February

February

32 வருடங்களில் இல்லாத அளவில் வீசும் மிக மோசமான யூனிஸ் புயல் பிரித்தானியாவை தாக்கியது !

பிரித்தானியாவை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று வீசுவதுடன், புழுதி மற்றும் பல்வேறு கழிவுப்பொருட்கள் காற்றில் பறக்கின்றன. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும்,  பயண திட்டங்களை ரத்து செய்யும்படியும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த புயலானது கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் வீசும் மிக மோசமான புயல் என கருதப்படுகிறது. புயல் தாக்கியபோது வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காரணமாக பள்ளிகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டன. பேருந்து மற்றும் ரெயில் சேவைகள், விமானங்கள் மற்றும் படகுப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளுக்கு தேவைப்பட்டால் இராணுவம் தயார் நிலையில் உள்ளது. வானிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில், 10 கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பெருமளவில் சேதம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் இன்று வடக்கு ஜெர்மனியைத் தாக்கும் என்றும் இரவில் கிழக்கு நோக்கி பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியின் வடக்கு கடலோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரியான ஹிட்லருடன் ஒப்பிட்ட எலன் மஸ்க் – குறுகிய நேரத்தில் செய்த செயல் !

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொரி சாரதிகளும், அமெரிக்காவில் இருந்து கனடா வரும் லொரி சாரதிகளும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டது.இதற்கு லொரி சாரதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக லொரி சாரதிகள் கனடாவில் போராட்டத்தில் குதித்தனர். பாராளுமன்றத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். மேலும் கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலத்தையும் மறித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். லொரி சாரதிகள் போராட்டத்தை ஒடுக்க கனடாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரியான ஹிட்லருடன் ஒப்பிட்டு உலகின் நம்பர்-1 பணக்காரர் எலன் மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் படத்தை வெளியிட்டு அதில், ஹிட்லர் கூறுவது போல் என்னை ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் டுவிட் பதிவை நீக்கினார்.
ஏற்கனவே கனடாவில் நடக்கும் லொரி சாரதிகள் போராட்டத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கனடா அமைச்சர் பிலிப் ஷாம்பெயின் கூறும்போது, ‘எலான் மஸ்க்கின் கருத்துக்கள் வெளிப்படையாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது’ என்றார்.

கொரோனாவுக்கு அழிவில்லை. அது புது அவதாரம் எடுக்கும். !

புதிய வகைகளாக உருமாறுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் உலகில் ஒருபோதும் ஒழியாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழக நிபுணா்கள் இதுகுறித்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

வைரஸ்கள் சில மாதங்களுக்கு ஒருமுறை புதிய தன்மைகளுடன் கூடிய அவதாரமெடுத்து தமது பரவலைத் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும்.

பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிவிட்டு, அதனை ஏராளமானவா்களுக்கு செலுத்திவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, புதிய வகை கொரோனாக்கள் உருவாவதை நாம் மறந்துவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரோன் வகை கொரோனா ஏராளமானவா்களுக்குப் பரவி, அதிக உடல்நல பாதிப்பை ஏற்படுத்தாமல் மறைந்து விடுவதால், சமூக நோய்த் தடுப்பாற்றல் கிடைத்துவிடும் என நினைப்பது தவறான கணிப்பு என ஹூஸ்டன் மருத்துவக் கல்லூரி நிபுணா்கள் கூறியுள்ளனர்.

யூதர்கள் ஒழிப்புத் திட்டம் – ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் ரஷ்யாவில் காட்சிக்கு !

ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார்.

Gandhi's Letters to Hitler. The time Gandhi tried to stop Hitler's… | by  Andrei Tapalaga ✒️ | History of Yesterday

அதே காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் கோரி அகிம்சை வழியில் போராடி வந்த இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தி, ஜெர்மனியில் யூதர்கள் ரத்தம் சிந்துவதை நிறுத்த வலியுறுத்தி 1939-ம் ஆண்டு ஹிட்லருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

காந்தி, ஹிட்லருக்கு எழுதிய அந்த கடிதம் தற்போது ரஷியாவில் உள்ள டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் வருகிற மே மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும். இந்திய கலைக்கண்காட்சியில் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை காட்சிக்கு வைக்க இருப்பதாக அருங்காட்சியக நிர்வாகம் அறிவித்துள்ளது.

