இருவருட உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றுள்ள மலையக ஆசிரியர்கள் தொடர்ந்து தமது பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவரெனவும் இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாகவும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;
சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளில் நியமனம் பெற்று உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் கல்லூரிக்குச் சென்ற மலையக ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களது பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.
சப்ரகமுவ மாகாண தோட்டப் பாடசாலைகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு சப்ரகமுவ மாகாணசபை இருவருட உள்ளகப் பயிற்சிக்குச் செல்ல அனுமதி வழங்கவில்லை. வழங்கப்பட்ட நியமனத்தில் மோசடிகள் காணப்படுகின்றன. இதனால் இவ்வாசிரியர்களுக்கு மீள் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவில்லையெனவும் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பயற்சிகளுக்கு செல்லமுடியும் எனவும் மாகாணசபை அறிவித்து வருகின்றது.
இந்நிலையில், ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பித்த சிலருக்கு இருவருட உள்ளகப் பயிற்சிகளை தொடர சில கல்லூரி நிர்வாகங்கள் அனுமதியளித்துள்ளன. இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் தமது பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெறுபவர்களும் உடனடியாக தாம் கடமை செய்த பாடசாலைக்குத் திரும்பவேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிலருக்கு வலயக்கல்விப் பணிமனையூடாக இது குறித்து அறிவித்து வருகின்றது.
இது தொடர்பாக ஆசிரியர்கள் என்னிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் முறையிட்டனர். உடனடியாக இது குறித்து மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி இதற்கான உறுதிமொழியை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.