03

03

இலங்கை அரசு, வணங்கா மண் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றியமை சர்வதேச விதிகளுக்கு மாறானது: கப்டன் முஸ்தபா

_vanankaman-captionali.jpgஇலங்கை சென்ற வணங்காமண் கப்பலை சோதனை நடத்தி, ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்த பின்னரும் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றினர். இது சர்வதேச விதிகளுக்கு மாறானது என கப்பலின் கப்டன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.  பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கோல்கட்டா செல்கிறோம் என்றார்.

இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு, நிவாரணப் பொருட்களுடன் நடுக்கடலில் நின்று கொண்டிருந்த, “வணங்கா மண்’ கப்பல், நேற்றிரவு சென்னைத் துறைமுகத்திற்குள் வந்தது. கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு, சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.

தற்போது கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கொல்கத்தா செல்கிறோம் என்றார். இதைத் தொடர்ந்து, “வணங்கா மண்’ கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டு, கன்டெய்னர்களில் ஏற்றப்படுகின்றன.

இவை, வழக்கமாக செல்லும் சரக்கு கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன. இரண்டு நாட்களில், இந்த பணிகளை முடித்து, நிவாரணப் பொருட்கள் கொண்ட சரக்கு கப்பல் இலங்கைக்கு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது

மீள்குடியேற்ற இடங்களுக்கு அதிகாரிகள் விஜயம்

வடக்கே வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட மீள்குடியேற்ற பகுதிகளுக்கு உயர்அதிகாரிகள் புதன்கிழமை விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்துள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் குழு கனகராயன்குளத்திற்கும், வவுனியா பிரதேச செயலக அதிகாரிகள் குழு பாலமோட்டை நவ்வி போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தனர்.

அரச அதிகாரிகள் சென்று தமது கடமைகளை செய்யக்கூடிய சாதகமான நிலை உள்ளதா என்பதை அறியவே இவர்களுடைய விஜயம் அமைந்திருந்தது. புதைந்துள்ள வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வெடிபொருட்கள் இல்லை என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டவேண்டுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதைந்துள்ள வெடிபொருட்களை அகற்ற இந்திய கண்ணி வெடி அகற்றும் நிபுணர் குழுவினர் இங்கு வரவுள்ளனர்.இதற்கிடையே விடுவிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தில் பல கிராமங்களில் அரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. இதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தேசிய சாகித்திய விழா பொலன்நறுவையில்

mahinda_yapa_abeywardene.jpgஇவ் வருடத்துக்கான தேசிய சாகித்திய விழாவை பொலன்நறுவை, ரோயல் கல்லூரியில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கான பிரேரணையை கலாசார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன சமர்ப்பித்திருந்தார்.

இந்த விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்த விழாவுடன் தொடர்புள்ள சகல அமைச்சுக்களின் ஒத்துழைப்புக்களும் இதற்குப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இருவருட பயிற்சிக்காக சென்றுள்ள ஆசிரியர்கள் தமது பயிற்சியைத் தொடர அனுமதிக்கப்படுவர்

இருவருட உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றுள்ள மலையக ஆசிரியர்கள் தொடர்ந்து தமது பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவரெனவும் இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாகவும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளில் நியமனம் பெற்று உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் கல்லூரிக்குச் சென்ற மலையக ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களது பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.

சப்ரகமுவ மாகாண தோட்டப் பாடசாலைகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு சப்ரகமுவ மாகாணசபை இருவருட உள்ளகப் பயிற்சிக்குச் செல்ல அனுமதி வழங்கவில்லை. வழங்கப்பட்ட நியமனத்தில் மோசடிகள் காணப்படுகின்றன. இதனால் இவ்வாசிரியர்களுக்கு மீள் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவில்லையெனவும் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பயற்சிகளுக்கு செல்லமுடியும் எனவும் மாகாணசபை அறிவித்து வருகின்றது.

இந்நிலையில், ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பித்த சிலருக்கு இருவருட உள்ளகப் பயிற்சிகளை தொடர சில கல்லூரி நிர்வாகங்கள் அனுமதியளித்துள்ளன. இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் தமது பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெறுபவர்களும் உடனடியாக தாம் கடமை செய்த பாடசாலைக்குத் திரும்பவேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிலருக்கு வலயக்கல்விப் பணிமனையூடாக இது குறித்து அறிவித்து வருகின்றது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் என்னிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் முறையிட்டனர். உடனடியாக இது குறித்து மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி இதற்கான உறுதிமொழியை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

2008-2009: வெட்டுப்புள்ளிகள் வெளியாகின: 20,270 மாணவர் பல்கலைக்கழக அனுமதி

visvawarnapala.jpg2008 – 2009ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கென 20,270 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான வெட்டுப் புள்ளிக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 620 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2008 – 2009 ஆம் கல்வி ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில் :-

பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்தபட்ச தகமைகளை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 236 (1,30,236) பேர் பெற்றிருந்தனர். இவர்களில் 46 ஆயிரத்து 010 (46,010) பேர் விண்ணப்பித் திருந்தனர். இவற்றில் 20 ஆயிரத்து 270 பேர் அனுமதி க்கப்படவுள்ளனர்.

