விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்தகவலை முதல்வர் கருணாநிதி நேற்று திங்கட்கிழமை சட்டப் பேரவையில் அறிவித்தார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும்போது அரசியல் கட்சியினரோ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பார்வதி சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது, பார்வதி கோரிக்கை விடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்கத் தயார் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெற மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு இந்தியத் தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு பார்வதி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இதை மத்திய அரசுக்கு அனுப்பிய கருணாநிதி, பார்வதி தமிழகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தரலாம் என்றும் பரிந்துரைத்தார். இதையடுத்து மத்திய அரசு பார்வதி மீதான தடையை நீக்கி, அவர் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளது. இதற்காக அவருக்கு 6 மாத கால விசா வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
thurai
தலைவரின் செயல்களால் புண்பட்டோரிற்கு மருந்துகள் இலங்கையை நோக்கி செல்கின்றன. தலைவரின் தாயாரோ மருந்துள்ள இடத்தைத் தேடி அலைகின்றார்.
தமிழரின் நாடுகடந்த அரசிற்கும் இது ஓர் உதாரணமல்லவா!.
துரை