15

15

தாக்க வந்த ராஜபக்ஷ – தப்பியோடிய பொன்சேகா – காப்பாற்றி விட்ட திஸ்ஸ குட்டியாராச்சி !

அமைச்சர் சமல் ராஜபக்ச ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகாவை நாடாளுமன்றத்தில் தாக்க முயன்றார் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அந்த தருணத்தில் நானும் எனது கட்சியை சேர்ந்தவர்களும் தலையிட்டுதடுத்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்று தாக்கப்படுவதிலிருந்து தப்பியோடிய பொன்சேகா இன்று தனது கட்சிக்காரர்கள் முன்னிலையில் வீரரை போல பேசுகின்றார் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகளாக காட்டுவதற்கு அரசு பெரும் முயற்சி !

“காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.”  என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட்ட அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

ஐ.நா ஆணையாளரின் அறிக்கை கடுமையானதாக இருக்கும் என நினைக்கின்றேன். இப்போது இலங்கை தமிழர்களுக்கு, அரசு செய்து வரும் செயல்களை அவர்கள் அறிவார்கள். ஆகவே அடுத்த மாதம் நடைபெறும் ஐநா சபை அமர்வில் அந்த அறிக்கை பாரப்படுத்தப்படும். அத்துடன் இந்த அறிக்கைக்கான செயற்பாடுகள் தொடர்பில் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. சபையில் உறுதியான தீர்மானம் வெளிப்படும்.

சம்பந்தன் ஐயா ஏற்கனவே கடிதம் ஒன்றை சக நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஐநாவுக்கு கடிதங்களை அனுப்பவுள்ளனர். ஒன்றிணைந்து எழுதுவது நல்லது. ஆனால் அதற்கு காலம் எடுக்கும். ஆகவே தனியாகவே கடிதங்களை வேகமாக அனுப்பவுள்ளனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக, விடயங்களை திரட்டி, அதனை சர்வதேசத்துக்கு காண்பிக்கவே நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் நீதிச் சேவை முகாம்களை வடக்கில் மேற்கொண்டனர்.

அவர்களின் பயணம் நீதிக்கான பயணம் இல்லை. எங்கள் மத்தியில் பிழைகள் உள்ளது போன்று காட்டவே இவ்வாறு அவர்கள் செய்கின்றனர். அதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆகவே நாம் எமது எதிர்ப்புகளை பாராளுமன்றிலும் சரி, ஏனைய விடயங்களிலும் சரி தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவோம். – என்றார்.

குடிநீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும் – யாழ்ப்பாணத்தில் மக்கள் சாலையை மறித்து போராட்டம் !

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத தமது குடிநீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் கல்லூண்டாய் பகுதி வீதியினை மறித்து வீதியின் குறுக்கே பொதுமக்களும் மாணவர்களும் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போராட்ட இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் வீதியை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்த மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி, மக்களுடன் போச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.

அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார் உள்ளிட்டவர்கள் வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கலந்துரையாடினர்.

இதனையடுத்து பிரச்சினைக்கு உரிய தீர்வினை உடனடியாக பெற்றுத் தருவதாக தெரிவித்தோடு, குடியிருப்பு பகுதிக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டதனையடுத்து போராட்டம் நிறைவு பெற்றது.

அத்தோடு கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்களின் குடிநீர் தேவைக்கு உடனடியாக தீர்வினை வழங்குவதற்காக யாழ். மாவட்ட இராணுவத்தின் 512வது படைப்பிரிவால் குடிநீர் விநியோகம் ஒவ்வொரு வீடுகளிற்கும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யா அறிவிப்பு !