19,340 பேர் வழமையான அனுமதி நடைமுறைக்கமையவும், மிகுதியுள்ள 930 மாணவர்கள் விசேட நடைமுறைக்கமையவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவம், கலை, பொறியி யல் உட்பட 86 வகையான பாடநெறிகளுக்கே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 3724 மாணவர்கள் கலைத் துறைக்கும், 3139 மாணவர்கள் முகாமைத்துவ துறைக்கும், 1718 மாணவர்கள் பெளதீக விஞ்ஞான துறைக்கும், 1196 மாணவர்கள் பொறியியல் துறைக்கும், 1140 மாணவர்கள் மருத்துவ துறைக்கும் மற்றும் 1110 மாணவர்கள் உயிரியல் விஞ்ஞானத் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 86 பாடநெறிகளுக்கு 19,340 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, 2008 – 2009 கல்வி ஆண்டிற்கென ஐந்து புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக விஞ்ஞானம் மற்றும் மீன்பிடி (Animal Science & Fisheries), ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் நீரியல் வள தொழில் நுட்பம் (Aquatic Resources Technology and Value Addition), தெங்கு மற்றும் அதனுடைய லேடெக் தொழில் நுட்பம் (Palm and Latex Technology and Value Addition), உபசரிப்பு, சுற்றுலா மற்றும் நிகழ்ச்சி முகாமைத்துவம் (Hospitality, Tourism and Events Management) வயம்ப பல்கலைக்கழகத்தில் உணவு தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப முகாமைத்துவம் (Food Production and Technology Management) ஆகிய பாடநெறிகளே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாடநெறிகள் ஒவ்வொன்றுக்கும் ஆரம்ப கட்டமாக 50 மாணவர்கள் வீதம் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனரென்றும் அமைச்சர் விஸ்வவர்ணபால மேலும் தெரிவித்தார்.

எதிர்கால அரசியல் வியூகம் எதிர்க்கட்சி கூட்டமைப்பு ஆராய்வு

ஐக்கிய தேசியக் கட்சி மேலக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு ஆகியவற்றைக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான கேம்ப்ரிட்ஜ் றெரஸிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி., முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மக்கள சமரவீர ஆகியோரே இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.  இதேநேரம், இந்த கூட்டமைப்புக்கான இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கென ஐ.தே.க. அரசியல் குழுவினரால் நியமிக்கப்பட்ட அக் கட்சியின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

இக்குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை அரசியல் குழுவினால் ஆராய்ந்து அங்கீகரிக்கப்பட்டு அதன் பின்னர் ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்திடம் அனுமதி பெறப்படுமென அக் கட்சியின் தவிசாளரான காமினி ஜயவிக்ரம பெரேரா கூறினார்.

இதேநேரம், இந்த அறிக்கையூடாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் பொது இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்படும் இறுதி அறிக்கையே கூட்டமைப்பின் கொள்கை அறிக்கையாக இருக்குமென மனோகணேசன் எம்.பி.கூறினார்.

வன்னி முகாம்களிலுள்ள மாணவர்க்கு விசேட வகுப்பு

schoolgirls-sri-lanka.jpgவன்னி இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மாணவர்களின் நலன்கருதி விசேட வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மற்றும் உயர்தர வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விசேட உபகார வகுப்புகளை நடத்துவது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தவுள்ளதாகவும் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு மனநிலை பாதிப்புற்ற மாணவர்களை அடையாளப்படுத்தி ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் பிரதிக்கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் தெரிவித்தார். மேலும், அம் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி உயர்தரப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்யவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

இந்த உபகார வகுப்புகளை நடத்துவது தொடர்பாக கொழும்பிலுள்ள பிரபல தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் உதவியைப் பெற்று மேலதிகமான வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.  கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் லால் நோனீஸ் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் மேற்படி வகுப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எகிப்தில் இந்தியப் பிரதமரை ஜனாதிபதி சந்திப்பார்

he_president.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம் மாத நடுப்பகுதியில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவிருப்பதாக அறியவருகிறது.  எகிப்தில் இந்த சந்திப்பு நடைபெறவிருக்கிறது. எகிப்தின் சார்ம் எல்ஷெய்க் நகரத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் அணிசேரா அமைய நாடுகளின் 15 ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவரும் சந்தர்ப்பத்திலேயே இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாநிதி மன்மோகன் சிங் இரண்டாவது தடவையாக இந்திய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த அவரை சந்திக்கும் முதலாவது சந்திப்பாக இது அமையும்.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் அணிசேரா இயக்க நாடுகளின் 15 ஆவது உச்சிமாநாடு நிகழ்வுகள் முதல் 4 நாட்களுக்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்கள் நடைபெறவுள்ளன இறுதி இரு தினங்களான 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டுத் தலைவர்களின் மாநாடு நடைபெறவிருக்கிறது.

