுவியுங்கள். நீங்கள் வழக்குக்காக அழைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அவரை அழைத்து வருவேன்.ஆகவே, குற்றம் நிரூபிக்கப்படாமல் எனது கணவரை தொடர்ந்தும் சந்தேக நபராக தடுத்து வைக்காமல். விடுதலை செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்

“இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்க்க நாங்கள் தயார்.” – இந்திய அரசாங்கம் அறிவிப்பு !

“இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கையில் முதலீடு செய்ய தயார்.” என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இணையவழி கலந்துரையாடலின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர்இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதி நெருக்கடிக்கு தீர்வை காண்பது தொடர்பில் இருநாடுகளிற்கும் மத்தியில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா கடன் உதவிகளை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிகோருபவர்களை மௌனமாக்க முயல்கிறதா அரசாங்கம்..? – சரத்வீரசேகர பதில் என்ன.?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிகோருபவர்களை அரசாங்கம் மௌனமாக்க முயலவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிகோருபவர்களை அரசாங்கம் மௌனமாக்க முயல்கின்றது என வெளியாகியுள்ள தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அரசாங்கம் இலக்குவைக்கின்றது என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்ற என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜஹ்ரான் ஹாசிமும் அவரது சகாக்களும் தேவாலயங்களில் குண்டுகளை வெடிக்கவைத்ததால் அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் எட்டுசம்பவங்கள் இடம்பெற்றன இந்த சம்பவங்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதைய அரசாங்கத்தை தூண்டியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆண்டவர்கள் தாக்குதலை தடுக்க தவறியபின்னர் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நீதிகோருவது வேடிக்கையான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.