08

08

பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிக்க இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கம் உதவி !

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கான ஒரு தொகை வாகனங்கள் மற்றும் உபகரணங்களை, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது.

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாம் கட்ட உதவியாகவே இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வைத்து இன்று (08) முற்பகல், ஜப்பான் தூதுவர் மிசூகொஷி ஹிடெயாக்கி அவர்களினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

லேண்ட் குரூஸர் ரக வாகனங்கள் 28, ப்ராடோ வாகனமொன்று, போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிவதற்கான ஸ்கேனர் இயந்திரத் தொகுதியொன்று உள்ளிட்ட பெறுமதிமிக்க உபகரணங்களே, இவ்வாறு கையளிக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி, 700 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைப் பொலிஸார் மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் சார்பில், பொலிஸ் மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன அவர்களும் அரச பகுப்பாய்வாளர் கௌரி ரமனா அம்மையாரும், இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்களைப் பொறுப்பேற்றனர்.

அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

5 கோடி ரூபாய் நட்டம் தொடர்பான இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் வழக்கால் 2000 கோடி ரூபாய் நட்டமாம் ! – நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு !

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த குற்றச்சாட்டில் அரசாங்கத்திற்கு 2000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது,

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

வழக்கை முன்னெடுப்பதில் சிரமம் இருந்தால் அதனை மீளப்பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றத்தை நகைச்சுவை இடமாக மாற்றக்கூடாது என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிக்கு நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது சதோச நிறுவனத்தின் ஊடக 1400 கெரம்போட்கள் மற்றும் 11000 தாம் போட்களை இறக்குமதி செய்து அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வருடாந்தம் சுமார் 300,000 தொன் பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்யும் இலங்கை !

2020ஆம் ஆண்டு 611 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாஸ்டிக் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் UN COMTRADE தரவுத்தளத்தின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும்  சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட சூழல் ஆர்வலர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. சிங்கராஜ வன வலயத்தால் கையகப்படுத்தப்படவுள்ள ஏனைய காடுகள் மற்றும் சிங்கராஜா வனப்பகுதியை அண்மித்துள்ள சுற்றாடல் பாதிப்புக்குக் காரணமான மனித செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை வருடாந்தம் சுமார் 300,000 தொன் பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்கிறது, அதில் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை சட்டவிரோதமாக சுற்றுச்சூழலில் கொட்டப்படுகிறது.

பெரும்பாலானவை மனிதர்களால் எரிக்கப்பட்டு பாரிய காற்று மாசை ஏற்படுத்துகின்றன.

பாகிஸ்தானில் தங்கம் வென்ற தமிழ் யுவதிக்கு பணப்பரிசு வழங்கி கௌரவித்த சஜித் பிரேமதாஸ !

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்.

தந்தையை இழந்த நிலையில் சாதித்த குறித்த யுவதியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி கௌரவித்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் (08) குறித்த யுவதியை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவர்களுடைய பாரியார் ஜலனி பிரேமதசா ஆகியோர் குறித்த யுவதியை கௌரவித்தோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினுடைய முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவிலிருந்து குறித்த யுவதி கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து யுவதி கௌரவிக்கப்பட்டுள்ளதோடு பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மாதர் சக்தியினூடாக ரூபா 100,000 பணத்தினை இந்துக்காதேவியை ஊக்குவிக்கும் முகமாக வழங்கி வைத்து எதிர்காலத்தில் மேலும் உதவிகளை வழங்க உறுதி வழங்கியுள்ளார்.

காவி மாணவர்களின் மிரட்டலுக்கு நடுவில் ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கிய முஸ்லீம் மாணவி – காணொளி இணைப்பு !

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 6 இஸ்லாமிய மாணவிகள் புர்ஹா (ஹிஜாப்)  அணிந்து வந்ததால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. சமத்துவத்தை நிலைநாட்ட மாணவ மாணவிகள் சீருடை அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவை மீறி அம்மாணவிகள் புர்கா அணிந்து வந்ததாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், புர்கா அணிவது எமது உரிமை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு வெளியே தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனிடையே, இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராகவும் இந்து மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும் கல்லூரி மாணவர்கள் பலர் காவி துண்டை அணிந்துகொண்டு எதிர்வினையாற்றி வருவது மாநிலத்தை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சக மாணவிகள் தங்களது உரிமைக்காக போராடி வரும் சூழலில், மத வன்முறையை தூண்டும் நோக்கில் மாணவர்கள் பலர் காவி சால்வை அணிந்துகொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கத்திக்கொண்டு இஸ்லாமிய மாணவியை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் ஆசிரியர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றிய மாணவர்கள் காவிக் கொடியேற்றும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருக்க, காவி சால்வை அணிந்து அட்டகாசம் செய்யும் மாணவர்களின் வீடியோவும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அம்மாநில முதல்வர் 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளார். மேலும், மாணவர்களும், பெற்றோர்களும் அமைதி காக்க வேண்டி கோரிக்கையும் வைத்துள்ளார்.

பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட வடகொரியாவிடம் இருந்து எப்படி ஆயுதக்கொள்வனவு செய்வீர்கள்…? – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி !

“ஜேர்மனியின் சர்வாதிகாரி ஜிட்லரை போலத்தான் கோட்டபாய ராஜபக்ஷவும் இலங்கையை ஆட்சி செய்கிறார்.” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“இன்று நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம், பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நான் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்தபோது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சில காணொளிகளைப் பார்த்தேன்.

இதில் ஒன்றில், ஹிட்லரைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி செய்ய வேண்டும் என்றுக் கூட ஒருசிலர் கூறியிருந்தனர். உண்மையில், இன்று ஹிட்லரைப் போன்றுதான் ஜனாதிபதி ஆட்சி நடத்தி வருகிறார். ஹிட்லர் தனது கடைசி காலத்தில் ஜேர்மானியர்கள் எத்தனைப் பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார்.

அதேபோன்றுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செயற்பட்டு வருகிறார். ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இன்று நாட்டில் நீதிக்கு என்ன நடந்தது எனும் கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் இன்று பொருளாதார யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி உள்ளிட்ட பொதஜன பெரமுனவினர் தோல்வியடைந்து வருகிறார்கள். எனவே, இனியும் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். கொரோனாவினால் பல உயிர்களை நாம் இழந்துவிட்டோம். இந்த நிலையில் உணவின்றியும் மக்களின் உயிர்களை பறிக்க வேண்டாம் நாம் இவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

நாட்டின் பொருளாதாரத்தை முதலில் உயர்த்த நடவடிக்கை எடுக்கவும். பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாத தரப்பிடம் இந்த நாடு இன்று சிக்குண்டுள்ளது. மலையக மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை மாவை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் கூறியது. ஆனால் அவர்களுக்கு கோதுமை மா கிடைக்கவில்லை என செய்திகளின் ஊடாக நாம் அவதானித்தோம். இவை தான் நாட்டில் நடக்கின.

அத்தோடு, கருப்புப் பணத்தைக் கொண்டு வடகொரியாவிடமிருந்து ஆயுதம் வாங்கியதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். சரியாயின் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.

வடகொரியா என்பது பொருளாதாரத் தடைக்குட்பட்ட நாடாகும். இந்த நாட்டிலிருந்து எவ்வாறு கருப்புப் பணத்தை கொடுத்து ஆயுதம் வாங்க முடியும்? விவசாய அமைச்சரோ பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது யாருடைய பணம்?

விவசாயிகளுக்கு உரத்தை வழங்கியிருந்தால் அவர்கள் சீராக அவர்களின் வாழ்க்கையை கொண்டு சென்றிருப்பார்கள். அதனைவிடுத்து மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இவ்வாறு செய்வது சரியா? இதுதொடர்பாக அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

வடக்கில் இன்று மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக அங்கு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அண்மையில் இந்திய மீனவர்களின் படகு மோதுண்டு இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால், கடற்றொழில் அமைச்சருக்கு இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண முடியாமல் உள்ளது. யாழில் கடலில் இருந்து கண் பார்வைக்கு எட்டியத் தூரத்தில் இந்திய மீனவர்கள் மீட்பிடித்தும் அவர்களை கைது செய்ய முடியாதுள்ளது.

மேலும், உயர்தர பரீட்சை நடக்கும் நிலையில், நாட்டில் மின்சாரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குப்பி விளக்குளை வைத்தே மாணவர்கள் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்பது உறுதியாகிவிட்டது. சுதந்திரத் தினத்தன்று, பல இலட்சம் ரூபாயை செலவழித்து அணிவகுப்புக்களை அரசாங்கம் நடத்தியது.

இது தேவையற்ற ஒன்றாகும். இந்தப் பணத்தை ஓய்வூதியம் பெறுவோருக்கு பகிர்ந்தளித்திருக்கலாம். மக்களின் வரிப்பணத்தால் இவ்வாறு ஆடம்பரமான செயற்பாடுகள் மேற்கொள்வதை நிறுத்தியிருக்கலாம்.

அதேபோல், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களாக 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கென தனியான வாகனங்கள், வாகனங்களுக்கான எரிப்பொருள் என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவர்களோ தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அபிவிருத்தி சார் விடயங்களை கொடுக்கிறார்கள். விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு தான் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு நெருக்கமானவர்களை மகிழ்விக்கவே மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதுதான் இன்று நாட்டின் நிலைமை. அத்தோடு, நாம் சர்வதேசத்துடன் ஒன்றித்து பயணித்தால் மட்டுமே முன்னேற்றகரமான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். நீதியமைச்சர் அலி சப்ரி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் சர்வதேசத்துடன் ஒன்றித்து செயற்பட முடியாது. இதன் ஊடாக ஐ.நா.வுக்கு பதில் வழங்க முடியாது.