இதில் கலந்துகொள்வதற்கென ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம அடங்கலான உயர்மட்ட தூதுக் குழு எகிப்து செல்லவிருக்கிறது.

இந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ள வரும் இந்தியப்பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடனான இருதரப்பு சந்திப்புக்கு இலங்கை சார்பில் அனுமதிகோரப்பட்டிருப்பதாகவும் அதற்கான அனுமதி கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் யுத்தத்தின் பின்னரான, அரசாங்கத்தின் தற்போதைய மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தீர்வு குறித்த செயற்பாடுகள் பற்றி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடனான இந்த நேரடி சந்திப்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விளக்கமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இநேநேரம், அணிசேரா இயக்க நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனான இருதரப்பு சந்திப்புகளுக்கும் இலங்கை அனுமதி கோரியிருப்பதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர் மக்களே தூண்களாக தாங்கி நிற்க வேண்டும்: உருத்திரகுமாரன்

02-rudrakumaran.jpgநாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்துள்ள மக்கள்தான் தூண்களாக தாங்கி நிற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாடு கடந்த அரசு குறித்த சிறிய விளக்கத்தை தெரிவிக்க முடியுமா?

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை சரித்திரப் பின்னணியோடு நாங்கள் பார்க்க வேண்டும். சிறிலங்கா தீவு சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்த் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மூலமும் சாத்வீகப் போராட்டத்தின் மூலமும் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முனைந்தனர். ஆனால் அந்தப் போராட்டங்கள் படையினரால் முறியடிக்கப்பட்டதோடு,  இனவாதம் தலைதூக்கியதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மூலமூம் அந்த உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் போனது. இதன் விளைவாகவே தமிழ்மக்களின் இந்தப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்மக்களின் இந்த பிரச்சினை அனைத்துலக அரங்கில் முன்வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது, அங்கு ஒரு கட்டுமானமும் இருந்தது. சிறிலங்கா அரசு இன்று மாறிவரும் பூகோள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக வைத்து அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக அந்த இராணுவப் போராட்டங்களை முறியடித்து விட்டது. எனவே அடுத்த கட்டமாக தமிழர்களின் போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசு என்ற வகையில் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

“போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் ஒன்றுதான்” என்று சுதுமலையில் இடம்பெற்ற பிரகடனத்தில் தலைவர் கூறினார். அதே போன்றுதான் போராட்ட வடிவங்கள் மாறினாலும் எமது இலட்சியம் ஒன்றுதான். அனைத்துலக சட்டங்களுக்கும் அனைத்துலக ஒழுங்குகளுக்கும் இணைவாக தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைக் காண்பதற்காகத்தான் இது அமைக்கப்படவுள்ளது.

பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காண்பதற்கு சமபலநிலை அத்தியாவசியமானது. நோர்வேயின் அனுசரணையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது சமபலநிலை எங்களுடைய இராணுவ பலத்தை மையப்படுத்தியிருந்தது. இன்று சமபலமற்ற நிலையில் இருக்கின்றோம். எனினும் சமபலநிலை என்பது இராணுவ பலத்தை மட்டும் கொண்டதல்ல. சமபலநிலை என்பதற்கு பல்வெறு வடிவங்கள், பரிமாணங்கள் உண்டு.

தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு அந்த சமபல நிலையை – தற்போதுள்ள சமபல இடைவெளியை – நிரப்பும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இதனடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலம் சுயநிர்ணய அடிப்படையில் ஒருதீர்வைக் காண்பதற்கு இது அடிப்படையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

நாடு கடந்த அரசு குறித்து கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வந்தன. புறநிலை அரசுக்கும் (Government in Exile) நாடு கடந்த அரசுக்கும் (Transnational Government) பல ஒற்றுமைகள் இருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. புறநிலை அரசு (என்பது ஒரு நாட்டில் ஆட்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் அனைத்துலக சமூகத்தில் இன்னொரு நாட்டின் அனுசரணையுடன் புறநிலை அரசு (Government in Exile) அமைத்துக் கொள்வார்கள். உதாரணமாக ஏஎன்சி, பலஸ்தீனர்கள், இந்தியாவில் தலாய்லாமா அப்படிச் செய்தார்கள்.

மேற்படி இரண்டு விடயங்களிலும் அதாவது நாடு கடந்த அரசிலும் புறநிலை அரசிலும் அரசியல் இடைவெளி என்பது இல்லை. ஒரு நாட்டில் இதற்குரிய இடமளிப்புக்கள் இல்லாத காரணத்தினால்தான் அனைத்துலகில் இதனை அமைக்க வேண்டியுள்ளது.

அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தாயகத்தில் உள்ள மக்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்துள்ள மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நலன்களையும் பேணும். எனவே, புலம்பெயர் தமிழ்மக்கள் ஒரு குழுவாக இருந்தால்தான் அந்த பலத்தின் மூலம் நாங்கள் எமது மக்களின் விடிவிற்கு உதவ முடியும்.

தமிழர்களின் இராணுவ பலம் சமநிலையில் இருந்தபோது அனைத்துலக சமூகத்தால் எமக்கு ஒரு தீர்வையும் வழங்க முடியவில்லை. இன்றைய நிலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடாக எவ்வாறு இலக்கினை அடைய முடியும் எனக் கருதுகின்றீர்கள்?

தமிழர்களின் தேசியப் பிரச்சினையானது பூகோள அரசியலுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. தென்னாசியாவில் எப்படி அரசியல் மாற்றமடைகிறதோ அதன் மையத்தில்தான் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வும் இருக்கின்றது. எமக்கு என ஒரு இராணுவ பலம் இல்லாவிட்டாலும் இன்று மாறிவரும் பூகோளஅரசியல் நிலையில் – நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு அதிகார மையமாக திகழ்ந்து, அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் அங்கு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் கருதுகிறேன்.

கடல் கடந்த தமிழீழ அரசுக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கின்றதா?

நாடு கடந்த தமிழீழ அரசு இன்னும் அமைக்கப்படவில்லை. தற்போது அதனை அமைப்பதற்கான செயற்குழுவே அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைப்பது தொடர்பாக பல்வேறு இராஜதந்திரிகளுடனும், அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் உட்பட பல தரப்புகளுடனும் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றோம். நாங்கள் தயாரித்த அறிக்கையை இராஜதந்திரிகளுக்கும், தொண்டு நிறுவன பிரிதிநிதிகளுக்கும் அனுப்பி அவர்களுடன் கருத்து பரிமாறுவதற்கு கோரியுள்ளோம். அவர்கள் அத்தகைய கருத்து பரிமாறலுக்கு இணங்கியுள்ளனர். அவர்களுடனான சந்திப்புக்கும் ஏற்பாடாகியுள்ளது. விரைவில் ஒரு ஆலோசனைக்குழுவையும் அமைப்போம்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது எந்தவொரு தொண்டு நிறுவனமோ இந்த கடல் கடந்த தமிழீழ அரசு குறித்த அறிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக இதைப்பற்றி முக்கியமெடுத்து கலந்துரையாட வேண்டும் என்று கூறியுள்ளனர். தனிப்பட்ட முறையில் இத்தகைய கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. விரைவில் முறையான ஒரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஆலோசனைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறீர்கள்?

செயற்குழு அமைப்பது தொடர்பாக கலந்துரையாடி வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளுக்குமான செயற்குழுக்களையும் அமைக்கவிருக்கிறோம். அத்துடன் எமது செயற்குழுவில் மேலும் சிலரையும் சேர்க்கவிருக்கிறோம். குறிப்பாக சிறிலங்காவைச் சேர்ந்த முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் தற்போது உள்ளார். அவர் எமக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். இது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் என்றும் இதில் தானும் இணைந்து தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு சரியான தீர்வைக் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல இந்தியாவிலிருந்தும் சிலர் தொடர்பு கொண்டு எதற்காக இந்தியாவிலிருந்து எவரையும் செயற்குழுவில் இணைக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு செயற்குழுவை விரிவுபடுத்தவிருக்கிறோம். அதன்பின்னர் இந்த குழுக்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தவிருக்கிறோம்.

தமிழ்மக்களுக்கான தீர்வு விடயத்தில் சிறிலங்கா மற்றும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செல்வது குறித்த உங்களது கருத்து என்ன?

தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கை கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்கள் எமக்கு தெட்டத்தெளிவாக காட்டியது. தமிழ்த்தேசியப் பிரச்சினையில் இந்தியா முக்கிய வகிக்கின்றது. அது நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். எதுஎப்படியிருப்பினும் இந்தியாவுடனும் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

சிறிலங்காவிற்கான கதவுகளையும் நாங்கள் இன்னமும் மூடவில்லை. பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வை எட்டுவதென்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

அந்தவகையில் சிறிலங்கா அரசுக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கின்றோம். இந்தியாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றோம். இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கோ அல்லது இந்தியாவின் பூகோள நலன்களுக்கோ எமது செயற்பாடுகள் பாதிப்பாக அமையாது என்பதை வலியுறுத்தி இந்தியாவுடனான எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவிருக்கின்றோம்.

இரண்டு விடயங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கவிருக்கிறோம். ஒன்று – சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் (Relevant Stake Holders) தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்துவது. இரண்டாவது நிறுவனமயப்படுத்தலையும் (Institution Building) முன்னெடுத்துச் செல்வது.

கடல் கடந்த தமிழீழ அரசு பற்றிய விளக்கத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளது. அதனை நீங்கள் எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்?

