08

08

புலிகளின் அதிவேகப்படகு ராமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பு

_bort.jpgபுலிகள் பயன்படுத்தும் அதிவேக படகு ஒன்று ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கியது. இலங்கையில் இருந்து புலிகள் யாரும் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி விடாமல் தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் ஓலைக் குடா அருகே உள்ள நரிக்குட்டி கடற் கரையில் நேற்று முன்தினம் அதிகாலை இலங்கையில் இருந்து வந்த ஒரு பிளாஸ்டிக் படகு கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது. நல்ல நிலையில் காணப்பட்ட அந்த படகு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதன் உள்பகுதியில் நாவல்மர இலைகள் கிடந்தன. இதனால் இந்த படகு காட்டுப் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

அந்த படகில் என்ஜின், டீசல் கேன்கள் எதுவும் இல்லாததால் படகில் வந்த மர்ம நபர்கள் அவற்றை அந்த பகுதியில் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்று பொலிஸார் சோதனை நடத்தினார்கள். முட்புதர்கள் நிறைந்த காட்டுக்குள் சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த தேடுதல் வேட்டையில் எதுவும் சிக்கவில்லை.அதன் பின்னர் இந்திய கடற் படையினர் வந்து அந்தப் படகை மீட்டு ராமேஸ்வரம் நகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொதுவாக, இது போன்ற அதி நவீன பிளாஸ்டிக் படகுகளை புலிகளின் கடற் பிரிவினரான கரும்புலிகள் பயன்படுத்துவது வழக்கம். இலங்கை அரசின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்த அதிவேக பிளாஸ்டிக் படகுகளை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியிலிருந்து வரும் மக்களை தங்கவைக்க நவீன மாதிரிக் கிராமம் அமைக்கும்பணி முன்னெடுப்பு – வவுனியாவில் பசில் ராஜபக்ஷ

basil.jpgவன்னி யிலிருந்து வரும் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ, அங்கிருந்து வரும் மக்களை தங்கவைப்பதற்கான நவீன மாதிரிக் கிராமங்களை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக் பார்ம் பகுதியில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் கதிர்காமர் கிராமத்தைப் பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

மீள்குடியேற்ற, அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேச நிர்மாண அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, வடமாகாண ஆளுநர் டிக்ஸன் தாலா உட்பட அரச அதிகாரிகளும் இவ்விஜயத்தின் போது பஷிலுடன் இணைந்துகொண்டனர். வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பஷில் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்; கிழக்கில் விடுதலைப்புலிகளை விரட்டியடித்து அங்கு யுத்தத்தால் இடம்பெயர்ந்த 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை, அவர்களது தாயக மண்ணில் மீளக் குடியமர்த்திய பணியை எமது ஜனாதிபதி தலைமையிலான அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியது.  மக்களை மீளக் குடியமர்த்தியது மட்டுமல்லாமல், கடற்றொழில், விவசாயம், சுயதொழில், போன்றவற்றை அம்மக்கள் மேற்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியதுடன், அதற்கான உதவிகளையும் வழங்கியுள்ளோம்.

தாம் வாழ்ந்த பிரதேசத்தில் சிறிய வீடுகளாக இருந்தாலும், மக்கள் அதையே பெரிதும் விரும்புவர் என்பதை நாமறிவோம். இந்த நாட்டில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களிடமிருந்து மீட்டு, மீண்டும் அதே பிரதேசத்தில் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தவே இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அப்பிரதேசங்களில் அகற்றப்பட்டதும், இம்மக்கள் மீண்டும் மீளக் குடியமர்த்தப்படுவர். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட மடு புண்ணிய தலம் உட்பட அப்பிரதேசம் இன்று பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.

யாழ் மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. மின்சாரம், குடிநீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. மனிதநேய நடவடிக்கைகள் ஒருபுறம் இடம்பெறும்போது, அதற்குச் சமாந்தரமாக, அபிவிருத்திகளும் இடம்பெறுவது இந்த ஜனாதிபதியின் ஆட்சியில் தான் என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். தற்போதைய இராணுவ நகர்வை குறைத்து மதிப்பிட்டு, போலியான பிரசாரங்களை வெளிநாட்டு சக்திகள் மேற்கொண்டு நச்சு விதைகளை விதைக்கின்ற போதும், அவற்றுக்கு எதிராக உண்மையை உள்ளபடி கூறி, மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள தலைவர் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்றார். இம் முகாமில் உள்ள மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்துகொண்ட பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் அதிகாரிகள் பாடசாலை மாணவர்களுக்கான சிற்றுண்டிகளையும் வழங்கினர்.

அனைவரும் ஒன்றுபட்டால்தான் இலங்கையில் தமிழினம் காக்கப்படும் – முதல்வர் கருணாநிதி

0302-karunanidhi.jpgதிமுக வினருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உடன்பிறப்பே …

உடன்பிறப்பே என்று அழைத்து இந்த வேண்டுகோள் கடிதம் நான் எழுதும் போது, தி.மு.க. உடன் பிறப்புகளை மட்டும் தான் குறிப்பிடுகிறேன் என்று கருதாமல், தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளின் செயல் வீரர்களையும், தூய தொண்டர்களையும் விளித்து எழுதுவதாகவே கருதி, நான் உறவு கொண்டாடி உரைக்கின்ற விளக்கங்களையும், விடுக்கும் வேண்டு கோளையும் சிந்தித்து ஏற்பீர் என்ற நம்பிக்கையில் எனக்காக -உனக்காக என்றில்லாமல் தமிழ் இனத்துக்காக கடமையாற்றிடக் கனிவுடன் அழைக்கிறேன்.

தமிழ் இனம், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒன்று பட வேண்டும் என்று கூறுவது, வெறும் உபதேசமல்ல, `ஊருக்கல்லவா சொன்னேன், உனக்கும் எனக்குமல்லவே’, என்று நினைத்திடும்- அல்லது அவ்வாறு நடந்திடும் உபதேசிகளையும் கொண்ட உலகம் தான் இது. அத்தகைய ஒவ்வா நிலையிலிருந்து ஒதுங்கி வந்து என் உயிரினும் மேலான உடன் பிறப்பே, உனக்கு இதை உரைக்கின்றேன்.

50 ஆண்டுகளுக்கு மேலாக – அறநெறியில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும், ஆயுதம் தாங்கி அடலேறுகள் நடத்திய போராட்டங்களிலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்வு காணாமல் நீடிப்பதற்கு மிக முக்கியமான காரணம், இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கிடையே நடைபெற்ற சகோதரப் போராட்டங்களும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுதர இங்கே தமிழகத்தில் இயங்கிடும், அரசியல் இயக்கங்களுக்கிடையே தொடரும் சகோதர யுத்தங்களும் தான் என்பதை மறக்கவும் கூடாது, மறைப்பதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவுக்கு வழி வகுக்காது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களைப் போரின் விளைவுகளில் இருந்து பாதுகாப்பதற்காகவும், ஒரே விதமான உணர்வும் கொள்கையும் கொண்டவர்கள் இங்கே, தமிழ்நாட்டில் ஒற்றுமையாகச் செயல்பட முடிந்திருக்கிறதா என்பதைத் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, இனியாவது நல்ல முடிவு எடுத்து ஒற்றுமைச் சூழ்நிலையை உருவாக்கிட உதவிட வேண்டும் என்று எல்லா இயக்கங்களையும் சேர்ந்த உடன் பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும், தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கூட்டி அந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைத் துறந்திட தி.மு.க.  தவிர வேறு கட்சிகள் முன்வராத நிலையில் அந்த தீர்மானம் கிடப்பிலே போடப்பட்டது.

அதிமுக, மதிமுக புறக்கணித்தன …

அடுத்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு நடைபெற்ற “மனிதச் சங்கிலி” நிகழ்ச்சியை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் புறக்கணித்தே விட்டன.

டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து முறையிட என் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் சென்ற போது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மற்றும் ம.தி.மு.க. ஆகியவை அந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆளுங் கட்சி சார்பில் நானே முன் மொழிந்து இலங்கையில் போர் நிறுத்தம் செய்திட சட்டமன்றத்தில் 3 முறை விடுப்பித்த வேண்டுகோள் தீர்மானம் கூட பிரதான எதிர்க்கட்சியின் வெளிநடப்பு என்ற செய்தியோடு தான் முடிவுற்றது.

