புத்தாண்டை அறிவிக்கும் மணி ஒலிகளும் புத்தாண்டைக் கொண்டாடும் வான வேடிக்கைகளும் புத்தூக்கம் ஒன்றை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அவ்வகையான புத்தூக்கமும் நம்பிக்கையும் ஒவ்வொருவருக்கும் அவசியமானதே. உலகம் முழுவதுமே இன்று புத்தாண்டைக் கொண்டாடுகின்றது. தமிழ் மக்களுக்கு தைப் பொங்கலே புத்தாண்டாக அமைந்தாலும் உலக மக்களுடன் இணைந்து இப்புத்தாண்டையும் தமிழ் மக்களுக்கு தைப் பொங்கலுமாக கொண்டாட்டங்கள் அமைகிறது. இந்நாளில் சகல ஒடுக்கப்பட்ட மக்களைப் பலப்படுத்தவும் அவர்களது சுபீட்சத்திற்கான குரலாக நாம் செயற்படவும் மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்துக் கொள்வோம்.
இலங்கைத் தமிழ் மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் இவ்வாண்டு மிக மோசமான அவலங்களுடாகப் பயணித்து தாங்கொண்ணாத் துயருடன் இப்புத்தாண்டை எதிர்கொள்கின்றனர். இவர்களது துயரத்தை அவ்வளவு இலகுவில் துடைத்திடவோ இவர்களது இழப்பை ஈடு செய்திடவோ புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் முடியாது. ஆயினும் முடிந்த அளவு அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து எதிர்கால நம்பிக்கையை ஊட்டுவது அவசியம். இப்புத்தாண்டு நாளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வன்னியில் உள்ள தம் உறவுகளின் நல்வாழ்விற்கு தங்களால் இயன்ற வழிகளில் உதவ முன்வர வேண்டும். அவர்களுக்கு புத்தூக்கம் அளித்திட வேண்டும்.
தைப் பொங்கலுக்கு தமிழீழம் வருடப்பிறப்பிற்கு தனிநாடு என்ற எண்பதுக்களில் உருவான வெற்றுக் கோசங்கள் இன்று தமிழ் மக்களை வரலாறு காணாத அழிவுக்குள் தள்ளியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள இத்தோல்வியானது அதற்குத் தலைமை கொடுத்த அரசியல் தலைமைக்கான தோல்வியே அல்லாமல் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியல்ல. சகல ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து தமிழ் மக்கள் தம் விடுதலைக்கும் அனைத்து மக்களது விடுதலைக்கும் நிச்சயம் குரல்கொடுப்பார்கள். அதற்கான காலத்தையும் நேரத்தையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்வார்கள். அவர்களுக்காக எப்போதும் எமது குரல்கள் ஒலித்த வண்ணமே இருக்கும். இருக்க வேண்டும்.
மகிழ்ச்சியையும் புத்தூக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கின்ற இந்நாளில் தேசம்நெற் கட்டுரையாளர்கள், கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். உங்கள் வாழ்வு ஒளிமயமானதாக அமைவதுடன் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒளிவீசுவதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
கடந்த காலங்களில் எம்முடன் இணைந்து வன்னி மக்களுக்கான உதவிகளைச் செய்ய முன்வந்த சிந்தனை வட்டம், அகிலன் பவுண்டேசன், லிற்றில் எய்ட் அமைப்புகளுக்கும் இவ் உதவியில் பங்கெடுத்துக் கொண்ட நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
1997ல் தேசம் சஞ்சிகையாக வெளிவந்து 2007 ஒக்ரோபர் முதல் தேசம்நெற் ஆக இணைய உலகில் கால்பதித்து 13வது ஆண்டில் தேசம் – தேசம்நெற் ஊடகத்துறையில் தனது பயணத்தைத் தொடர்கின்றது. கட்டுரையாளர்களின், கருத்தாளர்களின், வாசகர்களின் வாழ்த்துக்களுடன் இன்னும் பல பத்தாண்டுகள் எமது பயணம் தொடரும் என்று நம்புகின்றோம். உங்கள் அனைவரது ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் இன்றைய நாளில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தேசம்நெற்.