மாகாண சபைகளையும் குடும்பமயப்படுத்துவதற்காக அரசு திட்டமிட்டு செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ஜே.வி.பி. அதற்காகவே மேல்மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. வியாழக்கிழமை கோட்டேயிலுள்ள சோலிஸ் மண்டபத்தில் அக்கட்சி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் இவ்வாறு குற்றம் சாட்டினார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்; அரசாங்கம் கடந்த இரு மாகாண சபைகளில் தமது குடும்ப உறுப்பினர்களை நியமித்து அவர்களை வெற்றிபெறச் செய்து தனதாக்கிக் கொண்டது. வரவுள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளிலும் அமைச்சர்கள் தமது குடும்ப உறவினர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதேவேளை, மேல்மாகாண சபையை திடீரென அரசு கலைத்துள்ளது. இதன் முதலமைச்சர் வேட்பாளராக பசில் ராஜபக்ஷவை நியமிக்கவுள்ளது. இவ்வாறு மாகாண சபைகளை முழுவதுமாக கலைக்காது பகுதிபகுதியாகக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு காரணம் தமது குடும்ப உறவினர்களை வேட்பாளராக நியமிப்பதற்கேயாகும்.
இவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு இராணுவ வீரர்களின் வெற்றியை பயன்படுத்துவதுடன் அரச சொத்துகள் உட்பட அரச அதிகாரிகளையும் பயன்படுத்துகின்றது. இது தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது. அதாவது தேர்தல் பிரசாரத்துக்கு அமைச்சு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் திணைக்களம் மற்றும் சபைகளின் வாகனங்கள் கட்டிடங்களும் பாவிக்கப்படுகின்றது. இது சட்டத்திற்கு முரணானது.
ஒரு பக்கம் பகுதிபகுதியாகத் தேர்தலை நடத்துவதால் மக்களின் பணம் நாசமாவதுடன் அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாலும் மக்களின் பணமே விரயமாக்கப்படுகின்றது. இவ்வாறு மாகாண சபைகளில் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்கே தமது குடும்ப உறுப்பினர்களை நியமித்து அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று பட வேண்டும். இந்நிலையில் மக்களுடன் மக்களாக அவர்களுக் பணிசெய்ய காத்திருக்கும் ஜே.வி.பி.க்கு உங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்கின்றேன்.