10

10

நாம் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம். தயாராக இருக்குமாறு எதிர்க்கட்சிக்கு ஆளுந்தரப்பு சவால் !

நாம் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் அதற்கு எதிர்கட்சிகள் தயாராக இருங்கள் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மாகாணசபை தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதே ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை எதிர்கட்சியினர் தேர்தலை நடத்தக்கோரினால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கமும் தயாராக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

இதே நேரம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல் நிலை காரணமாக விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்து வருகின்றது என வெளியாகியுள்ள செய்தி குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ , “

எந்தத் தேர்தலையும் எந்த வேளையிலும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. ஆனால், ராஜபக்ச அரசுக்கு தேர்தலை எதிர்கொள்ளும் திராணி இல்லை. அதனால்தான் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு இந்த அரசு நீடித்தது. இப்போது விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்து வருகின்றது என வெளியாகியுள்ள செய்தி வேடிக்கையாகவுள்ளது.எந்தத் தேர்தல் நடந்தாலும் ராஜபக்ச அரசு படுதோல்வியடைவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவர் தெிவித்துள்ளார்.

“உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான ரஸ்ய படைகள்.” – அமெரிக்கா குற்றச்சாட்டு !

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு கனிசமானளவு  மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

இந்த நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஸ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஸ்யா கூறுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாக குற்றம்சாட்டுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சினையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழலில், உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான படைகளை ரஸ்யா குவித்து வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது,

“ கடந்த 24 மணி நேரமாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்ய இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம். தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உக்ரைன்  எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் எல்லையில் படைகளை அதிகரித்து வருகிறார்.

எல்லையில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர்,  ரஸ்யா – உக்ரைன் இடையே நிலவும் பதற்றத்தை தவிர்க்க, இரு நாட்டு அதிபர்களிடமும் இந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

யாழ். நகரில் நடமாடும் கஞ்சா விற்பனை !

அணடமைய நாட்களில் வடக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பாவனையும் – அவற்றை கடத்தும் நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. முக்கியமாக இளைஞர்களிடையேயும் – பாடசாலை மாணவர்களிடையேயும் இதனுடைய தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. பொலிசார் இது தொடர்பில் சில கைதுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும் கூட முழுமையாக இல்லாது ஒழிக்க எந்த விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தொடர்பில் அறிய முடிவதில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை  தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை வடக்கு பகுதிகளில் அதிகமாக வேண்டிய மேற்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

இந்த நிலையில், யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது  செய்துள்ளனர்,

சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை பிக்பொக்கெட் அடிக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ – சஜித் பிரேமதாஸ சாடல் !

நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிக்பொக்கெட் அடிக்கப் பார்க்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (09) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலம் இது தொடர்பில் பேசியுள்ள அவர்,

நாட்டில் மிகப்பெரிய நிதியமாக ஊழியர் சேமலாப நிதியம் காணப்படுகிறது. இங்கு 3 ட்ரில்லியன் நிதி காணப்படுகிறது. இதனூடாக 250 பில்லியன் இலாபமாகப் பெறப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 25 சதவீத வரியை நிதி அமைச்சு அறவிட உள்ளது.

நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை நிதி அமைச்சர் பிக்பொக்கெட் அடிக்கப் பார்க்கிறார். தொழிலாளர்களின் பணத்திலிருந்து பில்லியன் கணக்காணப் பணத்தைப் பெற்று நிதி அமைச்சர் தனக்கு நெருங்கியவர்களை மகிழ்விக்கப்போகிறார். என தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

EPF, ETF நிதிகளை கொண்டு மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஊடாகக் கிடைக்கப்பெறும் இலாபத்துக்கு வரியை செலுத்த வேண்டும் வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டார்.