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற செய்தி பரவி வருவதால், போர் பதற்றம் நீடிக்கிறது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷ்யா, படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. இந்த நெருக்கடி குறித்தும், எல்லையில் படைகள் குவிப்பு  குறித்தும் விவாதிப்பதற்கு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ரஷியாவுக்கு உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஏவுகணைகளை நிறுத்துவதற்கான வரம்புகள் மற்றும் இராணுவ வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் சான்சலருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு புதின் கூறியதாவது:-
உக்ரைன் மற்றும் பிற முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், ரஷ்ய எல்லைகளுக்கு அருகே ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டு படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் நிராகரித்தன. அதேசமயம், ரஷ்யா முன்பு முன்மொழிந்த பல பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, ஐரோப்பாவில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான வரம்புகள், பயிற்சிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பிற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.
இவ்வாறு புடினின் கூறினார்.
உக்ரைன் எல்லையை ஒட்டி ராணுவ பயிற்சிக்கு பிறகு படைகளின் ஒரு பகுதியினர் திரும்ப பெறப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த நிலையில் புடினின் இந்த பேட்டி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உயர்தர பரீட்சை மண்டபத்தில் தொலைபேசியை கொண்டு சென்று பரீட்சை எழுதிய மடு-அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபரின் மகன் !

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின்போது மாணவனொருவன் தொலைபேசியை கொண்டுசென்று பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கையடக்கத் தொலைபேசியின் உதவியுடன் உயர்தரப் பரீட்சை எழுதிய பாடசாலை அதிபரின் மகன் – மன்னாரில் சம்பவம்!

அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலையிலேயே உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றார்.

இந்த நிலையில் கணித பாட பரீட்சையின்போது அதிபரின் மகன் பரீட்சை மண்டபத்திற்குள் மறைமுகமாக கையடக்கத் தொலைபேசியொன்றை கொண்டுசென்றுள்ளார்.

மேலும் கையடக்கத் தொலைபேசியின் வட்ஸ்அப் மூலம் வந்ததாக கூறப்படும் வினாக்களுக்கான விடையை தொலைபேசியை பார்த்து எழுதியுள்ளார். இதன்போது பரீட்சை மண்டபத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் இதனை அவதானித்து, விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, பரீட்சை மண்டபத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அத்தோடு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்கள் கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதி 12 ஆண்டுகளின் பின்னர் விடுதலை !

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – விக்கிணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகரே என்பவரே கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால் நேற்று நிரபராதி என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வழக்கின் எதிரியான கந்தப்பு ராஜசேகர் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவின் ஆலோசணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் ஆலோசனையின் படி இறுதி யுத்தகால பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொழும்பில் நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கடந்த 2010.10.19 ஆம் திகதி கந்தப்பு ராஜசேகர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் தொடர்பில் நீதியை வேண்டி இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையுடன் இணைகிறது வத்திக்கான் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையும் வத்திக்கானும் ஆராய்ந்து வருகின்றன என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றோம் ஆனால் தற்போதைக்கு அது குறித்து எதனையும் தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்குவதற்காக கத்தோலிக்க திருச்சபை சர்வதேச உதவியை நாடுவதன் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளிற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக செஹான் சானக கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்தினால் அது கிட்டத்தட்ட ஒரு கடத்தல் என தெரிவித்துள்ளார்.

வீதியில் நடந்துகொண்டிருந்தவேளை அவர் கொண்டு சென்றுள்ளனர் எவருக்கும் என்ன நடந்தது என்பதும் அவர் எங்கு உள்ளார் என்பதும் தெரியாது என தெரிவித்துள்ள கர்தினால் கைதுசெய்வதற்கு என நாகரீகமான வழிமுறைகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

சிறுவர், பதின்ம வயதினருக்கான லிற்றில் எய்ட் இன் ஆக்க இலக்கியப் போட்டி! முதற் பரிசு 5,000 ரூபாய்!!!

லிட்டில் எயிட் திறன்விருத்தி மையம் நாடாத்தும் ஆக்க இலக்கியப் போட்டி மார்ச் மாதம் முதலாம் திகதி நிறைவடைகிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் ஆக்கங்கள் படைப்புகளை மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். இப்போட்டிகளில் உலகின் எப்பாகத்தில் இருந்தும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நகைச்சுவை, நேர்காணல்கள், ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் கீழ்வரும் கருப்பொருளில் அமைய வேண்டும்.