17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு – 16 மில்லியன் டொலர் வழங்க சம்மதித்துள்ள இங்கிலாந்து இளவரசர் !

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இளவரசர் -  Tamonews

ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோர்ட்டில் முறையிட்டார். ஆனால் அவர் தன்மீதான பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணையை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என கடந்த மாதம் நியூயார்க் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது.

இதனிடையே ராணி 2-ம் எலிசபெத் அரியணை ஏறியதன் 70-வது ஆண்டை அரச குடும்பம் கொண்டாடி வரும் இந்த நேரத்தில், அரச குடும்பத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கை சுமுகமாக தீர்க்க இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ராணி 2-ம் எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாகவும், அதன் ஒரு பகுதியாக வர்ஜீனியா கியூப்ரே நடத்தி வரும் தொண்டு நிறுவனத்துக்கு 16 மில்லியன் டொலர் வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை தொடர்ந்து, சட்டநடைமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் வழக்கை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதன் கிழமை ரஷ்யப் படையெடுப்பு ஒரு அமெரிக்க – பிரித்தானிய Sexed Up Intelligence செக்ஸ்டப் இன்ரலிஜன்ஸ்

எங்களுடைய சாத்திரிகளையும் மிஞ்சிய அமெரிக்க – பிரித்தானிய உளவுப் பிரவுகள் இன்று புதன் கிழமை பெப்ரவரி 16 சுக்கிரன் உக்ரைனில் நிற்கும் என்றும் சனி பகவான் ஏழு அரையின் உச்சத்திற்கு வரும் என்றும் அதனால் ரஷ்யா படையெடுக்கும் என்றும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்திருந்தனர். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தங்களது படையணிகளை ரஷ்யாவை நோக்கி நகர்த்தி இருந்தனர். லண்டனிலும் நியூயோர்க்கிலும் இராஜதத்திரிகள் மத்தியில் ஒரே அல்லோல கல்லோலம். ஆமெரிக்க மற்றும் மேற்கு நாட்டு தூதரகங்கள் தங்களுடைய மக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறும் யுத்தம் ஆரம்பித்தால் விசேட விமானங்களை அனுப்பியெல்லாம் காப்பாற்ற முடியாது என்று சர்வதேச பதட்டத்தையே ஏற்படுத்தி இருந்தன. மேற்கு நாட்டு ஊடகங்களில் யுத்தம் வெடிக்கப் போகின்றது, இதோ ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழையப் போகின்றன என்ற பாணியில் செய்திகளுக்கு தயாராக இருந்தனர்.

தாங்களும் ஒரு சமநிலையில் நின்று செய்திகளை வழங்குகின்றோம் என்பதைக் காட்ட மேற்கு ஊடகங்கள் ரஷ்ய உத்தியோகபூர்வ பிரதிநிதி ஒருவரையும் அழைத்து “நீங்கள் புதன் கிழமை உக்ரைனுக்கு படையெடுக்கப் போகின்றீர்களா? நேட்டோ படையணிகள் ஆயத தளபாடங்களை குவிப்பதால் பின் வாங்குவீர்களா?” என்று கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஷ்ய பிரதிநிதிகள், “நாங்கள் ஒரு போதும் படையெடுப்பது பற்றி பேசவே இல்லையே. இது அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் பிரச்சாரமே அல்லாமல் வேறொன்றுமில்லை” என்று பதிலளித்தனர். ரஷ்ய பிரதிநிதியின் கூற்றைப் பிரதிபலிப்பது போல் மேற்கு நாட்டு ஊடகங்களே உக்ரைனில் மக்கள் எந்தவொரு யுத்தப் பதட்டமும் இல்லாமல் வழமைபோல் தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடுபட்டு இருந்தனர் என்று செய்திகளை வெளியிடுகின்றன.