எனினும் EPF, ETFக்கு வரியை அறிவிடுவது தவறென தொழில் அமைச்சு கொள்கை ரீதியாக முடிவொன்றை எடுத்துள்ளது. இந்த முடிவை நாம் சில மாதங்களுக்கு முன்பாகவே இலங்கை வருமான வரித் திணைக்களம், திறைசேரி ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த எதிர்க்கட்சி தலைவர் சஜித், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வரி அறவிடுவதை தொழில் அமைச்சு எதிர்க்கிறது என்றால், நிதி அமைச்சு எவ்வாறு இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது எனவும் கேள்வி எழுப்பினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வரி அறவிடுவதில் இருந்து EPF, ETF நிதியங்களை விடுவிக்க வேண்டும் என சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதனூடாக இப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வை காண முடியும் என்றார்.

“நீதிமன்ற தீர்ப்புக்களை தமிழ், சிங்கள மொழியில் வழங்க நடவடிக்கை எடுங்கள்.” – அமைச்சர் வாசுதேவ

சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ், சிங்கள மொழிகளில் வழக்கு விசாரணையும் தீர்ப்பும் நடைபெறுமானால் சிறந்ததென்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நீதித்துறையின் திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலம் பேசிய அவர்,

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை மேற்கொண்டிருந்தாலும் நாட்டில் முன்னெடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், குறிப்பாக நீதித் துறையில் பல்வேறு செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்குகள் வருடக்கணக்கில் தொடர்கின்ற நிலை காணப்படுகிறது. நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்கள் நீதியின் பக்கம் சார்பாக செயற்பட்டால் அது சிறந்ததாகும்.

மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உட்பட சாதாரண மக்களின் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நீதிமன்றங்களில் தமிழ், சிங்கள மொழிகளில் வழக்கு விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பெரும்பாலும் ஆங்கில மொழிகளில் தீர்ப்புகளும் விசாரணைகளும் இடம்பெறுவதால் சாதாரண மக்களுக்கு மொழி பிரச்சினை ஏற்படுகின்றது.

உச்சநீதிமன்றத்தில் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே விசாரணைகளும் தீர்ப்புகளும் இடம்பெற்றுவருகின்றன, அவ்வாறு சட்டங்கள் உள்ளதோ என்று  எமக்குத் தெரியாது என்றார்.

தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த அமைச்சருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.? – சபையில் சாணக்கியன் கேள்வி !

தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த அமைச்சருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.?  என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சபையில் வைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மேலும் உரையாற்ற அவர்,

“இன்று கொலை செய்து, கற்பழித்து, களவெடுத்த குற்றத்தில் சிறைத்தண்டனைப் பெறும் கைதிகளுக்காக சபையில், இன்று பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக போராடி, தன்னுடைய இனத்தின் அரசியல் உரிமைக்காகப் போராடி, 20 – 30 வருடங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்.

அண்மையில், அநுராதபுர சிறைச்சாலையில் துரதிஷ்டவசமானதொரு சம்பவம் இடம்பெற்றது. அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த குறித்த அமைச்சர் பதவி விலகியதாகக் கூறப்பட்டது. ஆனால், அவருக்கு எதிராக கட்சி என்ற ரீதியில் என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது?
சிறைச்சாலைக்குள் சவர்க்காரம் மற்றும் நீர் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இரவில் உறங்கக்கூட முடியாத நிலைமைக் காணப்படுகிறது.

இதுதொடர்பாக நீதி அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? நாம் அவர்களுக்கு சவர்க்காரம் வேண்டும், நீர் வேண்டும் என்றுக் கூறவில்லை.

மாறாக அவர்களை நிம்மதியாக உறங்கவேனும் விட வேண்டும் என்று தான் கோருகிறோம்.
அவர்களின் வழங்குகளைத் தான் விரைவில் முடிக்க முடியாதுள்ளது. குறைந்தது இந்த நடவடிக்கையையேனும் செய்ய வேண்டும் என்று தான் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.