மக்களை இந்த தகவல் சென்றடைய வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் எடுத்திருக்கின்றோம். செயற்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் எமது நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவார்கள்.

நாடு கடந்த அரசு என்பது எமது மக்களுக்கு புதிய விடயம். எனவே இதனை எமது மக்களுக்கு எவ்வாறு தெரிவிப்பதென்பது குறித்து நாங்கள் கவனமெடுத்து வருகிறோம். குறிப்பாக கேள்வி பதில் வடிவில் புத்தகமாக இந்த விளக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவிருக்கிறோம். ஓரிரு மாதங்களில் இந்த புத்தகம் வெளியாகும்.

நடந்து முடிந்த துயரச் சம்பவங்களிலிருந்து மீண்டெழுந்து மக்கள் எவ்வளவு விரைவாக அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த அறிவிப்பு வெளியாகியதும் அதனை அவசரப்பட்டு மெற்கொண்ட முடிவாக சிலர் கருதினர். மே மாதம் 15, 17 ஆம் திகதிகளில் முள்ளிவாய்க்காலில் நடந்த இராணுவத் தாக்குதல்களின் கொடூரம் எங்களுக்கு தெரியும். அந்த ஒருமாத காலத்தில் சிறிலங்கா அரசிற்கு நாங்கள் ஒரு செய்தியை அனுப்ப விரும்பினோம். இராணுவ ரீதியில் போரியல் சட்டங்களுக்கு மாறாக எங்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழித்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் அழியவில்லை, அழிக்கவும் முடியாது என்ற செய்தியை சிறிலங்கா அரசிற்கு தெரியப்படுத்தவே காலங் கடந்த தமிழீழ அரசை நாங்கள் அறிவித்தோம்.

அத்துடன், அடுத்து என்ன என்று இருந்த மக்களுக்கு ஒரு வழியைக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் அவசரப்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டோம்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் தற்போது செய்யவேண்டிய பணிகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

நாடு கடந்த தமிழீழ அரசிற்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. புலம்பெயர்ந்துள்ள மக்களின் அமைப்புகள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி நிற்க வேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice) வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

எந்தவொரு குழுவையோ அல்லது எந்தவொரு நபரையோ இது முன்னுரிமைப்படுத்தவில்லை. நாங்கள் தேர்தல் நடத்த இருக்கின்றோம். அது ஜனநாயக முறைப்படி நடக்கும். அதில் எவரும் பங்குகொள்ளலாம். அப்படி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ள எமது அரசு தான் அனைத்துலகில் தமிழ் மக்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரலாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

அதற்கு முன்னர் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே முக்கியமாக ஒவ்வொரு தமிழனும் இதில் ஒன்றுபட்டு இது எனது அரசு என்ற நோக்கில் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஜுலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை – சர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day) – புன்னியாமீன்

co-op-day.jpgசர்வதேச கூட்டுறவுதினம் (Inernational Co-operative Day) ஒவ்வொரு ஆண்டும்  ஜுலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமை ‘கூட்டுறவே நாடுயர்வு” எனும் கருப்பொருளின் கீழ் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறை நாட்டின் சமூக,  பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. இருந்தபோதிலும் முதலாளித்துவ சமூக வளர்ச்சியுடன் கூட்டுறவு பலதுறைகளிலும் தனது முக்கியத்துவத்தை படிப்படியாக இழந்தே வந்துள்ளது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலகட்டங்களில் கூட்டுறவுத்துறையில் ஏற்பட்ட எழுச்சியுடன் ஒப்பநோக்கும்போது தற்போதைய நிலையில் மேற்குறிப்பிட்ட கருத்து பொருந்தும். நவீன காலத்தில் ‘உலகமயமாக்கல்”  சிந்தனையுன் மேலும் இதன் வளர்ச்சிப்போக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாயினும்,  கூட்டுறவு என்பது இன்றியமையாத ஒன்று என்று கூறுவதில் தவறாகாது. எவ்வாறாயினும் இன்றைய உலகம் சமூக,  பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவை உணர்ந்தே உள்ளது. நாடுகளிடையே கூட்டுறவு, மக்களிடையே கூட்டுறவு,  கூட்டுணர்வு போன்ற எண்ணக்கருக்கள் சர்வதேச மட்டத்தில் கூட்டுறவு தினத்தை நினைவுகூர வாய்ப்பளித்துள்ளன. சர்வதேச மாநாடு இத்தினத்தை அனுஸ்டிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.

