18

18

கண்டி உதவி இந்திய தூதரகத்தினால் நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு

school-books.jpgகண்டி உதவி இந்திய தூதுவராலயத்தில் மத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும்.

சிறுவர்களுக்கு பயன்தரும் நூல்கள் அடங்கிய தொகுதி இந்நிகழ்வில் வழங்கப்படவுள்ளது. காலை 10.30 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் நூல்களைப் பெறும் பாடசாலைகளுக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் அல்லது பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆசிரியர் வருகை தந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கொட்டதெனிய ரூ.10 கோடி கொள்ளைச் சம்பவம்; சிங்கப்பூர் தப்ப இருந்த வேளை சூத்திரதாரி மடக்கிபிடிப்பு

கொட்டதெனிய 10 கோடி ரூபா கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரியான நகை மாளிகை உரிமையாளரொருவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் செல்ல முயன்ற வேளை, அம்பலாங்கொடையில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 92 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தினகரனுக்குத் தெரிவித்தார்.

பொலிஸாரிடம் சிக்காமல் தப்பியோடிய இருவருள் ஒருவரே இவரென்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அம்பலாங்கொடையில் வைத்து ரொயொட்டா வீஓஎல் காரில் கொள்ளையிட்ட பணத்துடன் சென்று கொண்டிருக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். கபில டி சில்வா என்ற இந்த நபர் சிங்கப்பூருக்குச் செல்வதற்கான விமானப் பயணச் சீட்டைத் தயார்படுத்தியிருந்ததாகவும், அவரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

விமானப் படையில் இருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தப்பியோடிய அவர், அம்பலாங்கொடையில் நகைமாளிகை நடத்தி சுகபோகமாக வாழ்ந்து வருபவரென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பீ. தெரிவித்தார்.

குருநாகலில் இரண்டு தனியார் வங்கிக் கிளைகளில் சேகரிக்கப்பட்ட 10 கோடி ரூபா பணத்துடன் நிறுவனத்தின் காவலர்கள் கிரியுல்லை வழியாகக் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கொட்டதெனியவில், பொலிஸ் சீருடையை ஒத்த ஆடை அணிந்திருந்த ஆயுததாரிகள் அறுவர் அந்த வாகனத்தை சோதனையிடுவதற்காக நிறுத்தியுள்ளனர். உடனே வாகனத்தில் வந்தவர்கள் இறங்கி தம்மை அடையாளப்படுத்த முற்பட்ட வேளை, அவர்களைப் பிடித்துக் கட்டிப் போட்ட ஆயுததாரிகள் பண மூடைகளை ஏற்கனவே தயாராக வைத்திருந்த வாகனங்களில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

விடயம் உடனடியாக குருநாகல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கொள்ளையர்களைத் துரத்திச் சென்றுள்ளனர். அதன் போது எட்டரை கோடி ரூபா பணத்துடன் நால்வரை பொலிஸார் மடக்கிப் பிடித்து விட்டனர். எனினும் இருவர் ஒன்றரை கோடி ரூபாவுடன் தப்பிச் சென்றுவிட்டனர். அதில் ஒருவரே அம்பலாங்கொடையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வேண்டாம் பொலிஸ் தலைமையகம் மக்களுக்கு அறிவுறுத்தல்

housemaids.jpgசட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயற்சிக்க வேண்டாமென பொது மக்களிடம் அரசும் பொலிஸ் தலைமையகமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  கடந்த காலகட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற நபர்கள் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் தற்காலிக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந் நபர்களின் ஒரு பகுதியினர் அவுஸ்திரேலியா அதிகாரியினால் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந் நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் மக்களுக்கு பொய் உத்தரவாதங்களை வழங்கி அவர்களை ஏமாற்றி இவ்வாறாக சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஊக்கமளிக்கின்றனர். இவ்வாறான வஞ்சக நபர்களிடம் அவர்களின் வார்த்தைகளினால் ஏமாறுபவர்கள் பெரும் பணத்தொகையினை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதுடன், தமது வாழ்க்கையை பலிகொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன.