படையெடுப்பிற்கு தயாராகி விட்டதாக சொல்லப்பட்ட ரஷ்யாவிலும் பதட்டமில்லை. யுத்தம் நடந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்த்த உக்ரைனிலும் பதட்டமில்லை. ஆனால் நியூயோர்க்கிலும் லண்டனிலும் மட்டும் பெரும் பதட்டம். அதிஸ்ரவசமாக பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் ஜனாதிபதி ஜோ பைடனதும் கதையைக் கேட்டு லண்டனில் மக்கள் ரோய்லற் ரோலை வாங்கிக் குவிக்கவோ அல்லது பெற்றோல் ராங்குகளை நிரப்பவோ முற்படவில்லை.

“சதாம் ஹூசைனிடம் பேரழிவு ஆயதங்கள் இருக்கின்றது. சதாம் ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் டமார் என்று லண்டனிலும் நியோர்க்கிலும் பேரிழவுக் குண்டுகள் வெடிக்கும் என்று 2003 இல் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ஒரு மெகா ரீல் விட்டார். அதன் விளைவால் ஈராக் யுத்தம் தொடங்கி 500,000 பேர் வரை கொல்லப்பட்டு இன்றும் யுத்தம் வேறு வடிவில் தொடர்கிறது. ஜோர்ஜ் புஸ்ஸிற்கு தன்னுடைய இருப்பை தக்க வைக்க ஒரு யுத்தம் தேவைப்பட்டது. அதற்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போட பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ரெடியானார்.

அதற்குப் பின் டேவிட் கமரூன் லிபியாவுக்குள் மூக்கை நுழைத்தார், சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தார். அந்நாடுகளை சின்னா பின்னமாக்கி இப்போது உக்ரைனில் வந்து நிற்கின்றனர்.

தன்னுடைய வீட்டு சுவருக்கு பெயின்ற் அடித்த கணக்கில் இருந்து தப்பவும் கோவிட் காலத்தில் சனங்கள் சாக இங்கால் குடித்து கும்மாளம் அடித்த கதையை மறைக்கவும் உக்ரைனில் இரத்த ஆறு ஓட வேண்டும் என்று நினைக்கின்றார் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன். அவர் மட்டுமல்ல ஜோ பைடனுக்கும் ரேற்றிங் ரொம்ப படான்.

கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மேற்கு நாடுகளில் விலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 7.5 வீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் இன்றைய கணிப்பின்படி 5.5 வீதம் விலைவாசி உயர்ந்துள்ளது. வரும் ஏப்ரலில் இது 7.5 வீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை ஈடுகட்டும் அளவுக்கு சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை. அது மட்டுமல்லாமல் சம்பளங்களை கூட்டிக் கேட்க வேண்டாம் என பாங்க் ஒப் இங்லன்ட் கவர்னர் அன்ரூ பெய்லி தொழிலாளர்களைக் கேட்டுள்ளார். அதிகரிக்கும் விவாசியோடு ஒப்பிட்டால் குடும்ப வருமானம் இரண்டு வீதத்தால் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்படுகின்றது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு குறிப்பாக எரிபொருட்கள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. மறுபக்கம் குடும்ப வருமானம் வீழ்ச்சியடைகின்றது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு வட்டிவீதத்தை அதிகரிக்கின்றது. வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுக்கு செலுத்தும் மோட்கேஜ் அதிகரிக்கும். வாடகைக்கு இருப்பவர்களின் வாடகை அதிகரிக்கும். மக்களின் கையிருப்பில் உள்ள பணம் வறண்டு போய்விடும். மக்கள் நெருக்கடிக்கு உள்ளானால் அது அரசுக்கு எதிராகத் திரும்பும். இந்த அபாயநிலை மேற்கில் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு யுத்தம் வந்தால் மக்களின் கவனத்தை திசை திருப்ப முடியும். அதற்கு மேற்குலகிற்கு ஒரு யுத்தம் அவசியமாகின்றது.

