02

02

மலையகத்தில் தொடர்ந்தும் கடும் மழை; மவுசாகலை நீர்த்தேக்கம் திறக்கப்படும் நிலை

maussakele-maskeleya.jpgகடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கம் எந்தவேளையிலும் நிரம்பி வழியக் கூடிய கட்டத்தை அடைந்திருப்ப தாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. டி. ஏக்கநாயக்கா நேற்றுத் தெரிவித்தார்.

இதன் காரணத்தினால் இந்நீர்த்தேக்கத் தின் வான் கதவுகள் எந்த வேளையும் திறந்து விடப்படலாம். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும் அமைந்திருக்கும் கித்துல்கல, யட்டியந்தொட்டை, அவிசாவளை, ஹங்வெல்ல போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப் பிட்டார்.

இந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் எந்த வேளையிலும் திறந்து விடப்படக் கூடிய நிலைமை இருப்பதால் மேற்படி பிரதேசங்களில் வாழும் மக்கள் முன்னெச் சரிக்கையோடு நடந்துகொள்ளுவது அவசி யம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் பிரியந்த அபேரெட்ன கூறுகையில் :-களுகங்கையின் நீர் மட்டம் சுமார் இரண்டரை அடிகள் குறைந்துள்ள போதிலும் வெள்ள அபாயம் முழுமையாக நீங்கவில்லை. அயகம, எலபாத்த, இரத்தி னபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ்நி லங்கள் நேற்று இரண்டாவது நாளாகவும் நீரில் மூழ்கி இருந்தன.

வேவல்வத்தையில் இரண்டு சிறியளவு பாராங்கற்கள் நேற்று முன்தினம் மாலையில் உருண்டு விழுந்துள்ள போதிலும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில் களுகங்கையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 19 அடிகள் 8 அங்குலத்திற்கு உயர்ந்திருந்தது.

அது நேற்று நண்பகலாகும் போது 17 அடிகள் 4 அங்குலம் வரை குறைந்திருந்தது. என்றாலும் இக் கங்கையின் நீர்மட்டம் 15 அடிகளுக்கு மேல் உயருமாயின் வெள்ள அபாயமாகக் கருதப்படுகின்றது.

இதேநேரம் அயகம பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கலத்துர, பகல கலத்துர வீதி சுமார் இருநூறு மீட்டர் நீள த்திற்கு நீரில் மூழ்கியுள்ளது. இந்த வீதியூடாக மூன்றடிகள் உயரத்திற்கு நீர் செல்லுகின்றது- அதனால் இவ்வீதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் மண் சரிவு, வெள்ள அபாயம் குறித்து பிரதேசவாசிகளுக்கு அறிவூட்டல்களும் வழங்கப்படுகின்றன என்றார்.

விமான விபத்தில் உயிர்தப்பிய சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம்

image-air-team.jpgஇந்து சமுத்திரத்தின் எல்லையில் விபத்துக்குள்ளான யெமன் விமானத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய 14 வயது சிறுமியின் உடல் நிலை கவலைப்படுமளவிற்கு இல்லையென வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியர்கள் கூறினர்.

நேற்று முன்தினம் யெமனிலிருந்து கெமரூன் நோக்கிப் பறந்த விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 152 பேரில் 14 வயதுச் சிறுமி மாத்திரம் உயிர் தப்பினார். ஏனையோர் உயிரிழந்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்தோரை மீட்கவும் விமானத்தைக் கரை சேர்க்கவும் மீட்பு பணியாளர்கள் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். விமான உதிரிப்பாகங்கள், சடலங்கள் என்பன விபத்து நடந்த பகுதியில் கிடப்பதாக தேடுதல் பணியில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் எண்ணெய்க் கசிவு வெளிவருவதால் விமானத்தின் எரிபொருள் தாங்கி உடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை மீட்ட பணியாளர் பிரான்ஸ் வானொலிக்கு சம்பவத்தை விவரித்தார். சிறுமியொருவர் தண்ணீரில் நீந்தியவாறு தள்ளாடினார்.

சிதைந்த விமானத்தின் பாகங்கள் உருக்குலைந்த உடல்களுக்கு மத்தியில் அச்சிறுமி நீந்தியவாறு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். உடனே தண்ணீரில் மிதக்கும் பொருளொன்றை வீசினோம். அச்சிறுமியால் அதைப் பிடிக்க முடியவில்லை.

