ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் ஜூன் 7ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற உள்ளது. இதன் போது கட்சியை நாடளாவிய ரீதியில் மறுசீரமைக்கவும் புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கும் வகையிலும் புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார். ஜூன் 7ஆம் திகதி முதல் ஒரு இலட்சம் உறுப்பினர்களை கட்சிக்கு புதிதாக சேர்த்துக் கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,
கட்சி அகில இலங்கை செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். 123 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து கட்சியை மறுசீரமைப்பதற்கான யோசனைகள் கிடைத்துள்ளன.
இதன்படி தற்கால சமுகத்திற்கு ஏற்றவாறு கட்சியை சீரமைக்க உள்ளோம்.இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள இளைஞர்கள், கல்வியியலாளர்கள் போன்றோருக்கு பொறுப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தினுள் ஒரு இலட்சம் பேரை கட்சிக்கு சேர்க்க உள்ளோம். இதற்கான நடவடிக்கை ஜூன் 7ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். ஐ.தே. கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து பாடம் கற்று எமது கட்சியை பலப்படுத்த உள்ளோம் என்றார்