அமேரிக்காவும் அதன் நேச நாடுகளும் இன்றும் தாங்கள் உலகைக் கோலோச்ச முடியும் என்ற பழைய நினைப்பிலேயே செயற்பட்டு வருகின்றன. கோவிட் அவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தியதை கண்டுகொள்ளவேயில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் கூட சீனாவில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் தான் வந்தன. மேற்குநாடுகளின் விலைவாசி உயர்வுக்கு மாறாக சீனாவின் விலைவாசி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. அவர்களது விலைவாசி உயர்வு தசம எண்ணிலேயே இருக்கின்றது. அது ஒன்றைக்கூட எட்டவில்லை. அதனால் சீனா மேற்கு நாடுகளுக்கு மாறாக வட்டி வீதத்தை குறைக்க உள்ளது. அந்நாடு கோவிட்டை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி இருப்பதுடன் கோவிட் மரணங்களை முற்றாக இல்லாமல் அல்லது ஒற்றை இலக்கத்துக்குள்ளேயே வைத்துள்ளது. பிரித்தானியாவில் இவ்வளவு வக்சீன் ஏற்றப்பட்டும் மரணங்கள் தினமும் 300 வரை செல்கின்றது. அமெரிகாவில் இதனிலும் அதிகம்.

ரஷ்யா ஒன்றும் பாலும் தேனும் ஓடும் நாடு கிடையாது. ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் ஒன்றும் புனிதரும் அல்ல. ரஷ்யாவுக்கு உக்ரைனில் கண் இருப்பதும் மீண்டும் பரந்த சோவியத் குடியரசை கட்டமைக்கும் கனவு விளாடிமீர் பூட்டினுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இதில் மேற்கு நாடுகள் குளிர்காய முற்படுகின்றனர் என்பது தான் உண்மை.

இராணுவ வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யா அறிவிப்பு !

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற செய்தி பரவி வருவதால், போர் பதற்றம் நீடிக்கிறது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷ்யா, படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. இந்த நெருக்கடி குறித்தும், எல்லையில் படைகள் குவிப்பு  குறித்தும் விவாதிப்பதற்கு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ரஷியாவுக்கு உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஏவுகணைகளை நிறுத்துவதற்கான வரம்புகள் மற்றும் இராணுவ வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் சான்சலருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு புதின் கூறியதாவது:-
உக்ரைன் மற்றும் பிற முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், ரஷ்ய எல்லைகளுக்கு அருகே ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டு படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் நிராகரித்தன. அதேசமயம், ரஷ்யா முன்பு முன்மொழிந்த பல பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, ஐரோப்பாவில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான வரம்புகள், பயிற்சிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பிற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.
இவ்வாறு புடினின் கூறினார்.
உக்ரைன் எல்லையை ஒட்டி ராணுவ பயிற்சிக்கு பிறகு படைகளின் ஒரு பகுதியினர் திரும்ப பெறப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த நிலையில் புடினின் இந்த பேட்டி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுவர், பதின்ம வயதினருக்கான லிற்றில் எய்ட் இன் ஆக்க இலக்கியப் போட்டி! முதற் பரிசு 5,000 ரூபாய்!!!

லிட்டில் எயிட் திறன்விருத்தி மையம் நாடாத்தும் ஆக்க இலக்கியப் போட்டி மார்ச் மாதம் முதலாம் திகதி நிறைவடைகிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் ஆக்கங்கள் படைப்புகளை மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். இப்போட்டிகளில் உலகின் எப்பாகத்தில் இருந்தும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நகைச்சுவை, நேர்காணல்கள், ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் கீழ்வரும் கருப்பொருளில் அமைய வேண்டும்.

கருப்பொருள்:
1. தொழிநுட்பம்
2. கல்வி
3. பொருளாதாரம்
4. சமூகம்
5. வாழ்வியல்

மேற்குறிப்பிட்ட கருப்பொருளுக்கமைவாக 250-300 சொற்களுக்கு மேற்படாமல் ஆக்கம் இருத்தல் வேண்டும். மேலும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு போட்டியில் மாத்திரமே பங்கு பெற்றலாம். வயதெல்லை 18 வயதிற்கு உட்பட்டோராக இருத்தல் வேண்டும். ஆக்கங்கள் தெளிவான எழுத்துக்களில் கையெழுத்து பிரதியாகவோ கணினிப்படுத்தியோ ஆக்கங்கள் 01.03.2022 ற்கு முன்னதாக எமக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்ப வேண்டும். ஆக்கங்களோடு ஆக்கத்தை அனுப்பியவரின் முழுப்பெயர் வயது அவருடைய படம் ஒன்றையும் இணைக்கவும்.

