“ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தேவையான சிபாரிசுகளை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையிலான அறுவரடங்கிய குழு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் ஒரு வாரகால அவகாசத்தைக் கோரியுள்ளதாகவும் அதன் பிரகாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிக்கை பூரணப்படுத்தப்பட்டு திங்கட்கிழமை கட்சியின் செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
“மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறுபட்ட தரப்புகளின் கருத்துகள்,ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவேண்டியிருப்பதால் குறுகிய காலத்தில் அறிக்கையை தயாரிப்பது கடினமானதென குழு சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தியாளர் மாநாட்டின் போதே கட்சியின் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மறுசீரமைப்பென்பது கட்சியின் நிர்வாக மாற்றம் மட்டும்தான் என அர்த்தப்படாது. மறு சீரமைப்புக்குழு கட்சியைப் பலமுள்ளதாகக் கட்டியெழுப்புவதற்கான சிபாரிசுகளைச் செய்யும். சிபாரிசுகள் எவ்வாறானதாக அமையும் என்பதை அவதானித்த பின்னரே எதனையும் கூற முடியும். சகல நடவடிக்கைகளும் ஜனநாயக ரீதியிலேயே மேற்கொள்ளப்படும். கட்சியில் எவரும் தமது கருத்துகளை வெளியிட முடியும். அதனை யாரும் தடுக்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவிதமான உட்கட்சிப்பூசலும் கிடையாது. அனைவரும் கருத்துக்கூற முடியும். இறுதி முடிவு பெரும்பான்மை அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படும். யாப்புத் திருத்தம், கட்சியின் செயற்பாடுகள், நிர்வாக மாற்றம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஸ்ரீமா பண்டாரநாயக்க ஆட்சி அன்று தோற்கடிக்கப்பட்டு சுதந்திரக் கட்சி பலவீனப்பட்டிருந்தபோது பிளவுபட்டவர்கள் டார்ளி வீதியிலுள்ள கட்சித் தலைமையக கதவுகளை மூடிப் பூட்டுப் போட்டுவிட்டு வீடுகளில் கூடித் தீர்மானம் எடுத்தது போன்று ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் செயற்படாது. ஸ்ரீ கொத்தாவின் கதவுகளை எவரும் மூட முடியாது. ஏனெனில், அங்கு ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை புதுப்பாதையில் இட்டுச் செல்வதே எமது ஒரே நோக்கமாகும். இன்னுமொரு வாரத்தில் நல்ல செய்தியை நாடு எதிர்பார்க்க முடியும் எனவும் ஜயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.