07

07

கட்டாய தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து கனடாவில் தொடரும் போராட்டம் – அவசர நிலை பிரகடனம் !

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில்  அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லொறி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லொறி ஓட்டுநர்கள் , தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லொரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சாலைகளில் விளையாட்டுகளும் விளையாடுகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒட்டாவில் தொடங்கியுள்ள இந்த போராட்டம் அருகே உள்ள நகரங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஓட்டாவா மேயர் கூறுகையில், இந்த போராட்டம் வருத்தம் அளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு சவாலானது. தலைநகரில் உள்ள போலீசாரை விட போராட்டத்தில் ஈடுபடு பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
இதற்கிடையே லொறி ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக கனடாவில் அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை குற்றச்சாட்டு – பதவி ஏற்ற ஒரு வாரத்தினுள் பதவி விலகிய பிரதமர் !

தென் அமெரிக்க நாடான பெருவின் பிரதமராக ஹெக்டர் வலர் பின்டோ (வயது 63), கடந்த 1-ந் திகதி பதவி ஏற்றார். ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர் 2016-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவியும், மகளும் புகார் அளித்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதையெல்லாம் அவர் மறுத்தார்

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மந்திரிசபையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் பிரதமர் ஹெக்டர் வலர் பின்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறியதாக அந்த நாட்டின் வானொலி அறிவித்தது. அவர் துஷ்பிரயோகம் செய்பவர் என வெளியான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என விளக்கினார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிபர் பெட்ரோ காஸ்டிலோவிடம் அளித்து விட்டார்.

மேலும் தனக்கு எதிராக குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை கூறியவர்கள் மீது அவர் வழக்கு தொடர திட்டமிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் பிரதமர் ராஜினாமா செய்திருப்பது பெரு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.