August

August

அலிக் அலுவிகாரவின் மூன்றாம் மாத நினைவஞ்சலியில் ஜனாதிபதி

normal_.jpgஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்; அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாத்தளை மாவட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கிய அலிக் அலுவிகாரயின் மூன்றாம் மாத நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது இல்லத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
 
இந்த வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி சினோகபூர்வமாக கலந்துறையாடினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசாங்கம் 3 மில். அ.டொலர் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்காக இந்திய அரசாங்கம் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

இவை ஐ.நா அமைப்புக்களினூடாக நிவாரணக் கிராமங்களில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இவற்றின் ஒரு தொகுதியை இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் நேற்று ஐ.நா வதிவிட பிரதிநிதி நீல் பூனேயிடம் கையளித்தார். மேற்படி அறுநூறு தொன் நிவாரணப் பொருட்கள் கடந்த எட்டாம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்நிவாரணப் பொருட்களுள் ஆறு இலட்சம் பக்கற்றுக்களுக்கு அதிகமான உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், உடுதுணிகள், வீட்டு உபகரணங்கள், சிறுவர்களுக்கான ஆடைகள், பாதணிகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நிவாரணக் கிராமங்களிலிருக்கும் சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களே நேற்று யு. என். வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டன.

“தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம்’ உலக ஆய்வு மாநாடு அக்டோபர் 3 – 6 வரை

muslim-prayer.jpgதென் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தனது 1 ஆவது உலக ஆய்வு மாநாடொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. “தமிழ்பேசும் முஸ்லிம் மக்களின் தமிழியல் பண்பாடு சமூகம்’ எனும் தலைப்பில் நடத்தவுள்ள இந்த உலக ஆய்வு மாநாடு நம்நாட்டிலும் பிற நாடுகளிலுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்களை ஒன்று சேர்ப்பதுடன் மனிதப்பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தம் கருத்துகளைப் பகிரவும் அறிவினை அகல்விக்கவும் உதவுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டை எதிர்வரும் அக்டோபர் 3 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேற்படி உலக ஆய்வு மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர்களுள் ஒருவரும் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கே.ரகுபரன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பங்குபற்ற விரும்பும் உலகின் பன்னாட்டு ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் பட்டமேற்படிப்பு மாணவர்களையும் மாநாட்டின் புரவலர்களும் ஒழுங்கமைப்பாளர்களும் வரவேற்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தெரிவித்துள்ளது.

மாநாட்டில் பங்குபற்றி கட்டுரை படிக்க விரும்புபவர்கள் “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல்பண்பாடு, சமூகம்’ எனும் கருப்பொருளுக்குட்பட்டு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், நுண்கலை, கல்வி, அரசியல், பொருளியல், தமிழ் பேசும் முஸ்லிம்களின் மறுமலர்ச்சி எனும் ஏதாவது தலைப்பில் ஆய்வுச் சுருக்கத்தினையும் கட்டுரையையும் சமர்ப்பிக்கலாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பங்குபற்ற விரும்புபவர்கள் மாநாட்டு ஒழுங்கமைப்பு செயலாளர்களான கே.ரகுபரன்(சிரேஷ்ட விரிவுரையாளர்),ஜனாபா எம்.ஏ.எஸ்.எப். சாதியா (விரிவுரையாளர்) ஆகியோருடன் 0094718218177,0094718035182 எனும் கைத்தொலை பேசிகளுக்குகோ,மொழித்துறை,தென் கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் எனும் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

இராணுவ வீரரின் அடையாள அட்டையை பயன்படுத்தி தற்கொலையாளி அ.புரம் வந்தார்

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட குழுவினரை படுகொலை செய்த தற்கொலையாளி யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரின் அடையாள அட்டையை உபயோகித்தே அநுராதபுரத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இக்கொலையை புலிகள் இயக்கமே செய்துள்ளதாகவும் தற்கொலையாளியின் பெயர் வசந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர் கல்முனை பிரதேச சிங்கள ஹோட்டல் ஒன்றில் வேலைசெய்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஏனைய சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் தர்சிகா விமலசிறி உத்தர விட்டார்.

சியம்பலாப்பேயில் தாழ்நிலப் பகுதியிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

police_man.jpgபியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாப்பே சந்திக்கருகிலுள்ள பிரதேசமொன்றிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். சியம்பலாப்பே சந்தியிலிருந்து சப்புகஸ்கந்த பக்கமாக சுமார் 100 மீற்றர் தூரத்திலுள்ள தாழ் நிலப்பகுதியொன்றிலிருந்தே இந்த சடலங்கள் இரண்டும் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர கூறினார்.

சடலங்கள் இரண்டும் அடையாளம் காண முடியாத அளவுக்கு பழுதடைந்த நிலையிலிருப்பதுடன் இவர்கள் இருவரும் சுமார் 4 நாட்களுக்கு முன்னதாக ஊயிரிழந்தவர்களாக இருக்கலாமென கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பியமக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