திமுகவை அழைக்கவில்லை …

பிரதான எதிர்க்கட்சியின் தோழமை கட்சிகள் இலங்கை பிரச்சினைக்காக நடத்திய அறப்போர்களிலும், பிரதான எதிர்க்கட்சி கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் ஆளும் கட்சியான தி.மு.க.வும் இந்த கட்சிகளால் முறையாக அழைக்கப்படவே இல்லை.

எனினும் ஆளுங்கட்சி என்ற பொறுப்பும் கடமையும் இருப்பதை எண்ணி எதிர்க் கட்சி முதற்கொண்டு எல்லா கட்சிகளின் ஆதரவையும் திரட்ட முயற்சி மேற்கொண்டு அதிலும் வெற்றி பெற முடியாத நிலைமையே ஏற்பட்டது.

சில கட்சிகளின் தலைவர்கள், இந்தப்பிரச்சினையில் தி.மு.க. தான் முன் நிற்க வேண்டுமென்று முழங்கினார்களே தவிர, நாம் என்னவோ, போர் நிறுத்தம் என்பதற்கு எதிரிகள் போலவும், இலங்கைத் தமிழர் பற்றி அக்கறையற்றவர்கள் போலவும் அறிக்கைகள் – பேட்டிகள் அளிக்க முற்பட்டு, ஒற்றுமை முகிழ்ப்பதைக் குலைத்திடக் காரணமானார்கள். குறிப்பிட்டு அவர்கள் யார் என்று சுட்டிக் காட்ட நான் விரும்பவில்லை. இனியும் பிளவு மனப்பான்மை அதிகமாகி விடக் கூடாதே என்பதற்காக.

இதோ, அயல்நாடுகள் பலவும் அக்கறையுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் அழிவைத் தடுத்து நிறுத்திட அறிவிப்புகள் செய்துள்ளன.

நமது வேண்டுகோளின் படி இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் என அந்த அறிவிப்புகளை வரவேற்கிற அதே நேரத்தில் போற்றத்தக்க அளவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் இம்மாதம் தொடர்ந்து நாம் நடத்த இருக்கிற பேரணிகள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் இவற்றில் தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கிடையே ஆம் நம குள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிராமல், இந்திய மத்திய அரசும் வேடிக்கை பார்க்கவில்லை என்ற நிலை உணர்ந்து விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும், இந்தப் பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை.

இது பாசம், உறவு, உணர்வு இவற்றோடு ஒன்றிக் கலந்தது எனும் உண்மை உணர்ந்து, கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு ஒரே குரலில் ஒலித்து, இரண்டு பிரிவுகளாய் இருப்பினும், கத்திரிக்கோல் போல இருந்து காரியமாற்றிடக் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

இன்றைய பிரதான எதிர்க்கட்சி, அ.தி.மு.க.வின் சார்பில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது கொண்டிருந்த இலங்கைத் தமிழர் பற்றிய கொள்கையை, அவர் ஏற்ற நடைமுறையை, இன்றைக்கும் அக்கட்சியின் உடன்பிறப்புகள், ஜெயலலிதா தலைமையில் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டு, அவ்வாறே எதிர்பார்த்து.

ஒன்றாக இருப்போம் வாரீர் …

இரு பிரிவாக நமது ஆதரவு அணிகள் இயங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், இலங்கைத் தமிழர் களின் உரிமை களை யும் உயிர்களையும் பாதுகாப்பதில், ஒன்றாக இருப்போம் வாரீர் என்று அழைக்கிறேன்.

எல்லோரும் ஒன்றுபட்டால் இலங்கைத் தமிழினம் காக்கப்படும் என்பது உறுதி, உறுதி, உறுதி.

அந்த நிலையை நோக்கி நாம் நடக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேர வையின் சார்பில் நடைபெறும் – பேரணி, பொதுக் கூட்டம் அறப்போர் ஆர்ப்பாட்டம் அனைத்திலும் யாரையும் புண்படுத்தாத முழக்கங்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்க!, நிலையான அமைதிக்கு வழி காண்போம்; வாரீர்!, தமிழினம், தாழாது, தாழாது! யாரையும் தாழ்த்தாது!, தடுப்போம் – தடுப்போம், இனப்படுகொலையை தடுப்போம்!.