கூட்டுறவு அமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகி வளர்ந்து வந்துள்ளது. பிரான்சின் சோசலிஸவாதி சார்ள்ஸ் பூரியர்,  இங்கிலாந்தைச் சேர்ந்த றொபர்ட் ஓவன் (1771-1858),  டாக்டர் வில்லியம்கிங் போன்ற இலட்சியவாதிகளின் சிந்தனையில் உதித்த இத்தத்துவம்,  1844 இல் றொக்டேல் நகர தொழிலாளர்களால் செயல்வடிவம் பெற்றது. கூட்டுறவின் வரைவிலக்கணம் பின்வருமாறு: கூட்டுறவு என்பது சனநாயக அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் சுயேச்சையான தொழில்முயற்சி ஒழுங்கமைப்பொன்றாகும். இதன் குறிக்கோள் தன்னிச்சையாக ஒன்றுகூடும் தனியாட்களின் பொதுவான பொருளாதார, சமூக,  கலாசார தேவைகளை எய்துவதாகும். இத்தனியாட்கள் கூட்டாக சொத்துவத்தை அனுபவிக்கின்றனர்.
‘மனிதன் ஒரு சமூகப்பிராணி. சமூகத்தோடு எந்தவித உறவுமின்றி அவன் பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர முடியாது. ‘நான்’ எனும் அகம்பாவத்தை அகற்றிவிட இயலாது. அவனுடைய சமுதாயச் சார்பு அவனுடைய நம்பிக்கையை சோதனை செய்து கொள்வதற்கும் உண்மை உரைக்கல்லால் தன்னையே அளந்து கொள்வதற்கும் உதவுகிறது’ இந்த அடிப்படையில் கூட்டுறவுத் தத்துவத்தின் பொது இயல்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

01. சேர்ந்து செயலாற்றுதல் (Associated Action)
02. சகலருக்கும் பொவுதான தன்மை  (Universality)
03. தனிநபர் சுதந்திர விருப்பு (Free Will of the individual)
04. சமத்துவம்  (Equality)
05. சனநாயகம்  (Democracy)
06. சேவை நோக்கு (Service)
07. தனிநபர் சுதந்திரம் (Individual Freedom)
08. நடுநிலையும் சமூக நீதியும் (Equity and Social Justice)
09. கூட்டுணர்வு (Spirit of Solidarity)
10. புதிய சமூக ஒழுங்கு (New Social Order)
11. மனிதரின் அந்தஸ்தினை மதித்தல் (Rocognition of dignity of men)
12. உயர் ஒழுக்க நிலை (High moral standard)

இங்கிலாந்தில் நுகர்வோர் சங்கமாக உருவெடுத்த கூட்டுறவு அமைப்பு ஜேர்மனியில் கடன்சுமையைப் போக்கும் இயக்கமாக மாறி கடன் வழங்கும் சங்கங்களைத் தோற்றுவித்தது. உலகின் பல நாடுகளிலும் அவ்வந்நாட்டுத் தேவைக்கேற்ப உருவாகின. இவ்வாறு சர்வதேச ரீதியில் உருவான சங்கங்களை தொடர்புபடுத்தும் அமைப்பாகவும் வளர்ச்சியின் சின்னமாகவும் 1895இல் சர்வதேச கூட்டுறவு இணைப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளினதும் தேசிய மட்டக்; கூட்டுறவு நிறுவனங்களின் இணைப்பாக இது விளங்குகின்றது. இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது.

சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் எல்லாம் வானவில்லின் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக யுத்தம் காரணமாக உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. நாடுகளின் உணவு உற்பத்தி, விநியோகம்  என்பவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன். பொருளாதார அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. மக்களின் வருமானம் அதிகரித்தது. இத்தகைய மாற்றங்கள் கூட்டுறவு அமைப்பிலும்,  சமூக பொருளாதார,  கலாசார அமைப்புக்களிலும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. இதற்கமைய கூட்டுறவு கொள்கைகளும் மறுசீரமைக்கப்பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சிபரிசுக்கமைய 1966 இல் அனைத்துலக கூட்டுறவு மகாநாட்டில் பின்வரும் ஐந்து அம்சங்களும் கூட்டுறவுக் கொள்கைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. அவை,

01. தன் விருப்புடனான தடையற்ற அங்கத்தவர்
02. ஜனநாயக முறைக் கட்டுப்பாடும், நிர்வாகமும்
03. முதலுக்கு ஏற்ப வட்டி வீதம்
04. இலாபம் அங்கத்தவரிடையே சமமாகப் பங்கிடப்படல்
05. கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியன.

நவீன காலத்தில் கூட்டுறவு விவசாயத்தால்  விந்தை புரியும் இரு நாடுகளை உதாரணப்படுத்துவர். கியுபா பல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் சிஐஏ (CIA) பலமுறை அவரை கொலை செய்ய முயன்றும் தோற்றது. இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு. 1991 ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல், இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டது. ஆனால் விரைவாக இயற்கை விவசாயத்திற்கு மாறி பின் நகர விவசாயத்தை ஊக்கப்படுத்தி இன்று தன்னிறைவு பெற்று மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.

