11

11

ஐ.தே.க.வின் மறுசீரமைப்பு காலதாமதம் சிபார்சு அறிக்கை அடுத்த வாரம் கையளிப்பு

unp_logo_.jpg“ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தேவையான சிபாரிசுகளை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையிலான அறுவரடங்கிய குழு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் ஒரு வாரகால அவகாசத்தைக் கோரியுள்ளதாகவும் அதன் பிரகாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிக்கை பூரணப்படுத்தப்பட்டு திங்கட்கிழமை கட்சியின் செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும்  கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

“மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறுபட்ட தரப்புகளின் கருத்துகள்,ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவேண்டியிருப்பதால் குறுகிய காலத்தில் அறிக்கையை தயாரிப்பது கடினமானதென குழு சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தியாளர் மாநாட்டின் போதே கட்சியின் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மறுசீரமைப்பென்பது கட்சியின் நிர்வாக மாற்றம் மட்டும்தான் என அர்த்தப்படாது. மறு சீரமைப்புக்குழு கட்சியைப் பலமுள்ளதாகக் கட்டியெழுப்புவதற்கான சிபாரிசுகளைச் செய்யும். சிபாரிசுகள் எவ்வாறானதாக அமையும் என்பதை அவதானித்த பின்னரே எதனையும் கூற முடியும். சகல நடவடிக்கைகளும் ஜனநாயக ரீதியிலேயே மேற்கொள்ளப்படும். கட்சியில் எவரும் தமது கருத்துகளை வெளியிட முடியும். அதனை யாரும் தடுக்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவிதமான உட்கட்சிப்பூசலும் கிடையாது. அனைவரும் கருத்துக்கூற முடியும். இறுதி முடிவு பெரும்பான்மை அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படும். யாப்புத் திருத்தம், கட்சியின் செயற்பாடுகள், நிர்வாக மாற்றம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

ஸ்ரீமா பண்டாரநாயக்க ஆட்சி அன்று தோற்கடிக்கப்பட்டு சுதந்திரக் கட்சி பலவீனப்பட்டிருந்தபோது பிளவுபட்டவர்கள் டார்ளி வீதியிலுள்ள கட்சித் தலைமையக கதவுகளை மூடிப் பூட்டுப் போட்டுவிட்டு வீடுகளில் கூடித் தீர்மானம் எடுத்தது போன்று ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் செயற்படாது. ஸ்ரீ கொத்தாவின் கதவுகளை எவரும் மூட முடியாது. ஏனெனில், அங்கு ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை புதுப்பாதையில் இட்டுச் செல்வதே எமது ஒரே நோக்கமாகும். இன்னுமொரு வாரத்தில் நல்ல செய்தியை நாடு எதிர்பார்க்க முடியும் எனவும் ஜயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தை அமைக்க பிரிட்டனின் பிரதான கட்சிகளுக்கு மே 25 வரை காலக்கெடு உடன்பாட்டுக்கு வராவிடின் மற்றொரு தேர்தல்

UK_Party_Leadersஅடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டுக்கு வருவதற்கு பிரிட்டனின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு மே 25 வரையே கால அவகாசம் உள்ளது. இந்த தினத்திற்குள் அக்கட்சிகள் உடன்பாட்டுக்கு வராவிடின் மற்றொரு பொதுத் தேர்தலை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும்.மே 25 இல் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உரை இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னராக பாராளுமன்றத்தின் நம்பிக்கையை தாங்கள் பெற்றுள்ளனர் என்பதை பிரதமரும் தொழில் கட்சித் தலைவருமான கோர்டன் பிறவுண், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் டேவிட் கமரூன், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிக்கிளெக் ஆகியோர் வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக “ரெலி கிராப்” பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிராவிடின் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக எழுத்து மூலமான வழிகாட்டல்கள் எதுவும் முன்னர் இருந்ததில்லை. ஆனால், இப்போது அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை செயலாளர் குஸ் டொன் னெல் இந்த வருட முற்பகுதியில் அறுதிப்        பெரும்பான்மைப் பலமற்ற பாராளுமன்றம் ஏற்படும் சாத்தியத்தை எதிர்பார்த்து தேவையான ஒழுங்குவிதிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்துக்கும் சபை அமர்வுக்கும் இடையில் நீண்டகாலப் பகுதி இருப்பதற்கு ஏற்புடையதாக திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. பிரதான அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாடொன்றை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவற்கான இத்திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

650 ஆசனங்களைக் கொண்ட பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை அமைப்பதாயின் 326 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கன்சர்வேட்டிவ் கட்சி 306 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது. தொழில் கட்சிக்கு 258 ஆசனங்களும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 57 ஆசனங்களும் கிடைத்துள்ளன.

