விடுதலைப் புலிகளின் 7வது விமான ஓடுபாதை கைப்பற்ற்ப்பட்டுள்ளது புலிகளின் கடைசி விமான ஓடுபாதையெனக் கருதப்படும் இந்த ஓடுபாதை முல்லைத்தீவு சுந்தரபுரத்திற்கு மேற்குப் பகுதியிலும் பிரமந்தாறு பகுதியின் வடக்கேயும் அமைந்துள்ளது. சுமார் 2 கி.மீ. நீளமான இந்த ஓடுபாதையை இன்று (3) காலை கைப்பற்றியுள்ள பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான 58வது படையணியினர் அப்பகுதியைத் தற்போது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ்ந்துள்ளனர் என்று இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
February
February
இலங்கைத் தமிழருக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய கடமை புதுடில்லிக்கு இருப்பதாக “நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை வலியுறுத்தியுள்ளது. இது தமிழர்கள் பற்றியது. புலிகளை பற்றியது அல்ல என்று மகுடமிட்டு நேற்று திங்கட்கிழமை தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கத்திலேயே “நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இதனைச்சுட்டிக்காட்டியுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இலங்கைத் தமிழரின் தலைவிதி தொடர்பாக நெஞ்சுபடபடக்கும் திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியில் சிறிய நிலப்பகுதிக்குள் விடுதலைப்புலிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சியும் கவலையும் தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வலுவான முறையில் முன்னேறிவருவது இரகசியமானதல்ல. கடந்த வருட முற்பகுதியில் யுத்தநிறுத்தம் முறிவடைந்த பின் கொழும்பு முழுமையாக ஒழித்து விடுவதற்கான யுத்தத்தை ஆரம்பிப்பதென முடிவு செய்தது.
உண்மையான நிலைமை யாராலும் கண்டுகொள்ளக் கூடியதாகும். ஆனால், மாநிலத்தின் (தமிழ்நாடு) அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இது தொடர்பாக தமது கண்களை மூடிக் கொண்டுள்ளனர். அடையாளங்கள் தொடர்பான குழப்பங்களும் உள்ளன. விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தமிழகத்தின் சிறிய மற்றும் குரல்கொடுக்கும் கட்சிகளைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையான தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விடயத்தில் தலையிட வேண்டிய தெய்வீக உரிமை இந்திய அரசுக்கு இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த மாதிரியான நிலைப்பாட்டை புலிகள் ஊக்குவிக்கின்றனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் இந்தியா மீதான நல்லெண்ண வெளிப்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தமை இதற்கு சாட்சியமாகும்.
இலங்கை இறைமையுள்ள ஒரு நாடென்பதும் இந்தியாவோ அல்லது வேறு எவரோ உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாதென்பதும் உண்மையானதொன்றாகும். 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கை தோல்வி கண்டது. பல காரணங்கள் இருந்தாலும் புலிகள் அதில் ஆர்வம் காட்டாதமையும் ஒரு காரணமாகும். 2002 இல் நோர்வே அனுசரணையுடனான யுத்த நிறுத்தமும் தோல்வி கண்டது. நம்பிக்கை தொடர்பாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்தன. எவ்வாறாக இருப்பினும் இலங்கையில் தமிழர்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய கடமை புதுடில்லிக்கு உண்டு.
யுத்தம் முடிவடைந்த பின் தமிழர்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் அவர்கள் வாழ வேண்டியது அவசியமாகும். 25 வருட காலமாகக் கடுமையான போராட்டங்களின் பின்னரும் தலைமுறையினர் இடம்பெயர்ந்த பின்னரும் அவர்கள் எதிர்பார்க்கும் ஆகக் குறைந்த விடயமாக இது காணப்படுகிறது. இதனையே இங்குள்ள அரசியல் கட்சிகள் மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இது தொடர்பான திட்டம் பலரிடம் இல்லை. அவர்களுடைய தற்போதைய நிலைப்பாடு சிந்தனையின் வங்குரோது தனத்தையே காட்டுவதுடன் நம்பிக்கையை ஊக்குவிப்பதாக இல்லை.