யாழிற்கு சென்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று நீதியமைச்சர் கூறியுள்ளார். 2009 இல் இருந்து தாய் மார் போராடுவது இந்த ஒரு இலட்சம் ரூபாய்க்காக அல்ல என்பதை அரசாங்கத்தரப்பினர் புரிந்துக் கொள்ள வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று தான் அவர்கள் கோருகிறார்கள். இது அவர்களின் உரிமையாகும். இதற்கு பதில் வழங்காமல், யாழுக்குச் சென்று ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்துவதால் சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வொன்று கிடைத்துவிடாது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாயின் சரியான முறையில் அதனைக் கையாள வேண்டும். அதேநேரம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட எத்தனை தமிழ்- முஸ்லிம் இளைஞர்கள் இன்னமும் சிறையில் வாடுகிறார்கள்?

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவித்தமையால் சர்வதேசத்தை ஏமாற்றிவிடலாம் என நினைக்கக்கூடாது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்பவர் தனி ஒரு நபர். அவருக்காக பல சட்டத்தரணிகள் வாதாடினார்கள். இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

ஆனால், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவைப் போன்று எத்தனையோ பேர், இன்னமும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் வெளிஉலகிற்கு தெரியாது. இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டமொன்றையும் ஆரம்பித்துள்ளது.

இந்தச் சட்டமானது எதிர்க்காலத்தில் நிச்சயமாக சிங்கள மக்களையும் பாதிக்கும். இதனை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். இன்னும் 6 மாதங்களில் நாட்டில் பஞ்சம் ஏற்படும். இதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைமை வரும்போது அரசாங்கம் அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிச்சயமாக பிரயோகிக்கும்.

பயங்கரவாத் தடைச்சட்டத்திற்கு எதிராக சட்டத்தரணி அம்பிகா சற்குணராஜா கடிதமொன்றை எழுதியவுடன், வெளிவிவகார அமைச்சு அதற்கு எதிரான அறிக்கையொன்றை முன்வைத்துள்ளது. முதலில் இந்த விமர்சனத்தை நேர்மறையாக கையாள வேண்டும். இவ்வாறு செயற்படுவதன் ஊடாக மட்டுமே சர்வதேசத்துடன் நட்புறவுடன் நாம் பயணிக்க முடியும்.

அரசாங்கம் சரியான பாதையில் பயணித்தால் நாமும் அதற்கு ஒத்துழைக்க தயாராகவே இருக்கிறோம். தொல்லியல் இடங்கள் எனும் போர்வையில் எமது காணிகள் அபகரிக்கப்படுகின்றன. நாம் காலம் காலமாக வழிபட்டுவந்த குருந்தூர் மலை அபகரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராகத் தான் நாம் குரல் கொடுக்கிறோம்.

நாம் அரசாங்கத்திடம் கோருவது மிகவும் நியாயமான கோரிக்கைகளாகும். நாம் எந்தக் காரணம் கொண்டும் இன்னொரு நாட்டைக் கோரவில்லை. இலங்கையை பிரித்துத் தர வேண்டும் என்றுக் கோரவில்லை. மாறாக பிரிக்கப்படாத ஒரு நாட்டுக்குள் எமது அடிப்படை உரிமைகளையே நாம் கோருகிறோம். இதனை அரசாங்கம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்

இந்தியாவின் கர்நாடகாவில் தீவிரமைடையும் ஹிஜாப் ஆடை விவகாரம் – கல்லூரி மாணவர்களிடையே காட்டுத்தீயாய் பரவும் மதவாதம் !

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

hijab ban: ஹிஜாப் தடை: ஆதரிக்கும் இஸ்லாமியர்கள்! - midst a big row over the  ban on wearing hijab there are a few muslims who support the ban | Samayam  Tamil

 

இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.

இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனையடுத்து, பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவிகளும் காவி ஷால் அணிந்து ஊர்வலம் சென்றனர்.

ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் நாங்கள் காவி ஷால் அணிந்து தான் கல்லூரிக்கு வருவோம் என்று அவர்கள் கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தாவண்கரே மாவட்டத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டம் இன்று நடைபெற்றது.  ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஹிஜாப் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாநில அரசின் கூற்றுப்படி, ஹிஜாப் அணிந்து வகுப்பறைகளில் நுழைவதைத் தடை செய்வது, அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள மதச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை என தெரிவித்துள்ளது.

கர்நாடகா கல்விச் சட்டம்-1983 இன் 133 (2)படி, கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது நிர்வாகத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடையை மாணவர்கள் அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ” மாணவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும். அதே சமயம், தனியார் பள்ளி நிர்வாகம் தங்களுக்கு விருப்பமான சீருடையை தேர்வு செய்து கொள்ளலாம். நிர்வாகக் குழு சீருடையைத் தேர்வு செய்யாத பட்சத்தில், சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் ஆடைகளை அணியக் கூடாது” குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலில் உடுப்பி, சிக்மகளூருவில் மட்டும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

இதனால் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற மக்களவையிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தை ஏற்க மறுப்பதாகக் கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.