மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத மகிந்த அரசு யுத்தத்தின் பின்னாள் ஒளிந்து கொள்வதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கும் வடக்கு யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் கேள்வியெழுப்பினார். கம்பளை நகரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு வினவிய எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;
வடக்கு யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக அரசு அறிவித்துவிட்டது. எமது படையினர் பெற்ற யுத்த வெற்றியைப் பாராட்டுகின்றோம். ஆனால், யுத்தம் முடிவுற்றதாக கூறும் அரசு ஏன் மத்திய மாகாண சபையின் ஆட்சியை மக்களிடம் கோருகின்றது. மத்திய மாகாண சபைக்கும் யுத்தத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன? மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றாலும் இல்லாவிட்டாலும் யுத்தம் தொடரும். எனவே, அரசு யுத்தத்தின் பின்னால் நின்று கொண்டு அரசியல் நடத்த முற்படக்கூடாது.
மத்திய மாகாணத்தில் எஸ்.பி. திசாநாயக்க சரத் ஏக்கநாயக்கவுடன் அல்ல, ஜனாதிபதியுடன் தான் போட்டியிடுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி டி.பி. விஜேதுங்கவை மலையக பிரஜை என்ற போதிலும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. அதேபோல் ஹங்குராங்கெத்தவை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பி. திசாநாயக்கவை மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக்குவோம். பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளது. சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசிடம் பணமில்லை என்கின்றனர். ஆனால், மிஹின் எயார் விமான சேவைக்கு 600 கோடி ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.
அமெரிக்கா பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டு யுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றது. எனினும், ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு மாதத்தினுள் அமுல் செய்யக்கூடிய வகையில் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையொன்றை முன்வைத்துள்ளார். ஆனால், இலங்கை அரசிடம் எந்தவொரு கொள்கையும் இல்லை.
மத்திய மாகாண சபை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட எந்தவொரு பொதுப்பணியையும் மக்களுக்கு செய்யவில்லை. சர்வதேச சந்தையில் பால்மா விலை குறைவடைந்துள்ளது. ஆனால், அரசு பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதாக கூறி 8 சதவீத வரி வருமானத்தைப் பெற முயற்சிக்கின்றது. பால்மா உற்பத்தியை நீண்டகாலத்தில் மட்டுமே அதிகரிக்க முடியும். எமது பால் உற்பத்தி 20 சதவீதம் மட்டுமேயாகும். இதனை உடனடியாக 40 சதவீதமாக அதிகரிக்க முடியாது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாத அரசு அமைச்சர்களின் சம்பளத்தை ஒரு இலட்சம் ரூபாவால் வீட்டு வாடகை என்ற பேரில் வழங்குகின்றது. இது மக்களின் பணமாகும். க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை வினாப் பத்திரத்தைக் கூட சரியாக தயாரிக்கத் தெரியாத அரசு எப்படி கல்வித்துறையை முன்னேற்ற முடியும். மத்திய மாகாணத்தின் அபிவிருத்தியை ஐக்கிய தேசிய கட்சியினூடாக மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.