மட்டு. நீதிமன்றில் இந்திய வியாபாரிகள் எச்சரிக்கப்பட்டு இன்று விடுதலை

court222.jpgவியாபார விசா இன்றி மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரிகள் 7 பேரையும் இன்று குற்றவாளியாகத் தீர்மானித்த மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் எச்சரிக்கையுடன் விடுதலை செய்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கருப்பையா ராமசாமி, மாரியப்பன் ராமகிருஸ்ணன், மாரியப்பன் சின்ன சுப்பையா, சின்னவேல் சுப்பையா, ராமு சுப்பிரமணியம், ராஜகோபால் ஜீவானந்தம், சாந்தப்பன் முருகன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டு இன்று வரை இவர்கள் 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டுக்குள் நுழைந்து சட்ட விரோதமான முறையில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டதாகப் பொலிசாரால் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இன்று மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி வீ.இராமக்கமலன் முன்னிலையில் மீண்டும் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்களைக் குற்றவாளியாகக் கண்ட நீதிபதி தலா ரூபா 2000 அபராதம் விதித்து, வியாபார விசா இன்றி வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் விடுதலை செய்தார்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி புடைவைகளை அவர்களிடமே ஒப்படைக்குமாறும் பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் கடந்த 5 வருடங்களாக வீடுவீடாகவும் காரியாலயங்கள் தோறும் சென்று புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும், கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.

பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்றிகோ மரணம்

paffrel-888.jpgதேர்தல் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றான “பவ்ரல்’ அமைப்பின் ஸ்தாபக தலைவரான கிங்ஸ்லி ரொட்றிகோ நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது 55 ஆவது வயதில் காலமானார். கிங்ஸ்லி ரொட்றிகோ மாரடைப்பு காரணமாகவே காலமானதாக அவரது குடும்பத்தை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவரான கிங்ஸ்லி ரொட்றிகோ பட்டதாரியும் ஆவார். இவர் சமூகப் பணியாளராவதற்கு முன்னர் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்ததுடன் சந்தைப்படுத்தல் துறையில் சிறப்பு வாய்ந்தவராகவும் இருந்திருக்கிறார்.

ரொட்றிகோ நேற்று காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே சுகயீனமுற்றிருந்தார். அன்னாரது பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக மாலபே, மிஹிந்து மாவத்தையிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

மகள் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்திலுள்ள கையெழுத்து அவருடையதல்ல என்கிறார் தந்தை

girl2222.gifகொழும்பு பௌத்தாலோக மாவத்தை பிரதேசத்திலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட இரு தமிழ் யுவதிகளின் சடலங்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தைச் சேர்ந்த யுவதிகளான ஜீவராணி மருதவீரன் (வயது 17), எல்.சுமதி (வயது 16) இருவரும் நேற்று முன்தினம் சனிக்கிழமை பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ரஷ்யா கார் பார்க்கிற்கு பின்புறமாக இருக்கும் கழிவு நீர் கால்வாயில் சடலங்களாகக் கிடந்த நிலையில் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் நீரில் மூழ்கியதனாலேயே உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பௌத்தாலோக மாவத்தையிலுள்ள இருவீடுகளில் இருவரும் பணிப் பெண்களாக வேலை செய்து வந்துள்ளதுடன், அதில் ஒரு வீட்டார் வெளியிடத்திற்குச் செல்வதற்காக அவர்கள் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவரை மற்றையவர் பணிப்பெண்ணாக இருந்த வீட்டில் ஒன்றாக விட்டுச் சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சம்பவத்திற்கு முன்னராக சுமதி எனும் யுவதியினால் தமிழில் கடிதமொன்று எழுதப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும், நேற்று தனது மகளின் சடலத்தை பொறுப்பேற்க வந்திருந்த சுமதியின் தந்தையோ அந்தக் கடிதத்தில் இருப்பது தனது மகளின் கையெழுத்து இல்லை என்றும் அக்கடிதத்தை வேறுயாரோ எழுதியிருப்பதைப் போன்று இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அத்துடன், தங்கள் இருவரையும் வந்து அழைத்துச் செல்லுமாறு சுமதி தன்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்திருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மடு சென்று திரும்பிய வான் மரத்துடன் மோதி ஐவர் காயம்

மடுமாதா திருவிழாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களின் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.  சிலாபம்புத்தளம் வீதியில் பத்துலுஓயா பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்து சிலாபம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தல் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சாரதி கண் அயர்ந்ததே இந்த விபத்துக்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
 

தோட்ட யுவதிகள் மரணம் தொடர்பாக சிறுவர் உரிமை மீறல் வழக்குக்கு முஸ்தீபு

court222.jpgநுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா லக்ஷபானா தோட்டத்தைச் சேர்ந்த இருயுவதிகள் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 16, 17 வயதுடைய இந்தப் பெண்களை வேலைக்கு அமர்த்தியமை உரிமை மீறல் என்றும் இது தொடர்பாக சிறுவர் உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாகவும் கண்டி மனித அபிவிருத்தி தாபனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு பௌத்தாலோகா மாவத்தையிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட இரு யுவதிகளின் பெற்றோர்களைக் கண்டி மனித அபிவிருத்தித் தாபன பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் நேரில் சந்தித்து விபரங்களைத் திரட்டியுள்ளார்.

மேலும் அதே தோட்டப் பிரிவின் இன்னும் 30 யுவதிகள் இவ்வாறு கொழும்பில் பணிப்பெண்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இவர்களை வேலையில் அமர்த்தியுள்ளோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சகல விபரங்களையும் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் உயிரிழந்த மேற்படி இரு யுவதிகளுக்காக இன்று சிறுவர் உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கென அத்தோட்டப் பிரிவில் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்தக் குழுவினர் கிராம சேவையாளர் சமூக உத்தியோகத்தர், தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்களிடம் இந்த யுவதிகள் தொடர்பான விபரங்களைத் திரட்டுமாறும் அவர் கேட்டுள்ளார்.