அதேநேரம், பதுளை சிறைச்சாலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளும் தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பாக நீதி அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன? நிம்மதியாக சிறையிலேனும் அவர்களை இருக்க விட வேண்டும்.

மேலும், முகநூலில் கருத்துக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்ட குற்றத்திற்காக பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிணை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

ஒருசிலருக்கு அரசாங்கம் பிணை வழங்கியிருக்கலாம். இவை ஐ.நா. மனித உரிமை பேரவையை ஏமாற்ற செய்த செயற்பாடுகளாகும். எனவே, அநுராதபுரம் மற்றும் பதுளை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளுக்கு நடந்த தாக்குதலுக்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும்.

அவர்களை நிம்மதியாக சிறைகளில் உறங்கவேனும் அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்” – எனத் தெரிவித்தார்.

இலங்கையில் Tik-tok போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் !

பாரிய கலாசார, சமூக மற்றும் தேசிய அனர்த்தங்களை ஏற்படுத்தும் Tik-tok போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்தி சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டிய தருணம் இது எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று தான் வாதிடவில்லை என்றும் ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்தும் பொறிமுறையே காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்.

எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் பொலிஸ் சார்ஜன்ட் – கணவர் கைது !

கணவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்ததில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியான பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பலபிட்டிய, கோனாபீனுவல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் கணவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மீனவராக தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கணவர் அவரை அடித்து, அவரது சீருடையில் பெற்றோல் போத்தலை எறிந்து தீ வைத்ததாகத் தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்ட கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

“பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் உண்மையிலேயே அரசு கவனம் செலுத்தவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) வெளிவிவகார  அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூல விவாதத்தில் அரசாங்கத் தரப்பின் உறுப்பினர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த சட்ட மூலமானது நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றபோதிலும் வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சுமந்திரன், இதன்மூலம் இந்த சட்டம் குறித்து அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவில்லை என்பது புலனாகிறது எனவும் குற்றம் சுமத்தினார்.

“இரு நாட்டு மீனவர்களும் கடலிலே மோதிக் கொள்வதற்கான சூழ்நிலையை இரு நாட்டு அரசுகளும் உருவாக்குகின்றன.” – வட – கிழக்கு பிராந்திய மீனவ இணைப்பாளர் !

“இரு நாட்டு மீனவர்களும் கடலிலே மோதிக் கொள்வதற்கான சூழ்நிலையை இரு நாட்டு அரசுகளும் உருவாக்குகின்றன.” என மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினுடைய சமாதான மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடலின் தேசிய இணைப்பாளரும், வடகிழக்கு பிராந்தியங்களிற்கான இணைப்பாளருமான அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களுடைய தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சனையானது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. சுமார் இருபது வருடங்களாக இந்த பிரச்சனை நீடித்த போதிலும் இலங்கை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த, எந்த அரசும் இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை வழங்குவதற்கு முன்வரவில்லை.

கடந்த காலங்களிலே இந்திய மீனவர்களுடைய வருகை என்பது ஆக்கிரமிப்பு இலங்கை கடற்பரப்புக்குள்ளே சுமார் 1500க்கும் மேற்பட்ட படகுகள் கிழமையிலே மூன்று நாட்கள் வந்து இங்கே தொழிலில் ஈடுபடுவதனால் எம்முடைய மீனவர்கள் தொழிலில் ஈடுபட முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.  அதே நேரம் மீனவர்களுடைய முப்பது வருட கால யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மீனவர்களுடைய வலைகள், வளங்கள், அழிக்கப்படுகிறது. கடந்த கிழமைகளில் கூட சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வலைகள் இந்திய இழுவை மடிகளினால், அறுக்கப்பட்டிருக்கிறது.