போட்டிகளில் தரமானதாக தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் லிற்றில் பேர்ட்ஸ் – சின்னப் பறவைகள் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும். நடுவர்களின் தீர்பே இறுதியானதாகக் கொள்ளப்படும். வெற்றிபெறும் முதல் மூன்று ஆக்கங்களுக்கு சான்றிதழ்களும் பரிசுத் தொகையும் அனுப்பி வைக்கப்படும். பரிசு பெற்றவர்கள் சஞ்சிகை வெளியீட்டுவிழாவில் பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு லிற்றில் பேர்ட்ஸ் சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

முதலாம் பரிசு:     5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு:   1000 ரூபாய்

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர் குழு,
லிற்றில் பேர்ட்ஸ்,
லிற்றில் எட்ய்,
கனகராசா வீதி,
திருநகர்,

Editorial Team,
Little Birds,
Little Aid,
Kanagarasa Veethy,
Thirunagar,
Killinochie.

அல்லது

littleaidsl@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

கைபேசி இலக்கம்: 0094 7773 78556

தகவல்: லிற்றில் எய்ட்

“ரஷ்யா எங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கும்.” – உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பால் பெரும் பதற்றம் !

ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் வீரர்கள், ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன.உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஏறக்குறைய 1 லட்சம் வீரர்களை நிறுத்தி இருந்த ரஷ்யா தற்போது அந்த எண்ணிக்கையை 1.30 லட்சமாக உயர்த்தி உள்ளது.

இதையடுத்து, அமெரிக்கா கீவ் உள்ளிட்ட உக்ரைன் நகரங்களில் உள்ள தூதரக அதிகாரிகள், அமெரிக்கர்கள் வெளியேறும்படி கேட்டுக் கொண்டது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவின் பேரில் 3000 அமெரிக்க இராணுவத்தினர் உக்ரைன் எல்லையில் இருந்து 100கிமீ தொலைவில் போலாந்து எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா படைகளும் உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி போர் தொடுக்கும் பட்சத்தில், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, நேட்டோ படைகளும் தயாராக உள்ளன. இதனால், 3ம் உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கொல்ஸ் இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போது உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார் எனத் தெரிகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ரஷியா – உக்ரைன் இடையேயான போர் பதற்றம் !

ரஷியா – உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு இராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளன. தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன. முக்கியமாக உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை தொடர்பாக தொடர்ந்து அவதானத்துடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் 40 இலங்கையர்கள் தற்போது உக்ரைனில் உள்ளனர் என்றும் அவர்களில் 7 பேர் உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக அங்கு சென்றுள்ளனர் என்றும் உத்தியோகப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.உக்ரைனில் இலங்கை தூதரகம் இல்லாத போதிலும் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பாக துருக்கி – அன்காராவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அவதானம் செலுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதே நேரம் போர் மூண்டால் பொதுமக்கள் அகதிகளாக வெளியேறுவார்கள். அவ்வாறு வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு எல்லையில் இருக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றிய நாடான போலந்து நாடு தயாராக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறது.
மற்ற நாடுகள் உக்ரைனில் தங்கள் தூதரக பணிகளைக் குறைக்கும் நிலையில், உக்ரைன் மக்கள் அதிக அளவில் வெளியேற்றும்போது ஏற்படும் சிரமத்தை போக்குவதற்காக தனது தூதரக நடவடிக்கைகளை தொடர்வதாக போலந்து கூறுகிறது.
அதேசமயம் உக்ரைனில் நிலைமை மோசமடையாது என்று நம்புவதாக போலந்து வெளியுறவுத்துறை துணை மந்திரி பிரசிடாக்ஸ் தெரிவித்தார். உள்துறை அமைச்சகம் பல வாரங்களாக உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.