உடன்பிறப்பே இந்த முழக்கங்களை மட்டும் இதனையொட்டிய முழக்கங்களை மட்டும் பேரணிகளில் கூட்டங்களில் ஒலித்திட வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மத்திய மாகாண சபைக்கு 58 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 17 இலட்சத்து 46 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி

ballot-box.jpgஎதிர் வரும் மத்திய மாகாணசபை தேர்தலில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலிருந்து 56 உறுப்பினர்கள் தெரிவுசெய்வதற்காக 17 இலட்சத்து 46 ஆயிரத்து 449 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள். இதில் கண்டி மாவட்டத்தில் 30 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 9 இலட்சத்து 55 ஆயிரத்து 108 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 16 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 4 இலட்சத்து 52 ஆயிரத்து 395 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 3 இலட்சத்து 38 ஆயிரத்து 946 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகள் 10 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 456 வேட்பாளர்களும், கண்டி மாவட்டத்தில் 10 அரசியல் கட்சிகள் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 594 வேட்பாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 260 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இம்மூன்று மாவட்டங்களிலுமிருந்து வாக்காளர்களின் வாக்குகள் மூலம் 56 உறுப்பினர்களும் போனஸாக 2 உறுப்பினர்களுமாக மொத்தம் 58 உறுப்பினர்கள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 22 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பில் 9 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் 2 உறுப்பினர்களும், மலையக மக்கள் முன்னணி 2 உறுப்பினர்களுமாக 58 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கும் வடக்கு யுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? – ஐ.தே.க. தலைவர் ரணில் கேள்வி

ranil-2912.jpgமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத மகிந்த அரசு யுத்தத்தின் பின்னாள் ஒளிந்து கொள்வதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கும் வடக்கு யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் கேள்வியெழுப்பினார். கம்பளை நகரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு வினவிய எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;

வடக்கு யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக அரசு அறிவித்துவிட்டது. எமது படையினர் பெற்ற யுத்த வெற்றியைப் பாராட்டுகின்றோம். ஆனால், யுத்தம் முடிவுற்றதாக கூறும் அரசு ஏன் மத்திய மாகாண சபையின் ஆட்சியை மக்களிடம் கோருகின்றது. மத்திய மாகாண சபைக்கும் யுத்தத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன? மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றாலும் இல்லாவிட்டாலும் யுத்தம் தொடரும். எனவே, அரசு யுத்தத்தின் பின்னால் நின்று கொண்டு அரசியல் நடத்த முற்படக்கூடாது.

மத்திய மாகாணத்தில் எஸ்.பி. திசாநாயக்க சரத் ஏக்கநாயக்கவுடன் அல்ல, ஜனாதிபதியுடன் தான் போட்டியிடுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி டி.பி. விஜேதுங்கவை மலையக பிரஜை என்ற போதிலும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. அதேபோல் ஹங்குராங்கெத்தவை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பி. திசாநாயக்கவை மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக்குவோம். பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளது. சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசிடம் பணமில்லை என்கின்றனர். ஆனால், மிஹின் எயார் விமான சேவைக்கு 600 கோடி ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.

அமெரிக்கா பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டு யுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றது. எனினும், ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு மாதத்தினுள் அமுல் செய்யக்கூடிய வகையில் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையொன்றை முன்வைத்துள்ளார். ஆனால், இலங்கை அரசிடம் எந்தவொரு கொள்கையும் இல்லை.

மத்திய மாகாண சபை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட எந்தவொரு பொதுப்பணியையும் மக்களுக்கு செய்யவில்லை. சர்வதேச சந்தையில் பால்மா விலை குறைவடைந்துள்ளது. ஆனால், அரசு பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதாக கூறி 8 சதவீத வரி வருமானத்தைப் பெற முயற்சிக்கின்றது. பால்மா உற்பத்தியை நீண்டகாலத்தில் மட்டுமே அதிகரிக்க முடியும். எமது பால் உற்பத்தி 20 சதவீதம் மட்டுமேயாகும். இதனை உடனடியாக 40 சதவீதமாக அதிகரிக்க முடியாது.