எம்முடைய நாட்டு மீனவர்கள் குறிப்பாக, யுத்தத்திலே பாதிக்கப்பட்ட வடபகுதியிலே யாழ்ப்பாணத்திலே தொடர்ந்து இந்த பிரச்சனை, நீடித்து வருகிறது. கடந்த இருபத்தி ஏழாம் திகதி மீன்பிடிக்காக சென்ற இரு மீனவர்கள், மீனவர்கள் கூறுகின்றபடி இந்தியவர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியனுடைய, இழுவை மடிகளால், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது வரைக்கும், அதற்கான சரியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறி இருக்கிறது. 27 ஆம் திகதி இரண்டு மீனவர்கள் இறந்து, மீனவர்களுடைய வலைகள் அறுக்கப்பட்டு மீனவர்கள் தங்களுடைய உரிமையை வென்றெடுப்பதற்காக போராடுகின்ற போது நீதிமன்ற தடை உத்தரவை எடுத்திருக்கின்றார்கள்.

இவ்வளவு காலம் புரையோடிப் போயிருக்கிற இந்த பிரச்சனைக்கு எங்களுடைய நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றன. 2017 இலக்கம் 11 சட்டம், 2018 இலக்கம் ஒன்று, வெளிநாட்டு படகுகளை கண்காணிப்பதற்கான சட்டம். இந்த சட்டங்களை பயன்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாத அரசாங்கமாக இருக்கிறது. அன்று மீனவர்கள் வந்து கடலிலே மோதுவதற்கான ஒரு சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

ஏனென்றால் ஒரே இனத்தைச் சார்ந்த மீனவர்கள் இரு நாட்டு மீனவர்களாக இருக்கலாம். ஆனால் ஒரு சமூகத்தை சார்ந்த மீனவர்கள் இவ்வாறு முரண்பட்டு கொள்வதோ, தாக்கிக் கொள்வதோ, ஒரு ஆரோக்கியமான செயல் அல்ல என்பது நாங்கள் அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அப்படி இருந்தும் இரு நாட்டு மீனவர்களும் கடலிலே மோதிக் கொள்வதற்கான சூழ்நிலையை இரு நாட்டு அரசுகளும் உருவாக்கி இருக்கின்றன.

ஆகவே இதற்கு சாதகமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முற்பட வேண்டும்.  மீனவ சமூகத்திற்கு இடையிலே முரண்பாட்டை ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைக்கு ஒரு சாதகமான தீர்வை வழங்க முன்வர வேண்டும்.
மீனவர்கள், மீனவ சங்கங்கள் பல வருடங்களாக இந்த பிரச்சனைக்கு தீர்வை கேட்டு போராடிய போதிலும் இதற்கான ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இதற்கான முடிவை தருவதற்கு முயற்சிக்கவில்லை. ஏனென்றால் இவர்கள் தங்களுடைய பூகோள அரசியலை இந்தியாவுக்குள்ளே, இந்தியாவையும் வைத்துக்கொண்டு நடத்துவதால் பொருளாதார ரீதியான விடயங்களிலே இந்தியாவோடு இணங்கி செல்வதால் இவர்கள் இதற்கான தீர்வை வழங்குவதற்கு முற்படுவதில்லை. இதனால் இரு நாட்டு மீனவர்கள் இரு சமூகங்களுக்கு இடையிலே முரண்பாடு தோற்றுவிக்கப்படுகிறது. இரு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்திய இழுவை மடியிலே வருகின்ற இந்திய இழுவை மடியானது, அரசியல்வாதிகளுக்கும், முதலாளிமாருக்கும் சொந்தமானது. இங்கே வருகின்றவர்கள் கூட, அப்பாவி மீனவர்கள். ஆனால் அவ்வாறு வருகின்ற மீனவர்களுக்கு இடையிலே முரண்பாடு ஏற்படுவது என்பது மிகவும் ஒரு கண்டிக்கத்தக்க மோசமான விடயமாக இருக்கிறது.
ஆகவே இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு எம் நாட்டு சட்டத்தை பயன்படுத்தி கடற்படைக்கு அந்த அதிகாரங்களை கொடுத்து எம் நாட்டுக்குள்ளே வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.