அடுத்தது 1948 ஆண்டு தோன்றிய இஸ்ரேல். தோன்றிய நாள் முதல் இன்று வரை அண்டைநாடுகளுடன் சண்டையிட்டுக் கொண்டே விவசாயத்தில் விந்தை புரியும் நாடு இஸ்ரேல். இயற்கை வளம், நீர் பற்றாக்குறையுள்ள நாடு. இருக்கின்ற வளத்தை சிறப்பாக பயன்படுத்தி குளிர் பிரதேசத்தில் வளரும் “டுலிப்” (Tulip) மலர்களயே ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. சொட்டு நீர் பாசனம், பசுமை கூடம்,  மூடாக்கு (sheet mulching) என அதிக உற்பத்தியை தரும் தொழில் நுட்பங்கள் இவர்களது சிறப்பு. மற்றொரு சிறப்பு கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. கிப்புட்ஸ் (Kibbutz),இமோஷாவ் (Moshav) என அந்த கூட்டுறவு முறைகளுக்கு பெயர்கள்.

இலங்கையில் கூட்டுறவு முறை பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
இலங்கை ஆங்கிலேயராட்சியில் இருந்தவேளை கிராமிய விவசாயம் புறக்கணிப்பட்டது. பெருந்தோட்டச் செய்கையில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்காக கிராமிய விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. இயற்கையின் வரட்சி கிராமிய விவசாயிகளைப் பெருமளவு பாதித்து அவர்களை வறுமைக்குட்படுத்தியது. இதனால் அவர்கள் வட்டிக்குப் பணம் வழங்கும் முதலாளிகளிடம் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கூட்டுறவுப் பண்புகளையுடைய சங்கங்களை அமைத்து செயல்பட்டபோதும் அதற்கு சட்டவரையறை இன்மையால் நிலைத்து நிற்கவில்லை. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை ஆளுநர் நாட்டிலிருந்த விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட விவசாய வங்கித் தொழிற் குழுவின் விதப்புரையின்மீது அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்றாக 1911ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் நியதிகளின்படி கூட்டுறவுக் கடன் சங்கங்களைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1911ஆம் ஆண்டின் கூட்டுறவுச் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் நியதிகளின்படி பதிவாளருக்கு கூட்டுறவுச் சங்சங்களைப் பதிவுசெய்வதற்கும் எவையேனும் வைபவங்களுக்குத் தலைமை தாங்குவுதற்கும் தத்துவமளிக்கப்பட்டது. எனினும் ஒரு முழுநேரப் பதிவாளர் அவசியமில்லை என அரசாங்கம் உணர்ந்தமையால் ஆரம்பத்தில் மேற்படி கட்டளைச் சட்டத்தின்கீழ் பதிவாளருக்குப் பொறுப்பிக்கப்பட்ட ஒருசில கடமைகளையும் பணிகளையும் அரசாங்க அதிபருக்குக் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இவற்றுள் கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் கடமையும் அடங்கும்.
1904ஆம் ஆண்டில் கிராமிய சமுதாயத்தின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இலங்கை விவசாயச் சங்கம் எனப்படும் சங்கமொன்று இலங்கை ஆளுநரின்கீழ் தாபிக்கப்பட்டது. பிரசாரமும் கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்தும் செயற்பாடுகளும் இச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன. 1911ஆம் ஆண்டில் இலங்கை விவசாயச் சங்கங்களுக்குப் பதிலாக விவசாயத் திணைக்களம் தாபிக்கப்பட்டது. 1911ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஒரு குறுகிய தவணை நடைமுறையாகும். பதிவுசெய்யும் வழமையான பணிகளுக்கு மேலதிகமாக இன்னும் பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தமையால் விவசாயத்துறை பணிப்பாளரை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகவும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அதே ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டுச் சபையொன்றையும் தாபித்தது.

ஆரம்பத்தில் நாணய சங்கங்களே பதியப்பட்டன. 1913/14ம் ஆண்டில் 35ஆக இருந்த சங்கங்கள் 1920/21இல் 154ஆக உயர்ந்தது. உறுப்பினர் தொகை முறையே 1820லிருந்து 17876 ஆகவும் அதிகரித்தது. 1921ம் ஆண்டின் 35ம் இலக்க சட்டத்திருத்தத்தின்படி ஏனைய வகைச் சங்கங்களும் பதிவு செய்ய வகை செய்யப்பட்டன. இதனால் நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாய உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் என்பன பதிவு செய்யப்பட்டன. 1939இல் இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு பங்கீட்டு அடிப்படையில் உணவு விநியோகிக்கும் பொறுப்பு கூட்டுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து நெல் உத்தரவாத விலைத்திட்டம்,  நெற்களஞ்சியங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன. 1942 – 1945க் கிடையில் 4000க்கும் மேற்பட்ட நுகர்வோர் சங்கங்கள் இருந்தன. 1946இலிருந்து கூட்டுறவு விளைபொருள் உற்பத்தி விற்பனை சங்கங்கள் பதியப்பட்டன. 1949ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டத்திருத்தத்தின் மூலம் நாணய உதவி வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குடிசைக் கைத்தொழில்களிலும், பாரம்பரிய சீவனோபாய தொழில்களிலும் ஈடுபட்டவருக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. (உ+ம்) கூட்டுறவுப் பாற்பண்ணை சங்கங்கள், கடற்றொழிலாளர் சங்கங்கள், தெங்கு உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கங்கள், நெசவுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள். தும்புத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தச்சுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், செங்கல், ஓடு உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள், அச்சிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள், பாதரட்சை செய்வோர் கூட்டுறவுச் சங்கங்கள், புகையிலை பயிரிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள் போன்றன.

