ஐக்கிய தேசியக் கட்சி மேலக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு ஆகியவற்றைக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான கேம்ப்ரிட்ஜ் றெரஸிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி., முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மக்கள சமரவீர ஆகியோரே இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இதேநேரம், இந்த கூட்டமைப்புக்கான இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கென ஐ.தே.க. அரசியல் குழுவினரால் நியமிக்கப்பட்ட அக் கட்சியின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.
இக்குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை அரசியல் குழுவினால் ஆராய்ந்து அங்கீகரிக்கப்பட்டு அதன் பின்னர் ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்திடம் அனுமதி பெறப்படுமென அக் கட்சியின் தவிசாளரான காமினி ஜயவிக்ரம பெரேரா கூறினார்.
இதேநேரம், இந்த அறிக்கையூடாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் பொது இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்படும் இறுதி அறிக்கையே கூட்டமைப்பின் கொள்கை அறிக்கையாக இருக்குமென மனோகணேசன் எம்.பி.கூறினார்.