இதேவேளை, அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கன்சர்வேட்டிவ் கட்சியினரும் லிபரல் ஜனநாயக கட்சியும் பேச்சு நடத்தியிருந்தனர். அதேவேளை, இலக்கம் 10 டவுனிங் ஸ்ரீரிட்டில் (பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம்) தனது நெருங்கிய சகாக்களுடன் பிரதமர் கோர்டன் பிறவுண் இரகசிய பேச்சு வார்த்தையை நடத்தியிருந்தார்.

எந்தவொரு கட்சியும் தெளிவான விதத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்காவிடில் தேர்தலுக்கு மீண்டும் செல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரவை அலுவலகத்தால் புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுதந்திர கட்சியை மறுசீரமைக்கவும் புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கவும் யோசனை

maithri-pala.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் ஜூன் 7ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற உள்ளது. இதன் போது கட்சியை நாடளாவிய ரீதியில் மறுசீரமைக்கவும் புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கும் வகையிலும் புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார். ஜூன் 7ஆம் திகதி முதல் ஒரு இலட்சம் உறுப்பினர்களை கட்சிக்கு புதிதாக சேர்த்துக் கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,

கட்சி அகில இலங்கை செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். 123 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து கட்சியை மறுசீரமைப்பதற்கான யோசனைகள் கிடைத்துள்ளன.

இதன்படி தற்கால சமுகத்திற்கு ஏற்றவாறு கட்சியை சீரமைக்க உள்ளோம்.இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள இளைஞர்கள், கல்வியியலாளர்கள் போன்றோருக்கு பொறுப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தினுள் ஒரு இலட்சம் பேரை கட்சிக்கு சேர்க்க உள்ளோம். இதற்கான நடவடிக்கை ஜூன் 7ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.  ஐ.தே. கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து பாடம் கற்று எமது கட்சியை பலப்படுத்த உள்ளோம் என்றார்

மணிரத்தினம் வரமாட்டார்

indian-film.jpgபிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் கொழும்பில் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் வைபவத்தில் கலந்துகொள்ளமாட்டார். சென்னையில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். ராவணன் படத்தின் விசேட காட்சி ஒன்று அந்த நிகழ்வில் காண்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதை யாவரும் அறிவர். ஆயினும் தயாரிப்புக்குப் பின்னரான வேலைகள் பூர்த்தியடையும் வரை அந்தத் திரைப்படம் திரையிடப்படாது.

ராவணன் படம் ஜூனிலேயே தயாரித்து முடிக்கப்படும். நான் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளமாட்டேன் என்று மணிரத்தினம் கூறியதாக இந்தியா கிலிட்ஸ் தெரிவித்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் கலந்தகொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, அவரின் தீர்மானத்தில் தான் தலையிட முடியாது எனவும் அது அவரின் விருப்பம் என்றும் அதாவது பங்குபற்றுவதா இல்லையா என்பது அவரின் விருப்பம் எனவும் மணிரத்தினம் கூறியுள்ளார்.

ஹஜ் கடமைகளுக்கான முன்னேற்பாடு; ஐவர் கொண்ட குழு ஜனாதிபதியால் நியமனம்

hajj.jpgஹஜ் கடமைகளுக்கான முன்னேற்பாடு களைக் கவனிப்பதற்கு ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் ஸாலி முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களப் பணிப்பாளர் வை. எம். எம். நவவி ஆகியோரே இந்தக் குழுவின் உறுப்பினர்களாவர்.

ஹஜ் ஏற்பாடுகள் சம்பந்தமாக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பெளஸி நேற்று (10) சவூதி அரேபியா பயணமானார். ஏனைய நால்வரும் இன்று (11) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்