1957இலிருந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தாபிக்கப்பட்டன. 1958 முடிவில் இலங்கையில் இயங்கிய பல வகைக் கூட்டுறவுச் சங்கத்தினது எண்ணிக்கை 12852ஆகும். இவற்றைத் தவிர இரண்டாம்படிச் சங்கங்களாக கூட்டுறவுச் சங்கங்களும் இயங்கின. தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் பல்வேறு சேவை தொழிற்துறையினரிடையேயும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சிக்கன கடனுதவிச் சங்கங்களும் (சணச) விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வளர்ச்சிக்கு கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்திய விடுதலைக்கு முன்பே, 1904 ஆம் ஆண்டு தற்பொழுதுள்ள திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவு சங்கம் இந்தியாவிலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. சர். டி. ராசகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராக பொறுப்பேற்றார்.

இந்தியாவில் ஒரு விவசாய புரட்சியை உண்டாக்க வேண்டும் என்பதற்காக காந்திஜி சொன்ன விடயம் கூட்டுறவுப் பண்ணை முறையாகும். ஒரு நிலத்தை நூறு துண்டுகளாக போட்டு விவசாயம் செய்து நிறைய கொள் முதலை எதிர்ப்பார்ப்பதை விட ஒரு கிராமத்திலிருக்கும் நூறு குடும்பங்கள் கூட்டாக விவசாயத்தில் ஈடுபடுட்டால் தனித்தனியாக கிடைக்கும் பலன்களை விட நிறையவே அதிகமாக இருக்கும் என்பது. நிலம் அனைத்தையும் ஒன்றாக உழுது விவசாயம் பார்ப்பதால் உழைப்பு,  மூலதனம்,  கருவிகள் போன்றவை மிச்சமாகும். காந்திஜி இதையே விவசாய வேலைகள் என்றில்லாமல் ஆடு,  மாடு வளர்ப்பு, காய்கறிகள் பயிரிடுவது என அனைத்து தொழில்களுக்குமே விரிவுபடுத்த நினைத்தார். காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் இதையே செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார். நாடு சுதந்திரமடைந்தவுடன் காந்திஜியின் சிந்தனை பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் திட்டங்களாக தீட்டப்பட்டன.

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவர் கூட்டுறவு தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார். ஏழைகள் தன்னந்தனியாக தங்களின் நலனுக்காக காரியத்தை செய்ய இயலாது. அவர்களோ கூட்டு முயற்சியை செய்தால்தான் வெற்றி பெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவு முறை வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள்,  பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டு வசதி, கதர், கிராமம் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்கு தாங்களே கூட்டாக, உறவாக அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.

1904 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவு சட்டம் 1961, 1963, 1983 என பல முறைகள் முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்து இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு ஆரோக்கியத்தோடு செயல்பட காரணமாக பலர் திகழ்ந்தனர். தூத்துக்குடியில் தொழிற் சங்கத்தைத் துவக்கிய வ.உ.சிதம்பரனார் கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார்.

கிட்டத்தட்ட 30,000 கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் திறம்பட செயல்பட்டால் பொருளாதாரம்,  மக்களின் நலன், ஜனநாயகம் பேணப்படும். அரசியல் தலையீடு இல்லாமல் கூட்டுறவு உறுப்பினர்களுடைய விருப்பத்தின் பேரில் இந்த இயக்கங்கள் செயல்பட வேண்டும். கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அமைப்பு மட்டுமல்லாமல், கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை உள்ள பல ஆயிரம் அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பாலபாடத்தைப் போதிக்கும் போதி மரமாகும்.

சர்வதேச கூட்டுறவுதினம் மிலேனியத்திலிருந்து பின்வரும் கருப்பொருட்களுக்கமைய கொண்டாடப்படுகிறது.

2000: “Co-operatives and Employment Promotion”
2001: “The Co-operative Advantage in the Third Millennium”
2002: “Society and Co-operatives: Concern for Community”
2003: “Co-operatives Make Development Happen!: The contribution of co-operatives to the United Nations Millennium Development Goals”
2004: “Co-operatives for Fair Globalisation: Creating Opportunities for All”
2005: “Microfinance is OUR business! Cooperating out of poverty”
2006 “Peace-building through Co-operatives.”
2007 “Co-operative Values and Principles for Corporate Social responsibility.”
2008: “Confronting Climate Change through Co-operative Enterprise”
2009: “Driving global recovery  through co-operatives”