தென் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தனது 1 ஆவது உலக ஆய்வு மாநாடொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. “தமிழ்பேசும் முஸ்லிம் மக்களின் தமிழியல் பண்பாடு சமூகம்’ எனும் தலைப்பில் நடத்தவுள்ள இந்த உலக ஆய்வு மாநாடு நம்நாட்டிலும் பிற நாடுகளிலுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்களை ஒன்று சேர்ப்பதுடன் மனிதப்பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தம் கருத்துகளைப் பகிரவும் அறிவினை அகல்விக்கவும் உதவுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாட்டை எதிர்வரும் அக்டோபர் 3 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேற்படி உலக ஆய்வு மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர்களுள் ஒருவரும் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கே.ரகுபரன் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பங்குபற்ற விரும்பும் உலகின் பன்னாட்டு ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் பட்டமேற்படிப்பு மாணவர்களையும் மாநாட்டின் புரவலர்களும் ஒழுங்கமைப்பாளர்களும் வரவேற்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தெரிவித்துள்ளது.
மாநாட்டில் பங்குபற்றி கட்டுரை படிக்க விரும்புபவர்கள் “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல்பண்பாடு, சமூகம்’ எனும் கருப்பொருளுக்குட்பட்டு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், நுண்கலை, கல்வி, அரசியல், பொருளியல், தமிழ் பேசும் முஸ்லிம்களின் மறுமலர்ச்சி எனும் ஏதாவது தலைப்பில் ஆய்வுச் சுருக்கத்தினையும் கட்டுரையையும் சமர்ப்பிக்கலாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பங்குபற்ற விரும்புபவர்கள் மாநாட்டு ஒழுங்கமைப்பு செயலாளர்களான கே.ரகுபரன்(சிரேஷ்ட விரிவுரையாளர்),ஜனாபா எம்.ஏ.எஸ்.எப். சாதியா (விரிவுரையாளர்) ஆகியோருடன் 0094718218177,0094718035182 எனும் கைத்தொலை பேசிகளுக்குகோ,மொழித்துறை,தென் கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் எனும் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.