“உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான ரஸ்ய படைகள்.” – அமெரிக்கா குற்றச்சாட்டு !

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு கனிசமானளவு  மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

இந்த நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஸ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஸ்யா கூறுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாக குற்றம்சாட்டுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சினையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழலில், உக்ரைன் எல்லையில், 1 லட்சத்துக்கும் அதிகமான படைகளை ரஸ்யா குவித்து வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது,

“ கடந்த 24 மணி நேரமாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்ய இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம். தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உக்ரைன்  எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் எல்லையில் படைகளை அதிகரித்து வருகிறார்.

எல்லையில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர்,  ரஸ்யா – உக்ரைன் இடையே நிலவும் பதற்றத்தை தவிர்க்க, இரு நாட்டு அதிபர்களிடமும் இந்த வாரம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *