04

04

நீதிமன்றத் தீர்ப்பு ஊடக சுதந்திரத்துக்கு எதிரானதல்ல – ஊடகத்துறை அமைச்சர் விளக்கம்

anurapriyadarsanayapa.jpgதிஸ்ஸ நாயகம் ஓர் ஊடகவியலாளர் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அவருடைய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத் தண்டனை ஊடக சுதந்திரத்துக்கு எதிரானதல்ல என தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷய யாபா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டில் சட்டம் யாருக்கும் பொதுவானது. அனைவருக்கும் பார்க்கக்கூடிய வகையில் பகிரங்கமான முறையிலேயே அவருக்கெதிரான விசாரணைகள் நடைபெற்றன.

பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த விசாரணையின் அடிப்படையிலேயே அவருக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு இதற்கு மேலும் மேன்முறையீடுகளைச் செய்யலாம். அந்த அளவுக்கு நாட்டில் நீதிச் சுதந்திரம் உள்ளது.

சட்டத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துக்கொண்டு அது ஊடக சுதந்திரத்தை பாதிப்பதாகக் கூறுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் ஊடகச் சுதந்திரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாகக் கூற முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கி.மா. இறைவரி திணைக்களத்தின் அம்பாறை பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு

epcm.jpgகிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் அம்பாறை பிராந்திய அலுவலகத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் திறந்து வைத்தார்.கிழக்கு மாகாண சபையில் இறைவரி தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்;டதையடுத்து மூன்று  மாவட்டங்களிலும் இவ் அலுவலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, துரையப்பா நவரட்ணராஜா மற்றும் இறைவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த நாட்களாக அம்பாறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயததை மேற் கொண்டுள்ள முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அவ் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தி மற்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இச் சந்திப்பின் போது அவர் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆரர்யும் கூட்டமொன்றிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இக் கூட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் ,உறுப்பினர்கள் ,அதிகாரிகள் மற்றும் மாகாண அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவு

nimalsiripaladasilva.jpgமட்டக் களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரனையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார்.

100 கட்டில்களைக்கொண்ட புதிய வார்ட் தொகுதியொன்றும் 10 கட்டில்களைக் கொண்ட தீவிர கண்கானிப்புப் பிரிவொன்றும் இங்கு நிறுவப்படவுள்ளன. இதற்கான நிதி 10 கோடி ரூபா ஒருங்கிணைக்கப்பட்ட நிதியூடாகப் பெற்றுக்கொள்ளப்படும்.

ராகம போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு,  அறுவை சிகிச்சை நிலையம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட பிரிவுகளை அமைக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்காக 85 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டி பிரதான வைத்தியசாலையில் சிகிச்சைக்கான கட்டடம் ஒன்றை அமைக்கவும் 85 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இராக் மற்றும் சிரியாவுக்கு தண்ணீர் தர துருக்கி மறுப்பு

இராக் மற்றும் சிரியாவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக டைக்ரிஸ் மற்றும் யுப்பிரிட்டிஸ் நதிகளில் கூடுதல் தண்ணீர் விடும்படி இந்த நாடுகள் விடுத்த கோரிக்கையை துருக்கி நிராகரித்திருக்கிறது.

துருக்கியும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் இந்த நதிகளின் நீர்ப்பாசனப்பகுதியில் இருக்கும் தனது அண்டை நாடுகளின் வேண்டுகோளின்படி கூடுதலாக விடுவதற்கு மேலதிக தண்ணீர் தம்மிடம் இல்லை என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.

கூடுதல் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பில் துருக்கி முன்பு கொடுத்த வாக்குறுதியை மதித்து நடக்கவில்லை என்று இராக் புகார் தெரிவித்துள்ளது.

ஆனால் சட்டரீதியாக தான் திறந்துவிடவேண்டிய அளவை விட கூடுதல் தண்ணீரை ஏற்கனவே திறந்து விட்டுவிட்டதாக துருக்கி பதிலளித்துள்ளது.

யுஎஸ் ஓபன் டென்னிஸ்- சானியா தோல்வி

sania-mirza1111.jpgயுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கிறது. பெண்கள்  ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, இத்தாலியின் பிளாவியா பென்னட்டாவை எதிர் கொண்டார்.

இதில் தவறு மேல் தவறு செய்த சானியா முதல் செட்டை 0-6 என இழந்தார். இரண்டாவது செட்டையும் அவர் அதே செட்களில் பறி கொடுத்தார். இறுதியில் 0-6, 0-6 என ஒரு கேமை கூட கைப்பற்றாமல் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக கடன்

pr-mahi.jpgபிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிதியத்திடமிருந்து 70.6 மில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரனையை நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்திருந்தார். இத்திட்டத்தின்படி ஊவா பிரதேசத்தில் 200 கிலோ மீற்றர்,  கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 100 கிலோ மீற்றர் வீதியும் புனரமைக்கப்படவுள்ளது.

தெற்குப் பிரதேச பெருந்தெருக்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பின்னதுவ எனுமிடத்திலிருந்து கொடகம வரைக்கும் நான்கு வழிப் பாதை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.  இத்திட்டத்தின்படி கொட்டாவை முதல் தொடங்கொட வரை 34.3 கிலோ மீற்றரும் தொடங்கொட முதல் குறுந்துகஹ ஹெதக்ம எனுமிடம் வரை 31.7 கிலோ மீற்றரும் சர்வதேச உதவியுடன் வீதி அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் 2011ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மலேஷியாவில் தொழில்வாய்ப்பு

எல். ரி. ரி. ஈ. இயக்கத்தில் சிறுவர் படைப் பிரிவில் இருந்து சரணடைந்தவர்களில் ஏழு பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு மலேசியாவில் பணியாற்ற அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கு மலேசியா செல்வதற்கான விமான டிக்கெட்டுக்களும் விசாக்களும் நேற்று பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வைத்து வழங்கப்பட்டன. எல். ரி. ரி. ஈ. அமைப்பில் சேர்ந்து செயலாற்றி அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 147 இளைஞர்கள் இதற்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இந்நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் புனர்வாழ்வளிப்பதற்காக இன்னும் எல். ரி. ரி. ஈ. உறுப்பினர்கள் 10,000 பேர் வரையில் இருப்பதாக புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

விஜய் படம்… கைவிட்டது ‘ஏஸ்கர்’?

rahul_vijay.jpgஅரசியல், காங்கிரஸ் கட்சியுடன் பேரம், ராஜ்ய சபா எம்பி என விஜய் நாளும் ஒரு ஷோ காட்டிக் கொண்டிருக்க, அவரை வைத்து அடுத்த படம் தயாரிக்கும் திட்டத்திலிருந்த ஏஸ்கர் பிலிம்ஸ் அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

விஜய்க்கு பெரும் திருப்புமுனை தந்த காதலுக்கு மரியாதை படத்தை ஒரிஜினலாக தயாரித்தவர் சங்கிலி முருகன். ஒரு கட்டத்தில் படத்தின் மீது நம்பிக்கை இழந்த சங்கிலி, படத்தை ஏஸ்கர் பிலிம்ஸுக்கு கைமாற்றி விட்டாராம், சுமாரான லாபத்துக்கு. அதுதான் ஏஸ்கர் தயாரிப்பில் வந்த முதல் படமாக ஆனது.

இப்போது மீண்டும் விஜய் நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் திட்டத்திலிருந்தாராம் ஏஸ்கர் நிறுவன உரிமையாளர். ஆனால் இந்த நேரம் பார்த்து விஜய் நாளும் அரசியல் குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து, என்ற எச்சரிக்கை உணர்வில் படத்தைக் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இடம்பெயர்ந்தோரை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது – மங்கள சமரவீர

mangala2222.jpgவவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த இடம்பெயர்ந்தோரை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில், இடம்பெற்ற சுதந்திர மேடை செய்தியாளர் மாநாட்டில், உரையாற்றிய அவர் இடம்பெயர்ந்தோருக்கு தேவையான இடங்களுக்கு சென்று வர உரிமை இருக்கிறது. ஏனைய இடங்களில் உள்ள தமது உறவினர்களிடம் செல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
 
இந்த நிலையில் அவர்களை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது என மங்கள சமரவீர குறிப்பிட்டார். தெளிவான ரீதியில் அவர்கள் பதிவு செய்யப்பட்டு, பொது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். எனினும், இந்த நலன்புரி முகாம்களில் அனைத்துப் பணிகளையும் இராணுவமே மேற்கொண்டு வருகின்றது.
 
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்கள் சிறைக்கூடமோ அல்லது வதைக்கூடமோ இல்லை என கூறவேண்டுமானால் அங்கு இடம்பெறும் அனைத்து நிர்வாகப் பணிகளும் சதாரண சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, இந்த முகாம்களை வந்து பார்வையிட சர்வதேச நிறுவனங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும். இல்லையெனில், அரசாங்கம் கூறும் பொய்களுக்கு சர்வதேசம் ஏமாற்றப்படுமானால், சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலை இந்த நாட்டிற்கு ஏற்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்தோனீசிய நில நடுக்கப் பகுதிகளுக்கு நிவாரணங்கள் செல்கின்றன

indonesia.jpgபலமான நிலநடுக்கத்தால் நேற்று புதன்கிழமையன்று மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனீசிய கிராமங்களுக்கான நிவாரணங்கள் வந்து சேரத் தொடங்கியுள்ளன.

மேற்கு ஜாவாப் பகுதியில் இருக்கும் சில மாவட்டங்களுக்கு உணவும் குடிநீரும் சென்றடைந்துள்ள போதிலும், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தொலைதூர கிராமங்கள் இன்னமும் தொடர்புகள் இல்லாமல் துணடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளன.

மழையும், பாதிக்கப்பட்டுள்ள சாலைகளும் அந்தப் பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை எடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பத்தியேழாக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தின் காரணமாக புதையுண்ட மனிதர்களை தோண்டியெடுக்கும் பணிகளை வெறும் கைகளை கொண்டே போலீசாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் எழுநூறு கிலோமீட்டர்களுக்கு உணரப்பட்டன.