எனவே இதன் பின்னராவது சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என அரசாங்கமும் பாதுகாப்பு பிரிவினரும் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் மழை – களுகங்கை நீர் மட்டம் உயர்வு

rain2.jpgமேல் மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் நேற்று கடும் மழை பெய்ததாக காலநிலை அவதான நிலையம் அறிவித்தது. அதன்படி, கொழும்பில் ஓரளவு மழை பெய்துள்ளது. களுத்துறை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கூடிய மழை வீழ்ச்சி ஹங்வெல்லயில் பதிவாகியுள்ளது. (63.3 மி. மீ.) அதேவேளை லபுகலவில் 60.6 மி. மீ., கலட்டுவாவயில் 49 மி. மீ., மத்துகமவில் 31.6 மி. மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் மீண்டும் இடையிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக இம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தோட்டங்களில் பால் சேகரிக்கும் பணி, சீவல் தொழில் என்பன முற்றாகவே ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். களுகங்கையின் நீர் மட்டமும் கூடியுள்ளன.

டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறவேண்டும் – டாக்டர் ஷாலினி

dengu_1.gif“எமது நாட்டில் தற்போது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ள டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகி அதற்கான ஆலோசனையைப் பெறவேண்டும். காய்ச்சல், தொண்டை நோ, தலைவலி, வயிற்றுவலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் டெங்கு நோய்க்கானவையாகவும் இருக்கலாம்’ என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் டாக்டர் ஷாலினி அறிவுரை வழங்கினார்.

கொழும்பு சேர் ராசிக் பரீட் வித்தியாலயத்தில் நடைபெற்ற இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மேல் கொழும்பு தரம்2 பாடசாலைகளுக்கான விஞ்ஞான தின விழாவில் உரையாற்றும் போதே அவர் இந்த ஆலோசனையைத் தெரிவித்தார். விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பாரியார் திருமதி காமினி விதாரணவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டாக்டர் ஷாலினி தொடர்ந்து உரையாற்றுகையில்;

“தற்போது எமது நாட்டில் டெங்கு நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதும் எம்மை கதிகலங்க வைக்கிறது. ஏடிஸ் எஹிப்டிக் என்னும் பெண் நுளம்பினால் பரவும் இந்த நோய் ஒரு வைரஸ் நோயாகையால் இதனை மருந்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. சிகிச்சை பயனளிக்காத நிலைமையையே காண முடிகிறது.

இந்த நோயில் சாதாரண டெங்கு  வகை தலைவலி, பசியின்மை, உடல் வலி, காய்ச்சல் என்பவற்றை விளைவித்தாலும் பெரும்பாலும் மூன்று நாட்களில் குணமாகிவிடும் சாத்தியம் உண்டு. ஆனால், குருதிக் காய்ச்சல் டெங்கு பேராபத்தை விளைவிக்கும் நோயாகும். அநேகமாக 15 வயதுக்குட்பட்ட சிறார்களையே அது பாதிக்கின்றது.

நோய் முற்றிய பின்பு வைத்தியரை நாடுவதில் எவ்வித பயனுமில்லை. உடல் சோர்வு அதிகரித்து, இரத்த அழுத்தம் குறைந்து போகும் அறிகுறி தென்பட்டால் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே, நோய் வருமுன் காப்பதே சிறந்தது. இந்த நோயைப் பரப்பும் நுளம்பை முதலில் ஒழித்துக் கட்டவேண்டும்.

குறைந்தது 5 மில்லி லீற்றர் நீர் எங்காவது தேங்கி இருந்தால் கூட இந்த நுளம்பு இனவிருத்தி செய்துவிடும் ஆற்றல் பெற்றது. எனவே உங்கள் வீட்டுச் சுற்றுப்புறச் சூழலில் நீர்தேங்கியிருந்தால் அதை உடனடியாகச் சுத்தப்படுத்துங்கள். சகலரதும் ஒத்துழைப்பு இருந்தாலே இந்த நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்’ என்றார்.

ஊடகவியலாளர் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ. 100 மில். வழங்க அரசு இணக்கம் -மாற்றுத் திட்டமொன்றை அமுல்படுத்த அமைச்சு தீர்மானம்

ஊடகவியலாளர் களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைத்து மாற்று திட்டமொன்றை அமுல்படுத்த மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. மேற்படி ஓய்வூதிய திட்டத்துக்கு அரசின் ஒருங்கிணைந்த நிதியினூடாக 100 மில்லியன் ரூபா வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

ஊடக அமைச்சும், சமூக சேவைகள் சமூக நல அமைச்சும் இணைந்து மேற்படி ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டமொன்றை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. ஆனால் மாதாந்தக் கொடுப்பனவு செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் மாதாந்தக் கொடுப்பனவு செலுத்தாமல் ஒதுங்கியுள்ளனர். இதனால் இந்தத் திட்டம் ஒழுங்காக செயற்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக மாற்று யோசனைகள் பெற்று புதிய திட்டமொன்றை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு தமது யோசனைகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்புமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரப்பட்டுள்ளது.