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாத அரசு அமைச்சர்களின் சம்பளத்தை ஒரு இலட்சம் ரூபாவால் வீட்டு வாடகை என்ற பேரில் வழங்குகின்றது. இது மக்களின் பணமாகும். க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை வினாப் பத்திரத்தைக் கூட சரியாக தயாரிக்கத் தெரியாத அரசு எப்படி கல்வித்துறையை முன்னேற்ற முடியும். மத்திய மாகாணத்தின் அபிவிருத்தியை ஐக்கிய தேசிய கட்சியினூடாக மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.

இதுவரை 700 புலிகள் சரண்; எஞ்சியோரும் சரணடைந்து விடுவர் – அமைச்சர் கெஹெலிய

kkhaliya.jpgபடையி னரை எதிர்கொள்ள முடியாமல் புலி உறுப்பினர்கள் சரணடைந்து விடுவார்கள் என்று தமக்கு நம்பிக்கை இருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதுவரை, 700 புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளதாகக் கூறிய அவர், சரணடைவதற்கான பொறி முறையொன்றை அரசாங்கத்தால் ஏற்படுத்த முடியாது என்றும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு எந்த நேரமும் புலிகள் சரணடையலாம் என்றும் தெரிவித்தார். ஆயுதங்களின்றி சரணடைவோருக்கு எந்நேரமும் மன்னிப்பு உண்டு என்று கூறிய அமைச்சர், புலிகளின் தலைவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார். படையினரால் மீட்பதற்கு எஞ்சியுள்ள மொத்தப் பிரதேசத்தில் நாற்பது வீதம் மோதல் தவிர்ப்புப் பிரதேசம் என்று தெரிவித்த அவர், அறுபது வீதமான பகுதியிலேயே எஞ்சிய பொதுமக்களும் புலிகளால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை ஓரிருநாளில் படையினரால் மீட்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர், இயன்ற அளவு சிவிலியன்கள் பாதிப்படைவதை தவிர்த்தவாறு படையினர் முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.

மீள்குடியேறாத காரணத்தை எழுத்து மூலம் சமர்ப்பிக்க கோரிக்கை

wanni.jpgமீளக் குடியேற மறுப்பு தெரிவித்துள்ள 332 குடும்பங்களையும் , அதற்கான காரணத்தை எழுத்துமூலம் தனியாக சமர்ப்பிக்குமாறு மீளகுடியேற்ற அமைச்சின் திட்ட இணைப்பாளர் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு ,செங்கலடி மற்றும் கிரான் பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த இக் குடும்பங்கள் மீண்டும் அப்பகுதிகளில் குடியேற மறுப்பு தெரிவித்ததை அடுத்தே அதற்கான காரணத்தை செங்கலடி கிரான் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறு திட்ட இணைப்பாளர் அறிவித்துள்ளார்.

இப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட்ட போதும் மிகுதியான 332 குடும்பங்கள் மீள்குடியேற மறுத்துவருகின்றனர். இவர்கள் நலன்புரிநிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்தும் இவர்கள் மறுக்கின்ற காரணத்தால் இவ்விரு பிரதேசங்களிலும் பூரணமாக மீள்குடியேற்ற முடியாமல் உள்ளதாக திட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.

ருவென்ரி 20′ போட்டி மஹேல, சங்ககார இல்லை

srilanka-india.jpgஇந்தியா வுக்கு எதிரான “ருவென்ரி20′ போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து கப்டன் மஹேல ஜெயவர்தன, சங்ககாரா நீக்கப்பட்டுள்ளனர். புதிய கப்டனாக திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒரு “ருவென்ரி20′ போட்டி 10 ஆம் திகதி நடக்கவிருக்கிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கப்டன் மஹேல ஜெயவர்தன, துணைக்கப்டன் சங்ககாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. புதிய கப்டனாக டில்ஷானும், கப்புகெதர துணைக் கப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முழங்கால் காயத்தால் கடந்த ஒரு ஆண்டாக அவதிப்பட்டு வந்த லசித்த மலிங்கா மீண்டும் “ருவென்ரி20′ அணியில் இடம்பெற்றுள்ளார்.