![]()
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து செட்டிக்குளம் மனிக் பாமில் தங்கியுள்ள 315 மாணவர்களுக்கான பாடசாலை நேற்று காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு 45 ஆசிரியர்களைக் கொண்டு இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வந்துள்ள மாணவர்களுடைய கல்வி நடவடிக்கையினை கருத்திற்கொண்டு வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்திருந்தது தெரிந்ததே.
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடநூல்கள் கடந்த வாரம் வழங்கப்பட்டன. சீருடைகள் வழங்கப்படவுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து இதுவரையில் வவுனியாவிற்குள் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். இவர்களுடைய பிள்ளைகள் கல்வி கற்பதற்கே நலன்புரி நிலையத்தில் தற்காலிக இரண்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடமாகாண பிரதம செயலாளர் எஸ். இரங்கராசா, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அரச அதிபர், செட்டிக்குளம் பிரதேச செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
செட்டிக்குளம் மகா வித்தியாலய அதிபர் எஸ். யேசுதாசன் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். க.பொ.த உயர்தர மாணவர்களின் நலன்கருதி மேலதிக கல்வி நடவடிக்கைக்காக இம் மாணவர்களை செட்டிகுளம் பாடசாலையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் பணிகளையும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் மெனிக் பாம் முகாமில் தங்கியுள்ள மாணவர்கள் நான்கு பேரையும் உடனடியாக கல்வி நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.
மெனிக் பாம் பகுதியில் உள்ள மாணவர்களின் கல்விப் பணிகளை மேற்பார்வை செய்ய வவுனியா வலய உதவிக் கல்விப் பணிப்பாளரை இணைப்பாளராக நியமிக்குமாறு கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கினார். மெனிக் பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்க கடைத்தொகுதி மற்றும் மருத்துவ மத்திய நிலைய பணிகளையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டார். மெனிக்பாம் முகாமிலிருந்து செட்டிகுளம் பாடசாலைக்கு செல்லவுள்ள உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அமைச்சருடன் வடமாகாண ஆளுநரின் பிரதம செயலாளர் வி. தியாகலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். இளங்கோவன், வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம்.ஏ. சார்ள்ஸ், வட மாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல். டீன், கல்விப் பணிப்பாளர் எம்.எம். சியான் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சவூதி அரேபியாவில் இருந்து பதினெட்டுப் பேர் கடந்த புதன்கிழமை அதிகாலை விமானம் மூலம் நாடு திரும்பினார்கள். சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்ற இவர்கள் தமக்கு உரிய சம்பளம் மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை என்றும் அதனால் தாம் அங்கு தொழில் செய்ய முடியாத நிலையில் நாடு திரும்புவதாகவும் தெரிவித்தனர்.
இவர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகள் விமான நிலையத்தில் பொறுப்பேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற புதிய குடையின் கீழ் தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத் தரவும்-அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும்-ஜனநாயக முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும்- ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர் கள், மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு- “இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை” என்ற அமைப்பின் பெயரால்-தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பிரச்சார சாதனங்களைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜேர்மனியத் தூதுவரும் அரச சார்பற்ற சில நிறுவனங்களும் ஏனைய வெளிநாட்டவர்கள் சிலரும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களாக தென்படுவதாகவும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றப்போவதாகவும் பாதுகாப்பமைச்சின் செயலாளரிடமிருந்து வெளியிடப்பட்ட அச்சுறுத்தலை நல்ல விடயமாக கருதவில்லை என்று பேர்லின் தெரிவித்துள்ளது. “சாத்தியமான தப்பபிப்பிராயங்களை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மிரட்டல்களால் அல்ல’ என்று பேர்லினிலுள்ள வெளிவிவகார அமைச்சுப்பேச்சாளர் தெரிவித்ததாக ஏ. எவ்.பி செய்திகள் தெரிவித்தன.
பயங்கரவாதிகளுக்கு இரண்டாவது உயிர்மூச்சைக்கொடுக்க முயற்சிக்கும் எந்தவொரு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமோ, இராஜதந்திரியோ அல்லது நிருபரோ முயற்சித்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று “ஞாயிறு ஐலன்ட்’ இதழுக்கு பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அண்மையில் செய்திப் பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் இறுதிக்கிரியையின் போது ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அவரை அழைத்து விளக்கம் கேட்டிருந்தது.