பின்னர் தண்ணீரில் குதித்து அச்சிறுமியைக் காப்பாற்றினேன். அவர் என்னுடன் கைகுலுக்கினார். சூடான தேனீரை சிறுமிக்கு கொடுத்தோம். பின்னர் பெயரையும் ஊரையும் கேட்டுத் தெரிந்து கொண்டோம் என விவரித்தார். எஞ்சியுள்ள உடல்கள், விமானப் பாகங்களை மீட்டெடுக்க தேடும் பணிகள் தொடரவுள்ளன. பிரான்ஸ்ஸைச் சேர்ந்த இச்சிறுமி தனது பெற்றோருடன் கெமரூன் நோக்கிச் சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது.

முசாவி மீது வழக்கு தொடருமாறு கோருகிறது இரானிய இராணுவம்

hossein_mousavi_.jpgசர்ச்சைக் குள்ளான இரானின் அதிபர் தேர்தலுக்குப் பிறகு அங்கு நடந்த ஆர்பாட்டங்களில், அந்த தேர்தலில் தோற்ற வேட்பாளரான மிர் ஹொசைன் முசாவி ஆற்றிய பங்கு குறித்து அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று இரானின் அரசாங்க இராணுவம் கோரியுள்ளது.

இரானின் தேசிய பாதுகாப்பை குலைப்பதிலும், அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கும் முசாவி துணை போனதாக குற்றம் சாட்டும் பஸ்ஜி இராணுவத்தின் கடிதத்தை, இரானின் ஓரளவு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான பார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் தலைமையிலான புதிய அரசாங்கம் சட்ட அங்கீகாரமற்ற அரசு என்று தாம் கருதுவதாக முசாவி தமது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ஆர்பாட்டங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

க.பொ.த (உ/த), புலமைப் பரிசில் பரீட்சைகள்; ஏழு வலையங்களில் பரீட்சை நிலையங்கள்

schoolgirls-sri-lanka.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள க.பொ.த. (உயர்தரம்) மாணவர்களும், 5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதியாக ஏழு வலையங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப் படவுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தலைமை யிலான உயர்மட்டக் குழுவொன்று நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்து மாணவர்களின் நிலை தொடர்பாக ஆராய்ந்த பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. (உ/த) பரீட்சை ஓகஸ்ட் 11ம் திகதி ஆரம்ப மாகவுள்ளது. இதற்கென நிவாரணக் கிராமங்களிலிருந்து 856 மாணவர்கள் தோற்றவுள்ளனர். அதேநேரம் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 23ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் பரீட்சைக்கு நிவாரணக் கிராமங்களிலிருந்து சுமார் 6000 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இவர்களது வசதி கருதி அவரவர் தங்கியுள்ள நிவா ரணக் கிராமங்களிலேயே பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

கதிர்காமர் நிவாரணக் கிராமம், குமாரசுவாமி நிவாரணக் கிராமம், அருணாச்சலம் நிவாரணக் கிராமங்கள் உட்பட சகல நிவாரணக் கிராமங்களும் அடங்கலாக பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

விசேட அடையாள அட்டை

இதேவேளை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி அடையாள அட்டை வழங்குவதற்கு பரீட்சைத் திணை க்களம் ஏற்பாடு செய்துள்ளது. புகைப்படப் பிடிப்பாள ரைத் பிரத்தியேகமாக அனுப்பி படங்கள் எடுத்து மாணவர் அடையாள அட்டைகளை வழங்குவதற்கும் பரீட்சைத் திணை க்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பரீட்சைகளுக்கான அதிகாரிகள் மதவாச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள். நிவாரணக் கிராமங்களிலுள்ள ஆசிரியர்கள் மேற் பார்வையாளர்களாகப் பணியாற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்கள உயர் மட்டக்குழுவில் ஆணையாளருடன், கல்வி வெளியீட்டு திணைக்களப் பணிப்பாளர் புஸ்பகுமார உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

சர்வ கட்சி குழு கூட்டத்திற்கு தமிழ் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வ கட்சிகளை உள்ளடக்கிய அபிவிருத்தித மற்றும் ஒருமைப்பாட்டிற்கான சர்வ கட்சி குழு கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

ஜனாதிபதி செயலகத்தில் இக் குழுவின் முதலாவது கூட்டம் நடை பெறவிருக்கின்றது.தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தனித்தனி அழைப்பு தங்களுக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் இந்த அழைப்பிதழ் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பிற்கு வெளியே இருப்பதால் கூடி முடிவெடுக்கப்படும் எனவும்அவர் குறிப்பிட்டார் 

வடபகுதியில் சேத விபரங்களை மதிப்பீடு – பணி ஆரம்பம்!

மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் வடபகுதியில் மோதல்களால் ஏற்பட்டிருக்கும் சேத விபரங்களை மதிப்பீடுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒருகட்டமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் புதன்கிழமை தமது குழுவினருடன் இந்த மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராந்துள்ளனர்.

அரசாங்க அதிபர்களுடன் இந்த மாவட்டங்களுக்குச் சென்ற குழுவினர்,  அங்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டிருக்கும் சேத விபரங்கள் குறித்து தகவல்களை திரட்டும் பணியை ஆரம்பித்தனர். இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களைக்கொண்டு மீள்குடியேற்றத்திற்கான கூறுகளை ஆராயவிருப்பதாக மீள் குடியேற்ற அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். 

அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடனேயே அதிகாரப் பகிர்வு

laxman_yapa_abeywardena.jpg இலங்கை யிலிருக்கும் அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடனேயே அதிகாரப் பகிர்வுத்திட்டம் அமுல்படுத்தப்படுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார். அதிகாரப்பகிர்வானது, இலங்கையிலிருக்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதல்லவெனக் கூறிய அவர்,  இலங்கை மக்களுக்கு ஏற்ற வகையிலேயே இந்த அதிகாரப் பகிர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

எரிபொ ருட்களின் விலைகள் நேற்று (01) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பெற்றோல் (90 ஒக்டேன்) லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் பெற்றோல் (95 ஒக்டேன்) லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாவாலும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டதையடுத்தே இலங்கையில் எரிபொருட்களின் விலைகளிலும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலையதிகரிப்புகள் செய்யப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தின் உயர் மட்ட குழு இலங்கை வர ஏற்பாடு நாடு திரும்பிய அமைச்சர் ஆறுமுகன் தகவல்

தமிழக தூதுக்குழுவொன்று கூடியவிரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் இதற்கான உறுதிமொழியை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தன்னிடம் கூறியதாக இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், இ. தொ. கா.வின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக் கமைய, கடந்த 29ஆம் திகதி தமிழகம் சென்று கலைஞர் கருணாநிதி, அவரது மகளும் இலங்கை தொடர்பான கலைஞரின் ஆலோசகருமான கனிமொழி எம். பி. ஆகிய இருவரையும் சந்தித்த போதே கலைஞர் இந்த உறுதி மொழியை வழக்கினார்.

இலங்கைக்கு வருகை தரும் தமிழகத் தூதுக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் யார்? வரும் திகதி, அதற்கு தலைமை வகிப்பவர் யார்? என்பது குறித்து கூடிய விரைவில் தமிழக அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் வெளியிடப்படும்.

தமிழக அரசாங்கம் இலங்கைக்கு குறிப்பாக வடக்கிலுள்ள அகதி முகாம்களில் வசிப்பவர்களின் நலன் கருதி வழங்கப்படும் 500 கோடி ரூபா குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது என தெரிவித்த அமைச்சர் தொண்டமான் தமிழக அரசாங்கம் மலையக பகுதிகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவது குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக மலையக வீதி அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி மற்றும் மலையக மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இலங்கைவாழ் இந்திய வம்சாவளியினர் பயனளிக்கும் வகையில் மலையகத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் தனியான வைத்தியசாலை யொன்றும் தனியான பல்கலைக்கழகம் ஒன்றும் அமைப்பது குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன் மலையக மக்களின் நலன் கருதி தோட்டப்பகுதியில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த தேவையான பஸ்களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதென கூறினார்.

மலையகத்தில் நேற்றும் 24 மணி நேர எச்சரிக்கை

images.jpgமலையத் திலுள்ள நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று இரண்டாவது நாளாகவும் 24 மணி நேர முன்னெச்சரிக்கையை விடுத்தது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களினதும் வெவ்வேறு பிரதேசங்களில் இந்த அபாயம் உருவாகி இருப்பதாக நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த நான்கு மாவட்டங்களிலும் 100 மி.மீட்டருக்கும் மேலாகத் தொடராக மழை பெய்திருப்பதுடன் தொடர்ந்தும் மழை பெய்யு மென வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது.

அதனால் இம்மாவட்டங்களில் மணிசரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டி ருக்கும் பிரதேசங்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. அதனால் மண்சரிவு அபாயம் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியாகொட, கலவான, கஹவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்ட த்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோப்பிட்டிய, தெரணியா கல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளிலும், நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பகுதியிலும், கினிக்கத்தேன, நோட்டன் பிரிட்ஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலியா பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் மிக்க பல இடங்கள் உள்ளன. அவை ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.