மாகாண சபைகளையும் குடும்ப மயப்படுத்த அரசு திட்டம்: மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பசில் நியமிக்கப்படுவார் – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

wijitha_herath_jvp.jpgமாகாண சபைகளையும் குடும்பமயப்படுத்துவதற்காக அரசு திட்டமிட்டு செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ஜே.வி.பி. அதற்காகவே மேல்மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. வியாழக்கிழமை கோட்டேயிலுள்ள சோலிஸ் மண்டபத்தில் அக்கட்சி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் இவ்வாறு குற்றம் சாட்டினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; அரசாங்கம் கடந்த இரு மாகாண சபைகளில் தமது குடும்ப உறுப்பினர்களை நியமித்து அவர்களை வெற்றிபெறச் செய்து தனதாக்கிக் கொண்டது. வரவுள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளிலும் அமைச்சர்கள் தமது குடும்ப உறவினர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதேவேளை, மேல்மாகாண சபையை திடீரென அரசு கலைத்துள்ளது. இதன் முதலமைச்சர் வேட்பாளராக பசில் ராஜபக்ஷவை நியமிக்கவுள்ளது. இவ்வாறு மாகாண சபைகளை முழுவதுமாக கலைக்காது பகுதிபகுதியாகக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு காரணம் தமது குடும்ப உறவினர்களை வேட்பாளராக நியமிப்பதற்கேயாகும்.

இவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு இராணுவ வீரர்களின் வெற்றியை பயன்படுத்துவதுடன் அரச சொத்துகள் உட்பட அரச அதிகாரிகளையும் பயன்படுத்துகின்றது. இது தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது. அதாவது தேர்தல் பிரசாரத்துக்கு அமைச்சு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் திணைக்களம் மற்றும் சபைகளின் வாகனங்கள் கட்டிடங்களும் பாவிக்கப்படுகின்றது. இது சட்டத்திற்கு முரணானது.

ஒரு பக்கம் பகுதிபகுதியாகத் தேர்தலை நடத்துவதால் மக்களின் பணம் நாசமாவதுடன் அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாலும் மக்களின் பணமே விரயமாக்கப்படுகின்றது. இவ்வாறு மாகாண சபைகளில் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்கே தமது குடும்ப உறுப்பினர்களை நியமித்து அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று பட வேண்டும். இந்நிலையில் மக்களுடன் மக்களாக அவர்களுக் பணிசெய்ய காத்திருக்கும் ஜே.வி.பி.க்கு உங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்கின்றேன்.

மிருசுவிலில் தங்கவைக்கப்பட்ட அகதிகளை யாழ். ஆயர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவிப்பு

thomas-sawndaranayakam.jpgஉணவு நிவாரணப் பொருட்களும் விநியோகம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இருந்து யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்து மிருசுவில் றோ.க.பாடசாலை , மிருசுவில் திருக்குடும்ப கன்னியர்மடம், புனித நீக்கிலார் ஆலய வளாகம் என்பவற்றில் தங்கியுள்ள 333குடும்பங்களைச் சேர்ந்த 1313 பேரையும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் அதி. வண தோமஸ் சவுந்தர்நாயகம் மற்றும் குருமார் சந்தித்து ஆறுதல் கூறினர். யாழ். ஆயர் இல்ல நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உடுபுடைவைகள் , சமையல் பாத்திரங்கள் , உணவுப் பண்டங்கள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதேபோல யாழ். ஆயர் இல்லத்தை சூழவுள்ள பங்குகளைச் சேர்ந்த மக்கள் சமைத்து வழங்கிய உணவுப்பொதிகளும் எடுத்துவரப்பட்டு இந்த அகதிகளிடம் கையளிக்கப்பட்டன. அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தாங்கள் அனுபவித்து வந்த துன்பமான நிகழ்வுகளை கண்ணீர் மல்க ஆயரிடம் கூறினார்கள்.

இவர்களுக்கு தம்மால் இயன்றவற்றை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயர் கூறினார். குறிப்பாக பாடசாலைப் பிள்ளைகளின் கல்விக்கான கற்றல் உபகரணங்கள் பெற்றுக் தருவதாகவும் ஆயர் கூறினார். ஆயர் கொண்டுவந்த இனிப்பு பண்டங்களை சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கப்பட்டதுடன் சிறு வழிபாடும் இடம்பெற்றது. மிருசுவிலில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு 15 மைல் தூரத்தில் இருந்து தாம் கால் நடையாகவே இங்கு வந்ததாக தெரிவித்தனர