புதுக் குடியிருப்பு வைத்தியசாலை மீதான ஆட்லறித் தாக்குதலில் பொதுமக்கள் பலியாகியிருப்பதையிட்டு சர்வதேச உதவிவழங்கும் அமைப்புகள் கடும் விசனமும் கவலையும் தெரிவித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மருத்துவமனை இருதடவைகள் ஷெல் வீச்சுக்கு இலக்காகியிருப்பதை நமது அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக யுனிசெப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு இரவு இரண்டாவது தடவையாக இடம்பெற்ற தாக்குதலில் 30 படுக்கைகளும் ஆஸ்பத்திரி விடுதியும் சேதமடைந்ததாகவும் தாக்குதல் இடம்பெற்ற சமயம் அந்த விடுதியில் அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் சிறுவர்களும் அடங்கியிருந்ததாகவும் ஜேம்ஸ் எல்டர் மேலும் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அவர் உறுதிப்படுத்தவில்லை.
ஆயினும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பி.வரதன் தொலைபேசி மூலம் தெரிவிக்கையில்; முதலாவது ஆட்லறித் தாக்குதலில் இருவரும் இரண்டாவது தாக்குதலில் 6 பேரும் கொல்லப்பட்டதாகவும் 20 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். வைத்தியசாலை மீது அரச படையினர் தாக்குதல் நடத்தியதாக தமிழ்நெற் இணையத்தளம் கூறியுள்ளது.
ஆனால், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இதனை மறுத்துள்ளார். ஆஸ்பத்திரியை தாக்க வேண்டிய எந்தவொரு காரணமும் எமக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
மோதல் இடம்பெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களை அரசாங்கப் பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வந்து சேருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்தார். மோதல் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து வந்துசேரும் மதத் தலைவர்களதும் பொதுமக்களினதும் நலன்புரி நடவடிக்கைகளைக் கவனிப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த செய்தியை மோதல் நடைபெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களுக்குக் கொண்டு செல்லுமாறு வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் மொன்சிக்னர் மரியோ செனரரியிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதி, புலிகள் இயக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி சிவிலியன்களை எதுவிதமான பாதிப்புக்களுமின்றி விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
புலிகள் இயக்கத்தினர் அப்பாவி சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதையும் ஜனாதிபதி வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவருக்கு இச்சமயம் சுட்டிக்காட்டினார். அப்பாவி சிவிலியன்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்கவென புலிகள் இயக்கத்தினருக்கு ஏற்கனவே 48 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டது. அதே நேரம் ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
இதன்படி புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே சரணடைந்துள்ளனர். எஞ்சியுள்ளவர்களையும் சரணடையுமாறே மீண்டும் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் ஜனாதிபதியை நேற்று சந்தித்தார். அச்சமயமே ஜனாதிபதி மோதல் நடைபெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களைப் பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார். அத்தோடு இச்செய்தியை அவர்களுக்குக் கொண்டு செல்லுமாறும் வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பின்போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் பிரசன்னமாயிருந்தார்.
இன்று மன்னாரில் காலை 11 மணிக்கு சமாதானத்தை விரும்பும் தமிழர்கள் புலிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ் ஆர்பாட்டத்தில் வன்னியில் ஓர் சிறிய பகுதியினுள் முடங்கியுள்ள புலிகள் தொடர்ந்தும் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை தவிர்த்து அவர்களது இயல்பு வாழ்கைக்கு வழிவிடவேண்டும். போராட்டம் எனும் பெயரால் தொடர்ந்தும் தமிழ் இளைஞர் யுவதிகளை யுத்த முனையில் பலிகொடுப்பதை கைவிட வேண்டும். தமது விருப்பத்திற்கு மாறாக இயக்கத்தில் தொடர்ந்தும் தடுத்து வைத்து போரில் ஈடுபடுத்தும் இளைஞர் யுவதிகளை விடுவித்து அவர்களை தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளுடன் இவ் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ்வார்பாட்டத்திற்கு மன்னார் வவுனியா பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி புலிகளின் தொடர் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.-