இந்திய பிரபல பாடகி, லதா மங்கேஷ்கர் உடல்நல குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார்.
அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், மீண்டும் மோசமானது.
இந்நிலையில், லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளையும் லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ் மற்றும் மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை – ஆராரோ ஆராரோ – எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் – உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.