கருப்பொருள்:
1. தொழிநுட்பம்
2. கல்வி
3. பொருளாதாரம்
4. சமூகம்
5. வாழ்வியல்

மேற்குறிப்பிட்ட கருப்பொருளுக்கமைவாக 250-300 சொற்களுக்கு மேற்படாமல் ஆக்கம் இருத்தல் வேண்டும். மேலும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரமே பங்கு பெற்றலாம். வயதெல்லை 18 வயதிற்கு உட்பட்டோராக இருத்தல் வேண்டும். ஆக்கங்கள் தெளிவான எழுத்துக்களில் கையெழுத்து பிரதியாகவோ கணினிப்படுத்தியோ ஆக்கங்கள் 01.03.2022 ற்கு முன்னதாக எமக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்ப வேண்டும். ஆக்கங்களோடு ஆக்கத்தை அனுப்பியவரின் முழுப்பெயர் வயது அவருடைய படம் ஒன்றையும் இணைக்கவும்.

போட்டிகளில் தரமானதாக தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் லிற்றில் பேர்ட்ஸ் – சின்னப் பறவைகள் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும். நடுவர்களின் தீர்பே இறுதியானதாகக் கொள்ளப்படும். வெற்றிபெறும் முதல் மூன்று ஆக்கங்களுக்கு சான்றிதழ்களும் பரிசுத் தொகையும் அனுப்பி வைக்கப்படும். பரிசு பெற்றவர்கள் சஞ்சிகை வெளியீட்டுவிழாவில் பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு லிற்றில் பேர்ட்ஸ் சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

முதலாம் பரிசு:     5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு:   1000 ரூபாய்

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர் குழு,
லிற்றில் பேர்ட்ஸ்,
லிற்றில் எட்ய்,
கனகராசா வீதி,
திருநகர்,

Editorial Team,
Little Birds,
Little Aid,
Kanagarasa Veethy,
Thirunagar,
Killinochie.

அல்லது

littleaidsl@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

கைபேசி இலக்கம்: 0094 7773 78556

தகவல்: லிற்றில் எய்ட்

“ரஷ்யா எங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கும்.” – உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பால் பெரும் பதற்றம் !

ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் வீரர்கள், ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன.உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஏறக்குறைய 1 லட்சம் வீரர்களை நிறுத்தி இருந்த ரஷ்யா தற்போது அந்த எண்ணிக்கையை 1.30 லட்சமாக உயர்த்தி உள்ளது.

இதையடுத்து, அமெரிக்கா கீவ் உள்ளிட்ட உக்ரைன் நகரங்களில் உள்ள தூதரக அதிகாரிகள், அமெரிக்கர்கள் வெளியேறும்படி கேட்டுக் கொண்டது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவின் பேரில் 3000 அமெரிக்க இராணுவத்தினர் உக்ரைன் எல்லையில் இருந்து 100கிமீ தொலைவில் போலாந்து எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா படைகளும் உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி போர் தொடுக்கும் பட்சத்தில், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, நேட்டோ படைகளும் தயாராக உள்ளன. இதனால், 3ம் உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கொல்ஸ் இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போது உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார் எனத் தெரிகிறது.

இலங்கை அமைச்சர்களை சைக்கிளிலில் சென்று பணிபுரிய வைக்க புதிய திட்டம் !

அமைச்சரவை அமைச்சர்கள் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது சைக்கிலில் பயணம் செய்து பணிபுரிவது தொடர்பில் பரிசீலிக்க வேண்டும் என சுற்றாடல் அமைச்சரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இந்த விடயம் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு அதற்கான தெரிவுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொது மக்களிடையே சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைக்கிள்களைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அமைச்சர்களை ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாக இருக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை அமைச்சர்கள் சைக்கிலில் பொது இடங்களுக்கு பயணிக்கும் போது பாதுகாப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஏற்படும். இருப்பினும், இது தொடர்பில் பரிசீலிக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.